Samstag, 12. Januar 2008

உடல்களின் சரிவில் எண்ணிக்கை வைத்து

உடல்களின் சரிவில்
எண்ணிக்கை வைத்து...


போரிடும் தரணங்கள்

செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேதி காவிவரும் சிங்களக் கனவு
சொல்லித் தெரியவும்,சொல்லாமற் தெரியவும்
இலங்கையில் பல உள.

இது போரரசியல்.

எனக்கும்
என் தலைமுறைக்கும் வாழ்வு கற்பிக்கும் போரரசியல்
ஒவ்வொரு தலைகளின் வீழ்ச்சியிலும்
என் தேசத்தின் இருப்பையுதிர்த்தபடியே
வாழ்வைத் தின்று பிணங்களாய்க் கழிக்கிறது!


நரம்பு புடைக்கும் எந்த மொழியும் நம்மிடமில்லை
விழித்திரையில் குத்தி மோதும்
கொடுங் கணங்களும்
கோரத் தாண்டவம் ஆடும் சிங்களக் கூத்தும்
காலத்தைக் கொன்று
கடமைக்காய் உயிர் குடிக்கும்
அது தமிழின் தரப்புக்கும் நிரந்தரமானவொரு பொழுதாய்...

யார்தான் மகிழ்வார்
உடல்களின் சரிவில் எண்ணிக்கை வைத்து?


ஒவ்வொரு விடியலிலும்
உருவமே தெரியாத மரணங்கள்
கதவின் துவாரத்து வழியே
உயிர்த்திருப்பவர் உணர்வை மோத
உறக்கமின்றித் தவித்த இரவுகளில்
குருதி சிந்தும் கொடிய போர்
இச்சைப்பட்டுச் சப்பித் துப்பும்
கழிவுகளாய் மனிதவுடல்கள்


சுனாமிக்கு முன்னும்,
பின்னும்
மலிந்த கொலைகளும்
சிதைந்த பிணங்களின்
ஊனிழந்த எலும்புத் துண்டுகளும்
தமிழரின்
உரிமை தின்ற
காலடித் தடங்காளாய்
இன்னும்
சில போரிடும் தரணம் வரை...

பிணங்களின்மீதேறி
பெருமை சொல்லும் தேச நலன்
வாகரையைப் பிடித்தாலென்ன
இல்லை வன்னியைப் பிடித்தாலென்ன?
".........................."

Keine Kommentare: