Sonntag, 24. Februar 2013

கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் ...

கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் அரசியல்-கருத்துக்கள்.


முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பிரபாகரன் குடும்பம் பலவாறாகச் சிதைக்கப்பட்டும்,பிரபாகரன் சித்திரவதைக்குட்பட்டும்,மண்டை பிளவுண்டும் செத்துப் போயினர்.இந்தத் துன்பியல் நிகழ்வு 2009 மே 16-17-18 ஆம் தேதிகளில் நடைபெற்றிருக்க முடியும்.

மேற்சொன்ன தேதிதிகள், புலித் தலைவர் பிரபாகரன் குடும்பத்தின் உண்மையான இறுதி முடிவின் தேதிகளாகும்.

இதைக் குறித்துப் புலிகளே இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுமில்லை-எற்கவுமில்லை.தலைவர்கள் உயிரோடிருப்பதாகச் சொல்லி இலங்கை-இந்திய,சீனக் கூட்டுக் கொலைகளைச் சட்டரீதியாகச் செல்லாக்காசாக்கினர், இன்றுவரையும்!

இது குறித்துப் பல ஆவணத்தோடு புலம்பெயர் தளத்தில் செய்திகளும்-ஆவணப்படங்களையும் தேடித் தேடிப் போட்டவர்கள் எல்லோரும் புலிப் பினாமிகளால் தூற்றப்பட்டனர்.புலி அநுதாபிகள் அன்றுஞ்சரி,இன்றுஞ்சரி நியாயமாகக் கவனத்தை "இது குறித்து"ச் செய்யவில்லை.இயக்க நலன்,"தமிழீழம்" என்ற அகக்கனவுகள் அவர்கள்தம் கண்களைக் கட்டிப்போட்டது.

இந்தச் சதிகுறித்த தமிழரங்கக் கட்டுரை-ஆவணப்படங்கள் அடங்கியவொரு சுட்டியானது பல பத்தாயிரம் தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது.என்றபோதும், அதையெல்லாம் மறைப்பு அரசியலுக்குள் முடக்கியவர்கள் இப்போது பாலச்சந்திரனது படங்களைப்பார்த்துவிட்டு அரசியல் செய்யும் புள்ளி என்னவாகவிருக்கும்?





நான்காண்டுகளாகவிதைக் கண்டுகொள்ளாது, இலங்கைப் பாசிச அரசியலைக் குறித்து இயங்க மறுத்தவர்கள்-புலிகளது சதி அரசியலால் தமிழ்பேசும் மக்களது விடுதலை காட்டிக்கொடுக்கப்பட்டதைப் பார்க்க மறுத்தவர்கள். இப்போது, பாலச் சந்திரனை முதன்மைப்படுத்தி, அவிழ்க்கும் அரசியல் ஒரு செல்லாக் காசாகும்.இதைத்தாண்டிச் சில வற்றைக் குறித்துக் கவனத்தைக் குவித்தால்,இவையெல்லாம் ஒரு கொசிப்பு அரசியலாகவே மாறிவிட்டதென்றவொரு புள்ளியைக் குவித்துக்கொள்ள முடியும்.

இந்தக் குறையுடைய விட்டேந்தி அரசியலது தெரிவில்,"தமிழ்பேசும் மக்களை முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை செய்த சிங்களவரசுக்கும் அதற்குத் துணைபோன தென்னாசியப் பிராந்திய வல்லரசுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை" யென நாம் குறிப்பிட்ட சிலரைத் தொடர்ந்து சிலுவைசுமக்கக் கூப்பிடுகிறோம்.

இத்தகைய இனவழிப்பை இலங்கையில் செய்யத்தக்க பொருளாதாரவுறவுகள் வளர்ந்து வருவதையும்,அதன் வாயிலாக மாறி வருஞ் சூழலைக் கவனத்தில் எடுத்து, மக்களை ஜனநாயக ரீதியாக இயங்க அனுமதித்துப் புலிகளது இயக்கவாத அராஜகத்தையும் அது சார்ந்த இருப்பு அரசியலையும் கைவிட்டு அரசியல் ரீதியாகப் பிரச்சனையை அணுகுவதற்குப் பல தளத்திலான செயற்பாட்டுக்காக மாற்றுச் சக்திகளை இயங்க அனுமதிக்கும்படி நாம் 2007 இன் ஆரம்பத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டோம். இந்தச் சந்தர்ப்பத்தில் புலிக்குக் காவடி தூக்கியவர்கள், அந்த அமைப்பின் பாசிசத்துக்குமுன் மண்டியிட்டுக் கிடந்து,மௌனித்து அதைப் புரட்சிகரமானவொரு சக்தியாகவும்,விடுதலை அமைப்பாகவும் படம் காட்டியவர்கள்,முள்ளி வாய்க்காலின் கடைசி நிமிடம்வரை "புலிகள் வெல்வார்கள்" என மார் தட்டினார்கள்.இது,இனவழிப்புக்கான ஒத்தூதலுக்குள் வரமுடியாதென எவருரைப்பார்?

சிங்கள அரசு,உலக ஏகாதிபத்தியங்களை ஆதரித்தவர்கள் மட்டுமல்ல புலிகளையும் கண்ணை மூடி ஆதரித்தவர்களுமேதாம் தமிழினவழிப்புக்கு உடந்தையானவர்கள்.நெஞ்சில் நேர்மையுள்ளவர்கள் இது குறித்துப் பேச வரட்டும்.

அதே போல்,இன்றும் இத்தகைய புலி அநுதாபிகளால் ஆதரிக்கப்பட்டுத் தொகுப்புகள் போடப்படும் "கவிஞர்-கட்டுரையாளர்-கதாசிரியர்-செய்தியாளர்" என்ற அடை மொழிக்குள் தன்னை நிறுவிக்கொண்டு, அப்பாவி மக்களைப் புலிப்பாசிசமும்,இலங்கை அரச பாசிசமும் இணைந்து யுத்தத்துள் கொன்று போட்டதை வைத்துப் புனைந்து, அதையே தமிழகவூடகங்களுக்குக் கச்சாப்பொருளாகவிற்கும் தீபச் செல்வனுக்குப் பார்பன ஏடுகளே இன்று பரிசுகள்-கேடயங்கள் வழங்கும்போது அதையே மௌனித்து வரவேற்கும் நியாயவாதிகளுக்குப் பார்பன ஏடுகளது தந்திரம் புரியாத என்ன?

பார்ப்பன நிறுவன ஏடான கணையாழியின் அரசியல் தெரியாத என்ன?

சும்மா விசும்புக்கு வேட்டையாடுவதில்,முள்ளி வாய்க்கால் படுகொலையைக் கண்டிக்கவில்லையென்பவர்கள் முதலில் 2009 இல் வன்னியுத்த  அழிவுகள் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் வாளாதிருந்த யாழ்ப்பாணத்தார் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்து மகிழ்ந்த கபோதித்தனமான அரசியலை விளங்க முற்படுங்கோ!

நாமே,நமது மக்களைப்பலியெடுக்கப் புலிக்கு வக்காலத்துவேண்டி அழிவுக்குக் காரணமாக நின்றோம்.மாறிவரும் சூழலையெல்லாம் தானைத் தலைவரது கவட்டுக்குள் திணித்துவிட்டுத் "தலைவர் காலத்தில் தமிழீழம் மலரும்"என்ற மமதைக்கு என்ன பெயர்?

போதாதற்கு,தமிழ்நாட்டரசியலுள் இணைக்கப்பட்ட இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு எந்த மார்க்சும் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது!அது பலதரப்பட்ட அதிகார அடுக்குகளது நலனோடு சம்பந்தப்பட்டது.அது மட்டுமன்றி இந்தியப் பிராந்தியத்தின் இறைமைக்குட்பட்ட முற்றுமுழுதான அரசியல் சட்டரீதியான செல்வாக்குக்குட்பட்ட இலங்கைக்குள் இந்தியாவென்பது எதையும் செய்யும்-எப்படியும் நடக்கும்.அதைத் தட்டிக்கேட்கும் உரிமையென்பதைக்கூட மக்களுக்கு வழங்காது புலிகள் இந்தியாவின் அரசியலில் எத்தனை மோசடியான நிகழ்வுகளைச் செய்தார்கள்?அதை நொண்டிக் காரணமாக வைத்துத் தமிழ்பேசும் இனத்தையே கருவறுத்த இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய ஆதிக்கத் திமிரை வெறுமனவே அ.மார்க்சுக்குள் திணித்துவிட்டு ஒற்றை வரி இலக்கணமெழுதுவது மீளவும், நம்மை அழிப்புக்கிடவே செய்யும்.



[கணையாழி விருது நிகழ்வு:

பேராசிரியர் பஞ்சாங்கம், தசரா, நீதிபதி சந்துரு, ஜெயகாந்தன், கனிமொழி]


முதலில் தீபச் செல்வனை வைத்துப் பிழைக்கும் அரசியலையும்,அதன்வழி நம்மை மொட்டையடிக்க முனையும் இந்திய லொபிகளையும் மார்ச்சையும்தாண்டி நமக்குள் தேடுங்கோ.அப்போது,மார்சின் பாத்திரமும்,தீபச் செல்வன்,மற்றும் இன்னபிறப் பேராளர்களதும் பாத்திரமும் தெரிந்துவிடப்போகிறது.இதைவிட்டு ஒரு தனிநபர்மீது குவிக்கும் அரசியலானது உண்மையான குற்றவாளிகளைக் காப்பதில் முடிந்துபோகிறது.

இதைத்தாம் புலிகளது தமிழீழப்போராட்டத்துள் நாம் செய்துகொண்டோம்.

தமிழ்பேசும் மக்களது உண்மையான குற்றவாளிகளே புலிகள் வடிவத்துள் மக்களைச் சிதைத்துப் பிழைத்துக்கொண்டவின்றைய பெரு வர்த்தகர்களாக மக்களது பணத்தில் மீளவும் தேசியவிடுதலை வியாபாரஞ் செய்யும் பினாமிப் புலிகளென்பதையெவர் பேச முனைகிறார்?

இன்றுவரை,புலிகளது பெருந் தலைவர்களெல்லாம் இலங்கை-இந்திய-சீன நலன்களுக்கிசைவான அரசியலோடு நகரும்போது அந்தப் புலிகளது கலை இலக்கிய கர்த்தாக்களே இந்தியப் பார்ப்பனிய ஊடாகங்களுக்குச் சோரம்போய் மக்களின் அவலங்களை வித்துப் பிழைக்கும்போது அ.மார்ச்சிடமும்,மார்க்சியர்களிடமும் இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு விளக்கம் கேட்கும் அரசியல் அறம் புலி அநுதாபிகளுக்குண்டா? இந்தியப் போலி மார்க்சியர்களை வைத்து முழுமொத்த மார்க்சியப் போக்கையும் சிதைக்க முனையும் திரு விளையாடல் ஆருக்கான அரசியலை முதன்மைப்படுத்தும்?

"ஏன்-எதற்கு" என்ற கேள்வியையே புலிக்கு முன் சமாதி கட்டிவைத்துவிட்டுப் புலிகளது எல்லா நியாயங்களையும் தமிழீழத்துக்காகச் சரியென்ற அரசியலது அறுவடைதாம் முள்ளி வாய்க்கால்.

புலி அழிவின் இறுதி நிமிடம்வரை புலிகளோடு மக்கள் அழிவதையும்,அதே மக்களை இயக்க இருப்புக்காகப் புலிகள் தம்மோடழிக்க வியூகமமைத்ததையும் தட்டிக் கேட்க துப்பற்ற அரசியல் அறத்தின்மீது ஆணி அடித்தபோதெல்லாம் நம்மைத் துரோகிகளாக்கிய இந்த அரசியலே இப்போதும் புலிகளது மிச்ச சொச்சங்களைக் கள்ள மௌனம் சாதித்துக் காத்துக்கொண்டு,மார்க்சியர்கள்மீது பாய்வது வர்க்க அரசியலின் வர்க்க நலனைக் காவுவதென்பதற்கப்பால் இது பிழையான தெரிவுகளை உணர்ச்சி வழி நிகழ்த்தும் கொசிப்பு அரசியலாகும் என்பதைத்தாம் சொல்வதென்று புரிக.

"உலகத் தமிழர் பேரவை" என்றும்,"நாடுகடந்த தமிழீழ அரசு" வென்றும்,இன்னபிற முக மூடிகளது தார்ப்பாரில் மையங்கொள்ளும் மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்கும்,அதையே தென்னாசியப் பிராந்திய நலனைக் காவும் மேற்சொன்ன பிழைப்பு வாதப் புலமைக்கும் நடுவே எமது மக்களது தலைவிதி வியாபாரமாக்கப்படுகிறது.

மக்களது அவலத்தை வைத்து இலக்கிய வியாபாரம் முதல்,முதலீடு செய்யும் நிதி ஆதாரம்வரை நகரும் இந்தக் குருதிக்கறைபடிந்த அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்பதும்,நியாயமாகப் புலிகளதும்,ஏகாதிபத்தியங்களதும் அரசியலையும்,இந்திய-சீனா லொபிகளையும் தோலுரித்து வைக்கும் அரசியலை முன் வைக்கத் திரணியின்றி நாம் விட்டேந்தித் தனமான அரசியலைக் குழுவாத நெருக்கடிக்கொப்பத் தகவைக்கின்றோம்.

அந்நிய நலனில் எந்தெந்தக் குழுக்கள் தம்மைத் தகவமைத்தனவென்பதற்கு இயக்கவாத மாயைக்கு-தமிழீழக் கனவுக்கு வெளியிற்றாம் பதிலுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2013

Dienstag, 19. Februar 2013

இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!

இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!


ங்கு பார்த்தாலும் இந்திய-சீனா-மேற்குலக அரசுகளதும்,அதன் உளவு நிறுவனங்களதும் முகவர்கள் செய்யும் அரசியல் நாடகமே இப்போது நிலத்திலும்-புலத்திலும் "விடுதலை, சுதந்திரம், சோசலிசம்-புரட்சி,இன ஐக்கியம்-சமவுரிமை" என்று பேசிக்கொள்கிறது.

இவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.

அப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது"இன ஐக்கியம்-ஒருமைப்பாடு,இலங்கைத் தேசியம்"என்று கட்சிகட்டி வகுப்பெடுக்கிறது.இதையும் பலர் 80 களில் இயக்கங்களை நம்பிய விட்டில் பூச்சிகளாய் மீள அண்மித்துப் பறக்கிறார்கள்.ஒவ்வொருவரும் தத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறனர்.

சதிகாரர்களும்,எதிர்ப் புரட்சிக்காரர்களும் சமுதாயத்தில் எந்தத்  தப்பையையும் செய்யத் தயங்காதவர்கள்.தப்பையே மக்களது நலனாகக் கருத்துக் கட்டி மக்களை ஏமாற்றுபவர்களென்பதற்கு வரலாற்றில் மட்டுமல்ல சமீபத்தில் புலிவழியான எமது "விடுதலை"ப்போராட்டமே நல்ல உதாரணமாகவிருக்கிறது.

இந்தப் போராட்டத்தால் உந்தப் பட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து தம்மை ஊக்குவித்த அந்நியச் சக்திகளுக்கு லொபிக் குழுவாகவே இருக்க முனைகிறது.இதை அம்பலப்படுத்தி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்லும்போதோ,அந்தவுண்மைகளையும் தம்மைப்போலவே  மாற்றியமைக்கமுனையும் இந்தத் தமிழ்க் குழுக்களது இயக்கவாத அராஜகமானது, மற்றவர்களது தப்பாகத் தமது கடந்த காலத்தை அவர்களது தோளில் சுமத்திவிட்டுப் புரட்சி பேசுகிறது.

குருதிக்கறைபடிந்த மாபியாக்கள் எப்படித்தான் உண்மைகள்மீது சேறடிப்பினும் அது புஷ்வாணமாகிக்கொண்டே வரும்.ஏனெனில்,நாம் மக்களை அண்மித்த அரசியலோடு நகர்பவர்கள்.மக்களை ,இனியும் அந்நியருக்காகச் சாகவிடுவதைத் தடுப்பவர்கள் ,நாம்.




"நம்மிடம்,புரட்சி-புடலங்காயெல்லாம் " கிடையாது.மக்களைப் பலியிடுவதைத் தடுப்பதைத்தவிர நாம் புரட்சி-போராட்டம்,யுத்தமென்று அவர்களது எதிர்காலத்தை நாசஞ் செய்யும் துரோகத்தனமான அந்நிய நலன்சார் அரசியலை மக்கள்மீது செலுத்தும் இயக்கவாத கயமை எம்மிடம் இல்லை!

எனவே,தொடர்ந்தும் இத்தகைய மாபியாக்களையும் அதன் கபட அரசியலையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்.

இதைவிட்டுப் புலிகளது அராஜகத்தின்முன் மௌனித்திருந்து அவர்களுக்கு கருத்தியல் வலுவும்,அவர்களது அராஜகத்தையும் வளர்த்துவிட்டதைப்போலவே இப்போதும் இருக்க முனைபவர்கள் நம்மைப்பார்த்து"நாப் பிளக்கப் பொய்யுரைத்து" என்று கூறுகின்றனர்.

இங்கே",எதுபொய்-எதுவுண்மை"என்பதைப் புலிகள்மீது   நாம் வைத்த கருத்துக்கள்-ஆய்வுகளிலிருந்து உரைக்கும்போது அனைத்துமே தெரிந்துவிடும்.

இங்கே பேசப்படுவது நமக்குள் இருக்கும்,இப்போதைய சதிக் குழுவான-இரயாகரன் குழு!இது, ,புலிகளது கடந்தகால ஆட்காட்டிகள்,புரட்சியைச் சிதைத்த புலிகளது கைக்கூலிகளென்பதை அவர்களது இன்றைய அரசியலிலிருந்து புரிய முடியும்.தம்மீது வைக்கப்படும் விமர்சனம் மற்றும் தம்மைப்பார்த்துக் கேட்கப்படும் உண்மைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காது மற்றவர்களையும் தம்மைப்போல் புரட்டுக்காரரென நிறுவ எந்தக்  கீழ்மையான வேலைக்கும் போகத்தக்கவர்கள் இவர்கள்.இதனாற்றாம் இந்தக் குழுவானது முகமூடியோடும்,முகமூடியற்றும் எங்கும் அலைந்து திரிகிறது.இக் குழுவுக்குத் தீனிபோடும் அந்நியச் சக்திகள் நமது மக்களை இன்னும் மொட்டையடிப்பதற்கு நாம் துணைபோக முடியுமா?

இவர்கள் புதிது, புதிதாக ஆரம்பிக்கும் குழுக்களைக் கட்சிகளை சந்தேகிக்காது"மக்கள் நலத்துக்கான"அணித்திரட்சியென நம்பும் முட்டாள்த்தனமே இதுவரை எமைப் புலிவழியாலும்,மற்றைய குழுக்கள்வழியாலும் அழித்து, அடிமையாக்கியதென்பதைப் புரிந்தும் நாம் இவர்களது கபட அரசியலுக்கும் மௌனித்து, வாளாதிருப்பது மேலும் ஒரு அராஜகக் குழவின் கையில் மக்களின் தலைவிதியைத் தாரவார்ப்பதாகவே அமையப்போகிறது.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள், எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக, இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.

புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் “புரட்சிக்கரர்” என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின் மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.இது,அரசியல் மோசடி!எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான “அதிகாரப் போட்டி அரசியலை-புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச் சூழலில்-“எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே" நமது மக்களது வாழ் நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.

இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங் கடந்து,கண்டங் கடந்து நடந்தேறுகிறது.அங்கே,மாற்றுக் கருத்தாளர்கள் முதல்" புரட்சிக்காரர்கள் " வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!

இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது.

கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன.

இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்”புரட்சி-விடுதலை”குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2013

2:
===========================================
என்னை மீளவும் பெரிய மனுஷனாக்கும் இரயாகரன் குழு!
============================================
அப்பு,இப்படிக் கடந்த காலத்துள் புலிகள்கூட எட்டப்பர் .கொம் மூலம் "வைகைச் சிறியெனக் கட்டுரை போட்டு" என்னைச் சேறடிக்க முனைந்தனர்.

இப்போது, இரயாகரன் குழுவைத்தொடர்ந்து கேள்விக்குட்படுத்தும் எனக்கு,அந்தக் குழுவினது உறுப்பினனும்,எனது ஊரவனான,நான் பார்க்க அரை ரவுசருடன் இயக்கத்தை வேடிக்கை பார்த்தவனுமான ஒருத்தன் நோர்வேயிலிருந்து இப்படியெழுதுகிறான்.





இதுவெல்லாம் எனக்குச் சின்ன விஷயம்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள்,இப்படித்தாம் சோடிக்க வேண்டும்.ஏனெனில்,நீங்கள் எதிர்ப்புரட்சிகரச் சக்திகளென்பதை இப்படி நிரூபிக்கின்றீர்கள்.

நன்றி,இரயாகரன் குழுவே!.

நான்,எப்பவும் நன்றி மறவாதவன் இரயா.

நீங்கள் தந்த சுளகும்-என்னை இரயில் நிலையம்வரை வந்து இரையில் ஏற்றிய இரயாவை-சிறியண்ணனை என்றும் நன்றியோடு எண்ணிக்கொண்டாலும்,அரசியல் ரீதியான உங்கள் தவறான நடாத்தையை நானென்றுமே மன்னிக்கேன்.அது பரந்தபட்ட தமிழ்பேசும் மக்களது தலை விதியையே மாற்றுவது.அதை,எதுக்காகவும்-எவருக்காகவும் காவு கொடுப்பது மனித நாகரீகத்துக்கே கேடானது தோழா!

அது குறித்து இன்னுமின்னும் அதிகமாக  எழுதுவேன்.

ஏனெனில், நாம் மூன்று இலட்சம் மக்களது உயிரோடு விளையாடியவர்கள்.அதன் இரத்தக்கறை உலர்வதற்குள் மீளவும், சதி செய்கிறோமே,அதைத் தட்டிக் கேட்பதென்பது புரட்சியின் முன் நிபந்தனை தோழர்களே!நடத்துவோமா புரட்சி?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.02.2013