-பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்
ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களாகிய நாம் ஒற்றைப் பரிமாணம் கொண்டவர்களாக என்றும் இருந்ததும் இல்லை. இருப்போம் என்பதும் சந்தேகமே. இது மனித சமூகத்தின் இயல்பு நிலை சம்பந்தப்பட்டது. சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம். அவர்களே இலங்கையை ஆள்கிறார்கள். முக்கியமான முடிவுகளின் வெளிப்பாடுகளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இவை எமது உறவு சம்பந்தப்பட்டவை என்பதை அவர்களும், தமிழர்களாகிய நாமும் அறிவோம். இவர்கள் ஏன் போராடுகிறார்கள்? என பல சிங்களக் கல்விமான்கள் அடிக்கடி ஆச்சரியத்துடன் கேட்பார்கள். புலிகளின் தோற்றத்தின் பின்னரே தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக பல சிங்கள கல்விமான்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
அவர்களைப் பொறுத்தவரையில் தமது ஆட்சி யாளர்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கடந்த காலங்களில் தமிழர்களை நன்கு நடத்தி இருப்பதாகவே கருதுகின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையர்கள் பலரும் தமது ஆட்சியாளர்கள் கறுப்பர்களை நன்கு நடத்தியதாகவே நம்பினார்கள். தமது குடியேற்ற ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு தாம் சிறந்த நாகரிகத்தைப் போதித்ததாக பிரித்தானியர்கள் நம்பினார்கள்.
இதேபோன்று தமது நுகத்தடியில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுமைகளோடு வாழ்வதாக தமிழ் ஆட்சியாளர்கள் எப்போதாவது உணர்ந்தார்களா? அதற்கான சாத்தியமுண்டா?
தமிழ்ச் சமூகம் மாபியா போன்ற வெள்ளாள சமூகத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மிகவும் ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகிறேன். புலிகளின் தலைமை அச்சமூகத்தைச் சார்ந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் அறிவுத்தளம் வெள்ளாள சமூகத்திடம் தான் உள்ளது. றோமன் கத்தோலிக்கரும், கரையோர மக்களும் கீழ்ச் சாதியினர் என நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கம் தனது வெளியீட்டில் தெரிவித்திருந்தது.
Prof.Dr.Ratnajeevan H.
தற்போது வல்வெட்டித்துறையில் வாழும் மக்களை உயர்ந்த அரச வம்ச சாதியாகக் காட்டும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தலைமைத்துவத்தை அங்கீகரிக்கு முன் சாதியை உயர்ந்த அந்தஸ்திற்கு எடுத்துச் செல்வது அவசியத் தேவையாகியுள்ளது. நாவலரை உயர்ந்த இந்துவாக உயர்தியதன் பின்னரே அவர் மொழிபெயர்த்த பைபிளின் சிறப்பு விபரிக்கப்பட்டது. உயர்ந்த சாதியினரால்தான் உயர்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் என்பதை நிருபித்த பின்னரே பாலசிங்கம் மாமனிதராக்கப்பட்டார். இது வெள்ளாள சமூகத்தினரால் ஈழப் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் தத்துவார்த்த விளக்கங்களாகும். போராட்டத்தில் இறப்பவர்களுக்கு ஓர் சமூக அந்தஸ்தினை வழங்க எடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடாகும்.
புலிகளில் வெள்ளாளர் அல்லாதோர் உள்ளனர். அவர்கள் அதிகாரத்தின் உச்சநிலையில் உள்ளார் கள் என்பதும் உண்மையே. முதலில் உயர் சாதியர் யார்? என்பதனை விளக்கினால் மட்டுமே அதிகாரத்தில் இருப்பவரை அங்கீகரிப்பது நியாயப் படுத்தப்பட முடியும். அதுவரை இவை தொடரும். இன்னும் இரண்டு தலைமுறை சென்றால் அவர்களும் வெள்ளாளர் அல்லது சைத்திரியர் ஆகிவிடுவர்.
கடந்த 2007 ஆகஸ்ட் 6ம் திகதி புலிகளின் tamilnet என்ற இணையத் தளத்தில் பறையர் சமூகத்தினர் என்போர் தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் மிகவும் சிறப்பு மிக்க வழித் தோன்றல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையத் தளத்தின் ஆசிரியர்களை பறையர்கள் என அழைத்தால் மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகமே. இதுவே வெள்ளாள சமூகத்தின் போலித்தனமாகும். ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அமுக்கி வைக்க முடியாவிடில் தெரிவு செய்து தமது மட்டத்தில் தற்காலிகமாக வைத்திருத்தலாகும்.
வெள்ளாள சாதியினரின் அதிகார முன்னிலைப் படுத்தலும், மேற்குலக நாடுகளில் புதிதாகத் தோன்றியள்ள பணக்கார வர்க்கமும் இணைந்து புதிய தொழிலில் செயற்படுகின்றன. இவர்கள் அவர்களது குடும்ப வரலாறுகளுக்கு புதிய விளக்கம் அளிக்கின்றனர். பழைய அரசர்களின் காலத்திற்குச்; சென்று ஆதாரங்களைத் திரட்டி விளக்கம் அளிக்கின்றனர். பண்பாடான கலாச்சாரத் தினை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டிராத பலர் சிறந்த பண்பாட்டு குடும்ப மரத்தின் வாரிசுகளாக விபரிக்கப்படும் வரலாறுகள் தற்போது எழுதப்படுகின்றன. றோமன் கத்தோலிக்கர் என்போர் கீழ் சாதியர் என வர்ணித்த தமிழ்ச் சங்கம் வெளிநாட்டில் வாழும் இன்னொரு றோமன் கத்தோலிக்க குடும்பத்தினரை ஆரிய சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக வர்ணித்து எழுதியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி இவ்வாறான மடத்தனமான சமூகப் பிரக்ஞையே இல்லாத வெளிநாட்டுத் தமிழர்களின் கையில் சிக்கிச் சீரழிவது நம்பகரமானதாக அமையுமா?
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் புலிகளின் ஆலோசனையாளர்கள் என அழைக்கப்படுவோர் பலரும் வெள்ளாளர்களே. இந்த உண்மையை இவர்களால் மறைக்க முடியாது. சட்ட ஆலோசகர்களாக பேச்சு வார்த்தைக்குச் சென்றவர்கள் வெள்ளாளர் அல்லாதோர் என்ன செய்யவேண்டுமெனக் கூறுவார்கள். இவர்கள் ஒரு காலத்தில் எதிரிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். இவர்கள் வெள்ளாள குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை விட தாம் அவ்வாறான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனக் கூறியே வாழ்ந்த பின்னணியைக் கொண்டவர்கள்.
இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம். தமிழ் தலைமையைப் பார்ப்போம். யாழ்ப்பாணத் தலைமையினால் சகல தமிழரையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமா? எமது கடந்த கால தமிழ்த் தலைமைகள் ஏன் மக்களால் தோற்கடிக்கப்படார்கள் எனபதை இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் சிங்களத் தலைமை அவதிப்படுவது போல் இன்றைய தமிழ்த் தலைமைகளால்; தொடர்ந்து செல்ல முடியுமா? கிழக்கு மாகாண மக்களின் கணிசமான ஆதரவு இல்லாமல் கருணாவால் இவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியுமா? என கிழக்குப் பல்கலைக்கழக கல்விமான்களால் உறுதிபடக் கூற முடியவில்லை. மண்ணுக்குள் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டு நீண்ட காலம் இந்த உண்மையை மறைக்க முடியாது.
சிங்கள ஒடுக்குமுறையிலிருந்தும், விஸ்தரிப்பில் இருந்தும் வௌ;வேறு குழுக்களாக உள்ள மக்கள் வௌ;வேறு விதங்களில் போராடி வருகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் யாழ். மேலாதிக்கத்தில் இருந்தும் தம்மை விடுவிக்க முயற்சிக்கின்றனர். கீழ்சாதி மக்கள் வெள்ளாள அதிக்கத்திலிருந்து விடுதலை பெற போராடுகின்றனர். சிங்கள, தமிழ் மேலாதிக்கத்திற்கு இடையில் நசுங்கியுள்ள முஸ்லீம் மக்கள் தம்மை விடுவிக்கப் போராடுகின்றனர். தமிழ் புரட்டஸ்தாந்து சமூகத்தினர் இன்றுள்ள புதிய ஒழுங்கிலிருந்தும் தம்மை விடுவிக்க அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். மேற்கு நாடுகளில் தம்முடைய ஸ்தானத்தைப் பலப்படுத்துவதும் ஒரு போராட்டம்தான்.
முஸ்லீம் மக்கள் சம்பந்தப்பட்ட எமது பிரச்சாரத்தைப் பார்ப்போம். 27 சதவீதமான தமிழர்கள் வாழ்வதாக சேர். பொன். இராமநாதன் முஸ்லீம் மக்களையும் தமிழ் பேசும் மக்கள் எனக் கூறி இணைத்தார். சேர். ராசிக் பரீத், மற்றும் முஸ்லீம் தலைவர்கள் தம்மைத் தமிழர்கள் என அழைப்பதை விரும்பவில்லை. தமிழரசுக் கட்சி ஒரு வகையில் பாலமாகச் செயற்பட்டு அவர்களது வாக்குகளையும் பெற்றது. எம்மோடு வாழத் தகுதி அற்றவர்கள் என்பதால் அவர்கள் துரத்தப்பட்டதால் இவை யாவும் தற்போது பூச்சியத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் நாம் மொத்த தமிழ் மக்களுக்காகவும் பேசத் தகுதி உள்ளவர்களா?
70 களில் மலையக மக்களை வன்னியில் வந்து குடியேறுமாறு உற்சாகப்படுத்தப்பட்டது. இதனால் இவர்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள் எனக் கருதினார்கள். மலையத்திலிருந்த பிச்சைக்காரர்கள் யாழ்ப்பாண நகரத்திற்கு வந்தபோது எமது சகோதர வாஞ்சை வேறு விதமாக இருந்தது.தமிழ்பேசும் மக்களின் போராட்டம் என்பது மிகவும் விசாலமானது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக போராடுவது என்பது சகல சிறுபான்மையினரினதும் ஆதங்கங்களின் கூட்டாக இருத்தல் வேண்டும்.
P/S:துப்பாக்கி நிழலில் தூங்குவதாக நடிக்கும் சாதியமைப்பை "தமிழீழத்தில்"அறிந்து,கருத்தாட இதையும் படியுங்கள்:தேசத்தில் தலித் சிறப்பிதழ்
நன்றி:தேசத்தில் தலித் சிறப்பிதழ்