Donnerstag, 16. Juli 2009

தேசியப் பொருளாதாரம்:

பைத்தியக்காரத்தனமும்,குழப்பமும்,இன்னுமிது ஆரம்ப நிலையிலேயே உருவகிக்கிறது.
 
 
 
பொருளாதாரக் காரணிகள்-சூழ்நிலைகள்,சுமைகள்-அதிர்வுகள் ஒரு சுவையான சம்பவங்களாக மாறிப்போகிறது.இது குறித்த அறிவானது பலரிடமும் ஆரம்ப நிலையைவிட மோசமாகவே காணக்கிடக்கிறது. இதனால் எந்த உற்பத்திப் பொறிமுறையானது மானுடர்களுக்குப் பொருத்தமானது-எதுதாம் பலமானதாகவும்,இறுக்கமாகவும்,தளராதாகவும் இருக்கும்?எந்தப் உற்பத்திப்பொறிமுறை அமைதியையும் மகிழ்வையும்-சீரையும்,சிறப்பையும்-நியாயத்தையும் அளிக்கும்? ஏதாவது விருப்பத்துக்குரிய பொருளாதாரக் கட்டமைப்பு உலகிலுண்டா,அல்லது மீள மீளக் கதையாடும்-எதிர்ப்பிடும் தத்துவார்த்தங்கள்,பொருளாதாரக் கண்ணிகள் ஒன்றையொன்று முட்டிமோதிக்கொண்டு ஒரு நாகரீகப் போக்கைக் கடைப்பிடிக்க உதவுகிறதா?
 
 
பொருளியலாளர்கள் இது குறித்து எதைக்கொண்டிருந்தார்கள்?
 
 
பொருளாதாரப் பாடமானது உலகில் மிக,மிகப் பழமையானதல்ல. இயற்பில்,மருத்துவம்,கணிதத்துக்கு உள்ளதுபோன்று பழமையான அறிவுப்பரப்பு பொருளியல் அறிவுக்கு இல்லை.இது வளரும் நிலையிலேயே இன்றும் இருக்கிறது.இப்படிக் கூறாதிருந்தால் சமூகத்தின் வளர்ச்சிக்கட்டம் முடிவடைந்திருக்கணும்.இஃது சாத்தியமின்றியிருந்தால் வளரும் தன்மையில் பொருளாதாரவாழ்வு இருக்கிறது.
 
 
பொருளாதாரம் வளர்ந்த நிலையென்பது தனியார் தத்தமது பண இருப்பைக் கட்டடங்களாகக் கொண்டிருப்பதால் ஏற்படுவதல்ல.மாறாக மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவுசெய்யவும்,உழைப்பு நேரம்குன்றிய பொழுதில் அனைத்தையும் பெறும் இயங்கு நிலையே வளர்ச்சி நிலையாகும்.இங்கு மக்கள் தேர்வானது சுதந்திரமான வாழ்வாகவும்,சமாதானமான உற்பத்தியுமாகவிருக்கும்.
 
 
தேசியப் பொருளாதாரம்-பொருளாதாரம் எனும் வார்த்தையானது முதன்முதலில் 1776 ஆம் ஆண்டளவிலேயே உருவாகிறது.இந்தக்காலக்கட்டமானது கொலனித்துவத்தின் உச்சக்கட்டமாகும்.உலகின் அனைத்து வளங்களையும் பிரிடிஸ் ஏகாதிபத்தியம் சுரண்டிக் கொண்டிருந்த காலத்தில் தேசியப் பொருளாதாரம் குறித்த கருத்தமைவானது இந்த ஆளும் கும்பலுக்கு அவசியமாகவிருந்தது.இதை உந்தித் தள்ளிய மிகையான செல்வக் குவிப்பானது அதன் இருத்தலுக்கும்,பாதுகாப்பக்கும் அவசியமான உற்பத்திப் பொறிமுறைகளைவேண்டிக் கொண்டது.அன்றைய தேவையைக் குறித்த சிந்தனையானது'தேசியச் செல்வத்தின் காரணியும் இயற்கைக்கூடான ஆய்வும்'எனும் தலைப்பில் ஆடம் சிமித்தை(1723-1790) சிந்திக்கத்தூண்டியது.1776 வருடம் மேற்காணும் தலைப்பில் வெளியிட்ட அவரது பொருளியல் நூலானது இன்றுவரையும் முதலாளியத்தின் பாடத்திட்டத்தில் முடிசூடா மன்னனாக இருக்கிறது. ஆடாம் சிமித்தும் அவரது முன்னோர்களின் எண்ணங்களும் 'சுதந்திரப் பொருளாதார அரசியலை'வலியுறுத்துகிறது.இது கண்டம்விட்டுக் கண்டத்தைச் சுரண்ட தனிநபர்களைத் திரட்டும் அரசியலைப் பரிந்துரைக்கிறது.தனிப்பட்ட ஏகாதிபத்திய முதலாளி தனது அடியாட்படையுடன் உலகத்தைக் கொள்ளையிட இது கோரிக்கைவிடுகிறது.இதன் அர்த்தமானது'சுதந்திர வர்த்தகம்','போட்டி','தனித்துவ நிறுவனங்கள்',தனியார் செல்வம்'ஆகியவற்றைப் பலப்படுத்துவதும்-பெருக்கிக் கொள்வதாகும்.இதனை அரசு ஏற்கும் பட்சத்தில் அனைவருக்கும் மகிழ்வான வாழ்வுகிட்டுமென்பது ஆடமின் பொய்யுரையாகும்.இதன்படி உலகம் போரையும் அதீதசுரண்டலையும் இன்றுவரை கடைப்பிடிக்கின்றது.இதற்கு 'மான்சிஸ்டர் லிபிரால்கள்'19ஆம் நூற்றாண்டில் மிகக் கேவலமான சமூகச்சமமின்மையையும்,அடிமைத்தனத்தையும் தந்து நிரூபித்தார்கள். அப்போ இதன் மாற்று யாது?
 
 
ஆடம் சிமித்தும்,கார்ல் மார்க்சும்:
 
 
மூலதனத்தின் தனியுரிமைக்கும்,எதுவமற்ற தொழிலாளர்களுக்குமான காரணியை ஆடம் சிமித்துக்கு நேரெதிராகக் கண்டவர் கார்ல் மார்க்ஸ்(1818-1883)'கூலியானது செய்த வேலைக்கான பெறுமானமல்ல,மாறாகத் தொழிலாளி அரைவயிற்றை நிரப்பிக் கொண்டு மறுநாள் வேலைக்கு வருவதற்கான-உயிர்ப்புக்கிடும் பிச்சை'என்றார்.இதன்மூலம் முதலாளி தனக்குச் சொந்மில்லாத-தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டி மிகையான உபரியை செல்வமாக்கிறான் என்ற விஞ்ஞானத்தைக் கண்டடைந்தார்.இதனால் சமூகத்தில் ஏற்றதாழ்வும்,வர்க்கப்பிரிவினையும் நிதர்சனமானது.இது காலாகாலத்துக்கும் நீடித்தபடியே வர்க்கச் சண்டையைக் கொண்டு மக்களையும்,உலகத்தையும் நாசமாக்கும்.எனவே பாட்டாளிய வர்க்கமானது பலாத்தகாரமாக தனியுடமை முறைமையைத் தூக்கியெறிந்துவிட்டு,உற்பத்திச் சக்திகளை பொதுவுடமையாக்கியாகவேண்டும்.இதன்மூலம் வர்க்கபேதமற்ற மனித வாழ்வை எய்திட முடியும்.மார்க்சின் கருத்தானது இன்றுவரையும் எந்தக் கொம்பனாலும் முறியடிக்க முடியாத விஞ்ஞானமாகும்.
 
மார்க்சும்,ஆடம் சிமித்தும் வெவ்வேறான சமுதாயத்தையும்-பொருளாதார உறவுகளையும், முறைமைகளையும் கண்டடைந்தபோது-இவர்களுக்கருகில்(இடையில்?) உருவாக்கப்பட்டதுதாம் சில்வியோ கேசலின்(Sivio GESELL 1862-1930)நியாயப் பொருளியலும்(Die Natuerliche Wirtschafts Ordnung இயற்கையான பொருளியல் ஓழுங்கு),ஜோண் மைனார்ட் கெய்னெஸ்டின்(John Maynard Keynes 1883-1946) 'பற்றாக்குறை கிடப்பு'திட்டவாக்கமாகும்.
 
 
கேசலும் கேய்னெஸ்சும்:
 
 
கேசலின் Silvio Gesell (1862 - 1930)பொருளாதாரவிதிகள் இன்று மிகப் பரிச்சியமான எடுகோளாக மாற்றப்பட்ட நிலையிற்றாம் நம்மில் பலர் மாக்சியத்தைக் கெட்டிதட்டிய தத்துவமாகவும்,காலப் பொருத்தமற்ற கற்பனாவாத-உடோப்பிசமெனச் சொல்கிறார்கள்.இவர்களிடம் நியாயமிருப்பதற்கான எந்தத் தரவுமில்லை.ஏனெனில் இவர்களின் ஆசான் கேசலிடமும்,கெய்னெஸ்சிடமும் இந்த விவகாரம் குறித்த விஞ்ஞானமில்லை.
 
சில்வியோ கேசலின் பிரச்சனை என்னவென்றால்,சமூகத்தின் வறுமைக்கு-ஏற்றதாழ்வுக்கு மார்க்சியக் காரணிகளான 'உற்பத்திச் சக்திகளின் தனியுடமை' காரணமில்லை என்பதே.இஃது திட்டமிட்ட தவறென்பதை கேசல் முன்வைத்தபோதே அவர் தவறுசெய்வதாக அன்றே பல ஆய்வாளர்கள் சுட்டியும்,இதை இன்றுவரை சந்தைப்பொருளாதார வாதிகள் அழுங்குப் பிடியாய்ப் பிடித்துள்ளார்கள்.சமூகத்தின் வறுமைக்கு'நிலத்தின் தனியுடமையும்'பணத்தின் சழற்சியுமே' காரணமாகக் கேசல் முன்மொழிகிறார்.பணம் தனிநபர்களை செல்வந்தர்களாக்கும்போது ,அப்பணமானது கருப்புப் பணமாக நிலவுரிமையைக் கைப்பற்றும்.இஃது எப்பவோ பதுக்கப்பட்டு,பணமுடக்கத்தைச் செய்து- பின் வெளிவரும்போது பொருளாதாரச் சுற்றோட்டத்தை தேங்க வைக்கிறது,இதனால் மீளவும் பற்றாக் குறையானது கடன் பளுவைச் செய்யத்தூண்டும்.கடனின் வட்டியும்-வட்டிக்குவட்டியும் பெரும்பாலான உற்பத்திச் செலவை உயர்த்தும்.இதன்போது நிகழும் தாக்கமானது சமூக ஏற்றதாழ்வையும்,வறுமையையும் ஏற்படுத்துவதாகவும் கேசல் முன்வைக்கிறார்.சமூகவுற்பத்தி தாழ்ந்த நிலையிலும், அரச கடன் பளு உயர்ந்தும் சமுதாயத்தை வறுமைக்குள் தள்ளுவதாகக் கூறினார்.இங்கே அவர் உற்பத்திச் சக்திகளின் தனியுடமையானது உபரியை ஏற்படுத்துவதை திட்டமிட்டு மறுத்தார். பொருளாதாரத்தின் அதீத வளர்ச்சியானது சமூக உற்பத்தியைவிட பன்மடங்கு உயரும்போது கூடிவளரும் பங்கீடானது.இது கீழிருந்து(தொழிலாளர்களிடமிருந்து) மேல்நோக்கி(உடமையாளர்களுக்கு) பங்கீட்டைச் செய்வதாகவும்,இதன் வேகம் அதிகமாகும்போது நிலமையை அரசு கட்டுப்படுத்த முடியாததாகவும் முன்மொழியப் படுகிறது.
 
இதைக் காரணமாகக்கொண்டு கேசல் 'சுதந்திர பணம்,வட்டியற்ற நிதி'(Umlaufgesichertes Geld – Idee und Rationalisierung)பாதுகாப்பான பணச் சுற்றோட்டம் மற்றும் எண்ணம்-நியாயத்தன்மை) என்னும் மாய மானைத் துணைக்கழைக்கின்றார்.இதை இன்றுவரை முதலாளிகள் செய்யவுமில்லை.நிலவுரிமையை அரசிடம் கையளிக்கவுமில்லை.அந்தோ கேசல் மரணப்படுக்கையில்.மயிலே,மயிலே இறகிடுவாயா என்பதே கேசலின் நிலைமை.கேசலின் மொழிவானது 'சுதந்திர நிலம்'மக்களின் சொத்தாக அரசிடமிருந்து வட்டியற்ற குத்தகையாகவும் இருக்கின்றது.கெய்னெஸ் ஆடம் சிமித்தைப் பின் பற்றும் மனிதர்.இவரின் திட்டத்தை செயற்படுத்தவிரும்பிய மூலதனவாதிகள் இன்று போரினினூடு ஜனநாயகம் பேசுவதில் வல்லவர்களானார்கள். அதாவது பொருளாதாரச் சுற்றோட்டத்தில் அரசு சமூக உற்பத்திகளை-அரச ஒப்பந்தங்களை தனியாரிடம் கையளித்து,உற்பத்தியாளருக்கு வரிச் சலுகை செய்யும்போது பொருட்களின் விலை குறைந்து நுகர்வாண்மை பெருகுமென்பது கெய்னெசின் கூற்று.இன்று நம்முன் விரிந்துகிடக்கும் தவறுகளை இவர் பெயரால் சொல்லித்தப்ப பொருளியலாளர் முனைகிறார்கள்.
 
 
இருபதாம் நூற்றாண்டின் இறுதியரைப்பகுதிபூராகவும் கேய்னிசம்(Keynesianimus) பொருளாதாரத்திலும் அரசியலிலும் மாபெரும் செல்வாக்குச் செலுத்திய பொருளாதாரத் தத்துவமாகும்.கடன் நிதிமூலதனத்தினால் நிதியிட்டுக்கொள்ளப்பட்ட அரசநிதிப் பொறிமுறையானது மேற்குலகப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தித் தெம்பிட்டது.ஜேர்மனி இந்தப் பொறிமுறையை ஐம்பதுகளில் அச்சொட்டாகக் கடைப்பிடித்தது.இதன் தாக்கம் இன்று பெரும் அரச கடன் சுமையாக இருக்குமென அன்றைய கேய்னிசின் விசிறிகள் கனவும் கண்டிருக்கவில்லை.ஆரம்பத்தில்பொருளாதார வளர்ச்சியும்,சமூக அமைதியும் இதன்மூலம் கிட்டியதுண்மை.இதை நீண்டகால நோக்கில் பெரும் வருவாய்யாக்கிக்கொண்ட பெருமுதலாளிகள் வர்க்கம் வங்கிகளை இடைத் தரகர்களாக்கிக் கொண்டு அரசையும்,மக்களையும் ஒட்டச் சுரண்டிக் கொழுத்தது.இதன் தாக்கத்தால் இன்றிந்தக்காரியத்தை மூடிமறைக்க அரசும்,அரசிலாளர்களும் பெரும் பிரயத்தனப்பட்டு மக்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
ஆனால் இந்தப் பொறிமுறையானதோ மேற்குலகப் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிய அநுபவத்தைப் பாடமாக்கிய உலக வங்கியானது இலத்தீன் அமெரிக்க-ஆபிரிக்க,இந்தியத் துணைக்கண்டத்துக்கு இந்தப் பொறிமுறைமூலம் கடன் நிதிமூலதனத்தைக் கொடுத்துத் தனது வளத்தைப் பெருக்கி, தன்பின்னால் ஒழிந்திருக்கும் முகமூடித்திரடர்களுக்குப் பெரும் இலாபத்தை அள்ளிக் கொடுத்தபோது மேற்கூறிய நாடுகளும் திவாலாகி, அந்தந்த நாட்டுக் குடிகள் பட்டுணிச்சாவை எதிர்கொள்கின்ற பரிதாப நிலையை நாமின்று காண்கிறோம்.
 
 
சுதந்திரப் பொருளாதார முயற்சி ஆரபத்திலேயே திவால்:
 
 
மேற்கூறிய நான்கு பொருளாதாரத் தத்துவங்களில் லிபிரலிசம்,கேய்னிசம்,மார்சிசமாகவே நான்கும் பொதுமைப்படுகிறது.இதில் மூன்றுமே வௌ;வேறு சூழல்களில் முயற்சித்துத் தோல்வியடைந்துள்ளன.இஃது வரலாறு.இதுள் மார்க்சியப் பொருளாதாரச்'சோஷலிசக்'கட்டுமானம் எங்ஙனம் தோல்வியுற்றதென்பதை நாம் இக்கட்டுரையின் பின் பகுதியில் பார்ப்போம்.முதலில் மற்றவற்றைப்பார்ப்போம்.
 
 
லிபிரலிசம் பொருளாதாரத்தில் மேற்குறிப்பிட்டபடி சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி சமதாயத்தைப் பூர்ச்சுவாக்களாகவும்,பாட்டாளிகளாகவும் பிளந்தெடுத்தது.அளவுமுறையற்ற மூலதனவூக்கத்தால் குவிப்புறுதியும் கடும்கூலி ஏய்ப்பும் தொழிலாள வர்கத்தையின்னும் ஓட்டச் சுரண்டிக் கொள்ளத்தாம் இவர்களால் திட்டமிடமுடிந்ததே தவிர பொருளாதார சுபீட்சத்தையல்ல.இதன் காரணமாகவே கடும் சுரண்டலும் வறுமையும் மக்கள் சமூகத்தில் தலைவிரித்தாடியது.இந்தத் தத்துவத்தின் மகிமையை நிராகரிக்கவிரும்பாத ஆளும் வர்க்கமானது 1980களில் நவ லிபரலிசமாக முழுவுலகையும் வலம் வந்து உலகைத்திவாலாக்கிய வரலாறாக நீண்டுகொள்கிறது.இந்தக் கொடுமையானது மனிதாபிமானமற்ற முறைமைகளில் அரசியலையும்,மனிதவுரிமையையும் புண்படுத்தியது.காலாகாலத்துக்கும் மாறாத வடுவாக மனிதர்களைக் கொல்லும் அணுவாயுதங்களாக இதன் திமிர் வளர்ந்துள்ளது.இப்பரிணாம வளர்வானது எக்காலத்துக்கும் முதலாளிய நலன்களை மையப்படுத்தும் கல்வி,கலை,விஞ்ஞானப் பொறிமுறைகளையெல்லாம் இதன் மையவலுவைக்கூட்டும் ஊடகமாகக் குறுக்கப்பட்டுள்ளது.இத்தகைய செல்நெறியானது அரசியலைப் பூhச்சுவாக்களினது நலன் சார்ந்த அரட்டையரங்கமாகவும்,அவர்களது உரிமைகளை-செல்வங்களைக் காக்கும் அடியாட்படையாகவும் வைத்திருக்கிறது.இந்த முறைமைகளை அரசியற்பொருளாதாரத்தில் அச்சொட்டாகக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது அதன் வன்மமான சொற்சிலம்பத்தால் மக்களையின்னும் அடிமைப்படுத்தும் கல்வியாளர்களை உற்பத்திசெய்கிறது. இத்தகையவர்களே தமக்கத்தாமே 'குட்டிப் பூர்ச்சுவா'என்று சூட்டுமளவுக்கு இதன் உட்கட்டுமானத்தை உருப்படியாக அறியாத நிலையில,; மாhக்சியர்களைக் கேவலமாகச் சாடும் நிலையையெடுக்கிறர்hகள்.
 
 
இந்த லிபரலிசம் எப்படி தோல்வியான பொருளாதாரச் சுற்றோட்டத்தைத் தந்ததோ அதே மாதிரித்தாம் கேய்னிசமும் மக்கள் நல அரசியலைப் போலிக்கு முன் மொழிந்தாலும் எதையும் செய்யவலுவற்ற சுரண்டல் மூலதனமாகச் சுருங்கியது.இவர்களது பார்வையில் இப்போது சந்தைப் பொருளாதாரமானது மனித முகத்தோடான சந்தைப் பொருளாதாரத்தை முன் மொழிகிறது.இது அப்பட்டமான பொய்யென்பதற்கு இதன் உற்பத்திப் பொறிமுறையும்,உற்பத்திச் சக்களுக்கும்-உறவுகளுக்குமான உறவே அதை அம்பலப்படுத்துகிறது! உபரியென்பது வெறும் பொருள் விற்பனையில் சாதாரணப் பெட்டிக்கடைக்காரன் பெறும் சில்லறையல்ல.எனவே அதன் வீச்சும் குவிப்புமானது உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையாளனின் கைகளில்தாம் குவிகிறது.அதை வேறொரு கட்டுரையில் விளக்குவோம்.
 
 
சில்வியோ கேசலின் திட்டமானது எந்தக் காரணத்தாலும் மனித வதையை நிறுத்தப் போவதில்லை.மத்தியில் குவிக்கப்பட்ட அரசியல் பொருளாதாரக் கட்டமைவுகளை நகர்புறத்திலிருந்து கிராமங்களைநோக்கித் தள்ளுவதும் அதனூடாக அபிவிருத்தித் திட்டங்களும்,பொருளாதாரத் தேவைகளும் புதிய முதலீட்டையும் வேலைவாய்புக்களையும் கூட்டிவரும்போது அதன் சாத்தியத்தால் உற்பத்திச் செலவு மிகமிகக் குறைந்து, புதிய சந்தைகளைத் தேடிக் கொள்வதும் கிரமிய வலுவைக் கொண்டு புதிய சந்தைப் பொருளாதாரத்தில் முழுமக்களும் பங்கு கொள்வதாலும் தனித்த மொனேப்போல் அழிந்து மனிதமுகப் பொருளாதாரம் நிலைப்படுமென கேசல் மொழிகிறார்.
 
 
இங்கும் கேசலிடமும்,கேய்னிஸ்சிடமும் இருக்கும் கருத்துக்களானது அரச கடன் பற்றிய கருத்தோட்டத்தைச் செம்மையாகப் புரியவில்லை. அரசகடனும்,நிதிமூலதனத்தின் கடன்களும் அதீத வரிச்சுமைகளை மக்கள்மீது திணிக்கிறது.கடன்களின் வட்டியும்,பின் அந்த வட்டிக்கு வட்டியுமாகப் பல்கிப் பெருகும் கடன் சுமை நாட்டையே திவாலாக்கிறது.இதை கேய்சல் சுதந்திரப் பணச் சுற்றோட்டத்தால் நிவர்த்திக்க முனைகிறார்.இதுதாம் கேய்சலின் மிகப் பெரும் பலயீனமாகும்! கேசலின் மொழிவுகளை வளர்ச்சியடைந்த கிராமங்களும்(மேற்குலகத்தின் கிராமங்கள்) கிராம சபைகளுமே ஏற்றுக்கொள்ளும் பண்பைக் கொண்டுள்ளன!இதை நமது மாட்டுவண்டிக் கிரமத்தோடு பொருத்திக் கொண்டால் அங்கு வேப்பம்பூ,இலுப்பம்பூ வடகம்தாம் உற்பத்திச் சாலைகளில் செய்யலாம்.எனவே இதை மேற்குலக அரசுகள்கூட மிகவேகமாக ஏற்றுக் கொண்டு காரியமாற்றவில்லை.வளர்ந்த நகரங்களான பெரு நகரங்களை குட்டி நிர்வாகத்தோட (மற்றைய பகுதிகளோடு தொடர்பாடாத)யூனியன் பிரதேசமாக வரையறத்து முயற்சிக்கிறார்கள்.அதுவும் வேலையில்லாத்திண்டாடத்தைக் குறைக்கவில்லை.ஜேர்மனியப் பெருநகரங்களான பிறிமன்,கம்பேர்க்,பேர்ளின் இத்தகைய பொறிமுறையில் இயங்குகின்றன.இத்தகைய நிலைமைகளில் தேசியப் பொருளாதார அறைகூவல் அப்பப்ப மேலெழுகிறது.இதுவே இன்று ஜேர்மனிய உற்பத்திப் பொருட்களை மக்கள் வேண்டி வேலைவாய்பைப் பெறும்படி மந்திரமோதுகிறது.நுகர்வுப்பொருட் துறைகளுக்கான மந்திரி திருமதி கூன் முன்வைத்துக் கொள்ளும் கருத்தும் இஃதே.
 
 
அனைத்துப் பொறிமுறைகளும் சிதறும்?:
 
 
இப்போது உருவாகும் பிரச்சனையானது தத்துவார்த்தம்,எதிர்த்துவார்த்தம் என்ற இரண்டு தளங்களாகும்.இங்கு நிறுவப்பட்ட-நிறுவனப்பட்ட மாபொரும் கருத்தாடலானது பொருளாதாரத்தில் புதியவொரு பொறிமுறையை நிறுவிக்கொள்ள தூண்டுகிறது.இதை வலப்படுத்தும் இன்றைய உலக வங்கியானது மனித முகத்துடனான... என்ற முகமூடியைத் தாங்கிப் பாசாங்கு செய்கிறது.இதன் உச்சக்கட்டமானது மூன்றாமுலகைச் சுற்றியே திரடர்களைக் கனவுகாணத் தூண்டியுள்ளது.இதன் பலாபலன் மினரல் வாட்டர் குடிப்பதற்கும்,சொகுசு வாழ்வு வாழுவதற்கும் பாமரரைத்தூண்டிக் கொள்வதும் அதனூடாக அனைத்து இயற்கைவளத்தையும் கொள்ளைபோடுவதே பொறிமுறையாக விரிகிறது.
 
 
சில்வியோ கேசலின் சுதந்திப் பொருளாதாரப் பொறிமுறையானது மூன்றாமுலகப் பொருளாதாரவலுவை முன் வைத்தே தோற்றம் பெறுகிறது.அவரது கனவானது உலகப் பெரும் முதலாளிகளை வலுவிழக்க வைத்து,முதலாளியச் சந்தையை மக்கள் சந்தையாக்கி அனைவரும் பங்குபற்றி மனிதாபிமானமான முதலாளியப் பொறிமுறையைக் கட்டுவதே.எனினும் இதுதாம் உடோப்பிசமாக விரிகிறது.இன்றிருக்கும் 'வர்த்தகக் கொன்சேர்ன்கள்' மட்டற்ற சுரண்டலில் புரண்டுவரும்போது இவர்களிடமிருக்கும் அதிகாரமானது எதார்த்தில் அழிக்கப்பட முடியாத வலுவாகும்.இதைப் பொருளாதார மறுசீரமைப்பால் நிகழ்தப்பட வாய்ப்பேயில்லை.இந்த அதிகாரமானது வளர்ந்து விருட்சமாகிய விஞ்ஞானத்தின் துணையோடு தன்னைப் பிணைத்தே வளர்கிறது.இதன் வலவானது சந்தைகளில் செல்வத்தைப் பொருட்களில் ஸ்தூலமாக்காது வெறும் காற்றில் ஸ்தூலமாகிறது.இது செய்மதிகளின் வளர்ச்சியோடு அதைச் சந்தைப் படுத்தும் பொருள்களின் வடிவங்களாக்கின்றன.கைத் தொலைபேசி,செய்மதித் தொலைக்காட்சி,இணைய-தொலைத்தொடர்புத் துறைக் கம்பனிகளென பொருளாதாரத்தில் 'பொருட்களின் இருப்பு' அழிக்கப்பட்டு காற்றே(அலைகள்?) பொருட்களின் இடத்தைக் கைப் பற்றியுள்ளன.
 
 
கேய்னிசமானது நீண்டகாலத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியாது போய்விட்டது.அவ்வண்ணமேதாம் மார்க்சியத்தின் சோஷலிசக் கட்டுமானம் தன்னைக் காத்துக்கொள்வதற்கான உற்பத்தியூக்கத்தையும்,அதைக்காப்பதற்கான வியூகத்தையும் மக்கள் பண்பாக மாற்றாத வடுவைச் சுமக்கிறது.இந்தப் பண்புமாற்றம் கல்வியில்,கலைபண்பாட்டில் வளர்த்தெடுக்கப்படாத போக்கால் மதில்களும் ,கம்பிவேலிகளும் நாடுகளைச்சுற்றி எழுந்தன.இதுவும் மூலதனவாதிகளிடமிருந்து இவ் நாடுகளைக் காக்கவில்லை.இதை நாம் தனியே விவாதிப்போம்.
 
 
மூலதனத்தில் ஏற்பட்ட மொனோப்போல் சுழற்ச்சியானது மாபெரும் 'கொன் சேர்ன்களை' உருவாக்கியது.அதுவே உற்பத்தியில் ஆதிக்கத்தையும்,சந்தையில் தீர்மானகரமான பாத்திரத்தையும் கைப்பற்றியது.இதன் மூன்றுகால் பாய்ச்சல் அதிகாரமானது நடுத்தர உற்பத்தியாளர்களைக் காவுகொண்டு,தேசங்கடந்த கம்பனிகளையுருவாக்கி உற்பத்தியின் அனைத்து சாத்தியங்களையும் தனது வலுவுக்குள் திணித்துள்ளது.இதைமீறும் போராட்டமானது தேசங்கடந்தவொரு புதியபாணியிலான கூட்டைத் தொழிலாளர்களுக்கும்,நடுத்தர உற்பத்தியாளர்களோடும் இணைக்கும் காலமானது வெகு தூரத்தில் இல்லை.
 
 
இதன் அர்த்தமானது அனைத்துப் பொருளாதாரப் பொறிமுறைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்தில் சிதிறிவிடுமென்பதே.இதற்கான காரணமானது மக்கள் நலவாழ்வோடும்,தொழிலாளர்களின் உரிமைகளோடும் சம்பத்தப்பட்டது.
 
 
 
இன்றுள்ள பிரச்சனையானது பொருளாதாரம் பற்றிய கணிப்பீடுகள் எதைநோக்கியது என்பதாகும்! பங்குச்சந்தையின் உறுப்பினர்கள்(பங்காளர்கள்) தமது வருமானத்தைக் கட்டிக்காப்பதும்,மூலதனத்தைப் பெருக்குவதா அல்லது நாட்டினதும்,குடிகளினதும் நல்வாழ்வுக்காக உழைப்புப்பிரிவினையகற்றிய சூழலையுருவாக்கி முழு மக்களுக்குமானவொரு பொருளாதாரத்தைக் கட்டிக் கொள்வதா?இந்தச்சிக்கலானதுதாம் மக்கள் நல்வாழ்வைப் பற்றிய கொள்கையுடைய சிந்தனையாளர்களை பெரிதும் பாதித்தது.இவர்களில் முக்கியமானவர் திரு.மார்க்ஸ் அவர்களே, வரலாற்றில் மிக முக்கியமான சிந்தனையைச் செய்தார்.எனினும் இந்த நூற்றாண்டில் மீண்டும் ஆரம்ப நிலையில் பலவற்றைச் சொல்லவேண்டியுள்ளது.கடந்த காலங்களில் பொருளாதார வளர்ச்சியானது பல மடங்கு உற்பத்தித் திறனை வளர்த்துள்ளது.இது பாரிய உபரி வருமானத்தை முதலாளிகளுக்கு அள்ளி வழங்கியும் நாடுகள் திவாலாகிறது.முதலாளிகள் மட்டம் உயர்ந்துயர்ந்து செல்கிறது,இது எங்ஙனம் நிகழ்கிறது?
 
 
 
மார்க்சினதோ அல்ல சில்வியோ கேசலினதோ நோக்கம் வேறுபட்டமாதிரியான முறைமைகளில் மக்களின் அவலத்தை நீக்குவதாக இருக்கிறது.இஃது ஆடம் சிமித்திடம் துளியளவேனுமில்லை.ஆடம் சிமித்துக்கும் மார்க்சுக்கும் குறுக்கால் கோடுகிழித்து புதியவொரு கனவை விரித்திட்ட கேசல் இன்றைய பணமுறைமையையும்,வட்டி-வட்டிக்குவட்டி முறைமையைத்தாம் சமூக ஏற்றதாழ்வுக்குக் காரணமாக முன்நிறுத்துவதால் அவர் இறந்த பின்பும் அவரது கொள்கையை புரட்சிக்கெதிராக முன்நிறுத்தும் புத்திஜீவிகளை இன்றைய பல்கலைக்கழகங்கள் உலகெங்கும் உருவாக்கிவிட்டுள்ளது.இந்தப் புத்திஜீவிகளின் தொந்தரவே நம்மையின்னும் கேவலமாக புத்தியொடுக்குமுறை செய்கிறது.இது சிந்தனையின் அனைத்து முறைமைகளையும் ஒற்றைப் புரிதலோடு பொருத்துகிறது.இது தாரளமாகக் கற்பனையுலகைத் தயார்ப் படுத்துகிறது.இந்த உலகத்தின் பிரதியீடாக நம்முன் எஞ்சி நிற்பது 'ஆளுமையுடையவர்கள்-அறிவாளிகள் 'மேலும்,மேலும் வசதியாக வாழ்வை அமைக்கமுடியும்-அறிவற்ற மூடர்கள்தாம் வறுமையில் கிடதளுந்துகிறார்கள் என்ற வாதம்.இங்கு பல்லாண்டாக-சுமார் 5000 வருடங்களாகக் கட்டியமைக்கப்பட்ட பூர்ச்சுவாக் கருத்தியல் மிகவும் வர்ணந்தீட்டிய பொலிவில் நம்முன் மீளவும் கொணரப்படுகிறது.இத்தகைய மொன்னைப் பேச்சானது இருஷ்சியாவையும்,கிழக்கைரோப்பிய நாடுகளையும் சோஷலிசத்தின் தோல்வியின் முகமாகவும்,சீனாவை அதன் படிப்பினையாகவும் காட்டமுனைகிறது.இது தாம் நவ காலத்து முதலாளியக் கருத்துகளில் புதிய பாணியிலான கருத்தாதிக்கம்.இதைக் கொப்பிபண்ணும் மூன்றாமுலகப் படிப்பாளிகளிடமிருக்கும் கட்டுப்பெட்டித்தனமானது அதைச் சமூகத்தளத்தில் பொருத்திப்பார்க்கும் அறிவற்ற நிலையில் தாம் படிப்பாளிகள் மட்டுமேதாம் புத்திஜீவிகளில்லையென்பதைச் சொல்கிறார்கள்.
 
 
 
இதைக் கடந்து நாம் இக்கட்டுரையின் இறுதியில் விமர்சிப்பதாகக் குறிக்கப்பட்ட மார்க்சியப் பொருளாதார முன்னெடுப்பின் தோல்வியாக முன் மொழியப்படும் இரஷ்சியாவையும் கிழக்கைரோப்வையும் மனதிலிருத்தி-இதன் சரிவு எதைக் குறித்தரைக்கிறதென்பதை நோக்குவோம்.
 
 
அடிமட்ட,மேல்மட்ட அமைப்புகள்:
 
 
வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்யூனிச அறிக்கையின் ஆரம்ப வாசகம்.இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள்.நாம் ஒரே மொழியைப்பேசி,ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல.நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு!அடக்குபவர்களாகவும்,அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம்.இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது.அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.
 
 
 
இன்றைக்கு நாம் படும் வேதனையும்,கொடுமையான அடக்கு முறைகளும் வெறுமனவே நல்லது கெட்டதுதெனும் ஒற்றைப்புரிதலுக்கிட்டுச்செல்லும் முதலாளியக் கருத்தியல்ப்பரப்புப்படி நிகழ்வதல்ல.அஃது உடமை வர்க்கத்தின் தனியுடமைகளைக் காப்பதெற்கெடுக்கும் முயற்சியாக விரிகிறது.
 
 
 
இங்கே தனியுடமை வர்க்கமானது சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளை(உற்பத்திக்கான மூல வளம்,ஜந்திரங்கள்,நுட்பங்கள் இன்னபிற) ஒருசிலரின் உரிமைகளாக்கிய பின் அதைக்காப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துகிறது. இங்கேதாம் 'பொருளாதாரம்' எனும் செல்வத்தைக் கருத்து நிலைக்கு மாற்றும் விந்தையும் பின் அதையே அடித்தளமாகவும்,அந்தத் தளத்தைக் காப்பதற்கான மேல்மட்டக் 'காப்பரண்களாக்' கட்டியமைக்கப்பட்ட தேசவுருவாக்கமும் அது சாhந்த 'வன்முறை-வன்முறையற்ற'வடிவங்கள் தோன்றுகின்றன.இவை பொலிஸ்,இராணுமென்றும்,நீதிமன்றம்-சிறைக் கூடமென்றும் ,சட்டம்-அரசு என்றும் வன்முறையமைப்புகளையும்,கல்வி-மதம்,கலை-பண்பாடு,ஊடகங்களென்று பற்பல ஊடகங்களை வன்முறையற்ற வடிவமாகவும் வைத்துத் தமது பொருளாதாரப் பொறி முறையைக்கட்டிக் காக்கின்றன. இங்கே நாமெல்லோரும் ஏதோவொரு வடிவத்தில் அடக்கியொடுக்கப்பட்ட ஜீவன்களே!ஏனெனில் இந்த உற்பத்திச் சக்திகளோடு நாம் உயிர் வாழ்வதற்காக உறவுகொள்ளவேண்டியே ஆகவேண்டும்.இந்த நிகழ்வுப் போக்கானது உழைப்பிலீடுபடும் எவரையும் சுதந்திரமான முறைமைகளில் இயங்க அனுமதிப்பதில்லை.பேரளவில் சுதந்திராமாக இருப்பதாகக் கருதும் நாம் 'பலவழிகளிலும்' அடக்கியொடுக்கப்படுகிறோம்.
 
 
 
வர்க்கப்போராட்டத்தில் சோஷலிசத்தின் வீழ்ச்சியும்,தொழிலாளர்களின் இன்றைய நிலையும்:
 
 
பால்யப் பருவ சோஷலிசக்கட்டுமானது முதலாளியத்துக்கு மாற்றாகவே நிறுவப்படுகிறது.முதலாளியத்தினது முரண்பாடுகளால் அதைத்தூக்கியெறிந்துவிட்டுத் தாழ்த்தப்பட்ட வர்க்கமானது தனக்கான உரிமைகளைக் கையிலெடுக்கும்போது-உரிமையையிழந்த வாக்கத்திடமிருந்து பற்பலச் சதிகள்-வெளிநாட்டுச் சக உடமைவர்க்கக்கூட்டோடு நடப்பதைத் தடுப்பது மிக,மிக அவசியமானவொரு திட்டமாக மாறிவிடுகிறது.இது திட்டமிட்ட மக்கள் நலத் திட்டங்களைக்கூட நிறைவு செய்ய முடியாதளவுக்குக் குறிப்பிட்டவொரு சோசலிச நாட்டைப்பாதிக்கும்.
 
 
சமூகம் பகை முரணியல்பான வாக்கங்களாகப் பிளவுபட்ட சூழலையெப்படி முதலாளிம் உருவாக்கியதோ,அதை அந்த வர்க்க நிலையிலிருந்துகொண்டே சோஷலிச முகாமும் எதிர்கொண்டிருக்கவேண்டும்.ஆனால் முதலாளியமோ தனது வாக்கப்போராட்டத்தில் மிகக் கவனமாக இருந்தபோது,சோஷலிச முகாம் மக்கள் நலனையும்,முதலாளியப் பாசிச வர்க்கத்தின் இரண்டாவதுமுறையான உலக மகாயுத்தத்தையும் ஒருங்கே எதிர்கொள்வதில்போய் முடிந்தது.உள்நாட்டு உடமையிழந்த வர்க்கமானது மிகவும் ஆபத்தான வாக்கமாக மாறிக் கொள்வதற்கானவொரு சூழலை இரண்டாவது உலகயுத்தம் ஏற்படுத்தி அதைத் தகவமைத்துக் கொடுத்து.
 
 
சோஷலிசம் வெற்றியடைவதும்,தோற்பதும் அதன் வர்க்கப்போராட்டப் பலத்தினதும்,மக்களின் கருத்துநிலைவளர்சியிலிருந்து கூட்டுவுற்பத்தியின் ,உற்பத்தித் திறனிலும் அடங்கியிருக்கிறது.இதைச் செய்யத் தூண்டத்தக்கவொரு தலைமைத்துவத்தை புரட்சிக்கட்சியானது சகல வழிகளிலும் அன்று திடீரென குறைந்த ஆயுளிலேயே இழந்ததும் இந்த முகாமைப் பாதிக்கிறது.
 
 
இதன் தாக்கமானது சோஷலிசத் திசையமைவை மிகவுமொரு நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது.இதிலிருந்து மீளக்கூடியவொரு முனைப்பை அந்த முகாம் பெறுவதற்குள் உள்நாட்டுப் பழைய உடமை வர்க்கமானது மிகவும் காட்டமானவொரு போராட்டத்தை உலக முதலாளித்துவத்தோடு சேர்ந்து காரியமாற்றியது.இன்றைய வளர்ச்சியுறும் தொழில் நுட்பமானது முதலாளியத்தைத் தக்கவைக்கத்தக்கவொரு வலையமாக விருந்து மேவுகிறது. இதன் காட்டாமான உந்துதலோடு பெரு மூலதனம் கைக்கோர்க்கும்போது 'புரட்சியின் அவசியம்' முன்னெப்போதையும்விட இப்போது அவசியமாக மக்களிடத்தில் உணர்வுருவாகுமென்று நம்பலாம்.இதுதாம் நிசமான வரலாறாக இன்னொரு லெனினைத் தொழிலாளி வர்க்கம் தகவமைக்கும்,ஆனால் இது ஒரு எல்லைக்குள் உட்பட்டதாக இருக்க வாய்பேயில்லை.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare: