Sonntag, 4. Januar 2015

பொது வேட்பராகிய மைத்திரிபாலவுக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்

"இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியுள்ள பொது வேட்பாளருக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்."



ற்போது,வரும் ஜனாதிபதித் தேர்தற் பரப்புரைகளைக் கவனிப்பவர்களுக்கு பல சிக்கலான கேள்விகள் மண்டையைக் குடைகிறதா?

எனக்கு மண்டை வெடிக்கும் அளவுக்கு இரத்தவழுத்தம் அதிகமாகிறது.

மகிந்தா தலைமையிலான இந்தப் பாசிச அரசைக் குறித்து நமக்கு வகுப்படுத்த பலர் முள்ளி வாய்க்காலுக்குமுன்னும், பின்னுமொரு தர்க்க நியாயத்தை வழங்கி வந்தனர்.

அதாவது,மகிந்தா அரசானது - இல்லை இன்னுஞ் சிறப்பாகச் சொல்வதானால்இலங்கை அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டதுக்குட்பட்ட அரசென்றும்,அது ஜனநாயகத் தன்மையுடைய அரசென்றும், நீதி பரிபாலனம் அங்கு ஓரளவேனும் சிறப்பாக இருப்பதாகவும் கூறிவந்தனர். இதை முள்ளி வாய்க்கால் இனவழிப்புக்குப் பின்பும் பலர் கூறிக்கொண்டனர்.

சிறப்பாகத் தலித்துவ மேம்பாட்டுக் கழகத் "தோழர்" தேவதாசனும்,அவரது தத்துவ ஆசிரியரான நிர்மலா குழுவுறுப்பினர் அண்ணன் இரகவனும் மிக நேர்த்தியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று,பார்த்து வழிமொழிந்தார்கள்!

நிர்மலா அம்மையார் , தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவரது மொழியில் இலங்கையின் மகிந்தா தலைமையிலான அரசைச் சிலாகித்துப் பேசிப் புலிப் பயங்கரவாதத்தைச் சாடிக்கொண்டே வந்தார்கள்.




புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்" தம்சார்புக்குப்  பேட்டி -உரையாடலெனத் தொலைக்காட்சி,அச்சுவூடகங்களிலும் இதையேபேசியும்,எழுதியும் வந்தனர்.தேனி என்றொரு இணையத்தளத்தை நடாத்தும் நண்பர் கங்காதரன்(ஜெமினி) தனக்குத் தெரிந்த பெரும் மேதைகளான இரத்தின ஜீவன் கூல்,இராஜன் கூல்,அழகலிங்கமெனப் பல பிரபலங்களை வைத்து, மகிந்தாவுக்குள் ஜனநாயக நீரோட்டம் இருப்பதைக் கண்டறிந்தார்.அவர்களில் இப்போது இரத்தின ஜீவன் கூல் பல்ட்டியடித்து இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு இல்லை.அங்கு சட்டம்,ஒழுங்கு இல்லாதவொரு பயங்கரவாதக் கொலைக்காரத் தலைமையிலான அரசே இருப்பதாகவும்,மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வைப்பதன் முலம் சட்டத்துக்குட்டபட்ட நீதியானவொரு அரசு மீளத் தலையெடுக்குமென்றும் கொழும்பு ரெலிக்கிராப்பில் எழுதி மகிழ்கிறார்.

டேய்,உங்களுக்கு என்னங்கடா நடந்தது? அல்ஸ்கைமர் நோய் [ Alzheimer disease /Die Alzheimer-Krankheit  ]ஏதன் இருக்கா அண்ணன்,அக்காமாரே?

சரி இனித் தமிழ் மக்களிடம் வருவோம்.இவர்கள் கூறுகிறார்கள்: சட்டத்துக்குட்பட்ட அரசு, நீதியான அரசு,ஜனநாயகப் பண்புடைய அரசு,சட்டத்தால் நிர்வாகிகக்கப்படும்  ஊழலற்ற அரசு உங்களுக்குக் கிடைக்கத் தமிழ் மக்கள் மைத்திரிக்கு ஓட்டுப்போடும்படி கோருகிறார்கள்.இரத்தின ஜீவன் முதல் நம்ம அண்ண்ன்  சுசீந்திரன்வரை கும்பிட்டுக் கேட்டுக்கொள்கின்றனர்.

இப்படியே எல்லோரும் கூறிக்கொள்ளும்போது தமிழர்கள் தலையைச் சொறிவதைத்தவிர என்ன செய்ய முடியும்?

இலங்கையை மாறி,மாறி-மாறி ஆண்ட இருபெருங்கட்சிகளும் அவையோடு கூட்டு வைத்த இடது-வலது,முரடு-கரடுகளெல்லாம் இதுவரை என்ன செய்தன?

கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழினத்தின் பூர்வீக நிலப்பரப்பில் இந்தச் சட்டவாத அரசு மூலம் ,நீதி, ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி நிலைத்திருந்ததென்பதை அறியாத-புரியாத,உணராத நமக்கு இன்று , இது என்ன சாமான்கள் என்றுதாம் எண்ணதோன்றுகிறது.

இராணுவ முகாங்களும்,பொலிஸ் நிலையங்களும் அவர்களது தார்ப்பாரும் நிலவியவொரு பிரதேசத்துள் இதை எப்படிப் புரிந்துகொள்வது நண்பர்களே?

இந்த ஓட்டுக்கட்சிகளது தலைவர்கள்,பிரதமர்கள்,ஜனாதிபதிகள் இதுவரை எமக்கு அப்படியொரு அரசவொழுக்கங்கள் இருப்பதாகக் காட்டவில்லையே!இனியும் அதைக் காட்டுவார்களென்று எந்த நாயும் வகுப்பெடுக்க முடியுமா?

 "மீள ஜனநாயத்தை,நல்லாட்சியை,சுதந்திரத்தை,நீதிபரிபாலனத்தை "க் கட்டியொழுப்ப [  return to democracy, good governance, an independent judiciary, etc. ]மைத்திரிக்கு வாக்களிக்கக் கோருபவர்களே,இவையெல்லாம் முன்னம் நமக்குள் இருந்தவைகளா?

இவை இருந்ததென்றால் ஏன் இனவொடுக்குமுறையை  காலா காலமாக நமக்குள் இந்த அரசுகள் கட்டவிழ்த்துவிட்டன?

ஏன் பல இலட்சம் மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்?

ஏன் வருடா வருடங்கள் இனக் கலவரங்கள் தூண்டப்பட்டன?

ஏன் பல இலட்சம் துருப்புகள் நமது மண்ணை அபகரித்து ஆக்கிரமித்தன?

ஏன் சத்தியாக்கிரகக்காரர்கள் மண்டை பிளவுண்டனர்?

ஏன் நமது கோணேஸ்வரிகளது கவட்டுக்குள் குண்டுகள் வெடித்தன?

கடந்த அறுபது ஆண்டுகளாக நம்மை மொட்டையடித்தவர்கள்,நம்மிடம் வந்து, இந்த எட்டாக் கனிகளைக் குறித்து வகுப்பெடுக்கும்போது கொஞ்சமும் கூச்சமில்லையா?

சிங்கள மக்களிடம் சொல்வதைத் தமிழ்பேசும் மக்களிடமும் சொல்ல முடியுமா?

நாம் ஒடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமென்பதை "ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி,நீதிபரிபாலனம்" என்று சொல்லும் இந்தத் திமிரை யாரடா உங்களுக்குச் சொல்லித் தந்தது?


ப.வி.ஸ்ரீரங்கன்
04.01.2015

Keine Kommentare: