Sonntag, 29. August 2010

நித்தியமெனச் சொல்வதால்

மரணம்தோழனென...

மிக அழகானது.ஏற்றுக்கொள்வதும்,அழகைத் தரிசிப்பதுமாக இருக்கும் இந்த நிலையுள் எதையோ தேடவேண்டுமென நான் அலைகிறேன்.ஒரு பொழுதேனும் அழுதுவிடத் தேவையற்ற வாழ்வின் நிச்சியம் நித்தியத்தோடு நெருங்குகிறது.பொழுது இருண்டும்,விடிந்தும் நாட்களை எண்ணிக்கொள்கிறது!

எத்தனையோ முறைகள் வாழ்வின் திசைநோக்கி நித்தியமெனக்கொள்ளும் இந்த நிலைநோக்கிய நினைவுகள் என்னை வருத்தியிருப்பினும், அதன் உளமார்ந்த உண்மையை மறுத்தொதுக்குவது நிந்திக்கத் தக்கது.நிலவு விறைத்துக்கொண்டு முகில் விலத்தும் தெருவோரம் சருகாகச் செல்லும் எனது உணர்வுள் நிலைத்திருப்பது என்ன?

மௌனித்த தியான வெளியுள் நீந்துகிற எந்தச் சலனமும் அதைத் தொந்தரவு செய்துவிடுமானால் தியான நிலையெனக்கொள்ளும் கணம் பொய்த்துப்போனதெனக்கொள்வதும்,மீளவும், அதை அடைந்துவிட வேண்டுமென முனைதலுமாக நாளிகை செல்வதில் நித்தியம் என்னவென்பதைத் தேடிப்போன நாட்கள் எந்தவொரு நிழலையும் தரிசிக்கவில்லை.பொழுதுகள் உருண்டு செல்கின்றன.நெஞ்சில் கனத்த நினைவாகத் துரத்தும் மரணம் மகிழ்ந்து குலாவும் நினைவெனப்படருமா?

நெருப்போடு நித்தியமாகும் உடல் விலத்தி எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கென எதுவும் கொள்ளாத திசை நோக்கே இதுவரை எனது துன்பத்தை விலத்தி இருப்புறுத்தும் பொருள்சொல்கிறது. எதற்காகவும்,எதையும் தேடுவதில் என்ன பெரும் பயன்கொள்வினையூக்கப் பயன் நிலைகொள்ளும்?

பொருள்வகைக் காரணந்தாம் வாழ்வதின் ஊக்கமெனக் பகல்வதில் எந்தப் புதருள்ளும் நித்தியமெனச் சுவைக்க வைக்கும் எல்லாத் தேவையும் மரணத்தைக் குறித்து மௌனித்த கணங்களில் தேவதூதன் துணைக்கழைக்கப்படுவது இறுதி இலட்சியமெனப் பூண்டவர்கள் மரணதுக்காகக் காத்திருப்பவர்களை ஏமாற்றுகிறார்கள்!

பொய்யுரைத்து,ஒரு நிழலுலகத்தை நித்தியமெனச் சொல்வதால் மரணமறியா இறுதியாத்திரைக்கான கட்டிலில் தவமிருக்க நான் எப்போதோ பழகிவிட்டேன்.காலமெனக் கருக்கொண்ட இந்தவுலகம் எனக்கு முன்னும்,பின்னும் இருந்துவிடப்போகிறது.நானெனத் தோன்றியவுணர்வில் தென்பட்டதும்-புலப்பட்டதுமான இந்த வெளி என்னை-நானெக்கொள்ளத் தூண்டுவதில் தோற்றுக்கொண்டே வருகிறது.கனவு கலைகிறதெனக் கனாக்கண்டவொரு இரவில் தூக்கங்கலைத்த அதிசாமப் பொழுதே அழகெனக்கொண்ட மரணத்தை ப் புரியவைத்தெனக்கொண்டபோது, அந்த அழகே புறத்தையொதுக்கி அகத்துள் தவிக்கின்ற நித்தியத்தின்இருப்பைத் தேடிச் செல்கிறது.போராடுவதன் அழகில் புதைந்திருந்த இந்த நித்தியம் நினைவை வருத்தவில்லை!

எனக்காகச் சந்திக்கும் மரணத்தைத் துரத்திவிட்டு தூரவிலத்தும் இந்தவுணர்வு இதுவரை தொலைக்கப்பட்ட-விதைக்கப்பட்ட-விரையமாக்கப்பட்ட எல்லா வினைகளிலும் மரணம் மகத்தானதாக இருப்பு நோக்கும் அழகு போராடுவதெனக்கொண்டேன். அப்படி விலத்திப் போனவர்களை விதந்துருகுவதில் ஒளியைவிட வேகமாக நித்தியத்தின் வினையோடு நெருங்குகிறேன்.

நிழலாக நீண்டுவருதும்,தொடர்ந்து துணையாக இருப்பதும் நீ மட்டுந்தானே?; நினைக்கவே நெஞ்சைக் கனக்க வைக்கும் தேவனும்-நித்தியமும் நீயெனக்கொண்டேன்.நெருப்பில் வெந்துவிடும் ஒரு தூசுக்கும் நிகரற்ற "நான்"நொருங்கி வீழ்கிறது.

நல்லதெனக்கொண்டதும்- நஞ்செனப்படர்வதும்-உணர்வதும், மறந்தொதுக்க விரும்பும் நல்ல நிலையுள் மௌனித்துத் தியான வெளியை நெருங்கும்போது நெஞ்சில் போராட்டம் அழகாய்த் துள்ளி விளையாடுகிறது.

ஓடு,ஓடு!
தூரத்தே துரத்திவரும் துணைவனோடு தள்ளியே நிற்காதேயெனக் கட்டளையிட்ட காலத்துள் கண்ணீரை மட்டும் இனங்காணத் தவிக்காதேயெனச் சொல்லும் இந்த நிமிஷத்தில், என் உலகம் இருண்டுவிடாது ஒளி விரித்துப் பகலெனப் பகரும் உணர்வோடு விடை பெறுதல் எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகு நிறைந்தது போராடுவது.

அஃது, மரணத்தைத் துதிப்பதாகச் சொன்ன திசையிலிருந்து உலகை மீளப்படைதாகவும்,அதுள் என்னையும் இருத்துவதாகவும் கனவாக நீளும் நினைவுகள், நெஞ்சுக் கூட்டுக்குள் குஞ்சு பொரிக்கும் நித்தியமும்,தேவனும் போராட்மென்பதாய்... அது,நட்புக்கும்-தோழமைக்கும் உண்மையான தியானத்தைத் தேடித் துரத்தியபடியேதாம் எல்லாவற்றுள்ளும் நெருங்கிப் பார்க்கும் உண்மை நித்தியம், மறுத்தொதுக்கத் தக்கதா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.08.2010

Keine Kommentare: