Donnerstag, 21. Januar 2010

சின்னக் கண்ணன் அழைக்கிறான்...

சின்னக் கண்ணன் அழைக்கிறான்...

ன்பு நண்பர்களே,என்னத்தைச் சொல்ல!உங்களோடு பேசிவிடத்தக்கதான மனமுடக்கம்-மகிழ்வு,அழுகை,சிரிப்பு,சிணுங்கலென எனது உலகத்தில் ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி...இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்துபோனாள்.

வயது 77.

"தானுடண்டது பேய் உண்டது,பிறருண்டது சிவனுண்டது"என்று சொல்லிச்சொல்லி எமக்கூட்டியவள்-"தானுண்டவள் பிள்ளை வளவாள், தவிடுண்டவள் கோழி வளவாள்"என்று முதுமொழியுரைத்து, எமக்கு ஊட்டியவள் வீழ்ந்துபோனாள்.எப்போது இவள் மரிப்பாளென நாட்பாத்திருக்கும் நிலையாய் அவளது வாழ்வு படுக்கையில்...

அன்னை!

அற்புதங்களைச் செய்பவள்.அடுப்புக்குள் எரிந்து மீள்பவள்!அணைத்தெடுத்து அமுதூட்டியவள்.அவளை எண்ணியபோதெல்லாம், அவளாள் உறவுகளாய்ப் பிணைந்த குருதிக்கூட்டம் அகம் நிறைக்க.அக்கா-தம்பி,தங்கை-அண்ணாவென அது நீண்டுபோகும்.எப்போதெல்லாம் மனமுடக்கமோ, அப்போதெல்லாம் நான் மகிழ்ந்திருக்கும் பொழுதுகளுக்குள் என்னைப் புதைப்பது வழக்கம்.கிஞ்சித்தும் துக்கித்து இரேன்.

துக்கம்-சோகம் எனக்குரிய உணர்வு இல்லை!

என் வாழ்வில் சோகந்தரும் பாடல் எனக்கு நெருக்கமானதில்லை.அழுகையிலும் சிரித்திருக்கும் எனது மனத்துக்கு, இந்தப் பாடல் என்றுமே பிடித்தது.




கேட்டுப் பார்க்கிறேன்.சோகம் துரத்தும் ஒரு அற்புதம் இதன்வழி...

கடந்தகாலத்தில், எனது பால்யப் பருவந்தாண்டிய பொழுதில் இப்பாடலைப் பாடியிசைத்த பொழுதுகளில் காதல் மலர்ந்திருந்தது.காதலில் சுவைக்கு அதிகமாக இனிப்பிட்டவள்,இப்போ எங்கோ ஒரு மூலையில் எவன் கரம்பிடித்து...

அன்னையைப்"பேய்க் காட்டி"அவளுக்காக இசைத்த பாடல் இது.டாக்டர் பால முரளிகிருஷ்ணா எனக்காகவே பாடிய பாடலாக...இது, என்றுமே என்னால்-என்னவளால் விரும்பப்படுவது.

எனது பதின்ம வயதில், இனித்திருந்த இலங்கை வர்த்தக சேவையில் என்றுமே மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உண்டு.அவர்கள் இருவருமே எமக்கு இருவிழிகளாக...

ஒருவிழி கே.எஸ். ராஜா,

மறுவிழி பி.எச்.அப்துல் ஹமீத்.

இந்தப் பாடலில் அவர் தொகுக்கச் சிறுமி ஒருத்தி எனக்கான பாடலைப் பாடுகிறாள்.

அம்மா.

அற்புதங்கள் செய்பவள்.அடித்தாலும்,அரவணைத்தாலும் அவளாலேதாம் அனைத்தும் ஆகுவது.அவளின்றி, எனக்கு எதுவுமே ஆவதில்லை.

எனது பால்யப் பருவத்திலேயே அவளுக்காய் என்னைத் தொலைத்தவன்.அன்பு, அம்மா என்பதாக...

காதலும், கனவும் தவித்திருந்த பொழுதில் அம்மாவுக்கு மறைத்து, அகமகிழ்ந்திருந்த அர்த்தமிக்க பொழுதில் அம்மாவை ஏமாற்றிச் சிறகடித்த பொழுதின் அம்மா ஞாபகத்தில்...

அந்த அம்மா படுக்கையில் வீழ்ந்து உயிர்விடத்துடித்துக்கிடக்க...


ப.விஜயரெட்னம் ஸ்ரீரங்கன்
21.01.2010

4 Kommentare:

dj hat gesagt…

:-(

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

DJ,
Thanks.

-/பெயரிலி. hat gesagt…

ஸ்ரீரங்கன்
வருத்தத்தினைத் தெரிவிக்கிறேன். காலம் உங்கள் துயரை ஆற்றட்டும்

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

Nantry Ramany.