Sonntag, 4. Februar 2007

இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும்


இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும் -


மறைந்த அறிஞர் எட்வர்ட் சய்த் அவர்களின் முக்கிய நூற்களில் ஒன்று "இஸ்லாமை எழுதுதல்" (Covering Islam). இஸ்லாத்தையும், அது தொடர்பான கலாச்சாரப் பிரச்னைகளையும், முஸ்லிம்களின் அரசியலையும் மேலை ஊடகங்கள் தொடர்ந்து எவ்வாறு எழுதி வந்துள்ளன, சித்திரித்து வந்துள்ளன என்பது பற்றிய ஒரு ஆய்வு அது. ஏராளமான சமகால ஆதாரங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் மேலைக் கருத்தியலில் உள்ளார்ந்து படிந்துள்ள இஸ்லாமிய வெறுப்பை அவர் நிறுவியிருப்பார்.


இஸ்லாத்தைத் திரித்து எழுதுதல் என்பது இன்றைய, நேற்றைய பிரச்னை அல்ல. கடந்த 1200 ஆண்டு கால வரலாற்றில் ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். இது குறித்து நான் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளேன். (பார்க்க : நான் புரிந்து கொண்ட நபிகள், பக்கம். 21 30; மற்றும் "இந்துத்துவ வரையறையில் ஆண்மையும் பெண்மையும்' என்னும் கட்டுரை) இன்னும் ஒருமுறை அவற்றை எழுதி இதை வாசிக்கும் முஸ்லிம் சகோதரர்களின் உள்ளத்தைப் புண்படுத்த விரும்பவில்லை.


முஸ்லிம் உள்ளங்கள் மட்டுமல்ல, மனிதப்பண்புள்ள, கலாச்சாரப் பன்மைத்துவத்தை ஏற்கிற சனநாயக உள்ளங்கள் அனைத்துமே வேதனைப்படுகிற, கண்டிக்கவேண்டிய விஷயம் இது. மேலைக் கலாச்சாரத்தின் இந்த ஆணவப்போக்கின் ஓரம்சம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏதோ முஸ்லிம் வெறுப்பாளர்களும், கிறிஸ்தவ மதவெறியர்களுமே இப்படி இஸ்லாத்தை இழிவு செய்தார்கள் என்பதல்ல. பல துறைகளில் நேர்மையான பங்களிப்புகளைச் செய்த கவிஞர்கள் (தாந்தே, மில்ட்டன்), வரலாற்றாசிரி யர்கள் (கிப்பன்), எழுத்தாளர்கள் (வால்டேய்ர்), தத்துவவாதிகள் (கான்ட்) எனப் பலரும் இஸ்லாத்தைப் பற்றியும் இறைத்தூதர் முஹம்மத் பற்றியும் இழிவாகவும், தவறாகவும் எழுதியுள்ளனர்.

இதற்கு இரு காரணங்களைச் சொல்ல இயலும். 1. இஸ்லாம் குறித்த அறியாமை. 2. மேலை நாகரிகத்தின் இருப்பையே அச்சுறுத்த வந்த ஒன்றாக இஸ்லாத்தைப் பார்த்தமை. இஸ்லாம் குறித்த அறியாமை என்பதை நாம் அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. தத்தம் துறைகளில் மிகப் பெரிய சாதனை புரிந்த இந்த அறிஞர் பெருமக்கள் தமக்கு மிக நெருக்கமாக உள்ள ஒரு பண்பாட்டையும், மதத்தையும் குறித்து அறியாதிருந்ததை ஒரு பொறுப்பான செயலாக நாம் கருதி விட முடியாது.


கிரேக்கத்தத்துவங்களும் பல முக்கிய அறிவியற்கண்டுபிடிப்புகளும், வரலாற்றுக் குறிப்புகளும், பயண அனுபவங்களும் இஸ்லாம் மூலமாகவும், முஸ்லிம் அறிஞர்கள் மூலமாகவுமே மேலைச் சமூகத்திற்குக் கையளிக்கப்பட்டன என்பதை அறியாதவர்களா இவர்கள்?

மேலை அறிவுத்துறை (Western Scholarship) முஸ்லிம்களின் பங்களிப்பை அங்கீகரித்தது இல்லை. 5000 பக்கங்களில் எழுதப்பட்டுள்ள கேம்ப்ரிட்ஜ் மத்திய கால வரலாற்றில் ஸ்பெய்னின் அராபிய நாகரிகத்திற்கு வெறும் 50 பக்கங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற மூன்றாம் அப்துர் ரஹ்மான் போன்ற ஆட்சியாளர்களைப் பற்றி பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் முதலியன ஒப்பீட்டளவில் எவ்வளவு குறைவாகப் பேசுகின்றன என்பதையும் நாம் கவனித்திருக்க இயலாது. கணிதம், அறிவியல் துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பைப் பாடநூற்கள் மறைப்பதோடு தவிர்க்க இயலாமல் சில பெயர்களைக் குறிக்க நேரும்போது அவற்றின் இஸ்லாமிய அடையாளத்தை அழித்து ஒலிபெயர்ப்புச் செய்வதையும் நாம் இங்கே சுட்டிக்காட்டாதிருக்க முடியவில்லை. (எ.டு. : இப்ன் ரஷீத் அவரோஸ், இப்ன் சினா அவிசீனா; அல் மய்மூன் மேமோனிட்ஸ்; இப்ன் இஷாக் ஜோனீ ஷியஸ்; அர்ராஸீ ரேஸஸ்; அல்ஹேதாம் அல்ஹேஸின்).


இரண்டாவது காரணம் இஸ்லாம் குறித்த அச்சம் என்றேன். இத்தகைய அச்சத்தை அவர்கள் இந்து, பவுத்தம், கன்பூசியஸ் மதம் போன்றவற்றின் மீது கொண்டிருக்கவில்லை. இவை அருளப்பட்ட மதங்களில் ஒன்று (செமிடிக்) அல்ல என்பது மட்டும் இதற்குக் காரணமில்லை. புவியியல் ரீதியில் தொலைவாகவும், பலவீனமாகவும் இருந்த இவற்றைத் தமது இருப்பிற்கு அச்சுறுத்தலாக மேலைக் கலாச்சாரம் கருதவில்லை.
துருக்கி, ஸ்பெயின் வரை தனது ஆளுகையை விரிவாக்கிய இஸ்லாத்தைக் கண்டு அவர்கள் பெரிதும் அஞ்சினர். இஸ்லாத்தின் மீதான இந்த அச்சத்தின் இன்னொரு பக்கம் இறைத்தூதர் முஹம்மதின் மீதான வெறுப்பாக அமைந்தது. "எதிர் கிறிஸ்துவாக' அவரை வரலாறு முழுவதும் இழிவு செய்து வந்தது.

நபிகள் நாயகத்தை இரண்டு அம்சங்களில் அவர்கள் வசை பாடி வந்தனர்.


1. தன்னை இறைத்தூதர் எனவும் திருக்குர்ஆன் எனும் இறைவாக்குகள் தனக்கூடாக இறங்கியது எனவும் மக்களை ஏமாற்றி வந்தவர் (Impostar )


2. பாலியல் வக்கிரங்கள் உள்ளவர், குழந்தைகளைத் திருமணம் செய்து கொண்டவர் (Paedo-phile), (முஸ்லிம் சகோதரர்கள் என்னை மன்னியுங்கள்).


3. "ஜில்லன்ட்ஸ் போஸ்டன்' இதழ் வெளி யிட்டுள்ள இன்றைய கார்ட்டூன்கள் மூன்றாவது பரிமாணம் ஒன்றை முஹம்மத் நபிகள் மீது சுமத்தி இழிவு செய்கின்றன. அது : "பயங்கரவாதி' ( Terrorist) எனும் பிம்பம்.

மொத்தமுள்ள 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நாயகத்தைப் பயங்கரவாதியாய்ச் சித்திரிக்கின்றன. இன்னொரு படம் அவரைப் பாலியல் வாதியாய்ச் சித்திரிக்கிறது. அசப்பில் ஒஸாமா பின்லேடன் போன்ற தோற்றம் உடையவராய் அவர் காட்டப்படுகிறார். இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் கட்டுகிற முண்டாசு போன்ற தலைப்பாகை புகைந்து கொண்டுள்ள ஒரு வெடிகுண்டாகச் சித்திரிக்கப்பட்டுள்ள படம் யாரையும் கோபம் கொள்ளச் செய்யும்.
கடும் எதிர்ப்பிற்குப் பின் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட டென்மார்க் இதழ் தனது வலைத்தளத்திலிருந்து அப்படங்களை நீக்கிக் கொண்டன என்ற போதிலும் இன்னும் பல வலைத்தளங்களில் அவை காணப்படவே செய்கின்றன. ஏக இறைவனையும் இறுதி இறைத்தூதரையும் (எல்லா இறைத் தூதர்களையும்தான்) உருவடிவில் சித்திரிக்கக் கூடாது என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. எனினும் அவ்வாறான சில சித்திரிப்புகளை முஸ்லிம்கள் இதுவரை சகித்து வந்துள்ளனர்.

துருக்கி மற்றும் ஈரானியச் சிற்றோவியங்களில் (Miniatures) இத்தகைய சித்திரிப்புகள் உண்டு. அமெரிக்கப் பொது நிலையங்கள் சிலவற்றிலும் நபிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க உச்சநீதி மன்றக் கட்டிடத்தில் வரலாற்றில் வாழ்ந்த 18 சட்ட உருவாக்கிகளின் உருவங்கள் சலவைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நபிகளுடையது.


"அமெரிக்க இஸ்லாமிய உறவுக் குழு' (Council on American Islamic Relations) எனும் அமைப்பு இது தொடர்பாக இதுவரை தெரிவித்துள்ள எதிர்ப்புகளை அமெரிக்க அரசு புறக்கணித்து வந்துள்ளது. டென்மார்க் கார்ட்டூன்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களின் பின்னணியில் இன்று இக்கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. கார்ட்டூன்களைக் கண்டித்துள்ள புஷ் அரசு இக்கோரிக்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனினும் இன்றைய சித்திரிப்புகளுக்கு இப்படியான ஒரு உலகளாவிய எதிர்ப்பு தோன்றியதற்கு என்ன காரணம்? சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.1. இன்றைய சூழல் இதில் முதற்பங்கு வகிக்கிறது. செப்டம்பர் 11க்குப் பின் முஸ்லிம் நாடுகள் மீதும், இஸ்லாமியக் கலாச்சாரத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் மேற்குலகத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அயலுறவுக் கொள்கைகளிலும் மனித உறவுச் செயற்பாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சாதாரண பண்புகளை எல்லாம் இன்று மேலை அரசுகள், குறிப்பாக அமெரிக்கா கைவிட்டுள்ளது. தெருச்சண்டைகளில் பேசப்படுகிற சொற்களின் தரத்தில் புஷ், பிளேயர், கோண்ட லிசா ரீஸ் போன்றோரால் முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளும் வசை பாடப்படுகின்றனர்.


"இரண்டாம் சிலுவைப் போர், "ரவுடி நாடுகள்' (Rogue States) "தீமையின் அச்சு' (Axis of Evil) என்றெல்லாம் முஸ்லிம் நாடுகளைப் பற்றிப் புஷ் குறிப்பிட்டுள்ளதோடு நிற்கவில்லை. ""தீய, கொடூரமான மதம்'' ( Evil and Wicked Religion) எனவும் அவர் இஸ் லாத்தைக் குறிப்பிட்டார். டென்மார்க் இதழுக்கும் அமெரிக்க அரசுக்குமுள்ள தொடர்பையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.


இவ்விதழின் கலைத்துறை ஆசிரியர் ஃபிளமிங்ரோஸ் என்பவர் புஷ்சுக்கு நெருக்கமானவரும் இஸ்ரேலிய ஆதரவாளருமான டேனியல் பைப்ளின் அழைப்பின் பேரில் சென்ற ஆண்டு விருந்தினராக வாஷிங்டன் வந்து போனவர். ஆப்கன் மற்றும் ஈராக் ஆக்ரமிப்புகளில் அமெரிக்காவை முழுமையாக ஆத ரிக்கும் நாடுகளில் ஒன்று டென்மார்க்.2. இன்றைய பின்னணி : ஆப்கன், ஈராக்கிற்கு அடுத்தபடியாக ஈரானைக் குறி வைத்து மேலைநாடுகள் இயங்கும் நிலை. பலஸ்தீனத்தில் ஹமாஸ் வெற்றியை ஏற்க மறுக்கும் அவர்களின் போக்கு.3. கேலிச் சித்திரங்களின் வெளியீட்டை ஒட்டித் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்களில் வெளிப்படும் மேலைத்திமிர். டென்மார்க் அளவில் முதலில் தொடங்கிய எதிர்ப்பை அந்நாட்டை ஆண்ட வலதுசாரி அரசு புறக்கணித்தது. கண்டனத்தைத் தெரிவிக்க வந்த அரபு நாடுகளின் தூதுக் குழுவை டென்மார்க் பிரதமர் சந்திக்க மறுத்தார். உலக அளவில் போராட்டங்கள் வலுப்பட்டவுடன் டென்மார்க் இதழ் மன்னிப்புக் கேட்ட போதிலும் அதற்கு ""ஆதரவாக'' என அறிவித்து ஐரோப்பா முழுவதிலும் பல இதழ்கள் அக்கேலிச் சித்திரங்களை மீண்டும் வெளியிட்டமை.

இவை முஸ்லிம்களை ஆத்திரங் கொள்ளச்செய்ததின் நியாயத்தை யார் தான் மறுக்க இயலும்? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலக மய நடவடிக்கைகளுக்குள் நாம் எல்லோரும் ஆட்பட்டுள்ளோம். உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது என்பது முற்றிலும் பொருளற்ற வாசகமல்ல. எந்தப் பிரச்னையும் இனி "Local'' பிரச்னையாக தல அளவில் சுருங்கிவிட வாய்ப்பில்லை. இன்டர்நெட், செல் ஃபோன், SMS, என உலகம் எலெக்ட்ரானிக் வலைப் பின்னல்களின் (Networks) தொகுதியாக மாறி விட்டது. நாடுகள் மட்டுமன்று, பல்வேறு சமூகங்களும் இன்று வலைப் பின்னல் களால் நெருக்கமடைந்துள்ளன.


வலைப்பின்னல்களால் நெருக்கமும் வலிமையுமடைந்த சமூகங்களில் ஒன்றாகவே இன்று நாம் முஸ்லிம் சமூகத்தைக் காண்கிறோம். கலாச்சாரம், மொழி, இனம், மதவழி மரபு (ஷியா / சுன்னி) எனப் பலவாறும் வேறுபட்டுள்ள முஸ்லிம் சமூகங்களின் பன்மைத் தன்மைக்கு அப்பால் "முஸ்லிம்' என்கிற அடையாளம் உலகளாவிய வலைப்பின்னலாக உருப்பெற்றது வரலாறு பூராவிலும் உள்ள ஒரு நிலைதான் எனினும் முஸ்லிம் இடப்பெயர்வு (Migration), தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன இன்றைய வலைப்பின்னலை மிகவும் நெருக்கமாகவும் வலிமையாகவும் ஆக்கியுள்ளன.


மக்காவை நோக்கிய கிப்லா, இறைக் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ், இஸ்லாமியச் சட்டத்தின் (ஷரீஅத்) மீது நம்பிக்கை கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட லட்சிய சமூக அமைப்பு, முஹம்மத் என்கிற இறுதி இறைத்தூதர் மீது கொண்டுள்ள அன்பு / நம்பிக்கை ஆகியனவே இவ்வலைப்பின்னலின் ஆதாரக் கூறுகள். அச்சு ஊடகத்தின் தோற்றம் இந்த அடிப்படைகள் வலுப்பெறுவதற்கு உதவியதையும் இவற்றின் அடிப் படையிலான நாடு தழுவிய / உலகு தழுவிய ஒரு அறவியற் சமூகமாக (Moral Community) தல அளவிலான தனித்துவங்களையும், வேறுபாடு களையும் தாண்டிய "உம்மா'வாக முஸ்லிம் சமூகம் உருப்பெற்றதை யும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்ற னர். (பார்க்க : Muslim Networks, (ed) Miriam Cooke & Bruc B. Lawrence)


இன்றைய எலக்ட்ரானிக் வலைப்பின்னல் உம்மாவை மேலும் நெருக்கமாக்கியுள்ளதன் ஒரு வெளிப்படையாகவே கார்ட்டூன்களுக்கான உலகளாவிய எதிர்ப்பை நாம் காணவேண்டியுள்ளது. (மேற்குறிப்பிட்ட நூலில் உள்ள சாமி அலிமீன் கட்டுரையைக் காண்க.) இன்றைய எதிர்ப்புகளில் வெளிப்படும் முஸ்லிம் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. உலகளாவிய இந்த எதிர்ப்பின் Local கூறுகளும் கவனிக்கத்தக்கன. ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் காட்டும் எதிர்ப்பிற்கும் முஸ்லிம் நாடுகளில் உருவாகியுள்ள எதிர்ப்பிற்குமுள்ள ஒரு வேறுபாட்டை மஹ்மூத் மம்தானி சுட்டிக் காட்டுகிறார்.


இன்றைய நவபாசிசம், முஸ்லிம் எதிர்ப்பு என்கிற வடிவில் உருப்பெறுகிறது. கிட்டத்தட்ட எல்லா மேலை அரசுகளும் முஸ்லிம் எதிர்ப்புடன் புதிய Immigration சட்டங்களையும், ஹிஜாப் அணிதல் போன்றவற்றைத் தடை செய்யும் ஆணைகளையும் இட்டுக் நம்பிக்கையை வரலாற்று ரீதியில் தவறானது எனச் சொல்வதோ, பல இறைக் கொள்கை அல்லது ஓரிறைக் கொள்கை குறித்து விவாதிப்பதோ கூடாது எனச்சொல்ல இயலாது.

முன்னாள் அடர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி சொல்வது போல இதன் பொருள் அம்மதத்தை உருவாக்கியவரையோ, அதன் இறைத்தூதராக நம்பப்படுபவரையோ இழிவு செய்ய அனுமதி உண்டு என்பதல்ல. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் " Blasphemy" US"க்கு நியாயம் கற்பிப்பதை ஏற்க முடியாது. மதநம்பிக்கைகள் குறித்த விவாதங்களும் மதத்தைத் தோற்றுவித்தவர் / இறைத்தூதர் பற்றி இழிவு செய்தலும் ஒன்றாகாது.


வழக்கம் போல முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்தே மாற்றுக் குரல்களும் ஒலிக்கவே செய்கின்றன. தன்னை இழிவு செய்தவர்களை எல்லாம் மன்னித்த முஹம்மத் நபிகளைப் போல நாமும் நடந்து கொள்வோம். போராட்டங்கள் எல்லை மீற வேண்டாம். இழிவு செய்தவர்களை எதிர்ப்பது என்கிற பெயரில் சம்பந்தமில்லாதவர்கள் வன்முறைக்கு ஆளாவதை அனுமதிக்க முடியாது. போராட்டம் நியாயமானதே. ஆனால் அது அப்பாவிகள் மீதான வன்முறையாக மாற வேண்டாம் என்ற கருத்தை "மில்லி கெஸட்' போன்ற இதழ்களும் கூட ஒலிப்பதை (பிப்ரவரி 16 28, 2006) இங்கே சுட்டிக் காட்டுவது அவசியம்.


அ. மார்க்ஸ்( Prof. Dr. A. Marx)

அ. மார்க்ஸ் (நன்றி: சமரசம்-தூ)

Kommentare:

Anonym hat gesagt…

hi..
I searched Jews in wikipedia.com..result came and there on the right hand side you can see very famous jews..but this was not in case of any other religion(i searched that also). i dont no why this....????????????
http://en.wikipedia.org/wiki/Jews

சல்மான் hat gesagt…

Thanks for this post.
Constructive Effort!!

சுல்தான் hat gesagt…

திரு மார்க்ஸ் அவர்கள், இது போன்ற பல கட்டுரைகள் மூலம் உண்மையை வெளிப்படுத்துவது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

எடுத்து இட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நிர்மாணம் hat gesagt…

கருத்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பேராசிரியர் திரு.அ.மார்க்ஸ் அவர்களின் ஆக்கங்கள் பெரும்பாலும் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான எழுத்துக்களாக வருவது.

அவர் தன்வரையில் ஒரு மனிதாபிமானச் செயற்பாட்டாளர்.


அவர் எழுதிய பொருளாதார மதிப்பீடுகள்,தமிழகத்துக்கான-இந்தியாவுக்கான பொருளாதாரக் கட்டமைவுகள் யாவும் மிகச் சிறந்த ஆய்வுகள்.
அதைச் செயற்படுத்தும் புரட்சிகரமான கட்சிதான் நம்மிடம் இல்லை.


இன்றுவரை அவரது எழுத்துக்களே விளிம்பு மக்களின் அறிவுப் பேராயுதமாக இருக்கிறது.


அவருடைய ஆக்கங்கள் பரவலாக வெளி வரும்.


நன்றி.