Samstag, 26. November 2011

பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..."

// பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. //


http://www.facebook.com/parani.krishnarajani


பரணி,இஃது ரொம்ப ஓவராக இல்லையா?

"சுதந்திரம்,விடுதலை,இறைமை"என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை?அதன் அடிப்படைகள் என்ன?பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..." "........." இதுதாம் இன்னும் மோசமான ஆபத்தைத்(அபத்தம்) தமிழ் மக்களுக்குத் தரவல்லது.


அவர் எந்தவொரு கோட்பாட்டுருவாக்கச் சித்திரத்தின் கர்த்தாவாக இருக்க முடியாது!நடைமுறைசார்ந்து ஒடுக்குமுறைக் கெதிரான "எதிர்ப்புப் போராட்டத்தை"ஒரு இனஞ்சார்ந்து அதைத் சமூகவுணர்வுக்குள்ஜீரணிக்க வைத்ததும்,அதையே ஒரு கட்டத்தில் சமுதாய ஆவேசமாக்கிய பிரக்ஜையில் பிரபாகரன் ஒரு குறியீடாக இருப்பதால் அவர் கோட்பாட்டுருவாக்க கர்த்தாவென்பது மிகைப்படுத்தப்பட்ட உரையாடல்.இதன் வாயிலாகத் தமிழ் இளைஞர்களது சிந்தனைக்குள் மீளவும் மாயயை-போலிப் பெருமையைக் கட்டி வைத்துச் சுயசிந்தனையை மழுங்கடிக்கும் போக்கு இது.சிந்திக்கவும்.


தமிழ்ச் சமுதாயத்திடம் எந்தவொரு கோட்பாட்டு இரீதியான உருவாக்கமோ அல்லது செல்நெறியோ இதுவரை நியாயமான வடிவில் நிறைவாக உருவாகவில்லை!தமிழ் மொழியானது வெறும் பூஜைக்குரிய மொழியாகவும்,எதிரிகளால் போலிப் புகழுக்கும் உட்பட்ட வெறும்உணர்வுசார் புனைவுகளால் வாழும் மொழி.இது,ரொலான்பார்த் வழி புரியப்பட்ட"மொழி பாசிசத் தன்மையாக நின்றேகும்"நிலைக்கு மிக நெருங்கிய மொழியாக இன்றிருக்கிறது!இந்த மொழி பேசும் மக்கட்டொகுதியானது இதுவரை"திருக் குறளை"வைத்து உலகைப் புரிய முனையும் அபத்தத்தின் மத்தியில் பிரபாகரன் குறித்து மிகைப்படுத்தி வைப்பதில் அடுத்த தலைமுறையையும் இப்படியே வழிப்பாட்டு அடிமைக் கூட்டமாக்கும் கைங்காரியத்தையும் நீங்களும் செய்வதில்"இனத்தின் விடுதலை,சுதந்திரம், இறைமை" என்பதைப் புலிகளது போராட்டச் செல்நெறிவழி உரைக்க முனைதலானது இதன் அடிப்படைகளைச் சொல்லி சென்றிருக்க வேண்டிய அவசியத்தைக் கோருகிறது.மற்றும்படி, தொல் காப்பியத்துக்கு விளக்கந்தரும் வேலை போன்று பிரபாகரன் குறித்துக் கருத்துக் கட்டுவது ஒரு இனத்தின் விவேகத்தின்மீது ஆணியடிப்பதாகும்!

இங்ஙனம் நீங்கள் செய்வதாவது,குறியியல் ரீதியான உணர்வுகொள் சொல்லாடல் குறிப்பானைக் காரணியாக்கும் மருவு நிலையில் புறநிலைகளின் தன்மைகளை மறந்தொதுக்கிறது.ஒப்புமை மூலமாக"இனவிடுதலையை,சுதந்திரத்தை, இறைமை" விளக்கப் படுத்துவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை."இனவிடுதலை,சுதந்திரம்,இறைமை" என்பவை குறிகளின் தொகுப்பல்ல!

மொழிவழியாகவுணரப்படும் இவைகளை மொழிவழி குறியாக அடையாளப்படுத்துவதில் அதன் அடிப்படைகள் மறுக்கப்படுகிறது.பிரபாகரன், தமிழ்இனத்தின் இன்றைய கட்டத்தில் இவற்றுக்கானவொரு குறிப்பானாக இருப்பது,அவர்வழி உணரப்படும் போராட்டம் ஒரு குறியீடாகத் தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்திருப்பதானது மேற்காணும் இனவிடுதலை,சுதந்திரம்,இறைமைக்கு கோட்பாட்டுச் சித்திரங்களல்ல!கோட்பாடென்பதை மிக மலினப்படுத்திக் கதைப்பது இன்றைய நிலையில் சாத்தியமாகிவிடுவதையிட்டு நாம் கேகலின் அகவயக் குறைபாடான இயக்கவியலுக்குள் மெல்லச் செல்கிறோம்.ஒன்றின் தொடர்ச்சியை இன்னொன்றுக்குள் காணும்அனாலோஜிக் கோட்பாட்டுரீதியான ஒப்பீட்டுருவாக்க மொழிவு, உங்களது கருத்தின்வழி புரிய முனையும் இந்த நிலையில் இதுவொருவகை சிம்பாதி-பரிவுணர்ச்சி என்பேன்!

இது,எமக்கு எட்டப்பட முடியாது நிற்கும்சுதந்திரம்,இன-விடுதலை,இறைமை குறித்து மிக வேகமாக "போலிப் பெறுதல்" உணர்வுக்குள் மிக வேகமாக ஒருவரை இணைத்துவிடுகிறது.இதன் இயக்கவியல்ரீதியான உள்ளடக்கமானது அனைத்து வடிவத்தையும் உடைத்துவிடுதனால் ஒவ்வொன்றின் தனித்தன்மையையும்(சுதந்திரம்,விடுதலை,இறைமைசார் ஒரு இனத்துக்குள் இருக்கும் பல்வேறு தன்நிலைகளை) அழித்துவிடுகிறது. இது,சுதந்திரத்தையும்,விடுதலையையும்,இறைமையையும் வெறும் மொழிவுகளுக்குள் குறுக்கி-குறியாக்கி வடிவத்துக்கு அந்நியத்தை வழங்கி,நாம் இவற்றுக்குப் பக்குவப்பட்ட வாழ்வைத் துய்க்க இலாயக் கற்றவர்களென்று சொல்லாமற் சொல்கிறது.இதைத் தொடர்ந்து நீங்கள் கட்டும்-உதிர்க்கும் நறுக்குகளுக்குள் இயங்கும் நிலைகளாக என்னால் நிறுவ முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
25.11.11