Dienstag, 25. Dezember 2007

கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்

கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்


சுவே உன் பிறப்பையும்
இன்னுமொருமுறை கொண்டாடியாச்சு
இருந்தும்
கொடு வாழ்வு நமக்குப்
போனதாகத் தெரியாதிருக்கும்
இந்த நடுநிசிப் பொழுதில்
உம்மைச் சிலுவையில் அறைந்த அதே கரங்கள்
எம்மையும் சிலுவையில் அறைய
எவரும் விழி திறவார்-நீயுந்தான்!


நீ கொடுத்து வைத்தவன்
ஈராயிரமாண்டுகளாய் உன் இறப்புப் பிறப்புப் பேசப்படுகிறது
எங்கள் அழிவும் உன்னைப் போன்றதே
எனினும்
எவருக்கும் உணர்வு முளைக்கவில்லை
எல்லோரும் ஏறி மிதித்க
எங்கள் தேசம் எருசலேம் ஆகிறது


முசுக்கொட்டைச் செடிகளின் நுனியிலே
செல்லும் இரைச்சலைக் கேட்கும் போதே
சீக்கிரமாய் எழுந்து போகவும்
கர்த்தர் எமக்கு முன்பாக
எமது எதிரியை முறியடிக்கப் புறப்பட்டதாகவும் சொன்னாய்


எமக்குள் நடப்பதோ வேறு!
பற்றைக்குள் மறைந்தவர் மறைந்தவரே கர்த்தரே
படும் துன்பம் அப்பாவிகளுக்கே
நீயோ வானத்தில் மெளனித்தபடி
கர்த்தரின் கணகணப்பில்


நானோ அன்னையத் தொலைத்தவன்
சுற்றஞ் சுகம் தொலைத்தவன்
என் பரலோகத்தில் இருக்கும் பிதாவே,
என் தேசத்தின் பிதாவுக்கு
தேவையான ஆட்பலத்தையும்
பொருட்பலத்தையும் நாம் இட்டும்
தேசம் விடியுந்தரணம் எங்கோ தொலைந்து
தறிகெட்டலைகிறது!


எமக்காக நீயேன் முன் சென்று
எதிரிகளை நிர்மூலமாக்க முடியாது?
பைபிளிலோ
குரானிலோ அல்லது கீதையிலோ
கிடப்பதெல்லாம் யுத்தம் பற்றியதுதானே?


எல்லா மனிதரையும்
அன்பால் அணைக்க நாங்கள் புத்தரில்லையே?
நீயும் அப்படியே
பிறகேன் தயக்கம் பிதாவே?


மெல்லத் துரத்தும் எல்லை
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில் நாம்!


முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும் உழைச்சல்


கோலமிட்ட முற்றம்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
திருவெம்பாவை கடந்த பொங்கல்


எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி
காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவை மாற்றெடுத்தோம்


எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!


நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென


பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைத்தது
சின்ன விரல்களும் கூடச் சிதைந்து
குருதியில் தாழ்ந்து அமுங்கியது


இத்தனைக்கும் பிறகு
ஏய்ப்பதற்கொரு யுத்த நிறத்தம்,
தீர்வுப் பொதி,
இந்தியா தீர்க்கும் சண்டித்தனம்!


கோடாலிக் காம்பாகக்
குடிகளைக் கெடுத்த இயக்க வாதம்
கோதாரி மாபியாக் கூட்டம்
கோத்தயைக் கூட்டிக் கொடுத்துக்
கூத்தடிக்கும் ஒட்டுக் குழுக்கள்
பிள்ளையான் கருணா பு....டை ஆண்டிகள்


உலகை ஏமாத்தும் தேசியத் தலை
ஊரைச் சுத்தும் அவரது உதவாக்கரைகள்
தேசத்தைச் சொல்லி
சேர்த்த மூட்டைகள் பிரித்து
வானொலி,தொலைக்காட்சி நிறுவல்கள்


பணத்தை இலக்கு வைத்து
பாடைகள் காவும் ஒரு கூட்டம்
பல்லை இளித்துக் குதறம் இன்னொரு வம்புப் படை
வாய் கிழியும் வரம்பிட்ட வெருட்டல்கள்
தேசத்தின் பெயரால்
தேசியத் தலைவரின் பெயரால்


தேசமே தொலைந்த பொழுதில்
தோணீயேறிய அந்தக் கணத்தில் தொலைந்தது அனைத்தும்
துப்பிக்கொண்ட வெற்றிலைச் சாற்றைப் போல்


இதற்குள் பணம் மட்டும்
தேசத்துக்கும் எமக்கும்
தொப்புள் கொடி கட்டி
தோளில் கிடப்பதைப் பறிக்கும்
பொழுதுகள் என்னவோ தமிழீழம் சொல்லும்!


முகந்தொலைந்த
அகதியக் கோலமும்
அடிமை வாழ்வும் எமக்கிட்ட
புதிய தீர்வாய்...


புதிய புதிய வருஷங்கள் வரும்
புதிய புதிய நத்தார் பண்டிகைள் வரும் ஏசுவே
அதுபோல்
புதிய புதிய தலைமைகள் தோன்றும்
தலைவர்கள் பேசுவார்கள்
போர்ப் பிரகடனஞ் செய்வார்கள்
தீர்வும் சொல்வார்கள்
எனினும்,
தீராது நமது அடிமை வாழ்வு


துரத்தும் ஒரு கூட்டம்
மடியேந்திக் காசு வேண்டிக்
கார் வேண்டும்
வீடு வேண்டும்
கேட்டால் உழைப்பின் விளைவு!


உழைப்பவர் நாங்கள்
உப்புக்கு அலைவது தெரிந்த கதை
இத்தனைக்கும் ஏமாற நாமிருப்போம்
தேசத்தின் பெயராலும்
இன்னும் எதன் பெயராலும்


ஏசுவே உன் பிறப்பையும்
இன்னுமொருமுறை கொண்டாடியாச்சு
கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்
அதைச் சொன்னீர்,
உம்முடைய ஆசீர்வாதத்தினாலே
உமது அடியானின் வீடு(நாடு)
ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்!


எந்த அடியானின் தேசம் அப்பனே?
கர்த்தரான ஆண்டவரே
தேவரீர்
நடுத்தெருவில் அகதியாக அலையும்
என் கூட்டத்தையும் கடைந்தேற்றக் கை கொடுக்கத்
துணியாயோ?


எமக்காக இன்னொரு முறை
சிலுவை சுமந்து முள் முடிதாங்கிச்
சிலுவையில் மரிக்காயோ ஏசுவே?நிர்மாணம்.
25.12.2007

Kommentare:

Anonym hat gesagt…

ம்கூம்ம்... மாட்டேன்.

நிர்மாணம் hat gesagt…

//ம்கூம்ம்... மாட்டேன்.//


"கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்,அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்.உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்"என்று,


நீ ஏன் கூறினாய் ஏசுவே?


இப்போது நம்மை அண்டிவரும் இந்த ஓநாய்களை(இந்தியா சொல்லும் தீர்வு,அதை ஆமோதிக்கும் இந்தியக் கைக்கூலிகள்,மேற்குலக வேட்டைக் காரர்கள்)எம்மால் அறிய முடியாதிருக்கிறதே ஏசுவே!


நீயோ அம்போவென்று விட்டு ஓடியொழிவதில் நியாயம் உண்டா என் பிதாவே?


அதவாது,"ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல்,சரீரத்தை மாத்திரம் கொல்லுறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்.ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே(கர்த்தர்) பயப்படுங்கள்."என்று,


ஏலவே தாங்கள் குறிப்பிட்டதாலவோ இப்பபோது: "...ம்கூம் மாட்டேன்" என்பது?


அல்லது, யாராவது ஒரு மகாபிரபு காணிக்கையைப் பெரிதாகச் செலுத்தி விட்டாரோ உங்கள் கர்த்தருக்கு?


ஏதோ தப்பித் தொலையுங்கள்!


என் கைகளில் பிடிபட்டீர்களானால் உங்கள் கால்களில் புரண்டு கதையையே மாற்றிப்போடுவேன்.
இதுதான் தமிழர்கள் பாரம்பரியம்!


போய்த் தொலையுங்கள் ஏசுவே!