Freitag, 19. September 2008

பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்

காலம்.



எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்


பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல


மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ


மேகத்துள் மெல்ல விரியும் இருப்பிழந்த
துகளுக்குக் கால்கள் மண்டை வழி முளைத்தபடி
முதுகைக் குப்புறப் படுத்தபடி
சொறிவதற்கு நாட்குறித்த கனவில்



தெருவோரத்து நாய்களில் ஒன்று
திடங்கொண்டு தேடிய எதிர்ப்பால்
மல்லுக்கட்டிய கணத்தை சுரந்த சிதளொடு
மெல்ல முகர்ந்த கணத்தை மோகித்து



என்னைக் காவு கொள் கனவொடு
வரம்பின்றி மோகித்து மனமொடு மிரண்டது
மீள் வருகை ஒன்றில் மோதிய
உடலை தூக்கி நகர்ந்தது காலம்



19.09.08