கிழக்கின்
சுயநிர்ணயம்
கொட்டும் கோடிகள்!
கேட்பாரின்றிக் கேணிகள்
விதைப்பாரின்றிக் காடாய் வயற்பரப்புகள்
வாத்தியாரின்றிப் பள்ளிகள்
வாழ்விழந்த ஏசு குருசு மரத்தில் தொங்கியபடி
தமிழ் தனித்தபடி தேசத்துள் விடுதலை தேடி...
எண்ணப்பட்ட தலைகளின் சரிவில்
மாவீரர் தினங்கள் வந்து போகும்
குருதிச் சேறு அப்பிய குழந்தை முகங்கள்
கொல்வதற்கேற்ற கூட்டுப் பிராத்தனை
தனித்த தேசம் சுய நிர்ணயம் தமிழீழம்!
பயங்கரவாதக் கதைப் புனைவில்
காலத்தை ஓட்டும் சிங்களக் கொடும் யுத்தம்
எக் காலத்துக்குமானவொரு தேசக் கதாநாயகர்
இவர்களுள் கையூட்டுப் பெற்றவர்களின்
பிரதேசக் கதாகலாட்ஷேபம்
காரியத்து மூளைக்குக் கதைக்க
ஒரு வடபகுதியும்,வன்னியும்
வாழ்விழந்தாகச் சொல்லவொரு கிழக்கும்
பெரும் பசைகள் வலுக்க வந்தது
இலண்டனுக்கும் பாரீசுக்கும்?
ஆரூ கண்டார்?
ஆட்களைக் கடத்தியவர்களுக்கு
நோட்டுக்களைக் கடத்தவா சுணக்கம்?
சும்மா சொல்லக் கூடாது
சுகமாய் இருக்க மக்களின் சோகம்
சொல்லிக் கொள்ளப்"புலிகளின்" அராஜகம்
வடக்கின் மேலாதிக்கம்!!
வண்டு திசை பார்த்துப் பூவொன்றில்
வயலும் வரப்பும் வாழ்வளித்த குறுங் குடில்
கிராமத்துக் குறுவாழ்வில்
குலைந்த சோகம்!
தெருவில் பொதியேந்தி
பொழுது படுவதற்குள் திரும்பும்
உழைத்தோய்ந்த முகங்கள்
சுழற்காற்றில் அள்ளப்பட்டது தெருவும்
தேசங்கொண்ட மனங்களும்
எங்கள் தெருவில் நாண்டுநிற்கும் நாவல்மரம்
எப்போதோ அழிந்தொதுங்கிய
நெட்டூரப்பொழுதின் வரவில்
வாழ்விழந்த மாதாவும் மெளனிக்க
இருப்பழியும் கரும் பொழுதொன்றில்
குருசு மரத்தடியில் சரியும் என்னுடலுக்கு
சாவு வந்ததாய்ச் சொல்வதற்கேனும்
என் கிராமத்தில் மனிதருண்டா?
இது"தமிழீழம்"கோசம் செய்த மோசம்?
நான் கனவுதரித்த கிராமம்
தின்னக் கொடுத்து வைக்காத உறவுகள்
பெருநாள் பொழுதொன்றில்
பெயர்த்தெறியப்பட்ட கிராமத்து இருப்பு
கருமேகம் பொழிய
காதல் வயலும் கதிர் முறிக்க
கால் வயிறு நிறைப்பாள் அன்னை
களித்திருப்போம் கஞ்சியில்
எனினும்,
கைக்கூலியாய் இருந்ததில்லைக்
களவும் செய்ததில்லை!
கோழித் "திருடனும்",
வாழைக் குலைக் "கள்ளனும்"
வாழ்வை விளக்குக் கம்பத்தில் தொலைக்கக்
கொலைஞர்கள் கூடிக் குலாவ
கோவணம் நிறைந்த கோடிகள்!
கொடுமை!
கொல்லைப் புறத்தில்
கன்னக் கோல் கொடும் பொழுதில்
கொலைகளை எண்ணக் கொம்யூட்டர்
"கிழக்கின் சுயநிர்ணயம்"
வழங்கும் வங்கிகள் நிறைய...
இப்போதெல்லாம் கிராமம் பட்ணத்தில்
சில்லறை கேட்டுத் தெருவில் தனித்தபடி
குற்றுயிர்கொண்ட குக் கிராமத்துத் திட நெஞ்சு
கூடின்றிக் குலையும்
வன்னியிலும்
பாரிசிலும் இலண்டனிலும்
குருதிதோய்ந்த வலுக்கரங்கள்
வட்டியில் வயிறு வளர்க்கும்
வாழ்விழந்தது வடக்கும் கிழக்கும்.
நிர்மாணம்.
24.11.2007
Sonntag, 25. November 2007
Abonnieren
Kommentare zum Post (Atom)
4 Kommentare:
கிழக்கின் துயரம் சொன்னீர் - நன்றி
கிழக்கின் குரலாய் அதிரடியாய் இன்னும் பலவாய்
உதித்தவருக்கெல்லாம் சலாம் போடச்சொன்னவரும் - நீர்தான்
அவர் மக்கள் புலியாய் உருமாறிய போது
மெய்சிலிர்க்க நின்றவரும் நீர்தான்.
எங்கள் கண்ணீரை டாலராய்($) மாற்றவே
உங்கள் கிழக்கு அரசியல் எல்லாம்.
திருவிழா கடைவிரிப்பவருக்கும் உங்களுக்கும்
பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை எங்களுக்கு.
சத்தியமாய் சொல்லுகிறேன்.
இப்போதெல்லாம் நாங்கள் இரவில் கூடுதலாய்
பயப்படுவது இராணுவதிற்க்கல்ல
எங்கள் மீட்பர் என நீங்கள்
கொண்டாடிய அந்த கிழக்கின் குரல்களுக்கே.
என் பிள்ளை அகதி முகாமே வாழ்வாகி கிடக்கிறான்
பருவதிற்கொரு தலைவர் ,பருவதிற்கொரு கட்சி
அவருக்கு சேவகம் செய்யவும், காவல் செய்யவும்
நாங்கள் பிள்ளை பெற்றுக்கொடுக்கிறோம்.
மூத்தவன் மாவீரர் பட்டியலில் ,
இளையவன் காணாமல் போனோர் பட்டியலில்
இரண்டையும் சுமந்த என் மனைவி
நடை பிணமாய் அகதிமுகாமில்.
உங்களின் வயிற்று பிழைப்புக்காய்
எங்களில் அரசியல் நடத்தாதீர்!
நாங்கள் தெளிவாய் உள்ளோம்
எதிரி யார்! நண்பன் யார்!
நிர்மாணம்,
இந்த கவிதை புரிஞ்சிச்சி. நல்லது.
கூடிய சீக்கிரத்துல போர் முடியும். முடிவில் அமையவிருப்பது, அனைத்து இனத்தவருக்கும், மொழியினருக்கும், சமயத்தவருக்குமான சமனிலை உரிமைகளை உறுதிசெய்யும் புதிய இலங்கை. அவ்வாறு அமைந்தவுடன், புதிய பாடப்புத்தகங்களில் உங்கள் கவிதகள் (எதெதெல்லாம் புரிகிற மாதிரி இருக்குதோ அவைகளெல்லாம்) இடம்பெற வழிவகை செய்யப்படும்.
தொடர்ந்து புரிகிறமாதிரி எழுதவும்.
//கிழக்கின் குரலாய் அதிரடியாய் இன்னும் பலவாய்
உதித்தவருக்கெல்லாம் சலாம் போடச்சொன்னவரும் - நீர்தான்
அவர் மக்கள் புலியாய் உருமாறிய போது
மெய்சிலிர்க்க நின்றவரும் நீர்தான்.//
The topics of this Blog bring the together the inhuman world of Sri Lanka and Eelam,soil,and landforms;the world of plants and animals;the world of archaeology;and the world of historical war documents.
A treasure of books(Blogs)is almost like a spiritual tree,that goes on living and offering his fruits year after year and to generation after generation.
//உங்களின் வயிற்று பிழைப்புக்காய்
எங்களில் அரசியல் நடத்தாதீர்!
நாங்கள் தெளிவாய் உள்ளோம்
எதிரி யார்! நண்பன் யார்!//
".............."
:-(((
regards
Nirmanam
//கூடிய சீக்கிரத்துல போர் முடியும். முடிவில் அமையவிருப்பது, அனைத்து இனத்தவருக்கும், மொழியினருக்கும், சமயத்தவருக்குமான சமனிலை உரிமைகளை உறுதிசெய்யும் புதிய இலங்கை. அவ்வாறு அமைந்தவுடன், புதிய பாடப்புத்தகங்களில் உங்கள் கவிதகள் (எதெதெல்லாம் புரிகிற மாதிரி இருக்குதோ அவைகளெல்லாம்) இடம்பெற வழிவகை செய்யப்படும். //
போரோய்ந்து மக்கள் தம் வாழ்வைத் துய்த்து அமைதி பெறுவதென்பது எவ்வளவு அழகானவுணர்வு!அதைத்தானே நாமும் விரும்புகிறோம்.அந்தப் புது இலங்கையில் எமது படைப்புகள் இடம்பெறத் தேவையில்லை.ஏனெனில், மக்கள் தம் சுயவாற்றலால் அழகானவொரு படைப்பைச் செய்திருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் அதுவே வரலாற்றுப் பெறுமானமுடைய படைப்பாற்றலாகும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Kommentar veröffentlichen