ஊழல்கள் அம்பலமாகும் தரணம்.
ஜேர்மனியப் பொருளாதாரத்தையும் அந்த நாட்டின் அரசியலையும் தீர்மானிப்பவர்களாக இருக்கும் அதிகாரவர்க்கம் மிகக்கபடத்தனமாக உழைப்பவர்களை ஏமாற்றி வருகிறது.அதன் நயவஞ்சகத்தனமான பொருளாதாரச் சீரமைப்பால் நாளும் பல்நூறு தொழிலாளிகள் வேலையிழக்கக் காரணமானர்வர்கள் இன்று தமது தேசப் பற்றைக் கிழித்து நடுத்தெருவில் எறிந்த கதை அம்பலமாகிவருகிறது!அப்பாவி மக்களை மிகக் கொடும் வரிகளைப்போட்டு வாட்டி வதைக்கும் ஜேர்மனிய அரசு,தொழிலாளர்களை ஒட்ட மொட்டையடித்து,அவர்களை வேட்டையாடும் முதலாளிகளால் வழிநடத்தப்படும் அரசாகவே இருக்கிறது.மனசாட்சி என்பதெல்லாம் அதிகாரவர்க்கத்துக்கு,ஆளும் வர்க்கத்துக்கு-ரொப் மனேச்சர்களுக்குக் கிடையாதென்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.
"அமெரிக்க அதிபர் புஸ் தனது இரண்டவது தடவையான ஆபிரிக்கச் சுற்றுப்பயணத்தைத்
தொடக்கியுள்ளார்!
பெனின் தேசத்தில் வந்திறங்கிய கையோடு நுளம்பு
வலையைப்பற்றியும் மலேரியாபற்றியும் மக்கள்சார்ந்து மிகமகத்தாகக் கருத்துச்
சொல்லியிருக்கிறார்.ஆபிரிக்க தேசத்தையும் அதன் மக்களையும் குறித்து அவருக்கு
இருக்கும் கரிசனை என்னவென்பதை நாம்
அறிவோம்.பெனின்,டான்சானியாமற்றும்,றுவான்டா,கானா,லிபேரியா ஆகிய ஐந்து ஆபிரிக்கத்
தேசங்களுக்கான இந்த உலக ஜனாதிபதியின் விசேச வருகையானது அந்த மக்களின் வாழ்வை
"வளப்படுத்தி"விடப் போகுதாம்! "
இன்றைய பொருளாதாரக் கிரிமினல்கள் உலக அரச அதிபர்கள்-அமைச்சர்கள் வடிவினில்மட்டுமல்ல பெரும் தொழிலகங்களின் ரொப் மனேச்சர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த "அதியுயர் நிர்வாகிகள்"செய்யும் திட்டங்கள் உலக மக்கள் அனைவரையுமே பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.உலக நாணய வங்கிய அதிபர் போடும் திட்டமானது இலங்கையில்-இந்தியாவின் விவசாயிகளின் வயற்றில் அடிப்பவையாக இருக்கென்றால் அதன் வீச்சு எவ்வளவு மனித விரோதமானதென்பதை நாம் அறிந்துவிடலாம்.
இந்தத்தரணத்தில்தாம் நாம் ஜேர்மனியே அதிரும் உலகப்பெரும் அதியுயர் நிர்வாகியான கிளவுஸ் சும்விங்கெல் எனும் ஜேர்மன் தபால் நிறுவனத்தின் அதிபரின் வரிஏய்ப்பு மற்றும் கருப்புப்பணம் குறித்து அறிகிறோம்.ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளிகள் வேலை பார்க்கும் அரச-தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தபால் நிறுவனத்தின் பெரும் அதிபர்.மாதமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் யுரோ சம்பளம் எடுக்கும் அதிகாரி தேசத்தை-நாட்டை ஏமாற்றியது மட்டுமல்ல தனக்குக் கீழே தொழில் பார்க்கும் அரை மில்லின் தொழிலாளிகளையும் உலகத்தின் மக்களையும் ஏமாற்றியுள்ளான்.
கொடியவன்!
குளிரினில் கைவிறைக்கக் கடிதங்கள் சுமக்கும் தொழிலாளிக்கு பட்டுணிச் சம்பளம் கொடுத்தபடி தனது வயிற்றுக்குக் கோடிகோடியாகச் சுருட்டிக்கொண்டான்.இத்தகைய திருடர்களே மக்களின் பெரும் பொறுப்பான அதிகாரிகளாக இந்த அரசுகள் ஒப்புவிக்கின்றனர்.அத்தகையவர்கள் தாம் தேசத்துக்குமட்டுமல்ல மக்களுக்கும் எதிரிகளே-துரோகிகளே என்று தம்மைத் தினமும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.கிளவுஸ் சும்விங்கல் என்ற இந்தத் திருடன் ஒரு மில்லியனுக்குச் சொந்தவருவாய்வரி கட்ட மனமின்றி,அதை மறைத்துள்ளான்.தனது வருமானத்தை வெளிநாடுகளிலுள்ள(லிக்கரன் ஸ்ரையின்)வங்களிலும் மற்றும் தொழிகழகங்களிலும் நிதியிட்டு,பணத்தைத் தேசத்துக்கு வெளியே வரிகட்டாது நகர்த்தியிருக்கிறான்.அங்கே,பணத்தைச் சட்டமூலம் நகர்த்துவதற்காக ஏழை-எளிய மக்களுக்கு உதவும் அறக்கட்டளைகளை நிறுவி அதன் பெயரில் பணம் பற்றுவாடா செய்யப்பட்டு வரிவிலக்காகி நகர்த்தும் இத்தகையவர்களை இப்போது வேட்டையாடிவரும் ஜேர்மனிய வரித் திணைக்கழகம் இந்தக் கிளவுஸ் சும்விங்கீலைப்போல் இன்னும் பல ஆயிரம் பெரும் பணக்கார நிர்வாகிகளை வலைவிரித்துத் தேடுகிறது!எனினும்,இத்தகைய திருடனின் பதவி விலகலுக்குப் பின்பு,அவனே யுனிசெவ் டொச்லாந்துக்கான அதிபராகும் நிலையும் இருக்கிறதென்றால் இந்தவுலகம் எவ்வளவு ஏமாற்றுலகமெனப் பாருங்கள்!
ஜேர்மனிய இறைவரிப் புலனாய்துறையின் தேடுதலில் வசமாக மாட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் வெளியில் வருகிறார்கள்.தம்மீது சுமத்தப்படும் குற்றத்துக்கான தண்டனையைப் பணமாகச் செலுத்தி வெளியில் வந்துவிடுகிறார்கள்.இவர்களே இன்றைய பொருளாதாரத்தைத் தின்று ஏப்பமிட்டு,அப்பாவிகளை வேட்டையாடுபவர்கள்.
இவர்கள் எங்ஙனம் மாட்டுப்படுகிறார்கள்?முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே சட்டரீதியாகக் கொள்ளையிடும் சட்டதிட்டங்களைத்தாமே உருவாக்கி உழைப்பவர்களைச் சுரண்ட ஜனநாயகம் என்கிறது!எனினும்,இத்தகைய பொருளாதாரக் கிரிமினல்கள் எப்படி உருவாகிறார்கள்?ஏன் உருவாகிறார்கள்?
அரசியல்வாதியிலிருந்து அதிகாரத்திலிருப்பவர்கள்வரை ஊழலில் மிதக்கிறார்கள்!அப்பாவித் தொழிலாளர்களை வேட்டையாடும் பொறிமுறைக்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்னு வேறு பெயரென்றால் அவர்கள் இதைவிடவா வேறு வழியில் சிந்திப்பார்கள்?வரிNயுப்புத் திமிங்கலங்களில் ஆயிரக்கணக்கான பெரும் தொழிற்கழகங்களிள் நிர்வாகிகள்-அதிகாரிகளின் பெயர்களை ஜேர்மனிய அரசு பணம் கொடுத்துப் பெற்றிருக்கிறது.வெளியுலக வங்கியில் பதுக்கப்பட்ட பணங்களின் தொகையும்,அதைப் பதுக்கியர்வர்களின் முழுவிபரமும் அடங்கிய சி.டி.றூம் ஒன்றிற்கு கமிசனாக 4.2 மில்லியன்கள் யுரோவை ஜேர்மனியப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டவொரு துப்புத்துலக்கிக்கு வழங்கியுள்ளார்கள்.இதன் அடிப்படையிலேயேதாம் திரு.கிளவுஸ் சும்விங்கல் மாட்டியுள்ளார்.வரும் கிழமைகளில் இன்னும் பல் நூறு பெரும் அதிகாரிகள்-நிர்வாகிகளை இந்தப் புலனாய்வுத்துறை கைத்துசெய்யும் அல்லது அவர்களிடம் தண்ட-அபராதப்பணம் பெற்று விடுதலை செய்யும்.
தொடரும்.
நிர்மாணம்
18.10.2008