இளையவர்கள் ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ பேசிக்கொள்வதாக இருந்துவிட்டேன்.ஆனால்,தமிழ்ச் சினிமாவில்இப்படியொரு பாட்டை தனூஸ் பாடுவதுபோல அமைத்திருப்பதென்றும்,மிகவும் மோசமாகத் தமிழைக் கொலை செய்து பாடல் கட்டப்பட்டிருப்பதென்பதும்,அப்பாடலானது ஒரு மில்லயன் தடவைகளுக்குமேல் கேட்கப் பட்டிருப்பதையும் இன்றுதாம் கண்ணுற்றேன்.
ஏலவே,ரகுமானின் வரவோடு,தமிழ்ப் பாடல்களில் அதிகமாகப் பிறமொழிக் கலப்பும்,அதுசார்ந்து கிளர்ச்சி வெறியூட்டும் இரைச்சல் வகைப்பட்ட ஒலியும் சினிமாவில் புதியதொரு செவிவழி நுகர்வு இசையை உருவாக்கியது.
மெல்லிசைச் சாரலில், நாட்டுப்புறத் தேமாங்கு பாடிய இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து "கொலைப்படாத" தமிழ் வார்த்தைகள் அதிகமாக ரகுமானால் கொல்லப்பட்டு வெறும் இரைச்சலாக செவிகளில் பட்டுத்தெறித்தன- 1990 களில் தமிழின் நிலை இதுவாக உருவாகியபோது,இன்று அதன் பரிணாமம் கொலைவெறிப் பாடலாக நம்மைத் தொடர்ந்து தாக்கி நமது மொழியைக் கொன்றுவிடும் அளவுக்கு வளர்ந்து விருட்ச மாகியுள்ளது!.இது கவனத்துக்குரியது.
கொலைவெறியோடு, புகுந்து விளையாடிய ரகுமான் காலத்தில் இசைப் புயலாவும் போய், நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றியபோது,அதை முன்னிலைப்படுத்திய சொனி நிறுவனம், அவரை ஓஸ்க்கார் விருதுபெற வைத்துச் சந்தையில் நிரந்தரமானவொரு நுகர்வுப் பொருளாக ரகுமானை மாற்றி வைத்திருக்கும் இன்றைய பொழுதில்தாம், இந்தக் கொலை வெறிப் பாடல்களெல்லாம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியிருக்கவேண்டும்.
இந்தத் திசையில், மக்களது கலையில் அதிகமான பல்வகை உணர்வுகளைத் தகவமைக்கும் நுண்கலை வடிவமானது நிரந்தரமாகவே,மொழியின் வார்த்தைகளைக் கொய்தெறியும் இரைச்சல் ஒலியாக எழுந்து,அதுவே பிரபலமான இசைப் பாணியானது.
இதன் உச்சம் இப்போது தனுஸ்கூட்டணியின் தலைமையில் கொலைவெறிப்பாடல்களாக வந்திருக்கிறது?.
இதை வார்த்தைகொண்டு,கவிஞர்கள் எதிர்த்திருப்பதை நேற்று வாசித்தேன்.தமிழில் மிக அழுத்தமாகத் எழுதத் தெரிந்தவர் கவிஞன் காசி ஆனந்தன்.
அவர்,இத்தகைய பாணியையும்,கவிதை-பாடல் எழுதும் போக்கையும் கண்டித்திருக்கிறார்.அதையும் மீறி ,மிகவும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பாடல் வழியாகவே-அவர்களது இசைப்பாணியிலேயே இந்தப் பாடல் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.
இது,எடுத்துப்போடும் வார்த்தைகள்-கேள்விகள் தார்மீக அடிப்படையில் ஒரு இனத்தின் மொழிமீதான எதிர்கால இருப்புக் குறித்த பார்வையில், அதிகமாக வரவேற்கத் தக்க நிலைப்பாடுகளை அது முன் வைக்கிறது.இரண்டையும் செய்திருப்பவர்கள் இளைஞர்கள் என்பதே இதன் கவனத்துக்கான முக்கிய புள்ளி.
ஒரு அணி : நிதிவலுவுள்ள தமிழ்நாட்டுத் தமிங்கிலீஸ் நடுத்தரவர்கத்துக் கோடம்பாகத்து இளைஞர்கூட்டம்,
மற்றய அணி : நிதிவலுவற்ற யாழ்ப்பாணத்து இளைஞர் குழாம்,
இதுள்,உலக நடப்பிலுள்ள நுகர்வுச் சந்தையில் பல கோடிகளைக் குவித்துள்ள பாரிய கெடுதி விளைவிக்கக்கூடிய தமிழ் நாட்டுச் சினிமாக் கூட்டத்தின் அதீத வலுவை,எந்தச் சந்தையோ அல்லது நிதிவலுவோ அற்ற யாழ் இளைஞர்களின் பாடல் எதிர்கொள்கிறது!
இந்த யாழ்ப்பாண இளைஞர்களின்பாடலுக்கு, நியாயமான கேள்வியும்,எதிர்காலம் குறித்த ஏக்கமுமே பக்கப்பலமாக இருக்கிறது.இந்த எதிர்ப்புக் குரல், தான் பேசிய மகிழும் மொழியின் நிலைக்காக பலமான வேண்டுதலொடு நம்மை அண்மிக்கிறது.நம்மை அழுதுவிடுமளவுக்குத் தாக்குகிறது-நியாயமாகக் கேள்வி கேட்டு உருகுகிறது.நாமும் உருகிப் போகிறோம்.அந்த மிருக வலுவுள்ள கோடம் பாகத்தை அவ்வளவு இலகுவில் வீழ்த்திவிட முடியுமா?அல்லது, மாற்றிவிட முடியுமா?சிறுதுளி பெரு வெள்ளமாகணும்-யாழ்ப்பாண இளைஞர்கள் முளை போட்டிருக்கிறார்கள்.அதுபோல் பல முளைகள் போடப்பட்டு அவை விருட்சமாகினால்மட்டுமேதாம் இந்தச் சினிமாத்தனமான அழிவுச் சந்தையைத் தோற்கடிக்க முடியும்.
தாய்மொழியென, நமது நினைவிலி மனதில் பதிந்த தமிழ் நமது இருப்பையும்,வாழ்வையும்,அதுசார்ந்த பண்பாட்டையும் நமக்கு உணர்த்தும் ஊடகமும்தாம்.அதுள் பல்வேறு பிற்போக்கு-முற்போக்குத்தனங்கள் எல்லா மொழிகழுக்குமுரியதைப்போல் உண்டுதாம்.என்றபோதும்,தத்தமது தாய்மொழி குறித்த எதிர்கால அவா,அதன் இருப்பு-நிலைப்பு,வளர்ச்சி குறித்த எண்ணத்துக்கொப்ப எதிர்காலக் கனவைக்கொண்டிருக்கும்.
அந்தக் கனவுமீது, தொடர்ந்து சினிமாத்தனத்தாலும்,வர்த்தக நோக்காலும் தமிழ் இனத்தின் இருப்பையே அசைக்கும் இந்த விபரீத இசையையும்-சினிமாவையும் விமரிசனத்துக்குட்படுத்துவதும்,அத்தகைய சினிமாவை நிராகரித்தும், மாற்றுச் சினிமாவின் அவசியமும் உணரப்பட இந்த யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சி ஏதுவாக இருக்கின்றது.
தமிழினத்தைப் பல முனைகளில் தாக்கும் வார்த்தகவுலகமானது தொடர்ந்து,தமிழினத்தின் அரசியலையும்,அதன் பாண்பாட்டு வடிவங்களையும் பல்வேறு ஆயுதங்களைக்கொண்டு தாக்கி அழித்துவருகிறது. அதுள்,இந்த ரகுமான் பாணி சினிமா இசைப்பாணியும், அதுசார்ந்தெழுதும் பாடல்களும் ஒருவித நச்சு ஆயுதமாகும்.
இந்த நச்சு ஆயுதத்தை எதிர்க்கும் யாழ்ப்பாண இளைஞர்களது கனவு பலிக்க வாழ்த்திக்கொள்வதென்பது,நமது ரசனையை நாம் திறம்பட அகலிக்க வேண்டுமென்பதும்,அந்த அகலிப்புள் இந்த நச்சு ரசனைக்கு மாற்றான நமது மண்சார்ந்தும்-நவீனப் புதுமை சார்ந்தும் மொழியைக் கொலை செய்யாத பாடல்களை உருவாக்கி இரசிப்பதற்கு மாற்றுச் சினிமாவை வளர்த்தாகவேண்டும்.
இதைவிட வேறு வழி இருக்க்க முடியுமா?
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2012
என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???
எழுத்து, இசை : எஸ்.ஜே.ஸ்ரலின்.
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா...
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்...
கம்பனின் வரிகள்...
வள்ளுவன் குறள்கள்...
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு...
பழமை பாடும்...
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா...? - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா
யேசுஇ புத்தன்இ
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு -- தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்...
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்...
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல -- அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா - தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா. ''