Donnerstag, 9. Juli 2009

இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தை...

வன்னி மருத்துவர்களை நொந்து இலாபமென்ன?
 
 
லங்கை அரசினது சமீபகாலமான போர் நடாத்தையில்,அவ்வரசானது மேலும் பற்பல மனிதவிரோதத்தன்மையிலான பாதையில் அரசின் தார்மீகக் கடமைகளை நகர்த்திகிறது.இஃது,பெரும்பாலும் பயங்கரவாதத்துக்கு எதிரானதும்,தேசத்தின் இறைமைக்கும் ஆனதென்ற பொய்யுரைப்பின் "தேசமே"முதன்மையானதென்ற வடிகட்டிய ஏகாதிபத்தியங்களின் கருத்துருவாக்கத்தால் கட்டியமைக்கப்படும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான அதிகார அத்துமீறலாகும்.புலியழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து அதன் இறுதி இலக்கு எட்டும்வரை, இலங்கை அரசு சிங்கள அரசாகவே நடந்துகொண்டது.அதன் உண்மையான இலக்கு என்பது சிங்கள ஆதிக்கத்தை இலங்கை வாழ் மற்றைய இனங்கள்மீது திணிப்பதாகவும், அதன் வாயிலாக இனவொடுக்குதலின் உச்சபட்ச சாத்தியத்தை கொண்டியக்குவதாகவும் இருந்தது.இதன் ஊக்கத்துக்கு அமெரிக்காவினது உலக நடாத்தை மிக அண்மித்த கருத்தியற்பலத்தை இவ்வரசுக்கு வழங்கியிருந்தது.
 
நாணயமற்ற அமெரிக்காவினது நடாத்தை உலகை வேட்டைக்காடாக்கிய நிலையில், அதன் தார்மீகக் கடைமையென்பது தமது ஆளும்வர்க்கத்தினது ஆதிக்கத்தையும் அதன் உற்பத்திச் சக்தி-ஜந்திரத்தினது மூலவளத்தேவையை, மூலவளக் கொள்ளையிடலூடாக உலகை வேட்டையாடிப் பெறுவதிலேயே கவனஞ் சென்றது.இதன் தொடர்ச்சியான போக்குகளால் மனிதவுரிமை என்பதை வெறும் வெற்றுச் சொல்லாடலாக்கிய உலக அதிகாரவர்க்கமானது இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது.இஃது, சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு"தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.இதன் ஆரம்பம் மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற இராணுவாதம் அவ்வரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக ஒரு பகுதி மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை-இந்திய ஆளும்வர்க்கங்கள்.
 
இத்தொடரான இன்றைய அரசியலின் போக்கானது மிகவும் கொடிய இராணுவத்தன்மையிலானவொரு அரசவடிவத்தை, இலங்கைக்குள் நிலைப்படுத்துவதில் போய் முடிந்த துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தை கொண்டு சென்றுள்ளது.
 
இத்தகைய அரசியலை மூன்றாமுலகில் விரும்பிய அமெரிக்க ஏகாதிபத்தியம், இதை ஏலவே பாகிஸ்த்தானில் பரீட்சித்து அதை மேலும் தென்கிழக்காசியாவுக்குள்ளும்,தென்னாசிய பிராந்தியத்துள்ளும் விரிவாக்கஞ் செய்யமுனைந்தபடியே இருந்தது.இதன் உச்சக்கட்டம் இலங்கையில் நடந்தேறும்போது அதைக் குறித்தான அரசியல்பாத்திரத்தை அது இந்தியாவினது தயவில் பெற்றுள்ளது.இன்றைய மகிந்தா தலைமையானது இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவரை தேசத்தை அந்நியர்களின் விருப்புக்கமையக் காட்டிக்கொடுத்த தலைமையாகவே இனங்காணத்தக்கது.
 

இத் தலைமையின் அதீத இராணுவவாதத் தன்மையிலான அரசியல் நடாத்தையானது தன் தேசத்தின் சொந்த மக்களையே இனப்படுகொலை செய்வதற்கேற்றபடி அரசியல் சட்டவாதத்தை ஏற்படுத்திச் சொந்த மக்களை வான் வழிக் குண்டுகள்மூலமாகக் கொன்றுகுவித்தது.இரு தேசங்களுக்குள் இடம்பெறும் யுத்தத்தை அண்மித்தபடி, தனது சொந்தக் குடிகளையே அழித்த மிகக்கெடுதியான இலங்கையின் இன்றைய அரசு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களது நலன்கள்மீது கரிசனையான அரசு கிடையாது.
 
இவ்வரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒரு குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும், மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.ஆனால், இலங்கை அரசினது இன்றைய பாத்திரமானது பெரும்பாலும் இலங்கை ஆளும்வர்க்கத்தினதும்,வெளியுலக-பிராந்திய ஆளும்வர்க்கங்களது தெரிவை இலங்கைக்குள் நடாத்திமுடிப்பதில் அதன் அரசியல் நடாத்தை எல்லைதாண்டிய ஆளும்வர்க்கங்களது நலனோடிணைந்த கொடுங்கோன்மையாகவிரிகிறது-இஃது,இராணுவச் சர்வதிகாரத்தின் புதிய வடிவமாக இலங்கை "ஜனநாயகத்துள்"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,அரச அதிபராகவும் மகிந்தா தலைமையை இனங் காட்டுகிறது!மகிந்தா இராணுவ உடை தரிக்காத இன்னொரு ஜெனரல் சரத் பொன்சேகா என்பதுதாம் உண்மை.பிரபாகரனைச் சொல்ல அவர் உயிரோடு இன்றில்லை!
 
இதுவே,தமிழ்பேசும் மக்களை இனவழிப்புக்குள் உட்படுத்திப் புலிகளையும் வேட்டையாடிய கையோடு,இந்தப் படுகொலைகளை நேரில்கண்ட சாட்சியங்களான போர்க்களத்தில் நின்ற வைத்தியர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் போலிக் கதைகளைப் புனைந்துவிடுகிறது.இஃது, அனைத்தையும் புலிப்பாசிசத்தின் பெயரால் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைய மருத்தவர்களது தவறாகவும்,புலியினது அழுத்தின் காரணமாகவும் பொய்யை-இனவழிப்பை மூடிமறைக்க உலகுக்கு ஒப்புவிக்கிறது!
 
இங்கே,அப்பாவி மருத்துவர்களின் பரிதாபகரமான உயிர்வாழும் நிலையானது அவர்களை மக்களது குரலாக இயங்கவிடாது தடுத்துத் தமது மக்களது வரலாற்று அவலத்தை மறைப்பதில் அவர்களது உயிர் அவரவர் உடலினுள் ஊசலாடுகிறது.இதன் மிகக் கொடிய நிலையாகும்.அவர்கள் சாவுக்கும்-வாழ்வுக்கும் இடையில் இலங்கை அரசினது பயங்கரவாதத் தார்ப்பாருக்கு ஒத்தூத வைக்கப்படுகின்றனர்.இவர்களே//"We regret very much for providing false information to foreign media while we were working in LTTE control area due to intense pressure from the LTTE" //confessed Dr. Sivapalan என்றும், இலங்கையின் கோத்தபாயவைத் திருப்த்திப்படுத்தித் தமது உயிரைக்காக்க வேண்டியுள்ள நிலைமையில் இன்னும் ஒருபடி மேல சென்று //"We thought LTTE were liberators of the Tamil people. They forcibly recruit children and youth. 3 - 4 from every family. I treated girls and boys of 14 - 15 age group who had been child recruits. It was a useless war. Their strategy was to use civilians as a human shield and to mislead the international community and obtain their support. They shouldn't have brought the war to the no war zone. Now LTTE leadership is decimated and people are liberated. We hope government will develop the area and Tamil diasphora should support." said Dr. Sivapalan at the media conference held at MCNS today(08). //
http://www.defence.lk/new.asp?fname=20090708_10 இலங்கை அரசின்மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக பேசவைக்கப்படுகின்றார்கள்.அப்பாவிகளான மருத்துவர்களுக்கே இந்த நிலையென்றால் புலிகளோடு இணைந்த போரிட்ட உறுப்பினர்கள்,தலைவர்களது நிலை என்னவாகும்?
 
அவர்களை மொட்டையடித்து முற்று முழுதாக இலங்கை நடாத்தப்பட்ட தமிழர்தரப்பு அரசியல் முன்னெடுப்பும் தவறென்றும்,தமிழர்கள் சுயநிர்ணயவுரிமை கேட்பதே தவறென்றும் சொல்வது கருணாவுக்குமட்டுமல்ல மற்றெல்லாருக்குமான கோசமாகவே வந்துவிடுகிறது.இத்தகைய அரசை,ஜனநாயக பூர்வமான அரசாக நிறுவ முனைபவர்கள் தமது குடும்பத்தினதும்-தினிப்பட்டதுமான நலன்களைக்கொண்டே அங்ஙனம் நடாத்தி முடிக்கின்றார்களென நாம் முடிவுக்கு வரலாம்.இது, வர்க்கச் சமுதாயத்தில் மிக மலினப்பட்ட அரசியல் நடாத்தைதாம்!
 
