Donnerstag, 21. Januar 2010

சின்னக் கண்ணன் அழைக்கிறான்...

சின்னக் கண்ணன் அழைக்கிறான்...

ன்பு நண்பர்களே,என்னத்தைச் சொல்ல!உங்களோடு பேசிவிடத்தக்கதான மனமுடக்கம்-மகிழ்வு,அழுகை,சிரிப்பு,சிணுங்கலென எனது உலகத்தில் ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி...இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்துபோனாள்.

வயது 77.

"தானுடண்டது பேய் உண்டது,பிறருண்டது சிவனுண்டது"என்று சொல்லிச்சொல்லி எமக்கூட்டியவள்-"தானுண்டவள் பிள்ளை வளவாள், தவிடுண்டவள் கோழி வளவாள்"என்று முதுமொழியுரைத்து, எமக்கு ஊட்டியவள் வீழ்ந்துபோனாள்.எப்போது இவள் மரிப்பாளென நாட்பாத்திருக்கும் நிலையாய் அவளது வாழ்வு படுக்கையில்...

அன்னை!

அற்புதங்களைச் செய்பவள்.அடுப்புக்குள் எரிந்து மீள்பவள்!அணைத்தெடுத்து அமுதூட்டியவள்.அவளை எண்ணியபோதெல்லாம், அவளாள் உறவுகளாய்ப் பிணைந்த குருதிக்கூட்டம் அகம் நிறைக்க.அக்கா-தம்பி,தங்கை-அண்ணாவென அது நீண்டுபோகும்.எப்போதெல்லாம் மனமுடக்கமோ, அப்போதெல்லாம் நான் மகிழ்ந்திருக்கும் பொழுதுகளுக்குள் என்னைப் புதைப்பது வழக்கம்.கிஞ்சித்தும் துக்கித்து இரேன்.

துக்கம்-சோகம் எனக்குரிய உணர்வு இல்லை!

என் வாழ்வில் சோகந்தரும் பாடல் எனக்கு நெருக்கமானதில்லை.அழுகையிலும் சிரித்திருக்கும் எனது மனத்துக்கு, இந்தப் பாடல் என்றுமே பிடித்தது.




கேட்டுப் பார்க்கிறேன்.சோகம் துரத்தும் ஒரு அற்புதம் இதன்வழி...

கடந்தகாலத்தில், எனது பால்யப் பருவந்தாண்டிய பொழுதில் இப்பாடலைப் பாடியிசைத்த பொழுதுகளில் காதல் மலர்ந்திருந்தது.காதலில் சுவைக்கு அதிகமாக இனிப்பிட்டவள்,இப்போ எங்கோ ஒரு மூலையில் எவன் கரம்பிடித்து...

அன்னையைப்"பேய்க் காட்டி"அவளுக்காக இசைத்த பாடல் இது.டாக்டர் பால முரளிகிருஷ்ணா எனக்காகவே பாடிய பாடலாக...இது, என்றுமே என்னால்-என்னவளால் விரும்பப்படுவது.

எனது பதின்ம வயதில், இனித்திருந்த இலங்கை வர்த்தக சேவையில் என்றுமே மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உண்டு.அவர்கள் இருவருமே எமக்கு இருவிழிகளாக...

ஒருவிழி கே.எஸ். ராஜா,

மறுவிழி பி.எச்.அப்துல் ஹமீத்.

இந்தப் பாடலில் அவர் தொகுக்கச் சிறுமி ஒருத்தி எனக்கான பாடலைப் பாடுகிறாள்.

அம்மா.

அற்புதங்கள் செய்பவள்.அடித்தாலும்,அரவணைத்தாலும் அவளாலேதாம் அனைத்தும் ஆகுவது.அவளின்றி, எனக்கு எதுவுமே ஆவதில்லை.

எனது பால்யப் பருவத்திலேயே அவளுக்காய் என்னைத் தொலைத்தவன்.அன்பு, அம்மா என்பதாக...

காதலும், கனவும் தவித்திருந்த பொழுதில் அம்மாவுக்கு மறைத்து, அகமகிழ்ந்திருந்த அர்த்தமிக்க பொழுதில் அம்மாவை ஏமாற்றிச் சிறகடித்த பொழுதின் அம்மா ஞாபகத்தில்...

அந்த அம்மா படுக்கையில் வீழ்ந்து உயிர்விடத்துடித்துக்கிடக்க...


ப.விஜயரெட்னம் ஸ்ரீரங்கன்
21.01.2010

Montag, 18. Januar 2010

பெரியாரது பாதையில் பாட்டுக்கட்டிப்பாடுகிறான் மயூரன்.

"அம்மா பகவான்,சாயிபாபா,கல்கி-கடவுள்,சாமி",அவதாரங்கள்(...) அனைத்தும் செத்துமடியும் நலிந்த சமுதாயத்தின் வடிகாலாகப்பட,பரந்தபட்ட மனிதர்கள் இவர்தம் கால்களில் செருப்புகளாகக் கிடக்கின்றனர்.மக்களது வலியைத் தமது இருப்பின் படிக்கற்களாக்கிக் கோபுரத்தில் கலசமாகத் தம்மைக் குவிக்கும் இவர்களது கலை?...

பேசப்பட வேண்டியது!கூடவே,தடுத்தும் நிறுத்தப்படவேண்டியது.சந்தியில்வைத்துச் செருப்பால் அடித்து வெருட்டப்படவேண்டிய கயவர்தாம் இவர்கள்!

"அவதாரங்கள்"


//எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்

பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?//


நாடிபிடித்து இவர்தம் நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்துவது மிக அவசியமானது.மயூரன், அற்புதமாக எழுந்து,இவர்களைக் குறிவைத்துக் காறி உமிழ்கிறான்.கவிதைகொண்டு இக் கயமைமிகு மனிதர்களைக் கேள்விக்குட்படுத்துகிறான்.இது,மானுடர்தம் விடுதலைக்கு அடிப்படையான எதிர்க் கலை முயற்சி.

"கலை".

கலை என்பது என்ன?

இக் கேள்வியின் தொடர்ச்சியுள் பற்பல தத்துவங்கள் மனிதவுணர்வுக்குள் அநுபவப்பட்டுள்ளன.கலையினது உயிரே கலைக்காகவென்றும் அது,மனிதவாழ்வுக்குச் சேவிக்க முடியாதென்றும் பற்பல வாதப்பிரதிவாதங்கள் நடந்தேறிவிட்டன.டறாக்கோனியிச(Draconian constitution)தீர்ப்புகள்,மக்கள் மடியிலிருந்து கலையைத் தட்டிப்பறித்துக்கொண்டது.இந்தக் கலைவடிவமானது மனிதப் படைப்பாற்றல் அனைத்தையுமே உள்ளடக்கிய நிகழ்த்துகை என்பது எனது புரிதல்.

இசை,நடனம்,நாடகம்,இலக்கியம்,சிற்பம் என்பதையெல்லாம் உள்ளடக்கிய நுண்கலையானது, இன்று பன்முகத் தன்மையில்வைத்து மனித ஆற்றலுடன் பேசப்படவேண்டியிருக்கிறது.கலை, மக்களுக்கானது.மக்களிடமிருந்து உருவாகுவது.ஆன்மீகங்கூட ஒரு வகையில் மனிதப்படைப்புத்தாம்.அங்கே,படைப்பாற்றலே ஆத்மீகவுறவைத்தீர்மானித்தது.இறையென்பது மனித ஆற்றலின் அற்புதமான வெளிப்பாடு.படைப்பினது உச்சத்தில் மனிதர்கள் தம்மை இறை நிலைக்கு உயர்த்துவதே இறையுட் கோட்பாடாகி இருக்கவேண்டும்!என்றபோதும்,கடவுளைவைத்துக் காசுகாணும் இழிமைத்தனத்துள் மனித உறவுகள் கீழ்மைப்பட படைப்பாற்றலைத் திருடியது ஆதிக்கம்-அதிகாரம்.அன்றைய,கிரேகத்தில் டறாக்கோனியினது அமைப்பில் நீதீயாகவும் இவை நிலைபெற்றன.

இன்று,மக்களினங்கள் தமது படைப்பாற்றலால் பிளவுப்படவில்லை.அதைச் சந்தைப்படுத்துவதில்,நுகர்வுக்குட்படுத்துவதில் பிரிவுகள்-பிளவுகள் ஏற்படுகிறது.அங்கே,ஆதிக்கம்,அதிகாரம் கலையின்மீது பண்பாட்டு மேலாதிக்கத்தை வர்த்தகக்கண்ணோட்டத்துள்ளும்,இனஞ்சார் மேன்மையிலும் உருவாக்கிக்கொண்டதன் பின்பு, இறைநிலை கடவுளாக மாற்றப்பட்டு இன்றுவரையும் இந்த அமைப்பின் விளிம்பில் இருப்பவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.அதன் துணைகொண்டு, உளவியல்ரீதியாகவும்,பௌதிகரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள்.இது,முற்றுமுழுதாக மனித ஆற்றலை அக ரீதியாகவும்,புற ரீதியாகவும் சுரண்டியபடி மேட்டிமைக் குழுவிடம் ஒரு ஆயுதமாக அவர்களுக்குச் சேவை செய்கிறது!

சமூகத்தின் மீது கணிசமான தாக்கத்தைச் செய்யும் இறைசார் வாழ்வுநிலை,மக்களின் பெரும்பகுதியை மிக மோசமாக ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டத்தின் திமிர்த்தனமான ஒடுக்குமுறையாகவும்,அதிகார நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.இது,மனித நடாத்தையின் அனைத்துப் பரிணாமத்தையும்,கருத்தியல் தளத்தில் காவுகொண்டபடி மனித அமைதிக்கு எதிராகச் செயற்படுகிறது.

"இது மதம்!"

மதம் மக்களுக்குப் போதை.தூக்கத்திலாழ்த்திக் கட்டிய துணியையும் உருவிவிட்டு மனிதத்தை அம்மணமாக்குவது.


Ammaa Bhagavan Song Tamil from mauran on Vimeo.




அற்புதங்களையும்,அவதாரங்களையும் கட்டித்தகவமைக்கும் ஒரு நிலையாகப் படைப்பாற்றலிதனால் சீரழிந்துபோகிறது.மனிதர்கள் தம்மை ஒடுக்கும் அதிகார நிறுவனத்திடம் தமது படைப்பாற்றலைப் பறிகொடுத்து, அதனால் சுரண்டப்பட அனுமதித்துள்ளார்கள்.இது,மேலும் மனிதர்களைக் குறுக்கி அகரீதியாக ஒடுக்குவதில் இந்தக் கடவுள் நிலை மிகவீரியமான கருத்தியல் ஒடுக்குமுறை ஜந்திரமாக மதங்களைப் படைத்துக்கொண்டது.இங்கே,மகத்தான மனிதத் தேடல், அதே மனிதக் குழாத்தை வேட்டையாடுவதில் மிகப்பெரிய ஆதிக்கச் சக்தியாக-அதிகார பீடமாக நம்முன் நிலைபெற்றதன்தொடரில் அது,பொருளாதார அடிக்கட்டமானத்தின் மேல்மட்டப் பாதுகாப்புக் கவசமாக-அமைப்பாகிச் சீரழிந்து மக்களது ஆத்மீகத் தேவைக்குக் குறுக்கே நிற்கிறது.இது,பெரிதும் நோவுடைய வலி.

இந்தவலியைச் சொல்வதில்,அதே கலைத்துவப் படைப்பாற்றலுடன் மயூரன் சமூகத்தின் விளிம்பில் நிற்பவர்களோடு தன்னைப் பிணைத்து, கயமைமிகு ஆதிக்கச் சக்திகளிடம்-கடவுள் அவதாரக் கள்வரிடம் பலியாகும் தன்வர்க்க மனிதருக்காகக் குரல் கொடுப்பதில் கலகக்காரனாகிறான்.


* Is this what "God-Kalki-Samy" purposed for me and for the rest of mankind?,

* Where can I find help to cope with my problems?,

* Is there any hope that we will ever see pease on the earth?.


இத்தகைய கேள்விகள் இவ்புவிப்பரப்பெங்கும் வாழும் மனிதர்களுக்குப் பொதுவாகப் பொருந்தியுள்ளது.

இதற்குப் பதில் பைபிளில்,பகவத் கீதையில்,குரானில் இருப்பதாகவும் இத்தகைய"அவதாரங்கள்"சொல்லக் கேட்டோம்.இஃது, பல்லாயிரம் வருடங்களாகத் தொடரும் கதை.இதை எதிர்த்த புத்தனும் கடவுளானான் இவர்களால்!என்ன கொடுமை இது!

பெரியார் வந்தார்.பேரடி கொடுத்தார்.என்றபோதும்,மதம்மீதான மடமை மீளவும் தொடர்கதையாக...

ஏன்?

சீர்திருத்தம் சமூகத்தை அடியோடு மாற்றுவதில்லை.விடை எளிமையானது.இந்தச் சமுதாய அமைப்பு முழுமையாக மாறாதிருக்கும்வரை இது தொடர்கதை.மக்கள் இவர்களிடம் பலியாவதும் தொடர்கதையே!

என்ன செய்யலாம்?

யுத்தம்,பசி,பட்டுணி,வறுமையின் கொடூரம் மனிதவாழ்வை அர்த்தமில்லாதாக்கிவிட்டுள்ளது.அனைத்தினது பெயராலும் மனித அழிவுகள் பல வடிவங்களில் பரந்துபட்ட மக்களை அண்மிக்கும்போது, அவர்கள் சோர்ந்துபோய் ஆன்மா ஒடுங்கிய நிலையில் இறுதியாகச் செல்லும் இடம் கடவுள் என்ற கருத்தியல் எல்லையாக இருக்கும்.அந்த எல்லையில், பதுங்கிக் கிடக்கும் கொடிய மனிதர்கள்,கல்கியாகச் சாயிபாபாக்களாக,ஏசுவுக்கு-கர்த்தருக்கு,அல்லாவுக்கு தூதுர்களாக,அவதாரங்களாகத் தம்மைக் காட்டியடி மக்களது வாழ்வையும் அவர்தம் உடலையும்-உள்ளத்தையும் சுரண்டிக் கொழுக்கின்றனர்.இத்தகைய திருடர்களை இந்தச் சமூகத்தின் பொருளாதார அமைப்புகள்முதல் அதிகார-ஆளும் வர்க்கம்வரை நிதியளித்துக் கட்டிக் காக்கின்றது.

மீளவும், அதே கேள்வி:"என்ன" செய்யலாம்?

இக் கேள்விக்கு,அவர்களை அம்பலப்படுத்தியாகவேண்டும் என்பதே விடை!

ஏன்?,

இச் சமுதாய அமைப்பு புரட்சிகரமாக மாற்றப்பட வேண்டும்.
இதைவிட வேறு வழி இல்லை!
அப்படி புரட்சி நீங்கிய "மாற்றுவழி" இருக்கவும் முடியாதாகிறது.

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அந்தக் கொடிய கடவுள் வியாபாரிகள்,மக்களது அடிமைத்தனத்தை முழுமையாக்கித் தமது எஜமானர்களுக்கு ஏற்ற கையாலாகாத மக்கள் குழாத்தை இப்புவியில் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.இதற்காகவே, அவர்களுக்குக் கோடிக்கணக்கான செல்வத்தையும்,"மேன்மைப்பட்ட" இனங்களது உறுப்பினர்களையும் வழங்கி,இத்தகைய கயமைவாதிகளை மக்களிடம் முன்தள்ளி,மக்களுக்கு நம்பிக்கைய இவர்கள்பால் வருவதற்கான ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இந்த ஒளிவட்டத்தை தனியார்மயப்பட்ட ஊடகங்கள்-குறிப்பாகத் தொலைக்காட்சிகள்-செய்து முடிக்கும்போது,அவர்களது தொலைக்காட்சிக்கான வரும்படியும் இரடிப்பாகிறது.இந்தச் சூத்திரம் மக்கள் நலமென எமக்குச் சொல்லப்படுகிறது.பொதுத்தளத்தில் அதுவே,பதிலாகவும் உரையாடலாகிறது.

பிறகென்ன?

ஆகா!அற்புதமான சாமி!"அம்மா-அப்பா" சாமிகள் அகிலம் முதற்கொண்டு வணங்கப்படுவர்.

"அதோ,வெள்ளைக்காரன்-வெள்ளைக்காரி கூடச் சாமியை வணங்குகிறார்களே!,அப்போ சாமி உண்மையானவர்தான்.பொய்யர்களை வெள்ளைக்காரர் நம்ப மாட்டார்கள்."

அம்மாடியோ,சரியாப் போச்சு.

இதுதானே இவர்கட்கு அவசியமானது?

அதைச் செய்யவே, "நிதி,வெள்ளையர்கள்,வேந்தர்கள்,நட்ஷத்திரங்கள்" என்பது-என்பவர்கள் இத்தகைய கயவர்களிடம்(அம்மா பகவான் வகையறா) வருவிக்கப்படுபவர்கள்-தருவிக்கப்படுபவை.

"அப்பாவிகளே,அரவணைப்பற்றவர்களே,சமூகத்தின் விளிம்பில் உயிர்துறப்பவர்களே,இதோ!உங்கள் விழிகள் முன் கயவர்களது அணிவகுப்பு.அவர்களைக்கொண்டு,உங்களது மிச்சசொச்ச கோவணத்தையும் உருவப்போகிறார்கள்,கவனம்!!!" இப்படிச் சொல்வது, நம்மால் முடியும்.ஆனால்,கலையுணர்வு,அதன் சூட்சுமம் புரிந்தவர்கள் தம்பி மயூரன்பாணியில் பாடியுய்வினை செய்வர்.

அழகான குரல்,அற்புதமான வரிகள்,செவியைக் குழையும் மெட்டு.மக்களை ஒடுக்கும் அதிகார மையத்தை இசையெனுஞ் சாட்டைகொண்டு சொடுக்குவது அற்புதமான போராட்டவடிவம்.அதுள்,காட்சியுகத்தின் உச்சம் மனிதத் தொடுநிலையைக் காவுகொடுக்கப்பட்ட உயிர்கொண்டு சொல்லுதல் இன்னுஞ் சிறப்பு!மயூரனின் சமூக உணர்வு இங்கே உச்சமான சமுதாய ஆவேசமாக இருக்கிறது.இது, ஒரு மனிதத்தொடு நிலை.தன்வர்க்கச் சுயவுணர்வு.கலைவடிவத்தின் யதார்த்தவாதம் இதுவே.குறிப்பட்ட சூழலை,குறிப்பட்ட வடிவத்தில்,குறிப்பட்ட தெரிவில் சொல்வது சோஷலிச யதார்த்த வாதம் என்பர்.இது,மயூரனிடம் சிறப்பாக வெளிப்படுகிறது.கண்டதையும்,கேட்டதையும் வாந்தியெடுக்கும் இயற்கைவாதம் அடியோடு மயூரனிடம் இல்லாது போகிறது.இதுவே,மயூரனின் பாடலின் சிறப்பு.

நாற்பது பக்கத்தில் கட்டுரை எழுதும் நமது செயற்பாட்டை, நாலே வரிகளில் அழிகாகச் சொல்லிக் கயவர்களைத் தோலுரிக்கும் மயூரன் விளிம்பு மக்களோடு நின்று, தனது கடமை எதுவெனவுரைக்கின்றான்.வாழ்வென்பது சதா போரிடுதலாக மாறியுள்ளபோது,நானோ இல்லை நீயோ தூங்கிக்கிடந்தால் எமது தலைகளைக் கொய்துவிடுவர்.நாம் காணும் ஒவ்வொரு திசையும் இந்தக் கொடிய அமைப்பு மனிதப்பாடைபாற்றலை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியபடி, அப்படைப்பாளியையே வேட்டையாடும்போது,பாத்திருப்போர் பாவிகளே-இவர்கள் வாளாதிருக்கும்போது,இவர்கட்குச் செவி எதிர்க்கு-விழி எதிர்க்கு?

கலை.

அற்புதமான மனித வெளிப்பாடு.உழைப்பின் மறு விளைவு.ஓய்வின் சுவை சொல்லும் சுக இராகம் இது!களைப்பின் வலிதொலைக்கும் ஒளடதம் இது!-இல்லை?

ஆற்றலுடைய மனிதமுயற்சி!பற்பல பரிணாமத்துள் பதிவாகிய இந்த மனித அநுபவம்,மகத்தான தேவையின்பால் மனிதர்கள் தமக்காகவே தமது உழைப்பால் உருவாக்கியது.இது,இப்புவிப்பரப்புள் அனைத்துமாகி அமரத்துவமாக மனிதர்களற்ற இப் புவிப்பரப்பில் நாளையும் இருக்கும்.ஆனால்,மனிதர்களால் கண்டடையப்பட்ட ஆன்மீக ஆயுதமான அதே மனித அகம் இப்போதும் நோவைத் தாங்கமுடியாது இன்னொரு சிறையைத் தனது படைப்பின்வழி உருவாக்கிக்கொண்டுள்ளது.அந்தச் சிறையைக் காவல் காப்பவர் பட்டுடனும்,பணத்துடனும் தமது கால்களில் இயற்கையின் அழகான கொடையாகிய மலர்களையே போட்டுக் கசக்கி எடுக்கும்போது,இது திமிர்த்தனத்தின் அதீத வெளிப்பாடாகவே நான் காண்கிறேன். பனுவலில் சொல்லமுடியாத சோகத்தை காட்சிகொண்டு,இந்தப் பாடலுள் புகுத்திய மயூரனின் நோக்கு சிறப்பானதே.

நாம் அம்மா பகவான்களை-சாயி பாபாகளை,ஏசு தூதர்களை அநுமதிக்கலாமா?

இவர்களை அம்பலப்படுத்தவேண்டாமா?

மயூரன் சொல்கிறார்-பாடுகிறார்,மெட்டமைத்துப் போரைத் தொடர்கிறார்!


கேட்பவர்கள் சிந்திக்கத்தக்க காட்சியை வழிமுன் நிறுத்தும் அவரது பாடற்றொகுப்பு உண்மையிலேயே மிகப்பெரும் போராட்டக்கலை ஆயுதமாகவும் நம் முன் இயங்குகிறது.

நம்பிக்கை!

வாழ்வின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தோண்டித் துருவி அறிதலே நம்பிக்கை.இந்த நம்பிக்கை, தொடரும்போது அதிகாரமும்,ஆதிக்கமும் என்னென்ன திசையில் நம்மை நெருங்குகின்றதென்று புரிந்துவிடும்.

எம்மைக் காப்பதற்கான ஆயுதம், நமது எதிர்ப்பு நடவடிக்கை-நம்மைப் பாதுகாக்கும் உணர்வுதாம்.இதுவே,சமூக மாற்றத்தின் உந்து சக்தி.

இதோ,இந்த வழியில் "அம்மா பகவான்"என்ற தடைக் கற்பாறை கிடக்கின்றது.மயூரன் சொல்கிறான்:

//குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்

அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?//

அற்புதமான வரிகள்கொண்டு,நம்மை ஏமாற்றுபவர்களை,நமது மக்களது குரல்வளையில் தமது வலுக்கரத்தின் நகம் பதிப்பவர்களை துளைத்தெறியும் மயூரன்வழி நாம் நடக்கின்ற ஒரு பொழுதில், நாமெல்லோருமே ஒரு பெரியார் இராமசாமிதாம்.

இங்கே,எந்த டாறாக்கோனிசத்துக்கும் இனி இடமில்லை.
இருப்பவர்களது காலடியில் இலையான்களாக வீழ்வதற்கு நாம் எவருக்கும் குடி அல்ல-அல்லவே!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.01.2010