Sonntag, 1. August 2010

தங்கத் தேரோடும் அழகினிலே...

தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே ஒரு ராஜாவுந் தவமிருந்தான்...

னக்குள் ஓடுகின்ற காலவோட்டம் எப்போதும்போல வாழ்ந்த காலத்தைத் தவறவிட்ட-தொலைத்த பொழுதிலிருந்து ஊற்றெடுப்பது!நான் தேடுகின்ற திசையெல்லாம், எனது தொலைந்த பதின்மப்பொழுதிலிருந்து இன்றுவரை என்னை உருவாக்கும் ஒரு "உந்துதலோடு"சம்பந்தப்பட்டது.

அதுவொரு சோழகம் வீசும் வருடம்:1978

என்னமாதிரியான காலம்!இளமை ததும்பி ஆயிரம் கனவுகளை விழிகள் முன் நகர்த்தும் எனது அகத்துள், பெண்ணை-பெண்களைச் சுற்றிக் கற்பனைகளை அவிழ்த்துவிட்ட இந்த வருடத்தில், என்னைத் தொலைத்த அவளது அகத்துள் மெல்லத் தேடிய எனது முகத்தை இந்தப் பாடலோடு பொருத்தியிருந்தேன்.
என்மீது,காதலென்று நானே உணர்ந்திருந்த அவளது முகத்தில் ஆயிரம் வர்ண ஜாலத்தைக் கொட்டிப் புரட்டியெடுத்த இந்தச் சோழகக் காற்றில் எட்டு மூலைப் பட்டங்கட்டி அவளது சிரிப்பைச் சுமந்து பறக்கவிட்ட எனது கனவுகளே பட்டத்தின் நூலாகவிரியும் அன்று.

விண்கட்டி, குஞ்சங்கட்டி ஏற்றிய பட்டத்தோடு அவளைச் சுமந்த காலத்தின் ஏதோவொரு வெளியில், எல்லாமே வெற்றித் தாலாட்டாய் என்னைத் தாலாட்டியது.அப்போது இனித்திருந்த பாடல் இன்றும் இனித்தே இருக்கிறது.

"தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தால் ஆஆஆஆ..."

SPB Mani - Thanga Therodum-Ragupathi Ragava Rajaram - eSnips

என்று பாடுகின்ற பாலசுப்பிரமணியம் அவர்களது குரலில் தொலைத்திருந்த எனது முகத்துள் எப்போதும் கனவுகளே குடியிருந்தது.சோழகத்தின் சுழல் வீச்சில் இருப்பிழந்து பறந்துவரும் அவளது முற்றத்து மணலுக்கு முடிச்சு போடவிளைந்த எனது தவிப்பில், தப்பித்துப் போகும் மணலுக்கு இழை தந்தது இந்தப் பாடல்.


கனவுகளையும் அத்தோடு இணைத்து இதயத்தில் காதல்வெறிகொள்ளும் உணர்வுக்கு வடிகாலமைத்த அந்தக் கோடைகாலத்துச் சோழகத்தில்சுவை அதிகமிருந்தது.எல்லா வீடுகளிலும் காதலும், களியாட்டமும் நிலைத்திருந்தது. பெற்றோருக்கு தெரியாத காதலுறவில் பிறந்த குழந்தையையும் கொன்று குளத்திலும் போட்டிருந்தது இந்ததக் காலம்.

அப்போதும்,கிராமத்தின் முருகன் கோவிலில் அதிகமாக உடுக்கை ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

இதன் ஒலிக்குப் பின்னால் காதலர்களது தோல்வியும்,பெண்ணினிது காதலுக்கான தடைகளும், பேய் துரத்தலுமாக இருந்திருக்கிறது.பொன்னியம்மாள் உடுக்கை அடிக்கு முன்னாள் முருகனுக்கு அபேஷகம் செய்யுந் தருணத்தில் அவரது முகத்தில் ஆயிரம் சூரியப் பிரகாசம் இருந்திருக்கிறது.அதை எவருமே அன்று அறிந்துகொள்ள முனையவில்லை-அல்லது சாதியத் தடிப்பில் அதைக் காணாதிருந்திருப்பார்கள்!எனினும்,நான் அதை உணர்ந்தவன்.

எத்தனையோ காதலர்களது பித்தம் தெளிவித்தவர் அவர்.பேய் பிடித்தவர்களென ஊர் ஒதுக்கியவர்களை,"இல்லை"-இவர்கள் மீளவும் மனிதராவாரெனப் பொன்னி சாத்திரமுரைத்துக் குணமாற்றியவர்.அவரது முருகன் கோவிலுக்குள் நான் பாடல்களோடு உலாவிக் கொள்வேன்.எனது எட்டு மூலைப் பட்டத்தை வானில் ஏற்றி, முருகன் கோவின் மரத்தில் கட்டிவைத்து அந்த வயல் வெளியெல்லாம் ஓடித் திரிவேன்.அப்போதும், இந்தப் பாடல்களது சுவையோடு காதலைப் பகிர்வதற்குப் பெண்களைத் தேடிச் செல்வேன்.அப்படித் தேடியபோது கிடைத்தவளே கவிதாஞ்சலி.

எழுபதுகளின் இறுதிப்பகுதி ,எங்கள் கிராமத்தின் அதியுயர்வான வளர்ச்சியின் காலமென்பது உண்மை!எங்கும் வானொலிப்பெட்டிகளும்,மின்சார விளக்குகளும் ஒலிக்கும்-மினுங்குங் காலம்.மாணவர்கள் அதிகமாகப் பல்கலைக் கழகங்களுக்கு எடுபட்ட காலமும் அதுதாம்.

அந்த வருடத்தில் பல்லாயிரம் ரூபாய்க்கு மிளகாய் காய்த்துக் குலுங்கியது எமது தோட்டத்தில்.எல்லாமும்-எங்கும், மகிழ்வைத் தவிர வேறெந்த மொழியும் எமக்குத் தெரியாது.சோழகக் காற்றில் வானமெங்கும் பட்டங்கள் பறந்திருந்தன.வீண்ணோலம் மயக்கும் பொழுதினில் பாலசுப்பிரமணியம் அவர்களது இந்த மயக்கும் குரல் கிரமத்தின் வாழ்வைக் குதூகலிக்க வைத்தது.
"இது,இளையராசா பாடல்-இது விஸ்வநாதன் பாடல்-இல்லை இது சங்கர் கணேஸ் பாடலென"ப் பையங்களோடு மல்லுக் கட்டுவதிலிருந்து மங்கையரது மௌனப் புன்னகையுள் பொலிந்திருந்த உலகத்தைத் தரிசிக்க முனைந்த காலத்தின் எச்சமாக இருப்பது, இந்தப் பாடலும்,இசையும்-வரியும்.
கிராமத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோவொரு வருகைக்கு இடம் கொடுத்த அத்தியாயமாகவிருந்தது.எங்களது ஊருக்கு கமலகாசனது மீசையையும்,மோட்டார் சையிக்கிள்களை-கார்களை கப்பலில் வேலை செய்த அண்ணன்மார்கள் கொணர்ந்தார்கள். அவர்களே எங்கள் கிராமத்துக்கு முதன் முதலாகத் தொலைக்காட்சிப்பெட்டிகளையும் கொணர்ந்தார்கள்.அவர்கள் கொணர்ந்த பொருட்களோடு நாகரீகத்தையும் கொணர்ந்தார்கள்.காது மூடிய தலைமுடி வளர்ப்பும்,சிகரட்டு ஊதுதலும் அவர்களிடமிருந்துதாம் முதன் முதலாக நிசமாக நாம் உணர்ந்தது.

சினிமாப் பாடல் கேட்கும் உரிமையோடு எமது சினிமா மோகம் அப்போது முடிந்திருந்தது.தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது முடியாத காரியமாகவே கிடக்க, நாம் பாடல்களுடன் பெண்களது பின்னால் நடைபயிலக் கற்றுக்கொண்டோம்.

சோழகம்,இதற்கு வழிவிட்டு எம்மை அள்ளிச் சென்றது வானுக்கு.நாம் வாழ்ந்திருந்த பொழுதுகளில் சோழகத்தின் சுகமே அதிகம்.அந்தச் சுகத்துக்கு மெட்டமைத்தது இந்தப் பாடல்கள்தாம்.

பதின்ம வயதின் பள்ளி ,காதற் பள்ளியெனக்கொண்டது ஒரு காலம்.அது,மீளத் திரும்பாததில் மேனி வலிக்கும் நோவு அதிகமாகிறது.
நான் இப்பாடலோடு கடந்தகாலத்தை விட்டுத் துரத்துகிறேன்.துரத்திக்கொண்டே இருப்பேன்,எனது காலம் முடியும்வரை.


" தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே
ஒரு ராஜாவும் தவமிருந்தான்-அவன்
சின்னராசாவாக மலர்ந்திருக்க..."

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2010

2 Kommentare:

Anonym hat gesagt…

Whose story is this?

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

@ Anonymous //Whose story is this?//
என் அநுபவங்களுக்கு வெளியில் எதையுமே நான் எழுதுவதில்லை!