Montag, 7. März 2016

மெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...

சின்னமடு மாதா!


அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,
 மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கிக் கை அசைக்க…

 
>> நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு ”சாத்தான் வந்துவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்”என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான். <<



மெல்லப் பாடும் தென்றலும்
மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்
கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்”






அது ஒருகாலம்.மழைக் காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.


எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டு கிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவ வேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள் ; இப்பவும் இருக்கிறாள்!


சிவா…


எப்படியோ,எதன்படியோ கொல்லப்பட்டான்…


பனிப்பொழுதுகளில் அவளது படிக்கட்டுகளில் நாம் புகைத்திருக்கிறோம்.புதினமாகச் சுருவங்களைக் கண்டிருக்கிறோம். ஏசுநாதருக்குச் சிலுவை சுமக்கவைக்கும் படங்களை அலுப்பின்றிப் பார்த்துக் கண்ணீர் சிந்தியருக்கிறோம்.பின்னாளில் நாம் இதையே பெறுப்போகிறோமென்ற சிந்தனையின்றி.








“சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய்ச் சின்னமடுமாதா வளவில் குத்தி விழும் மனம்”
 
நிலாக் காலத்துச் சித்திரை நிலவுக்கு மாதா கோயில் பகற்பொழுதாகவே இருக்கும்.எங்கள் கும்மாளமும், குதூகலிப்பும் அவளது இருப்பையே அசைத்திருக்கும்.எங்களுக்குச் செபம் தெரியாது.நாங்கள் தேவாரம் பாடியும் அவளைத் தரிசித்திருக்கிறோம்.சின்னமடுமாதாவுக்கு ஆடிமாதத்தில் விழாவெடுப்புத் தொடங்கும்.ஆடிக் கொடியேற்றமும்,ஐப்பசிப் பெருநாளும் நம்மைக் குதூகலிக்க வைப்பவை.கூடார வண்டில்களது தொடரணியைக் கண்டும் ; சில்லாலை -ஏழாலை மக்களது ஐப்பசிப் பூசைக்கான அவர்களது தரிப்பிலும் ; அவர்களை நனைக்கும் மழையிலும் குயில் கூவுவது எனக்கொரு நிறைவான காலம்! ; சின்னமடுமாதாவின் மணியோசையில் ஊர் உறங்கச் செல்லும் பொழுதுகளில் நாம் உலாத்தப் போவது வழமையாகும்.உறக்கம் கலைத்து ஊருக்குள் மடங்கட்ட முனைந்த நமக்கு சொற்பகாலத்தில் சுகம் தொலையுமெனக் கனவிலும் எண்ணாத வயதவை.


தற்போது எனது சின்ன மடுமாதாவை உரு மாற்றிவிட்டார்கள்!


அவள் ,இருப்பிடத்தை தமக்கேற்றமடி மாற்றிவிட்டார்கள்.அவளது ஒரு கோடி எனது முற்றம்.அம்மாவின் மடியுள் கிடந்தபடி பாதர் சிங்கராசா அவர்களது நீண்ட - பொலிவான தமிழைக் கேட்டிருக்கிறேன்.என் மாதாவின் குருசு மரத்தைச் சாய்த்தவர்கள் எவர்? 






கடந்த 48 வருடங்களுக்கு முன்னாள் நான் ,அவளது கோவிற் தரை நிலத்தில் "அ.ஆ.இ..."எழுதக் கற்றேன்.எனக்கு -எங்களுக்கு வாய்த்த ரீச்சர் அக்கா ,ரீற்ரா கியோகுமார்.அவரது தமிழ் எழுத்துக்கள் அச்செழுத்தைவிட அழகானது -அவரைப் போலவே!யஸ்ரின் டயசு; யஸ்ரின் அன்ரூ ; அமலோற்பவநாதன் ;சிவகுமார் ; சகாயமல்லிகா ;அம்சற்வனி ;சகாயமலர் ; தமிழ்ச் செல்வி ;லிற்பின் மேனாக ;ஞானமலர் ;ஞானகரன் ;பாலகுமார் ;விசயகுமார் ;கேதாரம் ; ஶ்ரீகாந்தராசா ;யோண் டேவிட்டு ; எட்மன் பீரூ எனப் பலர் என் பள்ளித் தோழர்கள்.நாங்கள் ஓடியாடிப் பாடித்திரிந்த வளவு -மழைவெள்ளங்கண்டு நிரம்பிய அவளது வளவில் நீர் விளையாடிய அந்த முற்றம் அன்பும் ,அரவணைப்புமிக்க என் மாதாவின் வளவு இன்று, வெகுவாக மாறிவிட்டது.கடந்த 31 ஆண்டுகளாக அவளைவிட்டு நான் நீண்ட தூரம் கடந்துகொண்டேயிருக்கிறன். இந்த ஆண்டு, 2016 ஆடிப் பெருநாளுக்கும் நான் உன்னிடம் வருவதற்கு வழியில்லை! ; என் மரணம் உன்மடியிலேயே நிகழவேண்டுமென்பது என் நீண்ட நாளாசை! ;அதற்காகவா என்னையின்னும் அழைக்கவில்லை? 


அன்று ,நாங்கள் தவமிருக்கும் குருசு மரத்தடியை அண்டியபடி மாதாவுக்கு வானுயரக் கொடியேற்றப்படும்.அந்தக் கொடியோடு எங்கள் குதுகாலத்துக்குக் குறைச்சலே இல்லை. கடலைக்கொட்டகையின் வரவுக்கும்,ஐஸ்கிறீம் வானின் வருகைக்கும், விளையாட்டுச்சாமான் விற்கும் ”சோனக”க் கடைகளின் வருகைக்கும் இக்கொடியேற்றமே காரணமென்பதால் நாம் மகிழ்வோம்.நல்லதே நடக்கும்.நாங்கள் பயணித்த பாதைகளில் இப்போது தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினது பாரிய உடல் விரிந்துகிடக்கும். வீட்டில் பாயில் புரளும்போதெல்லாம் இந்த இரைச்சல் எங்களுக்கு மீள மாதா கோவில் வளவுக்குள் இழுத்துவரும் ஆசைகளை.நாம், எழுந்து ஆலமரக்கிளைகளில் தவம் இருப்போம்.அப்பப்ப “கம்பு”விளையாடுவோம்.



காலையிற் காகத்தின் கரைவிலும்,குயிலின் கூவலிலும் அறுபடும் தூக்கம் ,மாதாவின் வளவுக்குள் விழிகளைத் தூக்கி வீசும். சில வேளைகளில் தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினுக்கு மாற்றாகக் கு.வேலுப்பிள்ளைக் கிழவரது லையிட் எஞ்சின் வரும்.நாங்கள் அவருக்குக் கிட்டப் போவதேயில்லை! ; அந்த மனுசன் திட்டுவார்.கண்ணைச் சிமிட்டும் லைட்டுக்கள் எங்களுக்கு மனதில் வர்ணயாலத்தைப் பரவவிடும்.நாம் மகிழ்ந்து-வாழ்ந்தோம்! 






இந்த மாதாவைக் கொணர்ந்து எங்கள் வீட்டு ஒரு வேலிப்புறத்தில் ஊன்றிய கொலனித்துவம், 1858 ஆம் ஆண்டுகளில் நமது கிராமத்தில் ஐரோப்பியக் கட்டக்கலையையும் சுற்றுப் புறத்தையும் நட்டுப்பார்த்திருக்கிறது.சீமை மரங்கள் என்று பலவகை மரங்கள் மாதா கோவிலுக்குள் நிற்கின்றது.நாம் குட்டூறு மரமென்றும் அதன் மாங்காய் வடிவிலான காய்களை உடைத்து, அதன் உள்ளே பொதிந்துள்ள இலைவகைச் செட்டையில் கெலிகெப்றர் பறக்கவிட்டத்தையும் தவிர எங்களுக்குக் கொலனித்துவங் குறித்து எதுவுமே தெரியாதிருந்தது அன்று.விழிகளைத் தூக்கி மீளவும் ,எமக்குள் ஒட்டும்போது, எமது உயர்தரப் பாடசாலை மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடைக்குக் கட்டளைபோடும்.வேலணை நோக்கி நடக்கும்போது,பையில் சில்லறை இருக்குமா என்ற தேடுதல் கன்ரீன் போண்டாவைக் குறித்ததாகவே இருக்கும்.நான்கு மணிக்கு வீடு மீளுவும்வரை போண்டாவாது உதவுமென்பது, தோட்டக்காரர்களது குழந்தைகளுக்கே வெளிச்சமானது.அம்மாவும்,அப்பனும் தோட்டத்தில் மாரடிக்கும் அதிகாலைப் பொழுதில் அழுவது எமதும் வயிறும்தாம்.


பின்னாளில்,ஊரும்,உறவுகளும் அறுத்து அநாதவராக்கப்பட்ட எங்கள் கிராமத்தின் முழு அர்த்தமுமே மாதா கோவிலோடு தொடர்புப்பட்டது.எங்கே விளையாடிக் களித்தோமோ, அங்கே,வருங்கால ஈழத்துக்காகக் கதையாடிப் பார்த்தோம். கருத்தரித்த கனவுக்குக் காரியத்தை மாதா கோவிற்படிகட்டுகளில் ஆய்ந்திருக்கிறோம்.மெல்லிய நிலாவொளியில் மெலிந்த பல உருவங்களோடு நானும் இருந்திருக்கிறேன்.எங்களுக்கு அரசியல் புகட்டியும்,விடுதலையின் வேட்கையத் தகவமைக்கும் பலர் முனைந்த இந்த மாதா கோவிலுக்குப் பாதர் சிங்கராயர் பிரசங்கம் செய்திருக்கிறார்.



ஈழத்துவிடுதலைக்கு உண்மையாய் உழைத்தவர்களில் அவர் எப்பவுமே இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
 

“எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!”
 


நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு”சாத்தான் வந்துவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்”என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான்.



அவனது “கத்தலில்” நாங்கள் மாதா கோவிலுக்குள் படையெடுப்போம்.



அப்போது, அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாதாவிடம் மன்றாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம்.அவன் சினிமா நடிகன் ரகுவரனின் தோற்றத்தோடும்,அவரைவிட உயரமாகவும் இருப்பான். இலண்டனில் கற்ற கல்விக்காரக் குடும்பத்தின் மூன்றாவது பையன்.அண்ணன் மாரும்,தங்கை மாரும் இலண்டனில் படிக்க இவன்மட்டும் சின்னமடுப் படிக்கட்டுகளில் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவான்.



அற்புதமான ஆங்கில நடையில் பைபிள் கதைகள் சொல்லுவான்.நாங்கள் தமிழில் கதை சொல்லக் கேட்போம்.சின்னமடுமாதாவை நினைக்கும்போது, வெஸ்லியின் உடைந்த தமிழ் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பைக் கூட்டிவருகிறது.அதே தருணத்தில் அம்மாவின் மடியில் தலைவைத்து முற்றத்தில் நாம் நிலாப்பார்த்த காலத்தில், பாதர் சிங்கராயரின் அற்புதமான தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்.அம்மா,பாதர் சிங்கராயரின் பிரசங்கத்தை மிகவும் சிரத்தையோடு கேட்பதை உணர்ந்திருக்கிறேன்.அவரது மொழியைத் தமிழ் என்பாள் அம்மா.அறுத்துறுத்துப் பேசும் அவரது கலை நாளாந்தத்தில் என்னையும் அங்ஙனம் பேச வைத்திருக்கிறது.










இந்தப் புலப்பெயர்வு வாழ்வில் ஜந்திரத்தோடு முடக்கப்பட்ட எனது இளமை தொலைந்து போனது, நீண்ட நாளாக அது எனக்கே தெரியாது போய்விட்டது!மெல்ல நரைத்த தலைமுடி இப்போது முழுமையாக நரைத்துவிடுகிறது.முன்புபோல் நடக்க முடியவில்லை.எனினும், மனம்மட்டும் சின்னமடுவுக்குள் அலைந்த இளமையோடே துடிப்பாய்த் துள்ளுகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளின்பின்னே மாதா கோயில் புகைப்படத்தை மருமகனின் பேஸ் புக்கில(Facebook) மெல்லப் பார்க்கக்கிடைத்தது ; தற்போது ...அல்லையூர் இணையம்!




கண்கள் நெடுகக் கனத்தபடி குமிழ் நீராகக் கனத்த பொழுதுகள்,எனது இளமைத் துடிப்பை உரத்தும் மறுத்தும் உரைத்தன.உளம் மலர்ந்த உன்னதங்களை சின்னமடுமாதா கோவில் வளவுக்குள் மீட்டுப் பார்த்த அந்தப் பதின்ம வயதுக்கு அணிலோடும்,கொக்கோடும்,கிளியோடும் ஆயிரெத்தெட்டுக் கதைகளுண்டு.
மாரிகாலத்துத் தவளைகளும்,வெள்ளப்பெருக்கோடு சுருவில் கடலிலிருந்து ஊர் நோக்கிவரும் மீன்களும் மாதா கோவில் வளவுக்குள் வந்த எம்மை மகிழ்வித்துத் தம்மைச் சாகடித்திருக்கின்றன!



வாழ்வின் பெருமிதம் என்பது நட்பு என்பதே எனது தெரிவு.



அப்படியான நட்பை நான் தோழர் சன்னதியிடம் கண்டவன்.எங்கள் கிராமத்தில் நாம் ஒன்றாய் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டோம்.சேரிகளுக்குள் அரசியல்பரப்புரைகள்-கல்வி புகட்டல் என்பதற்கு நாங்கள் புரட்சிகரமான சினிமாக்களை(கண்சிவந்தால் மண்சிவக்கும்,உமை ஜனனங்கள்,உதிரப்பூக்கள் என…)கொண்டு,
விளக்கப்படுத்திக்கொள்வோம்.



அப்போதெல்லாம்”தோழர் சிறீ,நீங்கள் விளக்கங் குடுங்கோ”என்று அவர் ஒதுங்குவார்.மிகவும் செயற்பாட்டு ஊக்கமுடைய அவர்,சொல்லாற்றல் அற்றவர்.அரசியல் ரீதியாக மிகவும் கூரிய அறிவுடையவர்,எனக்குப் பாதர் சிங்கராயர் போட்ட பேச்சாற்றலால் என்னிடமிருந்து தான் பின் தங்கியதாக உணர்ந்தார்.அவரைத் தோழமையாகக் கொண்ட எனது அரசியலை அவரே பெரும்பாலும் நெறிப்படுத்தினார்.



மக்களுக்கு மத்தியில் ஆயுதம் எடுத்துச் செல்லப்படாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்புடையவர்.தீவுப்பகுதிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தபோது நான் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.எங்களை ஒருங்கிணைத்தவள் இந்தச் சின்னமடுமாதா.




வேலைணைச் சங்கக்கடை மனேச்சர் பாலனின் சமூகவிரோதச் செயற்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதிலும்,அதை அரசியல் போராட்டமாக்கிக் கிராமமட்டத்தில் மக்களை விழிப்படைய வைத்தத்திலும் நாம் ரெலோவுக்கும் அன்று கடமைப்பட்டவர்கள்.அவர்களது ஆயுத ஒத்துழைப்பின்றி, அன்றைய சண்டித்தனக்காரர்களை உடைத்துப் பாலனை சங்கக்கடைக்குள் மடக்கி இருக்க முடியாது.எனினும், இன்னொரு விதமாகப் புளட் செய்த பேரத்தில் இலட்சத்துக்காகப் பாலனை எம்மிடமிருந்து ஆயுத ரீதியாக விடுவித்த புளட், அன்று எமக்குச் சாவு குறித்து எழுதிய புலிகளுக்கு ஒத்தூதியது.இதன் தொடர்ச்சியும் மாதா கோவிலின் படிக்கட்டுகளிலேயே நாம் அடிபிடியாகவும்,கத்திக்குத்துகளாகவும் கண்டபோது, என்றோ ஒரு நாள் தோழர் சன்னதியைக் கத்திக்குத்துக்கு நாம் இரையாக்குவோம் என்பதை நான்மட்டும் அறிந்தே இருந்தேன்.




நாரந்தனைச் சன் பேதுருவார் கோயில் கூடுதூக்குவதில் எனது உறவுக்கார நாரந்தனையார்கள் என்னை எச்சரித்தபோது ஊர்காவற்றை பொலிஸ்சில் பரீட்சார்த்தமாக அடைத்தான் என்னை சப் இன்ஸ்பெக்டர் ஞானப் பிரகாசம்.அன்று, அவனது திட்டம் சன் பேதுருவார் கோயில் கூடு தூக்கும் அடுத்த ஆண்டு துப்பாக்கிச் சூடாக எமது தோழர்களைப் பதம்பார்த்தபோது, நாங்கள் இன்னுமொரு பொழுதை ஞானப்பிரகாசத்துக்காக ஒதுக்கினோம்.அது,எல்லாம் குழம்பிய குட்டையில் மீன்பிடித்த கதையாகப் புலிகளுக்கு வாய்த்துக்கொண்டது.நாரந்தனை வேளாளக் குடிகள் புலிகளாகித் திரிந்த பொழுதில் சன்னதிக்குச் சமாதிகட்டுவதை நான் அறிந்தே இருந்தேன்…








“பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!”
 


இதற்குப் பின்னாய் காலத்தை அலையவிடுவதில் சின்னமடுமாதாவைத் தரிசிக்க முடியவில்லை.
நினைத்துப் பார்க்கிறேன்.



“கடுமழையில் விழுதுடையும் வேம்புபோல்
கொடும் இயக்கக் கொலைகளில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து இயக்க முரண் அரசியல் விட்டு வைக்காது”


 
எங்களுக்குப் புளியம் பழம் தந்த சின்னமடுமாதப் புளியமரத்தடியில் சின்னதாகவும்,பெரியதாகவும் நாம் கூடியிருக்கிறோம்.நடுநிசிப் பொழுதுகளில் சாதியத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் பாடங்கள் எடுத்திருக்கிறோம்.அன்றைய சில பொழுதுகளிலேயே சேரிகளை புளியங்கூடலார் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர்.இராமனும்,கீத மங்கலமும்,எம்மிடம் ஆலோசித்தபோது,இழவு வீட்டுக்கு மேளம் அடிப்பதை நிறுத்தும்படி ஆலோசனை பகிர்ந்தவர்களுள் கனகசபையும்,நானும் முதன்மையாய் இருந்தோம்.சன்னதி,சேரி மக்களின் உணவுக்கு ஆதாரமான தொழிலை நிறுத்துவதில் முரண்பட்டிருந்தார்.மேளம் அடித்தவர்கள் பின்னாளில் உணவுக்குச் செத்தபோது,வெளிநாடுகளில் வேலை பார்த்த”சேரிப் பொடியன்கள்”தயவு அதிகமாகவிருந்தது.



இயங்கங்கள் சாதி ரீதியாகச் செயற்பட முனைந்தபோது,அராஜகமான அழிப்புகளும் சாதிரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டது.







பெரியவர்களின் எத்தனையோ சாதிச் சண்டைகளையும்,சின்னக் குழந்தைகளின் துள்ளித் திரிந்த பாதங்களையும் சின்னமடுமாதா வளவு தரிசித்திருக்கிறது.காதலர்கள் கோவிலுக்குள் குடியிருந்ததையும்,அதைக் கண்ட விடலைகளின் விஷம அடிகளை எதிர்கொண்ட அப்பாவிக் காதல் ஜோடிகள் கண்ணீர் சிந்தியதையும் மாதா தரிசித்தே இருக்கிறாள்.அப்போதெல்லாம் நான்கா பக்கமும் திறந்து கிடந்த மாதா கோவில் அரைச் சுவர்கள், இப்போது மூடிக்கட்டி,புகுமுக வழியும் இரும்புக் கேற்றுப்போட்டு,மாதவையும் சிறைப்படுத்திவிட்டார்கள் நாரந்தனை வேளாளப் பெருமக்கள்.கொலனித்துவ வாதிகளிடமிருந்த மனதுகூட நமது சாதியப் பெருங்குடிகளிடமில்லை என்பதை சின்னமடுமாதாவைச் சிறை வைத்ததில் நான் உணருகிறேன்.



ஏதோ ஒருபொழுதில், எனது இருப்பை இழக்கும் கணமானது சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்,நான் பெருந்தவப் பேற்றாளன் என்பது என்வரையில் உண்மையானதே.


இளமையின் வலி?


சுருங்கக் கூறிவிடலாம்,சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்.சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும் சிலகாலம் உயிர்த்திருக்கிறது!



ஒரு தரப்பின் இழப்பில் மறுமுனையின் இருப்பு வலுக்கும்பொழுது இஃது.மறுபடியும்,ஒருநாள் விடுதலையின் பெயரால் “ஏலங்கள் விடப்படும்”குத்தகையை வேண்டுவதற்காக,அது இன்னொரு கொலைக்களத்தை அந்நியருக்காக செய்விப்பதில் எமது வாரீசுகளே வழியெடுத்துக்கொடுத்தார் -அது முள்ளி வாய்க்காலுக்குப்பின்பும் தொடர் கதைதாம்!


 
இதற்கு-ஈழ மண்ணும் விதிவிலக்கல்ல,
சின்னமடுமாதாவும் விலக்கல்ல.



 
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.”-குறள்


 
ப.வி.ஸ்ரீரங்கன்

Dienstag, 5. Januar 2016

தமிழ்த் தேசியம் :கட்சிகளது அரசியல்


ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் நம்பிக்கை வைப்போம் ;
இலங்கையின் தேசியவின முரண்பாட்டுக்ககான தீர்வுத் திறவுகோல் இந்தியாவிடமேதாம் - நம்புவோம்!
எமது மக்களும் ,மண்ணும் அந்நிய இனங்களிடம் அடிமையாக்கப்பட்டு எதிர்கால அரசியவாழ்வு இருண்டுகிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் பல்வேறு அகமுரண்படுகள் (பிரதேசவாதம்,சாதி; பெண்ணடிமை ;குறுந்தேசியவாத ஒடுக்குமுறை (இஸ்லாமிய மக்களைப் பூண்டோடு கிள்ளியெறிந்த...) வர்க்க ஒடுக்குமுறை போன்ற பல்வேறு தளைகளே காரணமாகவிருக்கின்றன.இந்த அகமுரண்பாட்டை முழுமையாகக் கையகப்படுத்தி நம்மை ஒடுக்குபவர்கள் தேசிய அரசுகளாக நம்மைச் சுற்றி தம்மை நிறுவியுள்ளனர்.நமது அக முரண்பாட்டை நமக்குள் இருக்கும் அதிருப்பதியாளர்களைப் பயன்படுத்தியே நம்மை வடக்கும்,கிழக்குமாகப் பிளந்த சக்திகள்(இந்திய -இலங்கைக் கூட்டும் மற்றும்,அமெரிக்க ஏகாதிபத்தியம்) நமது மக்களை முழுமையாகத் தமது அடிமைகளாக்கி வைத்துள்ளனர்.நாம் இந் நூற்றாண்டிற்றாம் மிகவும் மோசமானவொரு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்.இதற்கான முழுப்பொறும் புலிவழியான போராட்டச் செல்நெறிக்கே!
இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில்முள்ளிவாய்க்காலுக்குப்பின்பான ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது.இந்த நகர்வானது நமது மக்களை அரசியல் மயப்படுத்தி ,ஐக்கியமாக்கியமாக்கியவொரு வலுவான வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ள மறுத்து எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான எதிர்ப்பு அரசியல் நகர்வை பிழைப்புவாத வியாபார யுக்திகளைக்கொண்டு நசுக்கி வருகிறது.இத்தகைய குழிபறிப்புக் கட்சிவாத ,வர்த்தக நோக்கு நிறைந்த அரசியலானது நம்மை அரசியற்றலமைதாங்க - வழிநடத்தத்தகுதியற்ற கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்க வைத்திருக்க முனைகிறது.இதன் மூலம் தமது கட்சிசார்ந்த வர்த்தக நலன்களை அந்நிய சக்திகளது சலுகைகளின்வழி அடையமுனைவதில் ஈழத்து மக்களது தேசியவிடுதலையை -உரிமைகளை தமது வர்த்தகப்பண்டமாக அந்நியர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அது மூலதனச் சுழற்சியில் ஒருவிதக் கச்சாப்பொருளாக -பண்டமாகப்பட்டு பரிவர்த்தனையில் பல தமிழ்ப் பிழைப்புவாதிகளைச் செல்வந்தர்களாக்கி உள்ளதென்றவுண்மை பல தமிழ் அரசியல் வாதிகளால்-ஊடககங்களால் மறைக்கப்பட்டு நாம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளோம்.இன்றைய தமிழர் பேரவை மற்றும் மரபார்ந்த தமிழ்த் தேசியக்கட்சிகள், கூட்டமைப்புகள் மற்றும் இயக்கவாதத் தலைமைகள் இதற்கு வெளியில் இயங்கவே இல்லை!

புரையோடிப்போன எதிரிகள்:

எதிரிகள் பல இரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிந்தது.அதைக் கூடத் தமது வர்க்க நலனின் பொருட்டுத் தமிழ் ஆளும் வர்க்கத் தரகு மூலதனம் சிங்கள மூலதனத்தோடு பேரமிட்டுத் தமது வர்த்தக மூலதனமாக்கிய அரசியலானது சிங்களப் பெருந் தேசியவாதத்துக்கும் -பௌத்த மதவாதத்துக்கும், அதன் இருப்புக்கும் பின் கதவு வழியாகப் பச்சைக்கொடி காட்டியதென்பது வரலாறாக நீள்கிறது.
நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், தமிழர் மகாசபை -தமிழ்க் காங்கிரஸ்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சிகளால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு, அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்த்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.பின்ளைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின்முள்ளி வாய்க்காலில் பிரபாகரனோடு பல்லாயிரம் தேச பக்த இளைஞர்கள் பலியெடுக்கப்பட்டு இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது.இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் பல இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் தமிழர் அரசியலது இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!
இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது கட்சிவாத நலன்களை முதன்மைப்படுத்தியும்,கட்சிகளது இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு முன்னாள்ஆயுதக் குழுக்கள்மற்றும் புதுப்புதுக் கூட்டணிகள் யாவும் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலுகுகள்,கோரிக்கைகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். 

எமது தேசிய அபிலாசைகள்:

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது பிரதேசப் பிளவுவாத நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது. தமிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.இங்கு பிள்ளையான் குழுவின்வீழ்ச்சி இதுசார்ந்தவொரு சிறு இடைவெளியை நமக்கு இட்டிருக்கிறது.அந்த இடைவெளியில் முதலில் வடக்கும் ,கிழக்கும் அரசியல் ரீதியாக மீளவிணையும் அரசியல் ஐக்கியம் கட்டப்படவேண்டும்.
நம்மை,நமது வாழ்வைக் கேவலமான கும்பல்களாக்க முனையுமிந்த பிரதேசவாதப் பிளவுவாத அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடித்தனர். இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம்இப்போதும் கட்டுகிறார்கள். இப்டித்தாம் வரதராஜப்பெருமாள் - பிள்ளையான்போன்ற கொடிய ஆயுதாரிகள்அரசியலில் இந்திய -சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு அடியாளாக மேலெழுந்தனர்.

திரு.சம்ப(ம)ந்தனோ அன்றிச், சங்கரியோ அல்ல டக்ளஸ் தேவாநந்தாவோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்ற மீளவும் தொடங்கிவிட்டார்கள். இவர்கள், எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,இடைக்கால நிர்வாக மாகாணசபை,13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.

பல்முனை ஒடுக்குமுறையும்,
அவைகளின் அமுக்கம்:

இன்றோ பல்வேறு அரச - பொருளாதார ஜந்திரத்துக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும்.அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப்பரிணாமிக்கத்தக்க புரட்சிகரமானவொரு அரசியற்பாதை காலத்தின் தேவை.நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம்.தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது.இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை. 

மாற்றுத் தலைமையின்
அவசியம் உணரப்பட்டதா? :

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலிபள் மறுபுறமாகவும்எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!

ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது. 

இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இந்த இழி அiசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?

மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் நம்மால் செய்து முடிப்பதற்கு மாற்றுச் சக்திகளுக்கும்,மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட நிலையில் இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா?

இன்றைய இந்தத் தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்மாற்றுச் சக்திகளால் நிகழவில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு மாற்றுத் தலைமை மக்கள் சார்ந்து மக்களால் கட்டப்படவேண்டிய நிலையென்றுமில்லாவாறு அவசியமானது.

எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.மகிந்தாவைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்த அதிகாரவர்க்கமானது அதனிடத்தில் இருத்தப்பட்ட மரபார்ந்த அந்நிய ஏவற் கட்சிதாம் யு.என்.பி. இப்போது மைத்திரி தலைமையில் தமிழ்க் கட்சிகளை ஏமாற்றிய பின்பும் அவர்களை மக்கள் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியவர்கள் இந்தச் மாற்றுச் சக்திகளுக்குள் இருந்த அந்நிய எடுபிடிகள் இல்லையா?

எனவே, ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.மாற்றுச் சக்திகள் தமது கட்டமைப்பை மக்களோடு மக்களாக்க நிற்கும் காலத் தேவையோடு பாரிய எதிப்பு அரசியலைச் செய்தே ஆகவேண்டும். இல்லையேல், தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டு மீளவும் மக்களை ஏமாற்றியழித்து ,நமது போராட்டவுணர்வையும்,ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அரசியலையும் பூரணமாகக் கருத்தியல் ரீதியாக அழித்து அநாதவராக்கப் போகிறது.
அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு, தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத் தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது. இதன் மறுவிளைவாகத் தமிழ்ப் பிழைப்வாதக் கட்சிவாதத் தலைவர்களும் ,கட்சிகளும்,போலிக் குழுக்களும் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் மெல்ல வலுவாக்கப்பட்டு நிரந்தரமாகப்படுகிறது.

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள்,ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே.இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை.அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொன்ற வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தருணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்!
இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது.இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?
"மக்களே!
அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.

உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின

நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,
துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே!!!"

ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, 4. Januar 2015

பொது வேட்பராகிய மைத்திரிபாலவுக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்

"இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியுள்ள பொது வேட்பாளருக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்."



ற்போது,வரும் ஜனாதிபதித் தேர்தற் பரப்புரைகளைக் கவனிப்பவர்களுக்கு பல சிக்கலான கேள்விகள் மண்டையைக் குடைகிறதா?

எனக்கு மண்டை வெடிக்கும் அளவுக்கு இரத்தவழுத்தம் அதிகமாகிறது.

மகிந்தா தலைமையிலான இந்தப் பாசிச அரசைக் குறித்து நமக்கு வகுப்படுத்த பலர் முள்ளி வாய்க்காலுக்குமுன்னும், பின்னுமொரு தர்க்க நியாயத்தை வழங்கி வந்தனர்.

அதாவது,மகிந்தா அரசானது - இல்லை இன்னுஞ் சிறப்பாகச் சொல்வதானால்இலங்கை அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டதுக்குட்பட்ட அரசென்றும்,அது ஜனநாயகத் தன்மையுடைய அரசென்றும், நீதி பரிபாலனம் அங்கு ஓரளவேனும் சிறப்பாக இருப்பதாகவும் கூறிவந்தனர். இதை முள்ளி வாய்க்கால் இனவழிப்புக்குப் பின்பும் பலர் கூறிக்கொண்டனர்.

சிறப்பாகத் தலித்துவ மேம்பாட்டுக் கழகத் "தோழர்" தேவதாசனும்,அவரது தத்துவ ஆசிரியரான நிர்மலா குழுவுறுப்பினர் அண்ணன் இரகவனும் மிக நேர்த்தியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று,பார்த்து வழிமொழிந்தார்கள்!

நிர்மலா அம்மையார் , தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவரது மொழியில் இலங்கையின் மகிந்தா தலைமையிலான அரசைச் சிலாகித்துப் பேசிப் புலிப் பயங்கரவாதத்தைச் சாடிக்கொண்டே வந்தார்கள்.




புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்" தம்சார்புக்குப்  பேட்டி -உரையாடலெனத் தொலைக்காட்சி,அச்சுவூடகங்களிலும் இதையேபேசியும்,எழுதியும் வந்தனர்.தேனி என்றொரு இணையத்தளத்தை நடாத்தும் நண்பர் கங்காதரன்(ஜெமினி) தனக்குத் தெரிந்த பெரும் மேதைகளான இரத்தின ஜீவன் கூல்,இராஜன் கூல்,அழகலிங்கமெனப் பல பிரபலங்களை வைத்து, மகிந்தாவுக்குள் ஜனநாயக நீரோட்டம் இருப்பதைக் கண்டறிந்தார்.அவர்களில் இப்போது இரத்தின ஜீவன் கூல் பல்ட்டியடித்து இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு இல்லை.அங்கு சட்டம்,ஒழுங்கு இல்லாதவொரு பயங்கரவாதக் கொலைக்காரத் தலைமையிலான அரசே இருப்பதாகவும்,மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வைப்பதன் முலம் சட்டத்துக்குட்டபட்ட நீதியானவொரு அரசு மீளத் தலையெடுக்குமென்றும் கொழும்பு ரெலிக்கிராப்பில் எழுதி மகிழ்கிறார்.

டேய்,உங்களுக்கு என்னங்கடா நடந்தது? அல்ஸ்கைமர் நோய் [ Alzheimer disease /Die Alzheimer-Krankheit  ]ஏதன் இருக்கா அண்ணன்,அக்காமாரே?

சரி இனித் தமிழ் மக்களிடம் வருவோம்.இவர்கள் கூறுகிறார்கள்: சட்டத்துக்குட்பட்ட அரசு, நீதியான அரசு,ஜனநாயகப் பண்புடைய அரசு,சட்டத்தால் நிர்வாகிகக்கப்படும்  ஊழலற்ற அரசு உங்களுக்குக் கிடைக்கத் தமிழ் மக்கள் மைத்திரிக்கு ஓட்டுப்போடும்படி கோருகிறார்கள்.இரத்தின ஜீவன் முதல் நம்ம அண்ண்ன்  சுசீந்திரன்வரை கும்பிட்டுக் கேட்டுக்கொள்கின்றனர்.

இப்படியே எல்லோரும் கூறிக்கொள்ளும்போது தமிழர்கள் தலையைச் சொறிவதைத்தவிர என்ன செய்ய முடியும்?

இலங்கையை மாறி,மாறி-மாறி ஆண்ட இருபெருங்கட்சிகளும் அவையோடு கூட்டு வைத்த இடது-வலது,முரடு-கரடுகளெல்லாம் இதுவரை என்ன செய்தன?

கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழினத்தின் பூர்வீக நிலப்பரப்பில் இந்தச் சட்டவாத அரசு மூலம் ,நீதி, ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி நிலைத்திருந்ததென்பதை அறியாத-புரியாத,உணராத நமக்கு இன்று , இது என்ன சாமான்கள் என்றுதாம் எண்ணதோன்றுகிறது.

இராணுவ முகாங்களும்,பொலிஸ் நிலையங்களும் அவர்களது தார்ப்பாரும் நிலவியவொரு பிரதேசத்துள் இதை எப்படிப் புரிந்துகொள்வது நண்பர்களே?

