Sonntag, 23. März 2008

பழங்குடிகளின் விவசாயத்தில் எந்த கானுயிருக்கும் சிறு பாதிப்பும் கிடையாது.

பழங்குடி மதிப்பீடுகள் நம்பிக்கைகள்


பழங்குடி மக்களின் பண்பாட்டில் உலகின் அடிப்படை இயங்கு சக்தியாக வனம் இருப்பதான நம்பிக்கை உள்ளது. சூரியனிலிருந்து வெளிச்சத்தை பெற்று உணவாக மாற்றுவதாக அறிவியலால் ஏற்றுக் கொண்ட உண்மையைத் தங்களின் நம்பிக்கைகள் சடங்குகளில் நம்பி விடுகின்றனர். பல பழங்குடிகள் தங்கள் வழிபாடுகளில் ஒரு நாயகமாகப் பச்சை வர்ணத்தை வைத்துள்ளனர்.



வனம் என்பது பழங்குடிகள் நம்பிக்கை வாழ்வாதாரம் வாழ்க்கை என்ற மதிப்பீடுகளைக் கொண்டது. வனத்திலிருந்து பசுமை விரட்டப்படும் போது வன தேவதைகள் எழுந்து கோரத்தாண்டவமாடுவதைத் தமிழ் இலக்கியம் பதித்துள்ளது. சோழ அரசன் காட்டை அழித்து நாட்டை பெருக்கி வரும் போது, கொங்கு நாட்டு காடுகளை அழிக்கும் சமயம் இருளர்களின் பெண் தெய்வம் தலை விரிகோலத்தோடு சோழ மன்னனின் முன் தனக்கு அநீதி விளைவிக்கப்பட்டதாகத் தாண்டவமாடி முறையிட்டதாகவும், சோழன் பழங்குடி பெண் தெய்வத்தை அமைதிபடுத்த இரு பச்சிளம் குழந்தைகளை நரபலி கொடுத்து பின் அத்தெய்வத்தை உமையாளாக மாறி ஈசனுக்கு இடப்புறம் அமரச் சொன்னதாகவும் சோழனின் பூர்வப்பட்டயக்குறிப்பு ஒன்று பேசுகின்றது.

பழங்குடி சமூகத்தில் சமூகத்தின் பண்பாடு மற்றும் தொன்மங்கள் என்பன அம்மக்களைக் காலகாலமாக நம்பிக்கை கொடுத்து வழிநடத்துவன. உலகில் முதல் சமூகம் பழங்குடி மக்களிடமிருந்தே உதயமானது. உலகில் நிறுவன தன்மையோடு துவங்கிய முதல்மதமான புத்தரின் சங்கம் தனது அமைப்பு முறை சமூக வடிவத்தையே எடுத்துக் கொண்டது. மேலும் புத்தரின் சொத்து மறுப்பு, ஆசை மறுப்பு போன்ற தத்துவங்களின் தேடல் தளமாகப் பழங்குடி சமூகம் இருந்தது.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இயற்கையைச் சிதைக்காது அதனை உயிர்ப்பித்துப் பயன்படுத்தும் முறைகளைப் புத்தர் பழங்குடி சமூகத்திலிருந்தே எடுத்துக் கொள்கின்றார். ஒரு மலரை தேனீ பயன்படுத்துவதைப் போலச் சேதாரமின்றி இயற்கையைப் பயன்படுத்திக் கூறும் புத்தரின் தத்துவத்திற்கு அடிப்படையானது பழங்குடி சமூகம்.

பழங்குடி மக்கள் வனத்தையும் அதன் கானுயிர்களையும் தெய்வமாக வழிபடுகின்றனர். பொதுவாக, வனத்தில் கானுயிர்களைப் பழங்குடியினர் உணவிற்காகவும், மருந்துக்காகவும் தவிர வேறு எதற்காகவும் கொல்வது கிடையாது. குறிப்பாகக் குட்டிமான்கள், பெண்மான்கள், சினையுற்ற விலங்குகள் போன்றவற்றைப் பழங்குடியினர் கொல்வது தெய்வ குற்றமாகவே கருதுகின்றனர். வனவிலங்குகள் உணவிற்கான வேட்டையில் அழிப்பது கிடையாது. வணிக நோக்கத்திற்கான பேராசையின் நிகழும் வேட்டைகளாலேயே அழிவை எதிர்கொள்கின்றன.

கோலிகர் பழங்குடிகளுடன் அவர்களின் விவசாயத்தை அறிய முடிந்ததில் அந்த விவசாயம் முழுவதும் இயற்கையைச் சார்ந்தது. அபர் வனங்களை ஒட்டிய விவசாய நிலங்களில் கேழ்வரகுத் தானியத்தையே, உச்சள்ளு என்ற எள்ளு வகை தானியத்தையே விளைவித்துத் தானியம் முளைப்பு முட்டி வரும் போதிலிருந்து தங்களின் வயல்களில் இரவுகளில் காவல் புரிகின்றனர். வனத்தை ஒட்டிய வயல்களில் விலங்குகள் இரவுகளில் வரும் என்று அறிந்தும் எவ்விதமான வேலிகளைத் தங்கள் தங்களின் நிலங்களுக்கு அமைத்துக் கொள்ளுவதில்லை. தானியங்கள் தானியக் கதிர்களைச் சுமக்கத் துவங்கிய நாட்களுக்கு இரவுகளில் தங்களின் வயல்களில் உள்ள மரங்களில் பரண் அமைத்து இரவு முழுவதும் விழித்திருந்து விலங்குகள் தென்படும்போது சப்தம் எழுப்பியே அதனை விரட்டுகின்றனர்.

பழங்குடிகளின் விவசாயத்தில் எந்த கானுயிருக்கும் சிறு பாதிப்பும் கிடையாது. ஆனால் அதே கோலிகர் பழங்குடிகளின் உனர்களுக்கு அண்மையின் கீழ்பகுதியிலிருந்து வந்தவர்கள் பழங்குடிகளின் நிலங்களை அபகரித்து விவசாயம் செய்ய துவங்கியபின் முழுவதும் மின்சார கம்பி வேலிகளை அமைத்துக் கொண்டுள்ளனர். பல சமயம் யானைகள் காட்டுப் பன்றிகள் என வனத்தின் முக்கியமான கானுயிர்கள் மின்சாரம் பாய்ந்து செத்துப் போவது ஈரோடு மாவட்ட தாளபாவு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்கிறது. பழங்குடி சமூகத்தில் பகிர்ந்துண்ணும் பண்பு இன்னமும் உயிரோட்டமுள்ளதாக உள்ளது. வேட்டையில் கிடைக்கும் விலங்குகளின் கறிகளைக் கூறுகளாக்கி முதல் கூறு சமூகத்தின் விதவைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கப்படும் பண்பு தொடர்கிறது.

பழங்குடிகளின் கடவுள்கள்:

பழங்குடி மக்களின் கடவுள்கள் பெரும்பாலும் மரங்களின் கீழ் உள்ள கடவுள்தான். பழங்குடி மக்களின் பெண் தெய்வத்தை உமையாள் என்று தன் இந்து மதத்திற்குள் உபக்கியப்படுத்திக் கொண்டது போலவே காளி, விநாயகன் போன்ற பழங்குடி தெய்வங்கள் இந்து மயமாக்கப்பட்டன. இந்து மதத்திற்கு முன் பௌத்தமதமும் பழங்குடி தெய்வங்களைத் தன்மயப்படுத்தியது. கோவையில் உள்ள கோணியம்மன் என்ற பெண் தெய்வம் பௌத்தர்களின் காலத்தில் தாரா தேவி என்ற புத்தரின் தாயார் என கருதி வழிபட்டதாக அறிய முடிகிறது. இது இருளர்களின் பெண் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடிகள் தங்களின் மூதாதையரின் ஆவிகள் வனத்தைக் காப்பதாகவும் சிலவகை மரங்களை அழித்தால் தங்களின் மூதாதையருக்குக் கோபம் வந்துவிடுமென்றும் நம்புகின்றார்கள். பல சமயம் விலங்குகளையும் கடவுளின் அவதாரமாகப் பார்ப்பதுண்டு. யானைகளைப் பெரியசாமி என்று கோலிகர்கள் அழைக்கின்றனர். புகழ்பெற்ற ரைவீரிய எழுத்தாளர் சினுவா அச்சிபி தன் சிதைவுகள் (Things talkana pants) நாவலில் ஆப்பிரிக்கப் பழங்குடிகள் மலைப்பாம்புகளைத் தங்களின் மூதாதையர் வழி தெய்வங்கள் என்று நம்புவதை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரிஸடான் காலகந்தி மாவட்டத்தில் உள்ள பழங்குடிகள் புலிகளைத் தங்களின் சகோதரிகள் என கருதுகின்றனர். எப்போவது புலி செத்துp போகும்போது அதனை ஒரு சகோதரன் அடக்கம் போலவே மரியாதையுடன் அடக்கம் செய்கின்றனர்.

பழங்குடிமக்களின் மருத்துவம்:

பழங்குடி சமூகத்தில் உள்ள மருத்துவர்களை லடாக் பழங்குடிகள் அம்சி (amchis) என்றும் மத்திய இந்தியாவில் கைய்ட்டாஸ் (gaitas) அஸ்ஸாமில் உச்சே (uche), பீகாரில் வங்காளம், ஒரிஸாவில் ஏகாஸ் (ojhan), மகாராஸ்டிரா, குஜராத்தில் பகாத் (bhagats) மற்றும் மத்திய பிரதேசத்தில் பட்வாஸ் (bhadws) என்றும் அழைக்கின்றனர். இம் மருத்துவர்கள் மூட்டுவலி, பக்கவாதம், சன்னி, தொழு நோய், காமாலை, நீரிழிவு நோய், மலேரியா, பாலியல் நோய், பேதி, தோல்நோய் மற்றும் பெண்களுக்கான மாதவிடாய் நோய்கள், எலும்பு முறிவு போன்றவற்றை குணமாக்க முழுவதும் மூலிகைகளையே பயன்படுத்துகின்றனர். மேலும் 1984-ல் சுற்றுசூழல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பழங்குடி மருத்துவத்தில் விலங்குகளை மூலப்பொருட்களாகக் கொண்ட 156 வகை மருந்துகள் கண்டறிப்பட்டன.

அவைகளில் 32 பறவைகளின் மூலமும், 30 ஊர்வன மூலமூம் மீன்கள் மூலம் 10 வகை மற்றும் பூச்சிகள் வழி 9 வகை, நண்டு மூலம் 9 மற்றும் 5 வகை மண் புழுக்கள் மூலமும் மத்தியபிரதேசம், ஏரிஸாக்கில் பழங்குடிகள் உருவாக்குகின்றனர். கேரளாவில் பழங்குடி மருத்துவம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பழங்குடிகள் 39 வகைக் கிழங்குகள், மேலும் பலவகை தாவரங்கள் அவர்களின் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதை அறிய முடிந்தது.
அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் (All India Coordinate Research Object) ஆய்வில் பழங்குடி மக்கள் சுமார் 9000 வகை தாவரங்களின் பயன்பாடுகளை அறிந்து வைத்திருப்பதாக வெளிப்படுத்துகிறது. அதில் 7500 வகை தாவரங்கள் மனிதன் மற்றும் விலங்குகளுக்கான நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுவதும் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கோலிகர் பழங்குடிகள் யானை கன்று ஈனும் போது விழும். கருப்பை நஞ்சை எடுத்து காயவைத்துப் பத்திரப்படுத்தி வைத்து பெண்களுக்குப் பிரசவ சமயம் அதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த நஞ்சில் பிரசவத்திற்கு உதவும் மருத்துவக்கூறு உள்ளதை நவீன மருத்துவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பழங்குடி மக்களின் அறிவியல் பொது சமூகத்தின் அறிவியல் கோட்பாடுகள் மற்றும் அதிகாரத்துவத்தால் அலட்சியப்படுத்தப்படுகிறது. இந்த அறிவை உள்வாங்கும் நேர்மைத்தன்மை காலணியாதிக்கக் கல்வியில் குறைவாகவே உள்ளது.

பழங்குடி அரசுகள்:

தமிழ் இலக்கியத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் பெரும் தாக்குதலுக்கு உள்ளான பாரி, அதியன் போன்ற அரசர்கள் பழங்குடி அரசர்களேயாவார்கள். வணிகமயமான பொருளாதாரத்தை நிறுவ வந்த நிர்பந்தத்தை எதிர்த்து சுயமரியாதையுடன் நின்றதாலேயே இப்பழங்குடி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை காண இயலுகிறது. வரலாறு நெடுகிலும் பழங்குடி அரசுகள் தொடர்ந்து இடைவிடாத தங்களின் வீரந்தணிந்த போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்தியாவில் லிச்சாவி சாம்ராஜ்ஜியம் மகத பேரரசுக்கு எதிராகப் போராட பழங்குடிக் குழுக்களால் உருவாக்கப்பட்டது. அதன் தலைவர் வைசாசி. இதனை அஜாய்சந்ரூ அழிக்கின்றான்.

தமிழகத்தில் கரிகால சோழனின் பேரரசுக்கு எதிராக வெண்ணிப் பறந்தலை போரில் பழங்குடி அரசுகள் எதிர்த்து போர் புரிந்து தோல்வியடைந்தன. மத்திய இந்தியாவின் கி. பி. 10ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை கூண்டு பழங்குடிகளின் ஆட்சி நடந்தது. பழங்குடிகளின் கார்கா - மண்டலா அரசு நர்மதை பள்ளத்தாக்கிலும் அதனை ஒட்டிய வனப்பகுதியினும் அரசாண்டது. ஜபல்பூர் நகரம் அதன் முக்கிய தலைநகர்களில் ஒன்றாகும். ராணி துர்க்காவதி என்ற பழங்குடி பெண்ணின் அரசாட்சி அவள் முகலாயிருக்கெதிரான யுத்தத்தில் சாகும் வரை நீடித்தது. நாக்பூர் நகரம் 18ம் நூற்றாண்டின் கூண்டு பழங்குடி அரசர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து வீரஞ்செறிந்த எதிர்ப்பு பலசமயம் பழங்குடி பகுதிகளிலிருந்தும் வந்தது.

1772 - ல் பகாரிய பழங்குடிகள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர். தில்கா மஞ்சி என்ற அதன் தலைவன் 1785-ல் பகல்பூரில் தூக்கிலிடப்படும் வரை அப்போராட்டம் தொடர்ந்தது. தமர், முண்டா பழங்குடிகளின் போராட்டம் இந்தியாவின் பழங்குடி பகுதிகளில் எதிரொலித்தது. 1855-ல் காரன் வாலிஸ் கொண்டுவந்த நிரந்தர குடியியல்பு திட்டங்கள் பழங்குடிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் மீதும் சுரண்டலை ஏற்படுத்தியபோது சந்தால் பழங்குடிகள் கடும் எதிர்ப்பைக் காட்டி போராடினர். அதன் பின் 1857-முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி தலைவர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

1858-ல் ஆங்கிலேயர்கள் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நசுக்கி விக்டோரியாவின் நேரடி ஆட்சி மூலம் காலனியாதிக்கத்தை இந்திய சமூகத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக 1878-ல் இந்திய வனச்சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள வனங்கள் மற்றும் கானுயிர்கள் அனைத்தும் அரசுக்கு உரிமையுடையது என்று மாற்றப்பட்டது. பழங்குடிகளை நசுக்கக் குற்ற பழங்குடிசட்டம் 1871-ல் கொண்டுவரப்பட்டிருந்தது. பழங்குடிமக்கள் மீது காலனி ஆதிக்கவாதிகளின் சுரண்டலும் ஜமீன்தார்களின் பிடிகளும் இறுகியபோது பீர்கா முண்டா போன்ற பழங்குடித் தலைவர்கள் போராடி, சிறைபட்டு உயிர்த்தியாகம் செய்தனர். தென்னிந்தியாவில் ஆந்திரத்தில் 1922-ல் அல்ஷாரி ராமச்சந்திர ராஜீ என்ற சீத்தாராம ராஜீ என்பரின் தலைமையில் பழங்குடிகள் திரண்டு போராடினர். இப்போராட்டத்தை நசுக்க ஆங்கிலேய மலபார் சிறப்பு படை வரவழைக்கப்பட்டது. எனினும் அல்ஷாரி ராஜீ வீரமரணம் அடையும் வரை பழங்குடிமக்கள் தொடர்ந்து ஆங்கிலேய அடக்கு முறையை எதிர்த்தனர்.

பழங்குடி நிலை:

பழங்குடி மக்கள் தொடர்ந்து தங்களின் மீதான சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து வந்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பழங்குடி நிலங்களைப் பழங்குடி கவுன்சலின் அனுமதியின்றி விற்பனை செய்ய இயலாதவாறு வடகிழக்கு மாநிலங்களை ஐந்தாவது அட்டவணையிலும் அது நீங்கிய பிற மாநிலங்களில் (தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, கர்நாடகா நீங்களாக) பழங்குடி உள்ள பகுதிகள் ஆறாவது அட்டவணையிலும் இணைந்து பாதுகாக்கப்படுகிறது. இந்தியாவில் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 6.76 கோடியாகும். இந்த மக்கள் தொகையானது ஆஸ்திரேலியாவைப் போல நான்கு மடங்கும் பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டுக்கு இணையானதும் ஆகும்.
சுதந்திரத்திற்குபின் நாட்டில் உருவாக்கப்பட்ட சுமார் 1500 பெரும் நீர்த் திட்டங்களுக்காகச் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.6 கோடியாகும் இதில் சுமார் 40% பேர் பழங்குடியினர். உலகமயமாக்கலில் ஊக்குவிக்கப்பட்ட நுகர்வு வெறி தொடர்ந்து பழங்குடி மக்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகிறது. பழங்குடி மக்களின் நிலங்கள் BALCO, NALLO போன்ற கம்பெனிகளாலும், பன்னாட்டு சுரங்க கம்பெனிகளாலும் சூறையாடப்படுகிறது. பழங்குடிகள் தங்கள் உரிமைக்காகப் போராடும்போது கொடுமையான அடக்கு முறைகளை அரசு நிர்வாகம் கடைப்பிடிக்கின்றது. இம்மக்கள் தங்களின் தாய் மண்ணை விட்டு விரட்டப்படுகின்றனர். நகரங்களின் சேரிகளில், தெரு ஓரங்களில் வாழ நிர்பந்தப்படுகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் அநீதி இங்கு நீதிமன்றம், சட்டம், அடக்குமுறை என்ற பெயரில் நடந்தேறுகிறது. இம்மக்கள் சுமார் 50 இலட்சத்திலிருந்து 70 இலட்சம் வரை சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் கொத்தடிமைகளாக, படிப்பறிவற்றவர்களாக, வறுமை நோயால் வாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு உன்னதமான ஆதிப் பொதுவுடைமை பண்பாடும் அதன் வரலாறும் அதன் உயிர்ப்பை இழந்து வருகிறது. வேர் தன்மையுள்ள இப்பண்பாடும் நம்பிக்கையும் தொடர்ந்து பேரழிவைச் சந்தித்து வருகிறது. நம் சமூகம் அதன் ஆன்மாவைக் கொலை செய்து கொண்டிருக்கிறது.



ச.பாலமுருகன்

Keine Kommentare: