Sonntag, 29. November 2009

இசையால் உண்மையுறும் பொருள்

தமிழின் இளமைகொண்ட பார்வதி,
இசையால் இதயத்தைக் குடைய...
 
ரு சினிமாப் பாடல்.எப்போதும் கேட்டு இரசித்த பாடல்.இசை கோர்த்திருந்தவர்,என் விருப்புக்கும்,மதிப்புக்கும் உரிய இளையராசா.
சினிமாப் படத்தில் ராதா, மோகனின் வரவை எண்ணி,மகிழ்ந்து-ஏங்கித் தவிதித்துக் குரல் எடுத்துப்பாட எமது நெஞ்சை அள்ளிய பாடல் இது.அந்தக் காலம் அகதிய வாழ்வின் ஆரம்பக்காலம்!அப்போது, இத்தகைய படங்கள்-பாடல்கள் நமது ஊர் நோக்கி, ஏங்கித் தவித்த தவிப்புக்கு ஏதோவொரு வகையில் வடிகால் அமைத்திருந்தன.


நாம்,அழுதும்,மகிழ்ந்தும் அவ் வாழ்வை ஏற்க முனைந்த திசையில், எமக்குத் தாயாக-தந்தையாக எமது உச்சி மோந்து எம்மை மனமுடக்கத்திலிருந்து காத்தவை இந்தச் சினிமாக் கனவு வாழ்வுதாம்.


"ஊருசனம் தூங்கிடிச்சி,ஊதைக் காத்தும் அடிசிடிச்சி..."

மொழி திரண்டு,இது தமிழா இல்லை அமுதாவென என் நெஞ்சு ஏங்க, என் மொழியை உளமெங்கும் புகுந்து விளையாட வைக்கும் இந்தச் சின்னப் பொண்ணு பெயர் பார்வதி.

எனது மனதின் ஏதோவொரு கோடியில் இன்றும் உறங்கும் கண்ணன் சேர்.அவரது முகம் இந்தப் பொண்ணில் மிளிர, அவரது சிறுகதையொன்று என் மனதில் மீள அலையடிக்கிறது."வசந்த ருதுவும் வண்ணமலர்களும்" என்றவொரு சிறுகதையில், என்னைச் சுண்டி இழுத்தவர் நா.கண்ணன் அவர்கள்.

அழகாகவும்,அற்புதமாகவும் உரையாற்றத் தெரிந்தவர்!
 
தமிழை இவ்வளவு அழகாக இரசித்துப் பாடும் இப் பொண்ணு, தன்னுள் எம் மனதைக் கரைத்து ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கின்றாள்.அற்புதமான குரல் அவளது முக பாவனையோடு சேரும்போது, இசைத் தமிழை வானுயர உச்சிக்கு அழைத்துச் செல்கிறாளே இத்தச் சுட்டிப் பொண்ணு!
அப்பப்பா,தென் கோடி இந்தியாவில் உதித்த என் அற்புதமான மொழி,இவளோடு அழகுறும்போது,இவள் கலைச் செல்வியாகி,தாமரையில் இவளை எனது மனம் இருத்திப் பார்க்கிறது.


என் விழிகள் பெருமையோடு பனிக்கின்றன.

பாவை!


 
 http://www.youtube.com/watch?v=KRkW4cgNCbU

பார்வதி கொல்லும் முக பாவனையால் என் அகத்தில் ஏழ்மையை அள்ளித் தெளிக்கிறாள்.பாடும் திறமையற்ற எனது நிலையுள் அவள் கோடீஸ்வரி!பொறாமையோடு கண்ணீர் சொரிகிறது.என்னவொரு இரசிப்பு.இசையோடு குழைந்து போகும் அவள் குரலும்,அகமும்,முகமும் அற்புதமானவொரு வெளிக்குள் எம்மைத் தள்ளி அநாதையாக்கிறாள்."எனக்கொரு புதல்வி" இல்லையேயென ஏங்க வைக்கும் இந்தக் குமரி,தமிழையும் இவ்வளவு இனிமையாக்கும் அற்புத ஆற்றலை எப்படிப் பெற்றாள்?இவள் தான் தமிழா-தமிழின் குமரித்தனம் இவளோடு உறவாடுகிறதா?பார்வதி நீ தமிழின் தோழியடி செல்வி!
 
உழைப்பு,
இடைவிடாத பயற்சி.

அரிய சங்கீதக்கலை வியாபாரப் பொருளானபோது, அதை அவள் பெறுவதற்கான தகுதியில் அவள் பெற்றோர் இருந்திருப்பர்!
 
வீதியெங்கும் சிறார்கள் கல்வியின்றி...
 
என்றபோதும்,அவள் குரலெடுத்து உயர் ஒலியில்,"குயிலு கருங்குயிலு மாமன் மனம் குயிலு,கோலம் போடு பாட்டாலே"எனப் பாடும் ஒவ்வொரு தருணமும் நான் இக்குரல் கேட்ட கணமே மரித்துவிட முனைகிறேன். முடியவில்லை.இன்னும், ஒரு தடவை அவள் பாவனையோடு என் தாய்மொழியைக் கேட்க மனம் துடிக்கிறது.
 
இப்பாடலில் எத்தனை கனிவுடைய வார்த்தைகள்!
எழுதினவன் எவன்(ள்)?
மனசைச் சுண்டும் மொழிக்குக் கோலமிட்ட நங்கை, நெஞ்சை நிறைக்கும் எனது விருப்புக்குக் குழைத்துத் தரும் இசைக் கோலம் இளையராசாவின் கைவண்ணம்!
 
"மச்சானைப் பார்த்தீர்களா"வெனக் கேட்டு, என் மனசோடு ஒட்டியவன், இப்படியும் என்னைக் கொல்லும் இசைகளை ஆக்கி வைத்துள்ளானே!
எம் தவப்பயனில் கொலைகளையும்,கொல்லை நிறைந்த மனிதவுடல்களையும் நிரப்பிய இந்தக் காலத்தில், அழுகையின் நடுவே ஆனந்தக் கண்ணீரும் சிந்த வைக்கும் பார்வதி, என் மனதெல்லாம் நிறைந்து தமிழாக விரிகிறாள்.
 
இத்தனை கோலத்தைப் போடும் அவள் முகம், அம்மனது ஆனந்தத் திருமுகமாய் எனக்குள் வரிவதில் என் தாயினது குரல் அம்மன் தாலாட்டாய் எனது நோய் அகற்றிய அன்றைய காலம் மனதை மீளவும் ஊர் நோக்கித் துரத்துகிறது.பார்வதியின் அற்புதமான முகபாவமும்,குரலும் என் தாய் அருகிலமர்ந்து பாடிய அம்மன்தாலாட்டைக்கேட்ட அந்தப் பால்யப் பருவத்தை விழிமுன் நிறுத்த, ஏதோவொரு திசையில் பார்வதியின் பின்னால் மனம் பறந்தோடுகிறது-கால்கள் தரையில் நிற்க மனம் இறக்கைகொண்டு உயரப்பறக்கிறது!

அடி,பாவையே!

பதுமையான உனது குரல், என் மொழிக்கு ஊஞ்சல் கட்டித் தாலாட்டும்போது நான் உன் காலடியில் சருகாய்க் கிடக்கேனோ என மனது பிராண்டுகிறது.மௌனித்திருக்கும் இந்த இராப்பொழுதில் ,உன் பாடலுடன் நான் இசைந்திருக்க விடியல்பொழுது மெல்லச் சந்தியாவந்தனத்தை அடைகிறது.
 
இது இசைக்கும், குரலுக்கும்,மொழிக்குமான உறுவு.
மொழி இசையால் மெருக்கேற பார்வதியின் குரல் அகத்தில் ஆலவட்டம் வீசுகிறது.

தேவனது இருப்பென்பது ஒலியில் அர்த்தமாகுமென ஊகிக்கின்றேன்.
 
இந்த அண்டம் ஒலியால் நிரம்பிய வெளி.அது,இசையால் உண்மையுறும் பொருள்!!ஓலியே அநாதி.
 
இவ்வெளியில் சஞ்சரிக்கும் ஒவ்வொரு அலையும் மொழியினது இலயத்தைக் கொண்டவையாகவும் இருக்கும்.உயிரொலியாய் உளமெல்லம் மேடை அமைத்துப் பாடலுடன் பார்வதி முகம் அசைக்க, நான் சிவனது நிலையில் நடனமிடத் துடிக்கிறேன்.எனது வினைப்பயன் எனக்குக் கலை என்பது கைகூடவில்லை!

காலத்தின் ஏதோவொரு எல்லையில் சிறைப்பட்ட எனது இருப்பு, நூலறுந்து பனை மரத்தில் சிக்குண்ட பட்டம்போன்று,பனை மரத்தில் பட்டுத்தெறிக்கும் காற்றில் கிழிபடுவதுபோல் எனது உயிர் கிழிபடுகிறது.

எல்லாம் வாழ்வினது ஒவ்வொரு பகுதிகளாக ஏதோவொரு பொழுதில் எதையோ உரைத்திருக்க,பார்வதி பாடலுடன் எனது செவிகளது ஏதோவொரு முனையில் கீதமாகிறாள்.

அவள் இசையின் சுருதி.எமது மனவெளியில் கொலுவுறும் கலைச் செல்வி-தமிழாய் அமரும் அற்புதக் குரல்வளக் குமரி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்.
29.11.2009
வூப்பெற்றால்;
ஜேர்மனி

2 Kommentare:

சயந்தன் hat gesagt…

இதுக்கு நான் என்ன மறுமொழி இடலாம் அண்ணை..?

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

//இதுக்கு நான் என்ன மறுமொழி இடலாம் அண்ணை..?//


".................."தருணம் பார்த்து இடேன்டா தம்பி!,

எனக்கொரு நியாயமும்,உனக்கொரு நியாயமும் என்னால் சொல்லப்பட்டதெனின்,என் மூஞ்சியில் குத்த்த மாட்டாய்தானே?பார்த்துப் போடு,எதையாவது...