Mittwoch, 4. Dezember 2013

“புரட்சி,விடுதலை” குறித்த ,மாயைகள் தகர்க்கப்படவேண்டும்!!!

முன்னிலைச் சோசலிசக் கட்சியின் "முன்னணி " உறுப்பினர் பழ ரிச்சாட்டின் உரையாடல்கள் மூலம்  சில மாதங்களுக்குமுன் புலம் பெயர்"புரட்சிக் காரர்கள்" தமக்குத் தோதானவொரு சாதகமான சூழலைப் புலத்தில் பதியம்போட்டனர்.அதற்காகப் பழ ரிச்சாட்டைப் பயன்படுத்தி முன்னிலைச் சோசலிசக் கட்சியுடனான  தமது கூட்டுக்குப் பற்பல விளக்கம் கொடுத்தனர். அப்போதெல்லாம்  பழ ரிச்சார்ட்   இலங்கையில் "பெரும்  புரட்சிகரமான"  இளைஞர் என்ற பாணியுள்  வைத்துத் தமக்கான அரசியலைப் "புலத்துப் புரட்டுப் புரட்சி"க் காரர்கள் தகவமைத்தனர்.

இதைப் பல கட்டுரையில் நாம் ஏலவே  விளக்கி எழுதியிருக்கின்றோம்.சமீபத்தில்  முன்னிலைச் சோசலிசக் கட்சியிலிருந்து பழ ரிச்சார்ட் பகிரங்கமான விமர்சனத்தோடு விலகியது அறியக் கிடக்கிறது ,அவரது அறிக்கைகளென.

பலதரப்பட்ட குழறுபடிகளுக்குள் சிக்க வைக்கப்பட்ட  இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியலானது மீளவும் ,இலங்கை -இந்திய நலன்களுக்கான அரசியல் -அணிக் கட்டல்களுக்கொப்பவே பலதும் பத்துமாகப் பிளவுகள்-பிணைப்புகளெனவொரு தீங்கான அரசியற் சூழலை எமக்காக்கிய வரலாறு தமிழ் ஆயுத -  இயக்க மாபியாக்களது வருகையோடும்-இருப்போடும் சாத்தியமாச்சு!




இனியென்ன?

முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியற் சூத்திரத்தைப் பக்கம் பக்கமாக நாம் எழுதியிருப்பதால் அதன் மீது குற்றம் சுமத்தி வெளியேறிய பழ ரிச்சார்ட்டின் கூற்றுக்கள் குறித்து பெரிதான எந்த முரண்பாடுகளும் எழுவில்லை!ஏனெனில் ,அதுதாம் உண்மையானது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியல் வருகையுள் இதை  ஏலவே இனங் கண்டவர்கள் நாம்.

ஆனால் ,வழைமயாகப் புலத்துப் "புரட்சி மாபியாக்கள்"தம்மால் தோழரெனத் தோளிற் தூக்கிவைத்துக் கொண்டாடிய ஒரு சில மாதங்களிலேயே பழ ரிச்சார்ட்டைத் தூற்றுவதில் "முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியலை நியாயப்படுத்துவதென்பது" அக் கட்சியின் எசமானர்களது நலனைக் குறித்து இயங்குவதென்றே பொருள்.

இத்தகைய நடாத்தையிற்றாம் ஆயுதக் குழக்கள் இந்திய இராணுவத்தோடு கப்பலேறி, இந்தியாவில் பதுங்கியதும் பின் முள்ளி வாய்க் கால் அழிப்புக்குடந்தையான கையோடு இந்தியாவின் நலனைப் புறந் தள்ளாத அரசியலை வகுப்பெடுப்பதெனவும் ஒரு அரசியலை  நமக்குள் பரப்பும்போது, அதே திசையில் இந்திய -இலங்கை ஆளும் வர்க்கங்களால் தகவமைக்கப்படும் "புட்சி-புரட்சிகரக் கட்சி" யாவும் ஒரே திசையில் வெவ்வேறு தரப்பை உள்வாங்கிச் சிதைப்பதில் உச்சம் பெற்ற காலந்தாம் இது!

இதற்குத்  தோதாக்  கலையரசன்கள்- இரயாகரன்கள்  தமக்கான  கரச் சேவையாக எவரையும் அநுமதிக்காத "புரட்டு மாபியாக்களாகவே" புலத்தில் "அரசியல்  புரட்டுப் புரட்சி"ப் படங்களைக் காட்டுகின்றனர்.

இதுள் ,வேடிக்கை என்னவென்றால் கலையரசனோ முள்ளிவாய்க்கால் முடிவுவரை இலங்கைப் பிரச்சனை குறித்து ஒரு துரும்பைக்கூட எழுத முடியாத  பெருஞ் சந்தர்ப்பவாதியும் , போலிப் புனைவுக் காரனுமாய் இருந்தார்.

இப்போது புலியழிவுக்குப் பின்  "புரட்டுப் புரட்சி"பேசுவதுதாம் நமது காலத்தின் அதிக நகைச் சுவை!

இதைக் கடந்து போனோமானால் சில வற்றை இப்படிப் புரிந்தே தீரவேண்டும்:




முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் “புரட்சி” வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்”புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்”, இதுவரை தொடர்ந்த “தமிழீழ”ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.

இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை, புரட்சி, விடுதலை யெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் “புரட்சி”க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும், மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்.

”தமிழீழப்” போராட்டத்தின் அதே சுத்துமாத்து, சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.


எனவே “புரட்சி,விடுதலை” குறித்த மாயைகளை" அகற்நவேண்டிய பணியே இப்போது பிரதான பணியாகும்-நாம்  அந்நிய ஆர்வங்களுக்காக இந்த மாபியாக்கள் போடும் சதிப் புரட்சி வலையுள் மாட்டப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது உயிரை அவர்கள் மாய்துக்கொண்டே இருப்பர்!

இக் காலமானது ஒடுக்குமுறையாளர்களது நலனுக்கான அரசியலாகவும்-போராட்டங்களாகவும்-புரட்சிகர முன்னெடுப்பாகவும்"ஆளும் வர்க்கங்களது அடியாட் படைகளே கட்சி-குழுக்கள்-அமைப்புகளை"அமைத்து வைத்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துவகை அரசியற் பரிணாமத்துள்ளும் புகுந்து விளையாடுகின்றனர்.

இவர்களை நம்பிச் செல்லும் இளைஞர்கள்  தொடர்ந்து பழரிச்சார்ட்டைப் போல் பழி வாங்கப்படுவினர்.

பழ ரிச்சார்ட்டின்  இன்றைய தெரிவுகூட ஆளும் வர்க்கத்தின் நிகழ்சிக்குட்பட்ட  அரசியல் தெரிவாகவே சமூகத்தில் பொது அரசியல் பின்னப்பட்டுள்ளது.

எனவே-

அந்நியச் சக்திகளுக்கு-அவர்களது நலனுக்காகத் தெரிவாக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்பும் மக்களுக்கானதல்ல!

பெரும் பகுதி மக்களை வேட்டையாடும் இந்த சூழலில் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு ஒடுக்கப்படுவதை அடுத்த பல ஆண்டுகளுக்கு  எவராலும் -ஏன் அந்த மக்களாலேயே முடியாத காரியமாகவிருக்கும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
04.12.2013

Keine Kommentare: