Sonntag, 21. April 2013

டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள்...

திரு. மனோக் கணேசன்மீதான தாக்குதலைக் கண்டிப்பதென்பது...


லங்கையானது சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை முற்று முழுதாக இழக்கும் அபாயத்தைக் கட்டியங் கூறும்  தாக்குதல்கள் ,சனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதன் தொடரில் பலதரப்பாக நடாத்தப்படுகிறது.பத்திரிகைகள்-மாற்று எண்ணங்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் உரிமைக்கான குரல்கள் மீதான தாக்குதலாக விரிகிறது, இது.

சமீபத்தில் உதயன் பத்திரிகைமீதான தாக்குதலுக்கு விளக்கமளித்த டக்ளஸ் தேவாந்த "உதயன் பத்திரிகைக் காரர்கள் அகதி அந்தஸ்துக் கோருவதற்காக இத்தகைய தாக்குதலைத் தாமே நடாத்துகின்றனர்"என்றார்.ஆக, இலங்கையிலிருந்து சனநாயகத்துக்கான குரல்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டியவொரு நிலையில் இருப்பதையும் ,அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதையும் அவர் ,குறிப்பாலுணர்த்துவதுவரை டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள் பலியாவதும் நடக்கவே போகிறது!


அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களுக்கான "மக்கள் மன்றங்கள்-அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் மீதான இத்தகைய தாக்குதலைக் கண்டிப்பதென்பது இலங்கை அரசின் இராணுவவாதத்துக்கெதிரானதென்பதைவிட ,மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்துள் மனோக் கணேசன் போன்றவர்களை இல்லாதாக்கும் முயற்சிக்கு எதிரானதென்று நாம் அறை கூவுவோம்!..




இலங்கையின் இன்றைய போக்கு மிகவும் வன்மம் நிறைந்தது.சட்டரீதியான அரசென்பது சட்டரீதியான  குடும்பச் சர்வதிகாரமாகவும், அதைத் தூக்கி நிறுத்தும் இராணுவக்  காட்டுத்  தார்ப்பாருமாச்சு.இது ,பாகிஸ்த்தானில் முஷ்ரப் போன்றே மகிந்தாவையும்-சீனாவினது தயவில் இயங்க அனுமதித்திருப்பினும் -இலங்கை அரசானது பெரும் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதென்பது  தமிழ்பேசும் மக்களைத் தோற்கடித்த பெருமிதத்தின் ஆட்சியாக இருப்பதால் -அது பலதரப்பட்ட முறையில் மக்களுக்கெதிரான திசையில் சட்டத்துக்குப் புறம்பானவொரு சர்வதிகாரியின் ஆட்சியாக முன்னேறுகிறது.

இஃது,படுமோசமான அரசியல் பின் விளைவுகளை மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தும்போது இலங்கையானது இராணுவச் சர்வதிகாரத் தலைமைக்குள் வீழ்ந்தே போயிருக்கும்.இத்தகைய இலங்கைக்கு வெளியிலிருந்து இந்தச் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து சட்டரீதியான ஆட்சியையும்,மக்களுக்கான அரசியல் கட்சிகளையும்,தலைமைகளையும் மீள, இயங்க வைப்பது மிக அவசியமானது.ஆனால்,இன்றைய உலகவொழுங்கில் இது, இல்லாதவொரு அரசியல் வெளியையே தாராளமயப் பொருளாதார வினை ஏற்படுத்தியுள்ளது.இங்கேதாம் பெரும்  தொழிற் சங்க வலுவுடைய தலைவர்கள் கூடத் தாக்கப்படுவதும்,அரசியலிலிருந்து தொலைத்துக் கட்டப்படுவதும் நடக்கிறது!

நாளை ,இதன் முனைப்பு,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்வரை பாய்ந்து அவர்களையெல்லாம் கொன்றே முடிக்கும்.இதுதாம்,இத்தகைய இயக்கவாதிகளால் முண்டுகொடுக்கப்பட்ட குடும்பச் சர்வதிகாரத்தின் தலைவிதி.இதன் பின்னே பெரும் வலுவுடையவொரு இராணுவம் முன்னைய இலங்கைக்குள் நிலவாத வலுவுடன் ஒரு சர்வதிகாரக் குடும்பத்தையும்,அவர்களது கட்சியாதிக்கத்தையும் காக்கிறது.இது,அரச முதலாளியத்தைக் குடும்பச் சொத்தாக்கியதிலிருந்து ஆயுதம் தாங்கியவொரு குழுவினது கையில் இலங்கையின் அனைத்து அதிகாரமும்-பொருளாதார முனைப்புகளும் குவிந்து போயுள்ளதென்பதையும் நாம் உணரவேண்டும்.


ப.வி.ஶ்ரீரங்கன்
21.04.2013