தேசம்நெட் ஜெயபாலன் நெஞ்சைப் பிழியும் ஒரு கட்டுரையை மிக வருத்தத்தோடு எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை மிக நேர்த்தியாக இயக்க அராஜகத்தின் பிற்காரணங்களை,வெளித்தொடர்புகளை இனம்காண மறுத்தொதுக்குக்கிறது.இது ஜெயபாலனது தெரிவாக இருக்கலாம்.எனினும்,மறுத்தொதுக்க முடியாதவொரு வலியைத் தனது சொந்த அனுபவித்திலிருந்து ஜெயபாலன் தொகுத்துள்ளார்.அவரது குடும்பத்திலேயே இயக்க அராஜகம் உயிரைப் பறித்திருக்கிறது!அவர் குடும்பத்தைப்போலவேதான் ஈழத்தின் பல்வேறு குடும்பங்களிலும் உயிரிழப்பும்,பொருளிழப்பும்-இடப்பெயர்வும் நிகழ்துள்ளது. இவையனைத்தும் ஈழப்போரினது பல்வேறுபட்ட முகங்களினது ஒரு வடிவம்.
இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டில் ஆயுதப்போராட்டமென்பது மக்களால் தீர்மானிக்கப்பட்ட முற்றுமுழுதான மக்கள் வகைப்பட்ட முன் நிபந்தனைகளால் உந்தப்பட்ட இயக்கக் கட்சியுருவாக்கத்தில் ஆயுதப்போராட்டம் ஒரு பகுதியாக எழுந்தது அல்ல.அது முற்றுமுழுதும் அன்னிய சக்திகளால் உந்தப்பட்டு அவர்களது முற்றுமுழுதான நலன்களோடு தோற்றம் பெற்ற இயக்கங்களே ஈழத்தில் தோற்றங்கண்டன.எந்தவொரு அமைப்புக்குபின்னும் மக்களே உந்துசக்தியாகவும் அவர்களே போராட்டத்தில் முன்னணிப்படையுமாக நிற்பார்களாயின் அங்கே ஒவ்வொரு இயக்கத்தினுள்ளும் உட்கட்சி ஜனநாயகவும் மிக நெருங்கிய முறையில் இயக்கப் போக்கை நிர்ணியிக்கும் மத்திய குழுவைத் தந்திருக்கும்.ஆனால், ஈழத்தில் தோற்றும் பெற்ற அனைத்து இயக்கங்களுக்குள்ளும் தனிநபர் வாதமும்-வழிபாடும் தடல்புடலாகத் தோற்றங்கண்டது.அங்கே, இத்தகைய தனிநபர்களை முன்நிறுத்திக் கட்டபட்ட ஒளிவட்டம் அராஜகத்தை சுயதேவைக்காக இவற்றைக்கட்டி வளர்ப்பதற்கும்,அதையே பாதுகாப்பதற்குமாக இயக்கங்களுக்குள் தவிர்க்கமுடியாத விதியாக அராஜம் ஆயுதமாக்கப்பட்டது.இன்றுங்கூட உட்கட்சிஜனநாயகம் என்றால் என்னவென்பதே புரியாத இயக்கவாத மாயை நம்முள் நிலவுகிறது.இது காவிய நாயகர்களின் பின்னே தன் விருப்பைத் தேடுகிறது.தேசியத்தைச் சொல்லி மாற்றார் குழந்தைகளைப் பலியெடுப்பதற்காக நியாயஞ் சொல்லித் தன் புலப்பெயர்வு வாழ்வைத் துய்த்துச் செரித்தபடி புரட்சியென்பதைப் புலிப் போராட்டத்துக்குள் இனங்காண்கிறது!இத்தகைய பாசிஸ்டுக்களே புரட்சியென்பதை ஒடுக்கும் புலி அரசியலின் தொடர்ச்சியில், ஆங்காங்கே புலி இயக்கப் பாசிசக் கருத்தியல் அராஜகத்தை மிக நுணுக்கமாகச் செய்து முடிக்கிறார்கள்.இவர்களிடம் நெருக்கமான அன்னியச் சகத்திகள் எம்மக்களின் உண்மையான அவலத்தைத் தமது அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எமக்கான அரசியல் தீர்வுக்கான ஒத்துழைப்பாகப் படம் காட்டுகிறார்கள்.இவர்களேதான் அன்றுஞ்சரி இன்றுஞ்சரி சகோதர இயக்கப்படுகொலைகளைத் தூண்டியவர்கள்-அப்பாவி மக்களை இனவாதத்தோடு வெட்டிக் குதறியவர்கள்.
அன்று,இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்கள் புரட்சியென்பது மிகச் சுலபமாக நெருங்கி வருவதை இனம் கண்ட அமெரிக்கா அந்த அரசியல் விழிப்புணர்வு தென்கிழக்காசியாவில் வசந்தத்தின் இடிமுழக்கமாக மலரும் சூழலைமிக யதார்த்தமாகப் புரிந்துகொண்டது.இதற்கு இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஒடுக்குமுறை மிக நேரிடையாகச் செயலாற்றுமென்றே அன்று கருத்திலெடுத்த ஏகாதிபத்தியங்கள் தமிழ்வலது சாரிகளான தமிழரசுக்கட்சியை மிகச் சாதுரியமாகக் கையாண்டது.இத்தகைய செயற்பாட்டின் தொபடர்ச்சியாகப் பின்னாளையத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிதாமகன் செல்வா பற்பல ஒப்பந்தங்களைச் செய்து அவற்றையே சிங்களத் தலைமைகளால் நீர்த்துப்போகச் செய்யும் அமெரிக்க-இந்திய அரசியலுக்கு உடந்தையாகச் செயற்பட்டார்.இத்தகைய அரசியலானது சிங்களத் தரப்பில் ஜே.ஆரையும்,தமிழர் தரப்பில் செல்வாவையும் மிகச் சரியாகப் பயன்படுத்தியது.

1958 ஆம் ஆண்டு முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகத்துக்குள் இலங்கை இனப்பிரச்சனை ஓரளவு நிறைவுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்கூடாக எட்டபட்ட தீர்வாக இருந்திருக்கும் வாய்ப்பைப் பண்டா-செல்வா ஒப்பந்தம் சுட்டிநின்றது.ஆனால்,இத்தகைய ஒப்பந்தமும் இலங்கையும் பண்டாவின் தேசியப் பொருளாதார நடவடிக்கைகளைக்கூர்மைப்படுத்துமென அறிந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் பெயரளவிலான பண்டாவின் பம்மாத்துத் தேசியப் பொருளாதாரத்தையே அனுமதிக்க மறுத்து அவரைப் போட்டுத்தள்ளுவதற்குமுன்பே ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான ஜே.ஆர் மற்றும் செல்வா தலைமையிலான கூட்டணியையும் பயன்படுத்தி பண்டாரநாயக்காவை அந்த ஒப்பந்தத்தையே கிழித்தெறிய வைத்துத் தன் நோக்கை(அமெரிக்க அரசியல் இலக்கு) வெற்றியோடு பண்டாவை தட்டுவதுவரை செய்து முடித்தது.ஜே.ஆர் தலைமையில் களனியிலிருந்து கண்டிக்கான பாதையாத்திரை சிங்களப் பெளத்தபீடங்களையும்,காடையர்களையும் உள்வாங்கியே சென்றது.இத்தகைய இனவாத்தைத்திட்டமிட்டு உந்தித்தள்ளிய ஏகாதிபத்தியம் பண்டாவின் ஆட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை சிங்கள மக்களிடமிருந்து வருவதற்காகச் செயற்கையான அரசியல் நடவடிக்கையைச் செய்த அதே தருணம் தமிழர்தரப்பில் அதை இன்னும் கூர்மைப்படுத்தும் இனவாதச் செயற்பாடாகத் தமிழரசுக்கட்சியை(அன்றைய)மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தியது.செல்வாவைத் தந்தையெனும் இன்றைய தமிழ்க் குரடர்கள் அன்றைய யாழ்ப்பாணத்தில் சிங்கள எழுத்துக்களைத் தார்பூசி அழித்த தமிழ்த் தலைவர்களின் அரசியலின்பின்னே மறைந்திருந்து தமிழரையும் சிங்களவரையும் நிரந்தரமாகப்பிரிக்கும் அமெரிக்க அரசியலே என்பதைப் புரியார்! ஏகாதிபத்தியத்தை தமது கக்கத்தில் மறைத்துவைத்துக்கொண்ட நமது தலைவர்களை எத்தனைபேர்கள் இன்று அறிவார்கள்?
இதுன் தொடர்ச்சியான ஏகாதிபத்தியச் சதியில் பண்டா கொல்லப்படவும் தமிழர் தரப்பில் கூட்டணிகள் உருவாகவும் பின்பு அது சிதைந்து ஆயுதப்போராட்டமாகத் திடீரென உருவாகுவதற்கும் அமெரிக்க-இந்திய அரசுகளின் வெளிப்படையானதும் மறைமுகமானதுமான செயற்பாடுகள்-திட்டமிடல்கள் இருக்கின்றன.இவை குறித்து ஓரிரு பக்கங்களில் எழுதிக் குறிப்பிட்டுவிட முடியாது.ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றை ஒரு வரலாற்றியலாளர் எழுதமுற்படும்போது எமது எதிரிகள் எமக்குள்ளே உருவாக்கப்பட்டவிதம் உண்மையாக வெளிப்படும்.அப்போது புலிகளின் பாத்திரம் நிச்சியம் புலப்படும்.அதுவரையும் புலிகளின் பின்னே மறைந்துள்ள வர்க்க நலனுக்கு அமெரிக்க வெள்ளைமாளிகைவரை தொடர்ச்சியான உந்துதல்கள் இருப்பதையும் அது இந்தியாவின் எடுபிடியாக இருந்த-இருக்கவிரும்பும்-இருக்கும் காலவர்த்தமானத்தின் கடைக்கோடி நிலையையும் நாம் (புரிந்துகொண்டும்)புரிந்துகொள்ள முடியாது.இதன் தொடர்பான அரசியலில் புலிகளாலும் மற்றும் குறுங்குழுக்களாலும் நடாத்தி முடிக்கப்பட்டு, இப்போது கண்டவிடத்தில் தோற்றம் பெறும் ஆயுதக்குழுக்களின் வரவினூடாக மனிதப்படுகொலைகள் விழுவதையும் நாம் ஓரளவாவது புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.
அன்று சகோதர இயக்கப் படுகொலைகளை இயக்கங்கள் தோற்றமுறும்போது திட்டமிட்ட இந்திய ரோவும்,சி.ஐ.ஏ.வும் படிப்படியாக அதைச் செய்து முடித்தபோது அதன் உச்சம் ரெலோவைப் பூண்டோடு அழிப்பதற்காகன முறையில் அதை அணைத்துப் புலிகளால் அழித்தொழித்த அரசியலில் இன்றுவரை கருணா-பிள்ளையான் என இந்திய ரோ புலிகளுக்குள் ஊடுருவிய விந்தை மகத்தானது.
இத்தகைய அரசியல் பின்புலத்தை மறுத்துவிட்டுப் புலிகளை அணுகும் ஒவ்வொரு தருணமும் நாம் நம்மை அழிப்பதற்கான இயக் அராஜகத்தை மென்மேலும் உருவாக்கும் அன்னிய அரசியலுக்கு உடந்தையாகவே இருக்கின்றோம்.இதை மறுத்துப் புலிகளையோ அல்லது மற்றெந்தக் குறுங்குழுக்களையோ மக்களின் மீட்பர்களாக ஒவ்வொருவரும் தத்தம் மனவிருப்புக்கேற்பக் கையாள்வதாக இருக்கும்போது, நமது மக்களின் பல்லாயிரம் உயிரோடு விளையாடுகிறோம்.இங்கே புலிகளைத் தென்கிழக்காசியாவின் வி(வெ)டிவெள்ளியாக உணரும் தேசிய இஞ்சி தின்ற புலம்(ன்)பெயர்ந்த மந்திகளுக்கு அரசியல் மக்களின் உயிர்குடிப்பதாகவே இருக்கும்.
ஜெயபாலன் தந்த இயக்க அராஜகத்தின் வரலாற்றுக்குறிப்புகள் வெறும் உள்ளக முரண்பாடுகளின் இயக்கப்பாடல்ல.நமது மக்களைக் கொன்றுபோடவும் தொடர்ந்து இலங்கையில் இனவாத இருப்பை நிலைப்படுத்தவும் அதன் வாயிலாகத் தென்கிழக்காசியாவில் புரட்சித்தீயைத் தொடர்த்து அணைப்பதற்கெடுக்கும் முயற்சியில் உலக ஆளும் வர்க்கங்கள் மிக நெருக்கதாக உடன்படுபடுகிறார்கள்.அவர்கள் மக்களை,மக்களின் புதல்வர்களாலேயே வேட்டையாடியதற்கு இன்றைய புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளான தமிழ்நாட்டு அரசியல் கயவர்களும் காரணமானவர்களென்பதை வரலாறு சொல்லும்.
எனவே,எமது மக்களின் மீட்பர்களாகக் கோபால்சாமிகளால் இன்று தூக்கி நிறுத்தப்படும் புலிகளின் இருப்பானது இலங்கையின் இனவாதத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தவும் ஏகாதிபத்தியச் சார்பு அரசியலைவிட்டு இலங்கைவழுவாதிருக்கவும் அன்னியச் சக்திகளின் சுயதெரிவாகவே இருக்கிறது.இதற்கான அனைத்து அரசியலும் அதன் உள்ளார்ந்து இயக்க அரசியலின் தொடர்ச்சியிலேயே சாத்தியமாகும்.எனவே,புலிகள் இயக்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மக்களியக்கமாக மலர்வதற்கான தலைமை அதனிடத்தில் இல்லை.அத்தகைய தலைமைகள் உருவாவுவதற்கான இயக்க உட்கட்சி ஜனநாயகம் அங்கே மருந்துக்கும் கிடையாது.தனிநபர் வழிபாடும்,ஒளிவட்டமும் ஏகாதிபத்தியத்தின் அரசியலுக்கு அவசியான இரு கண்கள்.
நிர்மாணம்
04.05.2008
தயவு செய்து நிறுத்துங்கள்!!! : த ஜெயபாலன்
ஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.
இந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்னரேயே சங்கர் லால் அப்போது வட்டுக்கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த ரெலோ இயக்கத்தின் தலைவர் எமது வீட்டில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு வந்து பெட்டி பெட்டியாக மறைத்து வைத்தார். எனது சகோதரன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்திருந்த போதும் சங்கர் லால் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. திடீரென வட்டுக்கோட்டை கிராமமும் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்கு உள்ளானது. இத்தேடுதல் அடிக்கடி இடம்பெற்றதை அடுத்து எமது வேண்டுகோளின் படி மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை சங்கர் லால் இடம்மாற்றினார்.
இருந்தாலும் எமது நட்புத் தொடர்ந்தது. இரவு வேளைகளில் வருவார். குடும்பத்தவர்களுடன் உரையாடுவார். அப்பாவுடன் மிகவும் நட்பானார். எங்கள் குடும்பத்தவர்களைப் பொறுத்தவரை சங்கர் லால் ஒரு முன்னுதாரணமான போராளி. ஆயுதங்களுக்கு மேலால் மக்களையும் அவர்களின் உறவையும் நம்பிய ஒரு நல்லுள்ளம் கொண்ட இளைஞர்.
சங்கரத்தையில் பத்திராளி கோயில் மிகவும் பிரசித்தமானது. சங்கரதைச் சந்தியில் இருந்து பத்திராளி கோயிலுக்குச் செல்லும் வழியில் ரெலோ இயக்கத்தின் ஒரு முகாம் உள்ளது. இலங்கை இராணுவத்தின் முகாம்களையொட்டி விடுதலை இயக்கங்கள் காவல் அரண்களை அமைத்து இருந்ததால் இலங்கை இராணுவம் வெளியேறி தமது முகாம்களை அழித்துவிட முடியாது என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலை இயக்க முகாம்களில் பெரிதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதில்லை. அவ்வாறே சங்கரத்தையில் இருந்த ரெலோ முகாமும்.
அப்போது கண்நோய் பரவி இருந்த காலமும். புதிதாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இந்த முகாமில் படலையைத் திறந்ததும் விறாந்தை என்றும் போல் அன்றும் அதில் அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
‘புலிகள் ரெலோக்காரர்களை சுடுகிறான்கள்’ என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஆரம்பத்தில் இது ஒரு உள்ளுர் சம்பவமாகவே ரொலோ இயக்கத்தவராலும் கருதப்பட்டாலும் நேரம் செல்லச் செல்ல பல ஊர்களில் இருந்தும் வந்த தகவல்கள் நிலைமையின் கொடூரத்தை விளக்கியது. சங்கர் லாலும் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியும் எம்மை எட்டியது. இதற்கு சில தினங்களுக்கு முன் அப்போது வட்டுக்கோட்டைக்கு புலிகளின் தலைவராக இருந்த பிரசாத் (இவரின் மூத்த சகோதரர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்) சங்கர் லாலை தனது முகாமுக்கு அழைத்துச் சென்று அப்பம் சுட்டு சாப்பிட்டார்கள். அதே பிரசாத்தே சங்கர் லாலை சுட்டுக் கொன்றார் என்ற செய்தியும் எமது செவிகளை எட்டியது. இன்று பிரசாத் லண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாக அறிகிறேன். இவ்வாறு பல சம்பவங்கள். பல சங்கர் லால்கள். பல பிரசாத்கள்.
நானும் அப்பாவும் சங்கர் லாலுக்கும் கொல்லப்பட்ட ஏனைய போராளிகளுக்கும் எமது இறுதி அஞ்சலியைச் செலுத்த சென்றிருந்தோம். படுத்திருந்த போது கொல்லப்பட்ட அந்த இளைஞர்களின் தலை சிதறி சுவரில் இரத்தமும் சதையும் ஒட்டியிருந்தது. இரத்த வெள்ளத்தில் உடல்கள். இதயத்துடிப்பு நின்ற பின்னும் சங்கர் லாலின் கைக்கடிகாரம் டிக் டிக் என காலக் கணிப்பைத் தொடர்ந்தது. மறுநாள் காரைநகர் மக்கள் இபோச பஸ் வண்டிகளில் சாரைசாரையாக வந்து இறங்கினர். பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு பிரேதப் பேழைகளை காரைநகருக்கு எடுத்துச் சென்றனர்.
இதற்கு சில ஆண்டுகள் கழித்து 1989ல் இத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் இயக்கத்தைவிட்டு வெளியேறி சுவிஸ்லாந்து செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார் சகோதரன். ஆனால் அதற்கிடையே முள்ளிக்குளத்தில் இருந்த முகாமிற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார். அப்போது விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதலில் இரு தரப்பிலுமாக நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் எனது சகோதரனும் ஒருவர் என்பது, சம்பவம் நடந்த சில தினங்களின் பின்னரேயே தெரியவந்தது.
அப்போது துக்கம் விசாரிக்க எனது சகோதரியின் சிநேகிதியும் அவரது தம்பி மனோகரனும் வந்திருந்தனர். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்போது எனது அப்பா சொல்லி அழுதார், "தம்பி இதெல்லாம் ஒன்றும் சரிவராது. நீங்கள் உங்கட உங்கட குடும்பத்தைப் பாருங்கோப்பு. எங்கடை விதி இது தான்." என்று. அடுத்த சில மாதங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் விடுதலைப் புலிகளும் மோதிக் கொண்டதில் மனோகரன் உயிர் இழந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை. இதுவரை விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000 அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.
தமிழ் மக்களின் உயிர்களைக் கொல்வதற்காக எந்தத் தமிழ் மக்களும் போராளிகளையும் தலைவர்களையும் உருவாக்கவில்லை. அரசியல் படுகொலைகள் முற்றாக நிறுத்தப்படாத வரை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். வி.புலிகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மலையக, முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் பொது எதிரியான, பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு வி புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுடன் இனிமேல் இவ்வாறான மனித நாகரீகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனைச் செய்யாத எவரும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியற்றவர்களே.
தயவு செய்து நிறுத்துங்கள்!!! படுகொலைகளை.
//Sothilingam on May 4, 2008 7:51 am
தமிழீம் தோற்று விட்டதை அன்றே
நிச்சயப்படுத்தியது இந்த புலிகளின் படுகொலை- இன்றய தோல்வி நிலையின் ஆரம்பம்
தோழர் சிறீசபாவின் மற்றும் 300 மேற்ப்பட்ட தோழர்களின் படுகொலை செய்யப்பட்ட தினமே
- தமிழர் தோற்றுப் போய்விட்ட நாள் இது - ஒன்று சேர்ந்து போராட முன்வந்த தோழர்
சிறீ சபாவை துரோகத்தனமாக கொலை செய்த புலிகள் எப்படி தாம் தமிழர் போராட்டத்தை
நடாத்துவதாக கூறமுடியும். தமிழரைக் கொலை செய்துவிட்டு தமிழருக்காக போராடுவது
என்பது என்ன செயல்? தமிழ் அமைப்புக்ளை அழித்துவிட்டு தமிழருக்காக போராடுகிறோம்
என்பது எனன? தமிழ் மக்களின் மனதில் ஊன்றிவிட்ட இந்த கொடூரம் விட்டகலா முடியாத வடு
இந்தக் கொடூரமே எமது இனத்தை இப்போது அடிமையாக்கி விட்டுள்ளது. இந்தப் படுகொலைகள்
இன்றுவரை தொடர்வது ஏற்றக் கொள்ள முடியாதது.//