இந்த ஓட்டுக்கட்சிகளது தலைவர்கள்,பிரதமர்கள்,ஜனாதிபதிகள் இதுவரை எமக்கு அப்படியொரு அரசவொழுக்கங்கள் இருப்பதாகக் காட்டவில்லையே!இனியும் அதைக் காட்டுவார்களென்று எந்த நாயும் வகுப்பெடுக்க முடியுமா?

 "மீள ஜனநாயத்தை,நல்லாட்சியை,சுதந்திரத்தை,நீதிபரிபாலனத்தை "க் கட்டியொழுப்ப [  return to democracy, good governance, an independent judiciary, etc. ]மைத்திரிக்கு வாக்களிக்கக் கோருபவர்களே,இவையெல்லாம் முன்னம் நமக்குள் இருந்தவைகளா?

இவை இருந்ததென்றால் ஏன் இனவொடுக்குமுறையை  காலா காலமாக நமக்குள் இந்த அரசுகள் கட்டவிழ்த்துவிட்டன?

ஏன் பல இலட்சம் மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்?

ஏன் வருடா வருடங்கள் இனக் கலவரங்கள் தூண்டப்பட்டன?

ஏன் பல இலட்சம் துருப்புகள் நமது மண்ணை அபகரித்து ஆக்கிரமித்தன?

ஏன் சத்தியாக்கிரகக்காரர்கள் மண்டை பிளவுண்டனர்?

ஏன் நமது கோணேஸ்வரிகளது கவட்டுக்குள் குண்டுகள் வெடித்தன?

கடந்த அறுபது ஆண்டுகளாக நம்மை மொட்டையடித்தவர்கள்,நம்மிடம் வந்து, இந்த எட்டாக் கனிகளைக் குறித்து வகுப்பெடுக்கும்போது கொஞ்சமும் கூச்சமில்லையா?

சிங்கள மக்களிடம் சொல்வதைத் தமிழ்பேசும் மக்களிடமும் சொல்ல முடியுமா?

நாம் ஒடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமென்பதை "ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி,நீதிபரிபாலனம்" என்று சொல்லும் இந்தத் திமிரை யாரடா உங்களுக்குச் சொல்லித் தந்தது?


ப.வி.ஸ்ரீரங்கன்
04.01.2015

Sonntag, 11. Mai 2014

மே 16.17 ஆம் தேதிகளில் 42-ஆவது இலக்கியச் சந்திப்பு ...

மே 16.17 ஆம் தேதிகளில் ஃபெர்லினில்[Berlin] நடைபெறும் 42-ஆவது இலக்கியச் சந்திப்பில்  புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கிய விருந்தினர்!


எதிர் வரும் மே 16.17 ஆம் தேதிகளில் ஃபெர்லினில்[Berlin] நடைபெறும் 42-ஆவது இலக்கியச் சந்திப்பில்  "புலத்துத் தலித்தியத் தத்துவார்த்தப் போக்கின் பிதா மகன்கள் ஞானம்;தேவதாசன் மற்றும் ஜீவ முரளி தலைமையில்  நடைபெறப்போகும்"ஆள்(ய்)வரங்கை"முன்னிட்டு இந்தப் (க் ) ப(க)ல்வெட்டைப் புனைந்து கொல்(ள்)வேன்:


கட்டியம்:


மட்டக்களப்பு கிழக்கின் தோழனெனுங்கால் திரிகோணமலை தலையெனும் பொருள் நோக்கப் பெறும் தெம்பு வடக்கை மடக்கி மூலையில் கடாசி முடிச்சவிழ்க்கும் இன்றைய எங்கள் முயற்சியில் இனியும் தலை-வால் உதிர்ந்து போகுமெனுங் கண்காணா அச்சம் மெல்ல விலக்கி,விடிவின் தொடர்ச்சி வாழ்வில் போராடுதலாக...


பூமியில் உன் வாழ்வு நீடித்திட உன் எஜமானரின் பாதந்தாங்கித் தெருவில் அவர்கட்காய் குரைத்து வால் அசைப்பாய் கிழக்கே-என் தாயே,தற்குறியே-தவப்பயனே!தலித்தே,தலித்துவமே...தான் நோக்கித் தரப்புக்குச் செக்கசைக்கும் சாமாடே!...







நேரிசை வெண்பா:



"எழுக ஞானமென எழுந்தேன்
புனைந்தேன் புளுகவென கிழக்கின் ஜனநாயகம்
கவிழ்த்தேன் தமிழ்த் தேசக் கருத்தரிப்பை
பாரதக் கனவின் பருப்பு நான் பங்கே எனது மூலம்."



என் புலம்பல்:


மயக்கமுற்ற ஒரு உணர்வு இதயப்பரப்பெங்கும் துள்ளியபடி, துருத்திக் கொண்டவொரு கணப்பொழுதின் மரிப்பில் என்வரையிலான எல்லா நிறைவும் உதிர்ந்துகொள்ள மனதின் அனைத்து வலிகளும் எங்கோ தொழுகையைத் துவக்கியது.அந்தத் தொழுகை எதைப்பற்றியும் இறையோடு இறைஞ்சும் இன்பத்தைப்போன்றதான கருக்கட்டலில்லையென்றபோதும் சுகமே பிரதானமான செயற்பாட்டுக்கரிய சிந்தனையாக என் பாட்டன் காலம் முதல் எங்கள் கணக்கில்"வரவு"வைக்கப்பட்டிருக்கின்றதனால் எல்லோர் தரப்பிலும் ஏதாவது குறைகாணும் வரைமுறையிலான அரிப்பு அப்பப்ப என் பக்கவாட்டு இதயத்துள் சீழ் கட்டியபடி.இது "மயோகாடியற்றிக் றபிளாக" மாறாதிருக்கக் கண்ட இடத்தில் கொண்டை போடுவதில் ஒப்பாரும் மிக்காருமற்ற எனது பூனைப் பிராண்டல். வாழ்வில் நான் அடிக்கடி இப்படி மறைந்தும்,கவிழ்ந்தும் போகிறேன்.

எங்கே சேடம் இழுத்தாலும் அங்கே பாலூற்றிப் புதைக்க ஏதோவொரு உள்ளுணர்வு உந்திய பொழுதுகளில் என் பொன்னான பொதுமனப் புத்தி அவிழ்த்துப் போடும் ஒழுக்கச் சட்டைகளுக்குள் ஒரே அழுக்குப் பிடித்தபடி இருப்பதை நான் பலமுறைகள் கண்டு அதிர்ந்துபோனேன்.அப்படியானவொரு பொழுதை இப்போது என் வானத்தில் நான் கண்டபோது அது என்வரைக்கும் நெருங்குவதில் ஒருவிதச் சலிப்பு என்னை அண்டிக்கொண்டு ஒரு கொலைக்காக என்னைத் தயார்ப்படுத்தியது.அந்தக் கொலையை நான்மட்டும் செய்துகொண்டு,மற்றவர்களின் தயவில் தங்கியே நெடுநாள் காலத்தை ஓட்டவும் தாங்கவொண்ணாத் தொல்லையுள் முடிச்சிட்ட சிக்கலை அவிழ்த்துப்போட்டு என் கணக்கை ஐந்தொகையோடு மூடிவிடவே முனைகிறேன்.


முந்திய வினைப் பயன்களின் அறுவடைக்காக நான் காத்திருந்தபோது அது என்னை இவ்வளவு தூராத்துக்குப் பதவியுயர்த்துமென நான் கனவிலும் நினைத்தே இருக்கவில்லை.வெறும் காகிதத்தில் முற்பகல் விடிந்தபோது முயற்சியே திருவினையாகுமென்ற என் தாயின் வேத வாக்குக்குக் கட்டுப்பட்ட என் சிறுமனசு சரித்திரத்தின் சில பக்கங்களில் என் பெயரின் உச்சரிப்புக் கருக்கட்டுமென நான் நினைத்திருக்கவிலைத்தான். எனினும்,இளிச்ச வாயர்களின் இருப்பு மனத்துள் என் வகையான சொல்லாடல்கள் பெரும் பரபரப்பாகச் செய்யப்பட்டபின்பே நான் எனது முயற்சியின் விளை பயனைக் கண்டேன்.

சற்றே கனவு நிலையாக, நான் எவரிடமும் ஓடிப்போய் ஒதுங்குவதாகக் கண்ட காட்சிகளின் உண்மைகளாக இன்றைய எனது அரசியல் நகர்வுகள் இருப்பதாலும் ஏதோவொரு பாரம்பரியத் தொடர்ச்சி என்னுள் ஓடுகிறது.அது, எனது பூர்வீகம் பற்றிய எனது தேடலில் என்னைக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது.


தென் கிழக்காசியாவின் வடிவெடிகள் என் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, அந்த அனுபவமும் என்னைப் பின்தொடர்கிறது.மயங்கும் மௌனவுணர்வுகளுக்குள் மண்டையன் குழுக்கூட்டல் வாய்ப்பாடு சற்றுப் பிசகியபடி இப்போது எனக்குள்ளும் ஒரு கூட்டலும் பெருக்கலும் கணிதச் சமன்பாட்டுக்காய் நர்தனஞ் செய்வதில் என்னவோ பாதகம் எனக்குத் தொடர்வதாக நான் உணர்கிறேன்.இது, என்மீதான அதீத விருப்பத்தின் தெரிவில் நான் அன்றிருந்த தெருச்சேவையில், சோடிக்கப்பட்ட லையிட் போஸ்டில் தொங்கிய எனது உடலமாக எனது முன்னைய கனவின் தொடர்ச்சி என்னை ஆட்கொண்டபடி...



உனக்காய் நான் தவங்கொள்ளல்:



"பொய்யே பூனையே
புகழுமாவுடல் மெய்யே
மேதினியே மேன்மைகொள்
மண்ணேமிளிர் நெஞ்சழிந்த நஞ்சே
நாய்த் திமிரே நடுக்காட்டில் எரி பிண்டமே"



ஒவ்வொரு தெரிவும் எனக்குள்.உனக்கோ அல்லது உன் தெரிவுக்கோ நான் பொறுப்பெடுப்பினும் பொல்லாத சளி மூக்கின் முதிசமாக மனத்திரையில் மப்புக் கட்டி என் எண்ணத்தின் கண்ணுள் மண்ணைவாரியிறைப்பது நியாயமா நெருஞ்சி முள்ளே?நேற்றுக் குட்டையைக் குழப்பியதால் ஒன்று உயிரையே நிழலாக்க, நெஞ்சே நஞ்சைக் கக்க நாத்தாண்டவம் நசுக்கிய எக்ஸ்ஸிலில் எரித்த உடலம் உப்பிட்டுக் கருவாடாக்க முடிந்தால் அதையும் எனதாக்க முந்தியடித்திருப்பேன்.துருவமொன்று என்றிருந்த எனக்கு வடக்கும் தெற்கும் என்ற இரு முனைகள் தெரியாதிருந்தபோது வடக்கை அண்டிய கிழக்கை இணைக்க முடியாத இரு துருவமாக்குவதில் என் எஜமானருக்கு நானே எடுபிடியானதான தோரணை சகிக்க முடியாதிருப்பினும் சல்லி வந்தால்"எவன் பொண்டில் எவனோடு போனால் என்ன-லெப்பைக்குக் காசு வந்தால் சரி"என்று ஒரு மனவெழுச்சி எனக்குள் இடியாக-மின்னலாக உரசுவதால் அதை அப்படியே எடுத்தாகவேண்டும்.

காத்திருப்பது ஒரு தயவுக்காய் என்று அன்றறியேன்.அடுத்தவர்களை அடுத்துக் கெடுப்பதில் என்னைவிட எவன் இந்தப் பாரீசு மண்ணில் எக்ஸ்சில் கொண்டான்.எருச் சுமந்த அன்றைய பொழுதை எனக்கு "ஞானம் தோன்றி கதையாகவும்,வரலாறாகவும்" நான் ஆக்கியே தீரணுமென்றவொரு நப்பாசையில் நான் நடு ரோட்டில் இறங்கி நாட்டைக் காட்டைப் பிரித்தாவது நல்ல மனுச நாட்குறிப்பை மகிந்த மாவின் மனசில் எழுதியாகவேண்டும்.

என்னைவென்ற எருப் பொறுக்கி எங்கேதான் இருக்க முடியும்?எருவென்றதை எருவாகக் கனவுகாணுவதாக நீங்கள் எண்ணமுற்றால் அதற்காக நான் என்ன செய்யமுடியும்?அப்பனுக்குத் தோரணங்கட்டிய அன்றைய பொழுதில் அம்புவிட்ட பெண்டுகொண்டு பெரிதுவக்கப் பல வினைசெய்தும் புறம்போக்கு எனக்கு ஒரு மசிரும் உதிரக்காணோம்!இதற்குள்ளே பொதுசனத்துக்கு நான் ஜனநாயகத்தைத் தேடியபடி வடக்கின் மடக்கைத் தட்டிச் சாக்கடையில் இட்டபடி கிழக்கின் முதுகில் அம்புவிட்ட தூக்குச் சட்டிகளை எட்டியெடுத்து எனது கையில் வைத்திருக்கிறேன்.அந்த உணவு புளி(லி)த்துப் போவதற்குள் என் வாய்க்குள் வந்தாகவேண்டும்.தூக்குச் சட்டிக்குள் இருப்பது உணவா அல்லது நேரக் குண்டாவென்பதெல்லாம் புறவுலகப் பாடம்தரும் பொய் உணர்வே.எனவே,பெயரோடு வெளிப்படுத்தும் என் அறிக்கைகளே இப்போது எல்லோருக்கும் பெரு வெடியாக இருப்பதால் அதுவே எனது ஒரு நேரச் சாவின் உளப்பூர்வ நினைவாக இருக்கும்.


விநாயகர் துதி:



"நோக்குண்டாம் நல்ல பசையுண்டாம்
பாராத மாதா நோக்குண்டாம்-மேனி நுடங்காது
ஜனநாயகங்கொண்டு பாரதப் பூஜை-ரோவ் கும்பல் பாதம்
தப்பாமல் சா(ர்)வார் தமக்கு"

அதுவரைக்குமான எனது தேடலில் கிழக்கை விடுவிப்பதான முறைமைக்கு எடுத்தாளப்படும்"ஜனநாயகம்"செருப்படிபடும் உலகச் சரித்திரத்தில் வடக்கின் தொடர்ச்சி இருப்பதான "பெருவெளி"தெரிவாக-தெளிவாகத் தெரிவதாக நான் சொல்லும் புதிய பிராந்திய-பிரதேச வாதம் அன்றைய அண்ணன் இராசதுரையின் விருப்பத்தின் தொடர்சியாகவும் இருப்பதை எவருக்கும் அச்சொட்டாக வெடியிட்டுச் சொல்லும் தருணம் வருமென்றால் அதையுங் காட்டிக்கொள்வதில் எனக்கேதும் தயக்கமில்லை.தருவதற்கும் அணைப்பதற்கும் பக்கத்துப் பாரதமேன்மக்கள் இருக்கும் புதிய கதைத் தொடரில் என் முன்னைய  அச்சம் மிச்சமாக இருப்பதற்கும் இலண்டனில் அண்டக்கிறவுண்ட் பெருவாழ்வு துய்ப்பதற்கும் முடியுமெனில் அடிப்பொடி நான் அழிவதென்பது அசாத்தியமானது.அப்புவுக்குப் பாக்கு வெத்திலை கொடுத்தவர்கள் அண்ணனுக்கு "டி.பி.எல்"பாஸ்போர்ட் காட்டியவர்கள் எனக்காகச் சுவர் ஒழுப்பித் தந்தவர்கள் ஒருபோதும் எம்மால் ஏமாற்றப்படுவதாக உணரவே கூடாது-கூடாது!

கோணேஸ்வரிகளின் கவட்டுக்குள் குண்டுகள் இறங்கலாம்,குடும்பத்தைக் கொண்டு தூக்கு மாட்டலாம்.கிராமமாகக் கலைத்து அகதி முகாங்களை உருவாக்கலாம்.இவையெல்லமே பாரத ஜனநாயகத்தின் பக்க விளைவுகளெனக்கொள்வதில் எனக்கேதும் சிரமமேயில்லை.பாண்டவர் பூமியில் இதுவெல்லாம் தொடர்கதைகளென்பதை எனது அன்றைய ஆசிரியர்த் தொழிலில் நான் அறியாததா?ஜனநாயகத்தை ஏற்மதி செய்யும் எனது எஜமான்களுக்குக் கிழக்கே அவர்களுக்கானதாக இருந்தாகவேண்டும்.சம்பூரில் சங்கூதி அனல்மின்னுக்கு ஆள்கொன்றதன் அர்த்தம் அன்புக்கு அடிபணிவதென்ற தமிழின் அதியுயர் பண்பென்றுகொள்வேன்.கொடுவாள் ஏந்தும் எந்தக் கொம்பரும் எங்கள் கிழக்கின் மேகங்கள் காரிருள் விலக்கி விடிவதைத்தடுக்கும் கிழக்கின் எதிரிகளே!


"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி"

ப.வி.ஶ்ரீரங்கன்

Mittwoch, 4. Dezember 2013

“புரட்சி,விடுதலை” குறித்த ,மாயைகள் தகர்க்கப்படவேண்டும்!!!

முன்னிலைச் சோசலிசக் கட்சியின் "முன்னணி " உறுப்பினர் பழ ரிச்சாட்டின் உரையாடல்கள் மூலம்  சில மாதங்களுக்குமுன் புலம் பெயர்"புரட்சிக் காரர்கள்" தமக்குத் தோதானவொரு சாதகமான சூழலைப் புலத்தில் பதியம்போட்டனர்.அதற்காகப் பழ ரிச்சாட்டைப் பயன்படுத்தி முன்னிலைச் சோசலிசக் கட்சியுடனான  தமது கூட்டுக்குப் பற்பல விளக்கம் கொடுத்தனர். அப்போதெல்லாம்  பழ ரிச்சார்ட்   இலங்கையில் "பெரும்  புரட்சிகரமான"  இளைஞர் என்ற பாணியுள்  வைத்துத் தமக்கான அரசியலைப் "புலத்துப் புரட்டுப் புரட்சி"க் காரர்கள் தகவமைத்தனர்.

இதைப் பல கட்டுரையில் நாம் ஏலவே  விளக்கி எழுதியிருக்கின்றோம்.சமீபத்தில்  முன்னிலைச் சோசலிசக் கட்சியிலிருந்து பழ ரிச்சார்ட் பகிரங்கமான விமர்சனத்தோடு விலகியது அறியக் கிடக்கிறது ,அவரது அறிக்கைகளென.

பலதரப்பட்ட குழறுபடிகளுக்குள் சிக்க வைக்கப்பட்ட  இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியலானது மீளவும் ,இலங்கை -இந்திய நலன்களுக்கான அரசியல் -அணிக் கட்டல்களுக்கொப்பவே பலதும் பத்துமாகப் பிளவுகள்-பிணைப்புகளெனவொரு தீங்கான அரசியற் சூழலை எமக்காக்கிய வரலாறு தமிழ் ஆயுத -  இயக்க மாபியாக்களது வருகையோடும்-இருப்போடும் சாத்தியமாச்சு!




இனியென்ன?

முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியற் சூத்திரத்தைப் பக்கம் பக்கமாக நாம் எழுதியிருப்பதால் அதன் மீது குற்றம் சுமத்தி வெளியேறிய பழ ரிச்சார்ட்டின் கூற்றுக்கள் குறித்து பெரிதான எந்த முரண்பாடுகளும் எழுவில்லை!ஏனெனில் ,அதுதாம் உண்மையானது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியல் வருகையுள் இதை  ஏலவே இனங் கண்டவர்கள் நாம்.

ஆனால் ,வழைமயாகப் புலத்துப் "புரட்சி மாபியாக்கள்"தம்மால் தோழரெனத் தோளிற் தூக்கிவைத்துக் கொண்டாடிய ஒரு சில மாதங்களிலேயே பழ ரிச்சார்ட்டைத் தூற்றுவதில் "முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியலை நியாயப்படுத்துவதென்பது" அக் கட்சியின் எசமானர்களது நலனைக் குறித்து இயங்குவதென்றே பொருள்.

இத்தகைய நடாத்தையிற்றாம் ஆயுதக் குழக்கள் இந்திய இராணுவத்தோடு கப்பலேறி, இந்தியாவில் பதுங்கியதும் பின் முள்ளி வாய்க் கால் அழிப்புக்குடந்தையான கையோடு இந்தியாவின் நலனைப் புறந் தள்ளாத அரசியலை வகுப்பெடுப்பதெனவும் ஒரு அரசியலை  நமக்குள் பரப்பும்போது, அதே திசையில் இந்திய -இலங்கை ஆளும் வர்க்கங்களால் தகவமைக்கப்படும் "புட்சி-புரட்சிகரக் கட்சி" யாவும் ஒரே திசையில் வெவ்வேறு தரப்பை உள்வாங்கிச் சிதைப்பதில் உச்சம் பெற்ற காலந்தாம் இது!

இதற்குத்  தோதாக்  கலையரசன்கள்- இரயாகரன்கள்  தமக்கான  கரச் சேவையாக எவரையும் அநுமதிக்காத "புரட்டு மாபியாக்களாகவே" புலத்தில் "அரசியல்  புரட்டுப் புரட்சி"ப் படங்களைக் காட்டுகின்றனர்.

இதுள் ,வேடிக்கை என்னவென்றால் கலையரசனோ முள்ளிவாய்க்கால் முடிவுவரை இலங்கைப் பிரச்சனை குறித்து ஒரு துரும்பைக்கூட எழுத முடியாத  பெருஞ் சந்தர்ப்பவாதியும் , போலிப் புனைவுக் காரனுமாய் இருந்தார்.

இப்போது புலியழிவுக்குப் பின்  "புரட்டுப் புரட்சி"பேசுவதுதாம் நமது காலத்தின் அதிக நகைச் சுவை!

இதைக் கடந்து போனோமானால் சில வற்றை இப்படிப் புரிந்தே தீரவேண்டும்:




முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் “புரட்சி” வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்”புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்”, இதுவரை தொடர்ந்த “தமிழீழ”ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.

இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை, புரட்சி, விடுதலை யெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் “புரட்சி”க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும், மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்.

”தமிழீழப்” போராட்டத்தின் அதே சுத்துமாத்து, சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.


எனவே “புரட்சி,விடுதலை” குறித்த மாயைகளை" அகற்நவேண்டிய பணியே இப்போது பிரதான பணியாகும்-நாம்  அந்நிய ஆர்வங்களுக்காக இந்த மாபியாக்கள் போடும் சதிப் புரட்சி வலையுள் மாட்டப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது உயிரை அவர்கள் மாய்துக்கொண்டே இருப்பர்!

இக் காலமானது ஒடுக்குமுறையாளர்களது நலனுக்கான அரசியலாகவும்-போராட்டங்களாகவும்-புரட்சிகர முன்னெடுப்பாகவும்"ஆளும் வர்க்கங்களது அடியாட் படைகளே கட்சி-குழுக்கள்-அமைப்புகளை"அமைத்து வைத்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துவகை அரசியற் பரிணாமத்துள்ளும் புகுந்து விளையாடுகின்றனர்.

இவர்களை நம்பிச் செல்லும் இளைஞர்கள்  தொடர்ந்து பழரிச்சார்ட்டைப் போல் பழி வாங்கப்படுவினர்.

பழ ரிச்சார்ட்டின்  இன்றைய தெரிவுகூட ஆளும் வர்க்கத்தின் நிகழ்சிக்குட்பட்ட  அரசியல் தெரிவாகவே சமூகத்தில் பொது அரசியல் பின்னப்பட்டுள்ளது.

எனவே-

அந்நியச் சக்திகளுக்கு-அவர்களது நலனுக்காகத் தெரிவாக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்பும் மக்களுக்கானதல்ல!

பெரும் பகுதி மக்களை வேட்டையாடும் இந்த சூழலில் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு ஒடுக்கப்படுவதை அடுத்த பல ஆண்டுகளுக்கு  எவராலும் -ஏன் அந்த மக்களாலேயே முடியாத காரியமாகவிருக்கும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
04.12.2013

Sonntag, 21. April 2013

டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள்...

திரு. மனோக் கணேசன்மீதான தாக்குதலைக் கண்டிப்பதென்பது...


லங்கையானது சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை முற்று முழுதாக இழக்கும் அபாயத்தைக் கட்டியங் கூறும்  தாக்குதல்கள் ,சனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதன் தொடரில் பலதரப்பாக நடாத்தப்படுகிறது.பத்திரிகைகள்-மாற்று எண்ணங்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் உரிமைக்கான குரல்கள் மீதான தாக்குதலாக விரிகிறது, இது.

சமீபத்தில் உதயன் பத்திரிகைமீதான தாக்குதலுக்கு விளக்கமளித்த டக்ளஸ் தேவாந்த "உதயன் பத்திரிகைக் காரர்கள் அகதி அந்தஸ்துக் கோருவதற்காக இத்தகைய தாக்குதலைத் தாமே நடாத்துகின்றனர்"என்றார்.ஆக, இலங்கையிலிருந்து சனநாயகத்துக்கான குரல்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டியவொரு நிலையில் இருப்பதையும் ,அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதையும் அவர் ,குறிப்பாலுணர்த்துவதுவரை டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள் பலியாவதும் நடக்கவே போகிறது!


அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களுக்கான "மக்கள் மன்றங்கள்-அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் மீதான இத்தகைய தாக்குதலைக் கண்டிப்பதென்பது இலங்கை அரசின் இராணுவவாதத்துக்கெதிரானதென்பதைவிட ,மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்துள் மனோக் கணேசன் போன்றவர்களை இல்லாதாக்கும் முயற்சிக்கு எதிரானதென்று நாம் அறை கூவுவோம்!..




இலங்கையின் இன்றைய போக்கு மிகவும் வன்மம் நிறைந்தது.சட்டரீதியான அரசென்பது சட்டரீதியான  குடும்பச் சர்வதிகாரமாகவும், அதைத் தூக்கி நிறுத்தும் இராணுவக்  காட்டுத்  தார்ப்பாருமாச்சு.இது ,பாகிஸ்த்தானில் முஷ்ரப் போன்றே மகிந்தாவையும்-சீனாவினது தயவில் இயங்க அனுமதித்திருப்பினும் -இலங்கை அரசானது பெரும் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதென்பது  தமிழ்பேசும் மக்களைத் தோற்கடித்த பெருமிதத்தின் ஆட்சியாக இருப்பதால் -அது பலதரப்பட்ட முறையில் மக்களுக்கெதிரான திசையில் சட்டத்துக்குப் புறம்பானவொரு சர்வதிகாரியின் ஆட்சியாக முன்னேறுகிறது.

இஃது,படுமோசமான அரசியல் பின் விளைவுகளை மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தும்போது இலங்கையானது இராணுவச் சர்வதிகாரத் தலைமைக்குள் வீழ்ந்தே போயிருக்கும்.இத்தகைய இலங்கைக்கு வெளியிலிருந்து இந்தச் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து சட்டரீதியான ஆட்சியையும்,மக்களுக்கான அரசியல் கட்சிகளையும்,தலைமைகளையும் மீள, இயங்க வைப்பது மிக அவசியமானது.ஆனால்,இன்றைய உலகவொழுங்கில் இது, இல்லாதவொரு அரசியல் வெளியையே தாராளமயப் பொருளாதார வினை ஏற்படுத்தியுள்ளது.இங்கேதாம் பெரும்  தொழிற் சங்க வலுவுடைய தலைவர்கள் கூடத் தாக்கப்படுவதும்,அரசியலிலிருந்து தொலைத்துக் கட்டப்படுவதும் நடக்கிறது!

நாளை ,இதன் முனைப்பு,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்வரை பாய்ந்து அவர்களையெல்லாம் கொன்றே முடிக்கும்.இதுதாம்,இத்தகைய இயக்கவாதிகளால் முண்டுகொடுக்கப்பட்ட குடும்பச் சர்வதிகாரத்தின் தலைவிதி.இதன் பின்னே பெரும் வலுவுடையவொரு இராணுவம் முன்னைய இலங்கைக்குள் நிலவாத வலுவுடன் ஒரு சர்வதிகாரக் குடும்பத்தையும்,அவர்களது கட்சியாதிக்கத்தையும் காக்கிறது.இது,அரச முதலாளியத்தைக் குடும்பச் சொத்தாக்கியதிலிருந்து ஆயுதம் தாங்கியவொரு குழுவினது கையில் இலங்கையின் அனைத்து அதிகாரமும்-பொருளாதார முனைப்புகளும் குவிந்து போயுள்ளதென்பதையும் நாம் உணரவேண்டும்.


ப.வி.ஶ்ரீரங்கன்
21.04.2013

Sonntag, 31. März 2013

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...

யோசித்துப் பார்க்கிறேன்.1988 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு அன்று,தட்டச்சு செய்த வெறும் காகிதங்கள்தாம் அழைப்பிதழ். கையெழுத்துப் பத்திரிகைகள்,தட்டச்சில் எழுதிப் போட்டோப் பிரதி செய்த பத்திரிகைகளைத் தவிர நாம் ஒன்று கூடுவதற்கான அறிவிப்பை எதிலுஞ் செய்யவில்லை! எனினும்,கணிசமானவர்கள் பங்குபற்றியதும்,கருத்துப் பரிமாறியதும்,அடிபட்டதும்-குத்துப்பட்டதும் கருத்துக்களறாற்றாம்.அத்தகைய சந்திப்பு ஒரு கட்டத்தில் பிழைப்பு வாதிகளது கைகளில் ஏதோவொரு காரணத்துக்காகச் சென்றபோது அதைத் தட்டிக் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பாய் பொண் [Bonn-Germany] சோமசுந்தரம் அத்தகைய பிழைப்புவாதிகளில் ஒருவர்.இது குறித்துச் சிந்தனை ஆசிரியரோடு உரையாடினேன்.அவர்,வழமையான புன்னகையோடு மௌனித்தார்.இதே சோமசுந்தரம் நமக்கு இந்தியாவிலிருந்து ஒரு தமிழ்த் தட்டச்சைக் கொணர்ந்து தந்துவிட்டு (1989 ஆம் ஆண்டு), 1200 டொச்சு மார்க்கைப் பணமாக வேண்டினார்.துடிக்கத்துடிக்கப் பணத்துக்காய் அனைத்தையும் தப்பாகவே செய்பவர்கள் இலக்கியச் சந்திப்பை ஒரு கருவியாகப் பயன் படுத்தியது உண்டு.





இன்று,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்புக் குறித்து பௌசர் தீபம் தொலைக் காட்சியில் நிகழ்வு குறித்து நேரடியாக உரையாடி விளம்பரஞ் செய்யுமளவுக்கு நமக்குள் வசதிகள் பெருகிவிட்டன.இத்தகைய வசதிகளின்வழி, இந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட இனவழிப்புக்குறித்து ஒருமித்து முடிவொன்றை இலங்கைப் பாசிச அரசுக்கெதிராகத் தீர்மானமாக இச் சந்திபுக்குழு வெளியிட்டு , இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மை இனங்கள்மீது இனித் தொடரப்போகும் அராஜக அரசியலைக் குறித்து எச்சரித்து, அவர்களை அநாதவர்கள் எனும் தரப்பிலிருந்து அரசியல் உரிமை கோரும் விவேகமான மக்கள் கூட்டமாக மாற்றும் முன் நிபந்தனைகளாக இந்தத் தீர்மானம் அமையவேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.இதுதாம் ஒரு கூட்டு முயற்சிக்கான அரசியலை நமக்குள் தொடர முடியும்.இதுள் உடன்பாடுகாண முடியாதுபோயின் இச்சந்திப்பு ஒடுக்குமுறையாளர்களது நிகழ்ச்சிக்கேற்பவே பயணிக்க முடியும்.இதுதாம் இன்றைய அரசியலாகவும் நமக்குள் நிகழ்த்தப்படுகிறது.இதைக் கடக்கவே இலக்கியச் சந்திப்பு அன்று தோன்றியதும் அதை முன்வைத்த தெரிவுகளோடு பயணித்துக்கொண்டதும்"மாற்றுக் கருத்து-அரசியலை"தொடரவே!

சிங்கள இனவாத அரச யுத்த வன்முறையாலும்-பாசிசப் புலிகளது அராஜகப் போராட்டத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பல வடிவினில் பல தளத்தில் இன்றும் இலங்கை அரசால் தண்டிக்கப்படுவது நாம் அறிந்தது!

தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தமானது வரலாற்றில் மன்னிக்க முடியாதது.இன்றைய இலங்கைக்குள் இராணுவவாத அரசியல் வியூகத்தின்வழி தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களது ஐதீகத் தேசமானது சிங்கள இராணுவச் சுற்றி வளைப்பு-மற்றும், அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்துள் கட்டுப்படுத்தப்பட்டு மெல்லத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரங்களும் மனித வளமும் சுரண்டப்படுகிறது.இதுவொரு புதிய குட்டி முதலாளியப் போக்காக, இராணுவப் பொருளாதார அசைவியக்கமாகத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் அரசியலானது மிகப் பயங்கரமானவொரு அரசியல் வாழ்வைத் தமிழ்பேசும் மக்கள்மீது இனவாதஞ்சார்ந்து சட்டபூர்வமாக ஏவியுள்ளது.





இந்த நிலையுள்,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்பானது கணிசமாகப் புலம் பெயர் அரசியல்-இலக்கியச் செயற்பாட்டாளர்களை இணைத்துச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இவர்களது, இந்தச் சந்திப்பு-இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகால நோக்கை இன்னும் கடைப்பிடிப்பதாகவிருந்தால்- இலங்கையின் இராணுவ ஆட்சி குறித்தும், தமிழ்பேசும் மக்கள்மீது சட்டவாத அரசின் விழுமியங்களைத் தட்டிக் கழித்தும்-வன்முறையைப் பல தளத்தில் குறிப்பாக பௌதிக இருத்தலில் ஏவியுள்ளதென்பதையும், ஒரு குழுவினது சர்வதிகாரமாக இராணுவத் தலைமையைக்கொண்டு தமிழ்பேசும் மக்களையும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் கண்காணித்து, வன்முறை ஜந்திரத்தின்வழி ஒடுக்கும் இன்றைய அரசியலை இல்லாதாக்கும் ஆரம்பப் புள்ளிகள் குறித்து இச் சந்திப்பு தீர்மானகரமான உரையாடலையும், அது குறித்த பகிரங்கமான தீர்மானத்தை (இனவழிப்பு நிகழ்த்திய இலங்கை அரசைக் கண்டித்தும்) உலகுக்குக்குச் செய்யவேண்டும்.






இத்தகைய அரசியல் நோக்கில்-விடுதலையின் தெரிவில் அதைப் பிரகடனப்படுத்தியும் தீர்மானம் வெளியிடப்பட்டு,எதிர்கால இலக்குகளும்,இலங்கைத் தேசத்தில் ஜனநாயக ரீதியாக அனைத்து மக்களையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு சட்ட பூர்வ அரசை மீள மலர வைக்கும் முயற்சிக்கு இந்த இலக்கியச் சந்திப்பு பணியாற்ற வேண்டும்.

இதைச் செய்யாது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கைக்கு நகர்த்துபவர்கள் இலங்கை அரச நிகழ்சிக்குடந்தையாகவே பயணிப்பர்.இதுதாம்,இன்றைய இலங்கை அரசியலின் தலைவிதி.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

31.03.2013