உணர்வுக்குள் உந்தும்
ஒரு இருளடைப் பொழுது
ஏற்றமென்றெண்ணும் கணத்தில்
இறக்கம் பிடரியில் தொட்டு
காணத்தக்க மாமனிதர் மரித்த கதைசொல்லி
மௌனித்துவிடும் இதயம்
இயங்க மறுக்கும் மொழியோடு
உணர்வைக் கொட்டிவிடவும் முடிவதில்லை
மெல்லத் தொடும் ஞாபகத்தின் முதுகில் சுமைகளை ஏற்றி
இதயத்தின் அழுகையைக் கோர்வை செய்வதைத்தவிர
வேறென்ன நம்மால் முடியும்?
எத்தனையோ பொழுதுகளில்
எங்கள் பரா இனித்திருந்தார்!
எப்படியிவர் சொல்லாத பொழுதொன்றில்
தனித்தே ஒதுங்கினார்?
கூடியிருப்பதிலும்
குறைகாணாதிருப்பதிலும் பெருவகமுடையவரோ
பிள்ளைகள் எமைப் பிரிந்தே சென்றார்?
சொல்வதற்கரிய செயற்பாட்டின் பெரும் வினை
மிகநேர்த்தியுற்ற நெறியின் சுவடு
செல்லப் புன்னகையின் குடில்
சோர்ந்தே போகாத இதயம்
சொல்லினிமை மிகு பேச்சாளன்
தோன்றிய தினத்துள் இருப்பிழந்தான்!
மடிதனில் உருளும் மழலைகளாய்
மனிதரின் அகத்தைப் புரிந்தவர் நாம்
மங்காத குரலும்
மடைதிறந்த அருவியுமான வார்த்தைகள் ஒதுங்க
மௌனித்துவிட்ட மாஸ்ரர் மக்கள் போராளியேதான்!
மகிழத்தக்க மனிதருள்
இனித்தே உறவுற்று செல்லக் கரம் தோள்களில் விரிய
சேதி கேட்டுச் சுகம் விசாரித்த
சுகதேவன் சுதந்திரமாய்ப் போனான்!
நிர்மாணம்.
21.12.2007
Keine Kommentare:
Kommentar veröffentlichen