இஃது, ஒரு வகையில் காயடிப்பின் உச்சக்கட்டமாகும்.
 
ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பிவருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(அடிப்படையுரிமை-குடிசார் அமைப்புகள் ,இன்பிற) தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இந்தக் குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய கட்சி அரசியல்வாதிகள் நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர்.
 
இதை, உடைத்துவிடுவதற்கான எந்த வியூகமும் இப்போதைக்கு இலங்கைத் தேசத்தில் கருக்கொள்ள முடியாதளவுக்கு மகிந்தா குடும்பத்தினதும்,கட்சியினதும் ஆதிக்கம் இராணுவ வாதத்துக்குட்பட்டும் அதன் ஒத்துமைப்போடும் அனைத்து மக்களிடமும்"மக்கள் நல அரசு"என்றபடி முன்தள்ளப்படுகிறது.இதையும் வரலாற்றில் வெற்றிகொள்வதற்கான இன்னொரு சாத்தியம் இலங்கையில் உருவாகுவதற்கு அதன் தேர்தல் முறைதாம் சாத்தியமென எவராவது கருதுவாரானால் அவரைப்போல் இன்னொரு முட்டாள் உலகத்துள் இல்லை!
 
எனவே,இத்தகைய போக்குக்கு எதிராக இலங்கை தழுவிய தொழிலாளவர்க்கத்தை ஒன்றிணைக்கும் பாதை குறித்துச் சிந்திப்பது அவசியமாகிறது.ஒடுக்கப்படும் வர்க்கத்தின் எழிச்சியால்மட்டுமேதாம் இந்த இலங்கையை அந்நிய-உள்ளுர் அதிகார-ஆளும் வர்க்கதிடமிருந்து மீட்க முடியும்.
 
அதுவரையும், இந்த மருத்துவர்களென்ன பலம் குன்றிய எவ்வகை மனிதரும் இலங்கையில் உயிர்வாழ்வதற்காய் அதன் அரசினது பொய்யை மெய்யாக்கவேண்டிய கடமையில் தமது உயிர் வாழ்வை நீட்டவே விரும்புவார்கள்.இதையும் ஜனநாயகத்தின் உச்ச வடிவமாகத் தேனீ,தேசம்நெற் போன்ற அரச கைக்கூலி ஊடகங்களும் தமது பங்குக்குப் பரப்புரை செய்வது நமது வரலாற்றின் தலைவிதியே.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
09.07.2009

P/S:


P.V.Sri Rangan on July 9, 2009 9:34 am Your comment is awaiting moderation.


அதிகாரத்தின் குரல்களைப் பதிவது இருக்கட்டும் அருட்செல்வன்.உமது கருத்தென்ன இவ்நடாத்தையின்பால்?இன்றைய நிலையில் இத்தகைய மக்கள் விரோத அரச-அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தையைக் குறித்து எதிர்ப்புக் குரலாக பாதிக்கப்பட்ட மக்களே போராட முடியாதளவுக்கு வன்னி-இலங்கைச் சூழலுள்ளது.

இராணுவக் கண்காணிப்புக்குக்கீழ் மக்களை "இடைதங்கல் முகாமென்றும்-இராணுவக் குடியிருப்பு"களாகவும் ஒடுக்கியபடி முழுத் தமிழ்ப்பிரதேசத்தையும் இராணுவக் கெடுபிடிக்குள் தள்ளித் தமிழ்பேசும் மக்களைக் கண்காணிக்கும் நிலையில்-அவர்கள் இத்தகைய அரச ஒடுக்குமுறைகளைக் குறித்துப் போராட முடியாத சூழலில்-இத்தகைய மருத்துவர்கள் எதையும் கூறமுடியும்.

ஆனால் அருட்செல்வன் உமக்கு என்ன தடை இருக்கிறது?;இது குறித்து மக்கள் நலனிலிருந்து கருத்துச் சொல்ல?


அதிகாரத்துக்குட்பட்ட-அவர்களது கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களுக்கு முண்டு கொடுப்பதற்காகவா இப் பதிவு ஜெயபாலன்?


அல்லது"ஜனநாயகத்தை"செழுமைப்படுத்தும் தார்மீகம் உந்துதல் வழங்குகிறதோ?
 
http://thesamnet.co.uk/?p=13799#comment-126512

Keine Kommentare: