Sonntag, 29. August 2010

நித்தியமெனச் சொல்வதால்

மரணம்தோழனென...

மிக அழகானது.ஏற்றுக்கொள்வதும்,அழகைத் தரிசிப்பதுமாக இருக்கும் இந்த நிலையுள் எதையோ தேடவேண்டுமென நான் அலைகிறேன்.ஒரு பொழுதேனும் அழுதுவிடத் தேவையற்ற வாழ்வின் நிச்சியம் நித்தியத்தோடு நெருங்குகிறது.பொழுது இருண்டும்,விடிந்தும் நாட்களை எண்ணிக்கொள்கிறது!

எத்தனையோ முறைகள் வாழ்வின் திசைநோக்கி நித்தியமெனக்கொள்ளும் இந்த நிலைநோக்கிய நினைவுகள் என்னை வருத்தியிருப்பினும், அதன் உளமார்ந்த உண்மையை மறுத்தொதுக்குவது நிந்திக்கத் தக்கது.நிலவு விறைத்துக்கொண்டு முகில் விலத்தும் தெருவோரம் சருகாகச் செல்லும் எனது உணர்வுள் நிலைத்திருப்பது என்ன?

மௌனித்த தியான வெளியுள் நீந்துகிற எந்தச் சலனமும் அதைத் தொந்தரவு செய்துவிடுமானால் தியான நிலையெனக்கொள்ளும் கணம் பொய்த்துப்போனதெனக்கொள்வதும்,மீளவும், அதை அடைந்துவிட வேண்டுமென முனைதலுமாக நாளிகை செல்வதில் நித்தியம் என்னவென்பதைத் தேடிப்போன நாட்கள் எந்தவொரு நிழலையும் தரிசிக்கவில்லை.



பொழுதுகள் உருண்டு செல்கின்றன.நெஞ்சில் கனத்த நினைவாகத் துரத்தும் மரணம் மகிழ்ந்து குலாவும் நினைவெனப்படருமா?

நெருப்போடு நித்தியமாகும் உடல் விலத்தி எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கென எதுவும் கொள்ளாத திசை நோக்கே இதுவரை எனது துன்பத்தை விலத்தி இருப்புறுத்தும் பொருள்சொல்கிறது. எதற்காகவும்,எதையும் தேடுவதில் என்ன பெரும் பயன்கொள்வினையூக்கப் பயன் நிலைகொள்ளும்?

பொருள்வகைக் காரணந்தாம் வாழ்வதின் ஊக்கமெனக் பகல்வதில் எந்தப் புதருள்ளும் நித்தியமெனச் சுவைக்க வைக்கும் எல்லாத் தேவையும் மரணத்தைக் குறித்து மௌனித்த கணங்களில் தேவதூதன் துணைக்கழைக்கப்படுவது இறுதி இலட்சியமெனப் பூண்டவர்கள் மரணதுக்காகக் காத்திருப்பவர்களை ஏமாற்றுகிறார்கள்!

பொய்யுரைத்து,ஒரு நிழலுலகத்தை நித்தியமெனச் சொல்வதால் மரணமறியா இறுதியாத்திரைக்கான கட்டிலில் தவமிருக்க நான் எப்போதோ பழகிவிட்டேன்.காலமெனக் கருக்கொண்ட இந்தவுலகம் எனக்கு முன்னும்,பின்னும் இருந்துவிடப்போகிறது.நானெனத் தோன்றியவுணர்வில் தென்பட்டதும்-புலப்பட்டதுமான இந்த வெளி என்னை-நானெக்கொள்ளத் தூண்டுவதில் தோற்றுக்கொண்டே வருகிறது.



கனவு கலைகிறதெனக் கனாக்கண்டவொரு இரவில் தூக்கங்கலைத்த அதிசாமப் பொழுதே அழகெனக்கொண்ட மரணத்தை ப் புரியவைத்தெனக்கொண்டபோது, அந்த அழகே புறத்தையொதுக்கி அகத்துள் தவிக்கின்ற நித்தியத்தின்இருப்பைத் தேடிச் செல்கிறது.போராடுவதன் அழகில் புதைந்திருந்த இந்த நித்தியம் நினைவை வருத்தவில்லை!

எனக்காகச் சந்திக்கும் மரணத்தைத் துரத்திவிட்டு தூரவிலத்தும் இந்தவுணர்வு இதுவரை தொலைக்கப்பட்ட-விதைக்கப்பட்ட-விரையமாக்கப்பட்ட எல்லா வினைகளிலும் மரணம் மகத்தானதாக இருப்பு நோக்கும் அழகு போராடுவதெனக்கொண்டேன். அப்படி விலத்திப் போனவர்களை விதந்துருகுவதில் ஒளியைவிட வேகமாக நித்தியத்தின் வினையோடு நெருங்குகிறேன்.

நிழலாக நீண்டுவருதும்,தொடர்ந்து துணையாக இருப்பதும் நீ மட்டுந்தானே?; நினைக்கவே நெஞ்சைக் கனக்க வைக்கும் தேவனும்-நித்தியமும் நீயெனக்கொண்டேன்.நெருப்பில் வெந்துவிடும் ஒரு தூசுக்கும் நிகரற்ற "நான்"நொருங்கி வீழ்கிறது.

நல்லதெனக்கொண்டதும்- நஞ்செனப்படர்வதும்-உணர்வதும், மறந்தொதுக்க விரும்பும் நல்ல நிலையுள் மௌனித்துத் தியான வெளியை நெருங்கும்போது நெஞ்சில் போராட்டம் அழகாய்த் துள்ளி விளையாடுகிறது.

ஓடு,ஓடு!




தூரத்தே துரத்திவரும் துணைவனோடு தள்ளியே நிற்காதேயெனக் கட்டளையிட்ட காலத்துள் கண்ணீரை மட்டும் இனங்காணத் தவிக்காதேயெனச் சொல்லும் இந்த நிமிஷத்தில், என் உலகம் இருண்டுவிடாது ஒளி விரித்துப் பகலெனப் பகரும் உணர்வோடு விடை பெறுதல் எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகு நிறைந்தது போராடுவது.

அஃது, மரணத்தைத் துதிப்பதாகச் சொன்ன திசையிலிருந்து உலகை மீளப்படைதாகவும்,அதுள் என்னையும் இருத்துவதாகவும் கனவாக நீளும் நினைவுகள், நெஞ்சுக் கூட்டுக்குள் குஞ்சு பொரிக்கும் நித்தியமும்,தேவனும் போராட்மென்பதாய்... அது,நட்புக்கும்-தோழமைக்கும் உண்மையான தியானத்தைத் தேடித் துரத்தியபடியேதாம் எல்லாவற்றுள்ளும் நெருங்கிப் பார்க்கும் உண்மை நித்தியம், மறுத்தொதுக்கத் தக்கதா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.08.2010

Sonntag, 1. August 2010

தங்கத் தேரோடும் அழகினிலே...

தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே ஒரு ராஜாவுந் தவமிருந்தான்...

னக்குள் ஓடுகின்ற காலவோட்டம் எப்போதும்போல வாழ்ந்த காலத்தைத் தவறவிட்ட-தொலைத்த பொழுதிலிருந்து ஊற்றெடுப்பது!நான் தேடுகின்ற திசையெல்லாம், எனது தொலைந்த பதின்மப்பொழுதிலிருந்து இன்றுவரை என்னை உருவாக்கும் ஒரு "உந்துதலோடு"சம்பந்தப்பட்டது.

அதுவொரு சோழகம் வீசும் வருடம்:1978

என்னமாதிரியான காலம்!இளமை ததும்பி ஆயிரம் கனவுகளை விழிகள் முன் நகர்த்தும் எனது அகத்துள், பெண்ணை-பெண்களைச் சுற்றிக் கற்பனைகளை அவிழ்த்துவிட்ட இந்த வருடத்தில், என்னைத் தொலைத்த அவளது அகத்துள் மெல்லத் தேடிய எனது முகத்தை இந்தப் பாடலோடு பொருத்தியிருந்தேன்.
என்மீது,காதலென்று நானே உணர்ந்திருந்த அவளது முகத்தில் ஆயிரம் வர்ண ஜாலத்தைக் கொட்டிப் புரட்டியெடுத்த இந்தச் சோழகக் காற்றில் எட்டு மூலைப் பட்டங்கட்டி அவளது சிரிப்பைச் சுமந்து பறக்கவிட்ட எனது கனவுகளே பட்டத்தின் நூலாகவிரியும் அன்று.

விண்கட்டி, குஞ்சங்கட்டி ஏற்றிய பட்டத்தோடு அவளைச் சுமந்த காலத்தின் ஏதோவொரு வெளியில், எல்லாமே வெற்றித் தாலாட்டாய் என்னைத் தாலாட்டியது.அப்போது இனித்திருந்த பாடல் இன்றும் இனித்தே இருக்கிறது.

"தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தால் ஆஆஆஆ..."

SPB Mani - Thanga Therodum-Ragupathi Ragava Rajaram - eSnips

என்று பாடுகின்ற பாலசுப்பிரமணியம் அவர்களது குரலில் தொலைத்திருந்த எனது முகத்துள் எப்போதும் கனவுகளே குடியிருந்தது.சோழகத்தின் சுழல் வீச்சில் இருப்பிழந்து பறந்துவரும் அவளது முற்றத்து மணலுக்கு முடிச்சு போடவிளைந்த எனது தவிப்பில், தப்பித்துப் போகும் மணலுக்கு இழை தந்தது இந்தப் பாடல்.


கனவுகளையும் அத்தோடு இணைத்து இதயத்தில் காதல்வெறிகொள்ளும் உணர்வுக்கு வடிகாலமைத்த அந்தக் கோடைகாலத்துச் சோழகத்தில்சுவை அதிகமிருந்தது.எல்லா வீடுகளிலும் காதலும், களியாட்டமும் நிலைத்திருந்தது. பெற்றோருக்கு தெரியாத காதலுறவில் பிறந்த குழந்தையையும் கொன்று குளத்திலும் போட்டிருந்தது இந்ததக் காலம்.

அப்போதும்,கிராமத்தின் முருகன் கோவிலில் அதிகமாக உடுக்கை ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

இதன் ஒலிக்குப் பின்னால் காதலர்களது தோல்வியும்,பெண்ணினிது காதலுக்கான தடைகளும், பேய் துரத்தலுமாக இருந்திருக்கிறது.பொன்னியம்மாள் உடுக்கை அடிக்கு முன்னாள் முருகனுக்கு அபேஷகம் செய்யுந் தருணத்தில் அவரது முகத்தில் ஆயிரம் சூரியப் பிரகாசம் இருந்திருக்கிறது.அதை எவருமே அன்று அறிந்துகொள்ள முனையவில்லை-அல்லது சாதியத் தடிப்பில் அதைக் காணாதிருந்திருப்பார்கள்!எனினும்,நான் அதை உணர்ந்தவன்.

எத்தனையோ காதலர்களது பித்தம் தெளிவித்தவர் அவர்.பேய் பிடித்தவர்களென ஊர் ஒதுக்கியவர்களை,"இல்லை"-இவர்கள் மீளவும் மனிதராவாரெனப் பொன்னி சாத்திரமுரைத்துக் குணமாற்றியவர்.அவரது முருகன் கோவிலுக்குள் நான் பாடல்களோடு உலாவிக் கொள்வேன்.எனது எட்டு மூலைப் பட்டத்தை வானில் ஏற்றி, முருகன் கோவின் மரத்தில் கட்டிவைத்து அந்த வயல் வெளியெல்லாம் ஓடித் திரிவேன்.அப்போதும், இந்தப் பாடல்களது சுவையோடு காதலைப் பகிர்வதற்குப் பெண்களைத் தேடிச் செல்வேன்.அப்படித் தேடியபோது கிடைத்தவளே கவிதாஞ்சலி.

எழுபதுகளின் இறுதிப்பகுதி ,எங்கள் கிராமத்தின் அதியுயர்வான வளர்ச்சியின் காலமென்பது உண்மை!எங்கும் வானொலிப்பெட்டிகளும்,மின்சார விளக்குகளும் ஒலிக்கும்-மினுங்குங் காலம்.மாணவர்கள் அதிகமாகப் பல்கலைக் கழகங்களுக்கு எடுபட்ட காலமும் அதுதாம்.

அந்த வருடத்தில் பல்லாயிரம் ரூபாய்க்கு மிளகாய் காய்த்துக் குலுங்கியது எமது தோட்டத்தில்.எல்லாமும்-எங்கும், மகிழ்வைத் தவிர வேறெந்த மொழியும் எமக்குத் தெரியாது.சோழகக் காற்றில் வானமெங்கும் பட்டங்கள் பறந்திருந்தன.வீண்ணோலம் மயக்கும் பொழுதினில் பாலசுப்பிரமணியம் அவர்களது இந்த மயக்கும் குரல் கிரமத்தின் வாழ்வைக் குதூகலிக்க வைத்தது.
"இது,இளையராசா பாடல்-இது விஸ்வநாதன் பாடல்-இல்லை இது சங்கர் கணேஸ் பாடலென"ப் பையங்களோடு மல்லுக் கட்டுவதிலிருந்து மங்கையரது மௌனப் புன்னகையுள் பொலிந்திருந்த உலகத்தைத் தரிசிக்க முனைந்த காலத்தின் எச்சமாக இருப்பது, இந்தப் பாடலும்,இசையும்-வரியும்.
கிராமத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோவொரு வருகைக்கு இடம் கொடுத்த அத்தியாயமாகவிருந்தது.எங்களது ஊருக்கு கமலகாசனது மீசையையும்,மோட்டார் சையிக்கிள்களை-கார்களை கப்பலில் வேலை செய்த அண்ணன்மார்கள் கொணர்ந்தார்கள். அவர்களே எங்கள் கிராமத்துக்கு முதன் முதலாகத் தொலைக்காட்சிப்பெட்டிகளையும் கொணர்ந்தார்கள்.அவர்கள் கொணர்ந்த பொருட்களோடு நாகரீகத்தையும் கொணர்ந்தார்கள்.காது மூடிய தலைமுடி வளர்ப்பும்,சிகரட்டு ஊதுதலும் அவர்களிடமிருந்துதாம் முதன் முதலாக நிசமாக நாம் உணர்ந்தது.

சினிமாப் பாடல் கேட்கும் உரிமையோடு எமது சினிமா மோகம் அப்போது முடிந்திருந்தது.தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது முடியாத காரியமாகவே கிடக்க, நாம் பாடல்களுடன் பெண்களது பின்னால் நடைபயிலக் கற்றுக்கொண்டோம்.

சோழகம்,இதற்கு வழிவிட்டு எம்மை அள்ளிச் சென்றது வானுக்கு.நாம் வாழ்ந்திருந்த பொழுதுகளில் சோழகத்தின் சுகமே அதிகம்.அந்தச் சுகத்துக்கு மெட்டமைத்தது இந்தப் பாடல்கள்தாம்.

பதின்ம வயதின் பள்ளி ,காதற் பள்ளியெனக்கொண்டது ஒரு காலம்.அது,மீளத் திரும்பாததில் மேனி வலிக்கும் நோவு அதிகமாகிறது.
நான் இப்பாடலோடு கடந்தகாலத்தை விட்டுத் துரத்துகிறேன்.துரத்திக்கொண்டே இருப்பேன்,எனது காலம் முடியும்வரை.


" தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே
ஒரு ராஜாவும் தவமிருந்தான்-அவன்
சின்னராசாவாக மலர்ந்திருக்க..."

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2010