Dienstag, 28. April 2009

மு.மயூரனின் பின்னூட்டுக்குறித்துச் சில...

"புலிகளது அழிவைப் பார்!
நாங்கள் கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.
துப்பாக்கிக்குத் தோளைக் கொடையாக்கியதில்
கரங்களுக்குள்ளேயே உலகமெனச் சொன்ன புலிகளும்-நாங்களும்
கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.


அந்தப்பாடம்
விடுதலையினதும்,
விலங்கினதும்
சரியான அர்த்தத்தை அவர்களுக்கு
இனியாவது மக்களது கண்ணீரிலிருந்து
சொல்லிக் கொடுக்கட்டும்.

ஈழம் பெற்றுத் தருவதாகவுஞ் சில சொல்வார்
எம்மை மீளவும் மொட்டை அடிக்க
அது தமது ஆட்சியிலும் தொடர
போலிக்கு ஈழம் விற்பார்!

நம்பாதே!
நாடுகளுக்குள் விலங்குகள் இருப்பதை அறி!
அதற்கு மொழியுமில்லை
மதமும் இல்லை.
உன்னைக் கட்டிப் போடுபவர்க்கு மட்டுமே
மொழியும்
மதமும்
மண்ணும் அவசியம்."


இன்று,தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள்-அமைப்புகளின் அரசியற்கண்ணோட்ட நிலை என்னவெனில், இலங்கை அரசை ஒரு தரப்பும்,புலியை மற்றொரு தரப்பும் நியாயப்படுத்தி மக்கள் நலனை வெறும் இயக்கவாத- இனவாதக் கருத்துக்களுக்குள் உந்தித்தள்ளி,இருதரப்பினதும் அரசியல் இலாபங்களைக்குறித்து மக்களின் அழிவில் அடைகின்ற வியூகங்களோடு, யுத்தம் முடுக்கிவிடப்பட்டுள்ளதென்றவுண்மை நமது முகத்தில் ஓங்கி உதைக்கிறது!

இந்த யுத்தத்தால்"ஈழத்தோடு" மக்களும்,புலிகளும் அழிந்து, இலங்கையில் தமிழ்பேசும் மக்களது வாழ்வே மரணவோலத்தோடு திறந்தவெளிச் சிறைச்சாலைகளுக்குள் ஒதுங்குகிறது.இதை உலகுக்குச் சொல்லும் அரசு,"மக்களைவிடுவிக்கும் யுத்தம்"என்றுரைக்கப் புலிகள் இனவழிப்பு யுத்தம் என்கின்றனர்.இதில்மட்டும்தாம் புலிகள் உண்மையாகப் பேசுகிறார்கள்.ஆனால்,இந்த இனவழிப்புக்குத் தோதான தமது தவறு என்னவென்பதைக் குறித்து அவர்கள் மௌனமாகிச் செத்தொதுங்குகிறார்கள்.இங்கே,புலிகளது இந்த மறைப்பு-மௌனம் மிகவும் தீவிரமான முறையில் கலைக்கப்பட்டு உண்மைகள் புரியப்பட வேண்டும்.இது,எப்படிச் சாத்தியமாகும்?


நாம்,மு.மயூரனின் பின்னூட்டத்தினூடாகச் சிலவுண்மைகளைப் புரியலாம்.


அதன்வழி சிந்திக்க முனைதலே மிகச் சரியான தெரிவையும்,அடுத்த கட்ட நகர்வையும் எமக்கு வழங்கும், காலத்தை எதிர்கொள்வதில் நியாயமிருப்பதை உணர்த்தும்.


நாம் தொடர்வோம்!


இதுநாள்வரையான புலிகளது ஈழப்போராட்டம் குறித்துச் சொல்லியாகிவிட்டது.


இன்று, சிங்கள அரசு செய்யுங் கொடும் இனவழிப்பு யுத்தத்துக்குச் சார்பானவர்கள் பலர்-அவர்களுள் மேற்குலகங்களும் அடக்கம்.


இவ் மேற்குலகம் நாளைய தினம்-29.04.2009 அன்று, இலங்கையில் யுத்த நிறுத்தங்குறித்துப் பேச்சுக்களை நடாத்த, இங்கிலாந்து,பிரான்ஸ்,சுவீடன் தேசங்களது வெளிவிவகார மந்திரிகள் இலங்கைக்குப் போகிறார்கள்.அவர்களில் சுவீடன் வெளிவிவாகார மந்திரிக்கு இலங்கையில் விசா மறுக்கப்படுகிறது.இதை ஜேர்மனிய "டொச்ச வெல-Deutshe Welle" ரேடியோ பலதடவைகள் செய்தியாகச் சொல்லியது.எனினும்,தமிழ் மக்கள் ஒரு சரியான அரசியல் தெரிவுக்குள் தம்மை உட்படுத்திப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குள் நுழைத்தாகவேண்டும்.


மக்களது அழிவைத் தடுத்து நிறுத்தும் அரசியல் முன்னெடுப்பை முற்போக்காகச் சிந்தித்துச் செயற்படுத்தவேண்டும்.


மக்களது அழிவைச் சொல்லி அரசியல்-ஜனநாயகம்பேசும் முன்னாள் இயக்கங்கள் இன்று, இலங்கை அரசினது இனிவழிப்பு அரசியலைத் தமது இலாபத்துக்கான தெரிவில் மறைத்து அங்கீகரிக்கின்றார்கள் என்பதற்கு, இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ரீ.பீ.சீ.வானொலியே நல்ல எடுத்துக்காட்டாகிறது.


மக்களில் அவலத்துக்காகக் குரல்கொடுப்பதாகவும்,புலிகளது அராஜகத்துக்கு மாற்றான இலங்கை அரசினது"ஜனநாயக"ச் சேவையின் அவசியத்துக்காகத் தம்மாலான வழிகளில் போராடுவதாகவுஞ் சொல்லும் இராமராஜன் குடும்பம்,இலங்கை அரசினது விசா மறுப்பு அரசியலை மூடிமறைக்கிறது.

இலங்கை அரசானது நோர்வே வெளிநாட்டு மந்திரிக்கு அழைப்புவிடுக்கவில்லை என்றும்,அது,இப்போது அவசியமில்லை என்றும் ஓலமிடுகிறது.சர்வதேசவூடகங்கள் இலங்கை அரசினது ஜனநாயக மறுப்புச் செயலை அம்பலப்படுத்தும்போது, இந்த ஈ.என்.டி.எல்.எப். குழுவினது ரீ.பீ.சீ.வானொலியானது தனது எஜமான விசுவாசத்துக்காக அனைத்தையும் மூடி மறைக்கிறது.


என்ன நம் அரசியல்?


மக்களை வேட்டையாடுபவர்கள் சிங்கம்,புலி வடிவில்மட்டுமல்ல ஜனநாயக வேடம் பூண்ட மக்கள் விரோத முன்னால் இயக்ககங்களின் இன்றைய முகவர்களும்தாம் என்பது மிகச் சரியானவுண்மையாகிறது.


இந்த இக்கட்டான அரசியல் பாத்திரத்தில் தமிழ் மக்கள் தமது உயிரைத் தினமும் இழந்து பிணமாகிறார்கள்!


நாம் புதிய வகையில் சிந்திக்கவும்,மக்கள் சமுதாயத்தைப் புரட்சிகரமாகப் புரிந்து எமது விடுதலைக்காகப் போராடவேண்டியுள்ளதும், இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும்.


எமது சமுதாயம்,புலிவழி அரசியலையே அன்றி, இன்றைய இலங்கைப் பாசிசத்தை ஜனநாயகமெனச் சொல்லியோ, மக்களது பிணத்தில் தத்தமது அரசியலை முன்னெடுக்கும் முன்னாள் போராட்டக் குழுக்களின் அரசியலையோ நம்பிக்கொண்டு, மேலும் இதையே போராட்டமாகக் கருதி விடுதலைகுறித்துப் போராட முடியாது.


இதை தமிழ்பேசும் மக்களது இளைய தலைமுறை மிக நேர்த்தியாக விளங்க வேண்டும்.


இந்த ஆரம்பத்தை மு.மயூரனின் பின்னூட்டு ஒன்றினூடாக நாம் அறிகிறோம்.


இது, வரவேற்கத்தக்கது.


எமது தலைமுறையில் நாம் விட்ட தவறுகளையெல்லாம் இவர்களால்மட்டுமே கேள்விக்குட்படுத்த முடியும்!


நம்மைவிட வீச்சாகப் புரியவும் இவர்களால்மட்டுமே சாத்தியமாகும்.தலைமுறையொன்று தமது தவறான போராட்ட வழி முறைகளால் இழைத்த தவறுகளால், சிதைந்த தமது இளைய தலைமுறையின் எதிர்காலத்தை அந்த இளைய தலைமுறையேதாம் சீராக்கஞ் செய்யவேண்டிய நிலையில்,திரு.மு.மயூரனின் சிந்தனைத் தெளிவு நமது தலைமுறையினது தவறுகளைக் களைந்து மேலும், முன்னேறும் என்றே நம்புவதால்,மயூரனின் பின்னூட்டத்தை மறு வாசிப்புக்கும்,சிந்திப்பதற்குமான தேவையின் நிமித்தம், நந்தினியின் பதிவிலிருந்து தறித்தெடுத்து இங்கேயும் ஒட்டிவிடுகிறேன்.


நமது மக்களது இன்றைய வெற்று அரசியல் இடம் நிரப்பப்பட்டாகவேண்டும்.


அது,புரட்சிகரமான அரசியலூடாகவே முன்னெடுத்தாகவேண்டும்.அதற்கு, ஆற்றலுடைய இளைய தலைமுறை புதிய போக்குகளைக் கண்டடையவேண்டும்.அதற்கான சில குறிப்புகளை மயூரன் குறிப்புணத்துகிறார்.இது,மிகவும் பொருத்தப்பாடான தேடல்.


இதுநோக்கி இன்னும் தேடுதலும்,கற்றலும் அவசியமானது-அதை இந்தத் தலைமுறை நிச்சியம் சாதிக்கும்!


புலிகளது அழிவைப் பார்!
நாங்கள் கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.
துப்பாக்கிக்குத் தோளைக் கொடையாக்கியதில்
கரங்களுக்குள்ளேயே உலகமெனச் சொன்ன புலிகளும்-நாங்களும்
கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.


அந்தப்பாடம்
விடுதலையினதும்,
விலங்கினதும்
சரியான அர்த்தத்தை அவர்களுக்கு
இனியாவது மக்களது கண்ணீரிலிருந்து
சொல்லிக் கொடுக்கட்டும்.

ஈழம் பெற்றுத் தருவதாகவுஞ் சில சொல்வார்
எம்மை மீளவும் மொட்டை அடிக்க
அது தமது ஆட்சியிலும் தொடர
போலிக்கு ஈழம் விற்பார்!

நம்பாதே!
நாடுகளுக்குள் விலங்குகள் இருப்பதை அறி!
அதற்கு மொழியுமில்லை
மதமும் இல்லை.
உன்னைக் கட்டிப் போடுபவர்க்கு மட்டுமே
மொழியும்
மதமும்
மண்ணும் அவசியம்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
28.04.09



சிங்களவர்-தமிழர் என்ற எதிரெதிர் நிலைகளூடாக மட்டும்
ஈழப்பிரச்சினையை பார்க்க வெளிக்கிட்டால்
ஈழப்பிரச்சினையை எப்போதும் புரிந்துகொள்ள முடியாது.

-மு.மயூரன்


"நேபாளத்தோடு ஈழப்போராட்டத்தை ஒப்பிடவெளிக்கிடும் ஒவ்வொரு பொழுதிலும் இரண்டும் வேறு வேறான போராட்டங்கள், அதைப்போல இது இருக்க முடியாது ஈழத்தில் புலிகளின் போராட்ட முறை சரியானதே" எனும் வாதம் முன்வைக்கப்படுவது வழக்கம்.

இப்போக்கு முன்னர் புலிகள் இருந்த காலத்திலும் இப்போது தோற்ற பின்னரும் வைக்கப்படுகிறது.


ஈழப்பிரச்சினை இனரீதியான ஒடுக்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் முழுக்க முழுக்க இனரீதியான பிரச்சினைதான் ஈழப்பிரச்சினை என்று பார்ப்பவர்கள் வரலாற்றையும் அரசியலையும் மிக மேலோட்டமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.

சிங்களவர்-தமிழர் என்ற எதிரெதிர் நிலைகளூடாக மட்டும் ஈழப்பிரச்சினையை பார்க்க வெளிக்கிட்டால் ஈழப்பிரச்சினையை எப்போதும் புரிந்துகொள்ள முடியாது.

ஈழத்தில் அதிகாரவர்க்கங்கள் பெரும்பான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கான முனைப்பிலிருந்தே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அதிகாரங்களுக்கு பிரித்தாள்வதற்கு ஏற்கனவே இங்கிருந்த இனரீதியான பகைமையும் மேலாதிக்கப்போக்கும் பேருதவி புரிந்தன.
இந்த உள்நாட்டு அதிகார வர்க்கங்களின் நலனோடு பன்னாட்டு அதிகாரங்களின் நலன்கள் கூட்டுச்சேர்ந்துகொண்டதோடு ஈழப்பிரச்சினை ஒரு பன்னாட்டுப்பிரச்சினையாக மாறிப்போனது.

நேபாளத்தை இப்போது நாம் ஒப்பிடலாம். அங்கே மாதேசிப்பிரச்சினை பிரதேசவாதத்தை அடிப்படையக்க்கொண்டது. அப்படியானால் அங்கே பிரதேசப்பிரச்சினை தான் இருக்கிறதென்ற முடிவுக்கு வரலாமா?

தேசிய முரண்பாடுகளை ஊதி வளர்ப்பதும் அவற்றுக்கு எண்ணெய் சொரிவதும் அதிகார நலன்களுக்கு சாதகமானது.

இலங்கையின் அதிகார வர்க்கங்கள் தொடக்கம், இன்றைய INGO க்கள் வரை இலங்கைப்பிரச்சினையை தேசிய முரண்பாடாக மட்டும் காட்டி கட்டமைக்க பெரு முயற்சி எடுக்கின்றன.

சிங்கள மக்களையும் தமிழரையும் முஸ்லிம்களையும் மலையக மக்களையும் பிரித்து, முரண்பட வைத்து, பகைமையை ஏற்படுத்தி அடக்கியாள நினைக்கும் பன்னாட்டோடு கைகோர்த்த உள்நாட்டு அதிகார வர்க்கத்தை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதே இலங்கையில் பிரச்சினை தீர்க்கும் அழுத்தமான முதற்கட்டமாக இருக்கும்.

இங்கே நேபாளப்படிப்பினை எமக்கு மிகவும் உதவி புரியும்.

ஆனால் போராட்டம் அத்தோடு முடிந்துவிடாது. காலகாலமகா வளர்க்கப்பட்ட இன மேலாதிக்க மனநிலைகள் களையப்படவேண்டும். அதற்கான போராட்டமாக அது தொடரும்.


மு. மயூரன&hellip ஏப்ரல் 28, 2009 at 05:45


http://mvnandhini.wordpress.com/2009/04/27/???????-???????-????????/