Dienstag, 5. Januar 2016

தமிழ்த் தேசியம் :கட்சிகளது அரசியல்


ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் நம்பிக்கை வைப்போம் ;
இலங்கையின் தேசியவின முரண்பாட்டுக்ககான தீர்வுத் திறவுகோல் இந்தியாவிடமேதாம் - நம்புவோம்!
எமது மக்களும் ,மண்ணும் அந்நிய இனங்களிடம் அடிமையாக்கப்பட்டு எதிர்கால அரசியவாழ்வு இருண்டுகிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் பல்வேறு அகமுரண்படுகள் (பிரதேசவாதம்,சாதி; பெண்ணடிமை ;குறுந்தேசியவாத ஒடுக்குமுறை (இஸ்லாமிய மக்களைப் பூண்டோடு கிள்ளியெறிந்த...) வர்க்க ஒடுக்குமுறை போன்ற பல்வேறு தளைகளே காரணமாகவிருக்கின்றன.இந்த அகமுரண்பாட்டை முழுமையாகக் கையகப்படுத்தி நம்மை ஒடுக்குபவர்கள் தேசிய அரசுகளாக நம்மைச் சுற்றி தம்மை நிறுவியுள்ளனர்.நமது அக முரண்பாட்டை நமக்குள் இருக்கும் அதிருப்பதியாளர்களைப் பயன்படுத்தியே நம்மை வடக்கும்,கிழக்குமாகப் பிளந்த சக்திகள்(இந்திய -இலங்கைக் கூட்டும் மற்றும்,அமெரிக்க ஏகாதிபத்தியம்) நமது மக்களை முழுமையாகத் தமது அடிமைகளாக்கி வைத்துள்ளனர்.நாம் இந் நூற்றாண்டிற்றாம் மிகவும் மோசமானவொரு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்.இதற்கான முழுப்பொறும் புலிவழியான போராட்டச் செல்நெறிக்கே!
இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில்முள்ளிவாய்க்காலுக்குப்பின்பான ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது.இந்த நகர்வானது நமது மக்களை அரசியல் மயப்படுத்தி ,ஐக்கியமாக்கியமாக்கியவொரு வலுவான வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ள மறுத்து எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான எதிர்ப்பு அரசியல் நகர்வை பிழைப்புவாத வியாபார யுக்திகளைக்கொண்டு நசுக்கி வருகிறது.இத்தகைய குழிபறிப்புக் கட்சிவாத ,வர்த்தக நோக்கு நிறைந்த அரசியலானது நம்மை அரசியற்றலமைதாங்க - வழிநடத்தத்தகுதியற்ற கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்க வைத்திருக்க முனைகிறது.இதன் மூலம் தமது கட்சிசார்ந்த வர்த்தக நலன்களை அந்நிய சக்திகளது சலுகைகளின்வழி அடையமுனைவதில் ஈழத்து மக்களது தேசியவிடுதலையை -உரிமைகளை தமது வர்த்தகப்பண்டமாக அந்நியர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அது மூலதனச் சுழற்சியில் ஒருவிதக் கச்சாப்பொருளாக -பண்டமாகப்பட்டு பரிவர்த்தனையில் பல தமிழ்ப் பிழைப்புவாதிகளைச் செல்வந்தர்களாக்கி உள்ளதென்றவுண்மை பல தமிழ் அரசியல் வாதிகளால்-ஊடககங்களால் மறைக்கப்பட்டு நாம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளோம்.இன்றைய தமிழர் பேரவை மற்றும் மரபார்ந்த தமிழ்த் தேசியக்கட்சிகள், கூட்டமைப்புகள் மற்றும் இயக்கவாதத் தலைமைகள் இதற்கு வெளியில் இயங்கவே இல்லை!

புரையோடிப்போன எதிரிகள்:

எதிரிகள் பல இரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிந்தது.அதைக் கூடத் தமது வர்க்க நலனின் பொருட்டுத் தமிழ் ஆளும் வர்க்கத் தரகு மூலதனம் சிங்கள மூலதனத்தோடு பேரமிட்டுத் தமது வர்த்தக மூலதனமாக்கிய அரசியலானது சிங்களப் பெருந் தேசியவாதத்துக்கும் -பௌத்த மதவாதத்துக்கும், அதன் இருப்புக்கும் பின் கதவு வழியாகப் பச்சைக்கொடி காட்டியதென்பது வரலாறாக நீள்கிறது.
நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், தமிழர் மகாசபை -தமிழ்க் காங்கிரஸ்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சிகளால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு, அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்த்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.பின்ளைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின்முள்ளி வாய்க்காலில் பிரபாகரனோடு பல்லாயிரம் தேச பக்த இளைஞர்கள் பலியெடுக்கப்பட்டு இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது.இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் பல இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் தமிழர் அரசியலது இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!
இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது கட்சிவாத நலன்களை முதன்மைப்படுத்தியும்,கட்சிகளது இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு முன்னாள்ஆயுதக் குழுக்கள்மற்றும் புதுப்புதுக் கூட்டணிகள் யாவும் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலுகுகள்,கோரிக்கைகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். 

எமது தேசிய அபிலாசைகள்:

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது பிரதேசப் பிளவுவாத நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது. தமிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.இங்கு பிள்ளையான் குழுவின்வீழ்ச்சி இதுசார்ந்தவொரு சிறு இடைவெளியை நமக்கு இட்டிருக்கிறது.அந்த இடைவெளியில் முதலில் வடக்கும் ,கிழக்கும் அரசியல் ரீதியாக மீளவிணையும் அரசியல் ஐக்கியம் கட்டப்படவேண்டும்.
நம்மை,நமது வாழ்வைக் கேவலமான கும்பல்களாக்க முனையுமிந்த பிரதேசவாதப் பிளவுவாத அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடித்தனர். இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம்இப்போதும் கட்டுகிறார்கள். இப்டித்தாம் வரதராஜப்பெருமாள் - பிள்ளையான்போன்ற கொடிய ஆயுதாரிகள்அரசியலில் இந்திய -சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு அடியாளாக மேலெழுந்தனர்.

திரு.சம்ப(ம)ந்தனோ அன்றிச், சங்கரியோ அல்ல டக்ளஸ் தேவாநந்தாவோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்ற மீளவும் தொடங்கிவிட்டார்கள். இவர்கள், எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,இடைக்கால நிர்வாக மாகாணசபை,13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.

பல்முனை ஒடுக்குமுறையும்,
அவைகளின் அமுக்கம்:

இன்றோ பல்வேறு அரச - பொருளாதார ஜந்திரத்துக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும்.அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப்பரிணாமிக்கத்தக்க புரட்சிகரமானவொரு அரசியற்பாதை காலத்தின் தேவை.நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம்.தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது.இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை. 

மாற்றுத் தலைமையின்
அவசியம் உணரப்பட்டதா? :

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலிபள் மறுபுறமாகவும்எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!

ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது. 

இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இந்த இழி அiசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?

மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் நம்மால் செய்து முடிப்பதற்கு மாற்றுச் சக்திகளுக்கும்,மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட நிலையில் இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா?

இன்றைய இந்தத் தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்மாற்றுச் சக்திகளால் நிகழவில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு மாற்றுத் தலைமை மக்கள் சார்ந்து மக்களால் கட்டப்படவேண்டிய நிலையென்றுமில்லாவாறு அவசியமானது.

எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.மகிந்தாவைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்த அதிகாரவர்க்கமானது அதனிடத்தில் இருத்தப்பட்ட மரபார்ந்த அந்நிய ஏவற் கட்சிதாம் யு.என்.பி. இப்போது மைத்திரி தலைமையில் தமிழ்க் கட்சிகளை ஏமாற்றிய பின்பும் அவர்களை மக்கள் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியவர்கள் இந்தச் மாற்றுச் சக்திகளுக்குள் இருந்த அந்நிய எடுபிடிகள் இல்லையா?

எனவே, ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.மாற்றுச் சக்திகள் தமது கட்டமைப்பை மக்களோடு மக்களாக்க நிற்கும் காலத் தேவையோடு பாரிய எதிப்பு அரசியலைச் செய்தே ஆகவேண்டும். இல்லையேல், தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டு மீளவும் மக்களை ஏமாற்றியழித்து ,நமது போராட்டவுணர்வையும்,ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அரசியலையும் பூரணமாகக் கருத்தியல் ரீதியாக அழித்து அநாதவராக்கப் போகிறது.
அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு, தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத் தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது. இதன் மறுவிளைவாகத் தமிழ்ப் பிழைப்வாதக் கட்சிவாதத் தலைவர்களும் ,கட்சிகளும்,போலிக் குழுக்களும் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் மெல்ல வலுவாக்கப்பட்டு நிரந்தரமாகப்படுகிறது.

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள்,ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே.இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை.அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொன்ற வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தருணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்!
இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது.இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?
"மக்களே!
அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.

உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின

நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,
துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே!!!"

ப.வி.ஸ்ரீரங்கன்


Keine Kommentare: