Montag, 7. März 2016

மெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...

சின்னமடு மாதா!


அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,
 மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கிக் கை அசைக்க…

 
>> நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு ”சாத்தான் வந்துவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்”என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான். <<



மெல்லப் பாடும் தென்றலும்
மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்
கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்”






அது ஒருகாலம்.மழைக் காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.


எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டு கிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவ வேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள் ; இப்பவும் இருக்கிறாள்!


சிவா…


எப்படியோ,எதன்படியோ கொல்லப்பட்டான்…


பனிப்பொழுதுகளில் அவளது படிக்கட்டுகளில் நாம் புகைத்திருக்கிறோம்.புதினமாகச் சுருவங்களைக் கண்டிருக்கிறோம். ஏசுநாதருக்குச் சிலுவை சுமக்கவைக்கும் படங்களை அலுப்பின்றிப் பார்த்துக் கண்ணீர் சிந்தியருக்கிறோம்.பின்னாளில் நாம் இதையே பெறுப்போகிறோமென்ற சிந்தனையின்றி.








“சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய்ச் சின்னமடுமாதா வளவில் குத்தி விழும் மனம்”
 
நிலாக் காலத்துச் சித்திரை நிலவுக்கு மாதா கோயில் பகற்பொழுதாகவே இருக்கும்.எங்கள் கும்மாளமும், குதூகலிப்பும் அவளது இருப்பையே அசைத்திருக்கும்.எங்களுக்குச் செபம் தெரியாது.நாங்கள் தேவாரம் பாடியும் அவளைத் தரிசித்திருக்கிறோம்.சின்னமடுமாதாவுக்கு ஆடிமாதத்தில் விழாவெடுப்புத் தொடங்கும்.ஆடிக் கொடியேற்றமும்,ஐப்பசிப் பெருநாளும் நம்மைக் குதூகலிக்க வைப்பவை.கூடார வண்டில்களது தொடரணியைக் கண்டும் ; சில்லாலை -ஏழாலை மக்களது ஐப்பசிப் பூசைக்கான அவர்களது தரிப்பிலும் ; அவர்களை நனைக்கும் மழையிலும் குயில் கூவுவது எனக்கொரு நிறைவான காலம்! ; சின்னமடுமாதாவின் மணியோசையில் ஊர் உறங்கச் செல்லும் பொழுதுகளில் நாம் உலாத்தப் போவது வழமையாகும்.உறக்கம் கலைத்து ஊருக்குள் மடங்கட்ட முனைந்த நமக்கு சொற்பகாலத்தில் சுகம் தொலையுமெனக் கனவிலும் எண்ணாத வயதவை.


தற்போது எனது சின்ன மடுமாதாவை உரு மாற்றிவிட்டார்கள்!


அவள் ,இருப்பிடத்தை தமக்கேற்றமடி மாற்றிவிட்டார்கள்.அவளது ஒரு கோடி எனது முற்றம்.அம்மாவின் மடியுள் கிடந்தபடி பாதர் சிங்கராசா அவர்களது நீண்ட - பொலிவான தமிழைக் கேட்டிருக்கிறேன்.என் மாதாவின் குருசு மரத்தைச் சாய்த்தவர்கள் எவர்? 






கடந்த 48 வருடங்களுக்கு முன்னாள் நான் ,அவளது கோவிற் தரை நிலத்தில் "அ.ஆ.இ..."எழுதக் கற்றேன்.எனக்கு -எங்களுக்கு வாய்த்த ரீச்சர் அக்கா ,ரீற்ரா கியோகுமார்.அவரது தமிழ் எழுத்துக்கள் அச்செழுத்தைவிட அழகானது -அவரைப் போலவே!யஸ்ரின் டயசு; யஸ்ரின் அன்ரூ ; அமலோற்பவநாதன் ;சிவகுமார் ; சகாயமல்லிகா ;அம்சற்வனி ;சகாயமலர் ; தமிழ்ச் செல்வி ;லிற்பின் மேனாக ;ஞானமலர் ;ஞானகரன் ;பாலகுமார் ;விசயகுமார் ;கேதாரம் ; ஶ்ரீகாந்தராசா ;யோண் டேவிட்டு ; எட்மன் பீரூ எனப் பலர் என் பள்ளித் தோழர்கள்.நாங்கள் ஓடியாடிப் பாடித்திரிந்த வளவு -மழைவெள்ளங்கண்டு நிரம்பிய அவளது வளவில் நீர் விளையாடிய அந்த முற்றம் அன்பும் ,அரவணைப்புமிக்க என் மாதாவின் வளவு இன்று, வெகுவாக மாறிவிட்டது.கடந்த 31 ஆண்டுகளாக அவளைவிட்டு நான் நீண்ட தூரம் கடந்துகொண்டேயிருக்கிறன். இந்த ஆண்டு, 2016 ஆடிப் பெருநாளுக்கும் நான் உன்னிடம் வருவதற்கு வழியில்லை! ; என் மரணம் உன்மடியிலேயே நிகழவேண்டுமென்பது என் நீண்ட நாளாசை! ;அதற்காகவா என்னையின்னும் அழைக்கவில்லை? 


அன்று ,நாங்கள் தவமிருக்கும் குருசு மரத்தடியை அண்டியபடி மாதாவுக்கு வானுயரக் கொடியேற்றப்படும்.அந்தக் கொடியோடு எங்கள் குதுகாலத்துக்குக் குறைச்சலே இல்லை. கடலைக்கொட்டகையின் வரவுக்கும்,ஐஸ்கிறீம் வானின் வருகைக்கும், விளையாட்டுச்சாமான் விற்கும் ”சோனக”க் கடைகளின் வருகைக்கும் இக்கொடியேற்றமே காரணமென்பதால் நாம் மகிழ்வோம்.நல்லதே நடக்கும்.நாங்கள் பயணித்த பாதைகளில் இப்போது தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினது பாரிய உடல் விரிந்துகிடக்கும். வீட்டில் பாயில் புரளும்போதெல்லாம் இந்த இரைச்சல் எங்களுக்கு மீள மாதா கோவில் வளவுக்குள் இழுத்துவரும் ஆசைகளை.நாம், எழுந்து ஆலமரக்கிளைகளில் தவம் இருப்போம்.அப்பப்ப “கம்பு”விளையாடுவோம்.



காலையிற் காகத்தின் கரைவிலும்,குயிலின் கூவலிலும் அறுபடும் தூக்கம் ,மாதாவின் வளவுக்குள் விழிகளைத் தூக்கி வீசும். சில வேளைகளில் தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினுக்கு மாற்றாகக் கு.வேலுப்பிள்ளைக் கிழவரது லையிட் எஞ்சின் வரும்.நாங்கள் அவருக்குக் கிட்டப் போவதேயில்லை! ; அந்த மனுசன் திட்டுவார்.கண்ணைச் சிமிட்டும் லைட்டுக்கள் எங்களுக்கு மனதில் வர்ணயாலத்தைப் பரவவிடும்.நாம் மகிழ்ந்து-வாழ்ந்தோம்! 






இந்த மாதாவைக் கொணர்ந்து எங்கள் வீட்டு ஒரு வேலிப்புறத்தில் ஊன்றிய கொலனித்துவம், 1858 ஆம் ஆண்டுகளில் நமது கிராமத்தில் ஐரோப்பியக் கட்டக்கலையையும் சுற்றுப் புறத்தையும் நட்டுப்பார்த்திருக்கிறது.சீமை மரங்கள் என்று பலவகை மரங்கள் மாதா கோவிலுக்குள் நிற்கின்றது.நாம் குட்டூறு மரமென்றும் அதன் மாங்காய் வடிவிலான காய்களை உடைத்து, அதன் உள்ளே பொதிந்துள்ள இலைவகைச் செட்டையில் கெலிகெப்றர் பறக்கவிட்டத்தையும் தவிர எங்களுக்குக் கொலனித்துவங் குறித்து எதுவுமே தெரியாதிருந்தது அன்று.விழிகளைத் தூக்கி மீளவும் ,எமக்குள் ஒட்டும்போது, எமது உயர்தரப் பாடசாலை மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடைக்குக் கட்டளைபோடும்.வேலணை நோக்கி நடக்கும்போது,பையில் சில்லறை இருக்குமா என்ற தேடுதல் கன்ரீன் போண்டாவைக் குறித்ததாகவே இருக்கும்.நான்கு மணிக்கு வீடு மீளுவும்வரை போண்டாவாது உதவுமென்பது, தோட்டக்காரர்களது குழந்தைகளுக்கே வெளிச்சமானது.அம்மாவும்,அப்பனும் தோட்டத்தில் மாரடிக்கும் அதிகாலைப் பொழுதில் அழுவது எமதும் வயிறும்தாம்.


பின்னாளில்,ஊரும்,உறவுகளும் அறுத்து அநாதவராக்கப்பட்ட எங்கள் கிராமத்தின் முழு அர்த்தமுமே மாதா கோவிலோடு தொடர்புப்பட்டது.எங்கே விளையாடிக் களித்தோமோ, அங்கே,வருங்கால ஈழத்துக்காகக் கதையாடிப் பார்த்தோம். கருத்தரித்த கனவுக்குக் காரியத்தை மாதா கோவிற்படிகட்டுகளில் ஆய்ந்திருக்கிறோம்.மெல்லிய நிலாவொளியில் மெலிந்த பல உருவங்களோடு நானும் இருந்திருக்கிறேன்.எங்களுக்கு அரசியல் புகட்டியும்,விடுதலையின் வேட்கையத் தகவமைக்கும் பலர் முனைந்த இந்த மாதா கோவிலுக்குப் பாதர் சிங்கராயர் பிரசங்கம் செய்திருக்கிறார்.



ஈழத்துவிடுதலைக்கு உண்மையாய் உழைத்தவர்களில் அவர் எப்பவுமே இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
 

“எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!”
 


நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு”சாத்தான் வந்துவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்”என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான்.



அவனது “கத்தலில்” நாங்கள் மாதா கோவிலுக்குள் படையெடுப்போம்.



அப்போது, அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாதாவிடம் மன்றாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம்.அவன் சினிமா நடிகன் ரகுவரனின் தோற்றத்தோடும்,அவரைவிட உயரமாகவும் இருப்பான். இலண்டனில் கற்ற கல்விக்காரக் குடும்பத்தின் மூன்றாவது பையன்.அண்ணன் மாரும்,தங்கை மாரும் இலண்டனில் படிக்க இவன்மட்டும் சின்னமடுப் படிக்கட்டுகளில் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவான்.



அற்புதமான ஆங்கில நடையில் பைபிள் கதைகள் சொல்லுவான்.நாங்கள் தமிழில் கதை சொல்லக் கேட்போம்.சின்னமடுமாதாவை நினைக்கும்போது, வெஸ்லியின் உடைந்த தமிழ் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பைக் கூட்டிவருகிறது.அதே தருணத்தில் அம்மாவின் மடியில் தலைவைத்து முற்றத்தில் நாம் நிலாப்பார்த்த காலத்தில், பாதர் சிங்கராயரின் அற்புதமான தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்.அம்மா,பாதர் சிங்கராயரின் பிரசங்கத்தை மிகவும் சிரத்தையோடு கேட்பதை உணர்ந்திருக்கிறேன்.அவரது மொழியைத் தமிழ் என்பாள் அம்மா.அறுத்துறுத்துப் பேசும் அவரது கலை நாளாந்தத்தில் என்னையும் அங்ஙனம் பேச வைத்திருக்கிறது.










இந்தப் புலப்பெயர்வு வாழ்வில் ஜந்திரத்தோடு முடக்கப்பட்ட எனது இளமை தொலைந்து போனது, நீண்ட நாளாக அது எனக்கே தெரியாது போய்விட்டது!மெல்ல நரைத்த தலைமுடி இப்போது முழுமையாக நரைத்துவிடுகிறது.முன்புபோல் நடக்க முடியவில்லை.எனினும், மனம்மட்டும் சின்னமடுவுக்குள் அலைந்த இளமையோடே துடிப்பாய்த் துள்ளுகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளின்பின்னே மாதா கோயில் புகைப்படத்தை மருமகனின் பேஸ் புக்கில(Facebook) மெல்லப் பார்க்கக்கிடைத்தது ; தற்போது ...அல்லையூர் இணையம்!




கண்கள் நெடுகக் கனத்தபடி குமிழ் நீராகக் கனத்த பொழுதுகள்,எனது இளமைத் துடிப்பை உரத்தும் மறுத்தும் உரைத்தன.உளம் மலர்ந்த உன்னதங்களை சின்னமடுமாதா கோவில் வளவுக்குள் மீட்டுப் பார்த்த அந்தப் பதின்ம வயதுக்கு அணிலோடும்,கொக்கோடும்,கிளியோடும் ஆயிரெத்தெட்டுக் கதைகளுண்டு.
மாரிகாலத்துத் தவளைகளும்,வெள்ளப்பெருக்கோடு சுருவில் கடலிலிருந்து ஊர் நோக்கிவரும் மீன்களும் மாதா கோவில் வளவுக்குள் வந்த எம்மை மகிழ்வித்துத் தம்மைச் சாகடித்திருக்கின்றன!



வாழ்வின் பெருமிதம் என்பது நட்பு என்பதே எனது தெரிவு.



அப்படியான நட்பை நான் தோழர் சன்னதியிடம் கண்டவன்.எங்கள் கிராமத்தில் நாம் ஒன்றாய் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டோம்.சேரிகளுக்குள் அரசியல்பரப்புரைகள்-கல்வி புகட்டல் என்பதற்கு நாங்கள் புரட்சிகரமான சினிமாக்களை(கண்சிவந்தால் மண்சிவக்கும்,உமை ஜனனங்கள்,உதிரப்பூக்கள் என…)கொண்டு,
விளக்கப்படுத்திக்கொள்வோம்.



அப்போதெல்லாம்”தோழர் சிறீ,நீங்கள் விளக்கங் குடுங்கோ”என்று அவர் ஒதுங்குவார்.மிகவும் செயற்பாட்டு ஊக்கமுடைய அவர்,சொல்லாற்றல் அற்றவர்.அரசியல் ரீதியாக மிகவும் கூரிய அறிவுடையவர்,எனக்குப் பாதர் சிங்கராயர் போட்ட பேச்சாற்றலால் என்னிடமிருந்து தான் பின் தங்கியதாக உணர்ந்தார்.அவரைத் தோழமையாகக் கொண்ட எனது அரசியலை அவரே பெரும்பாலும் நெறிப்படுத்தினார்.



மக்களுக்கு மத்தியில் ஆயுதம் எடுத்துச் செல்லப்படாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்புடையவர்.தீவுப்பகுதிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தபோது நான் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.எங்களை ஒருங்கிணைத்தவள் இந்தச் சின்னமடுமாதா.




வேலைணைச் சங்கக்கடை மனேச்சர் பாலனின் சமூகவிரோதச் செயற்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதிலும்,அதை அரசியல் போராட்டமாக்கிக் கிராமமட்டத்தில் மக்களை விழிப்படைய வைத்தத்திலும் நாம் ரெலோவுக்கும் அன்று கடமைப்பட்டவர்கள்.அவர்களது ஆயுத ஒத்துழைப்பின்றி, அன்றைய சண்டித்தனக்காரர்களை உடைத்துப் பாலனை சங்கக்கடைக்குள் மடக்கி இருக்க முடியாது.எனினும், இன்னொரு விதமாகப் புளட் செய்த பேரத்தில் இலட்சத்துக்காகப் பாலனை எம்மிடமிருந்து ஆயுத ரீதியாக விடுவித்த புளட், அன்று எமக்குச் சாவு குறித்து எழுதிய புலிகளுக்கு ஒத்தூதியது.இதன் தொடர்ச்சியும் மாதா கோவிலின் படிக்கட்டுகளிலேயே நாம் அடிபிடியாகவும்,கத்திக்குத்துகளாகவும் கண்டபோது, என்றோ ஒரு நாள் தோழர் சன்னதியைக் கத்திக்குத்துக்கு நாம் இரையாக்குவோம் என்பதை நான்மட்டும் அறிந்தே இருந்தேன்.




நாரந்தனைச் சன் பேதுருவார் கோயில் கூடுதூக்குவதில் எனது உறவுக்கார நாரந்தனையார்கள் என்னை எச்சரித்தபோது ஊர்காவற்றை பொலிஸ்சில் பரீட்சார்த்தமாக அடைத்தான் என்னை சப் இன்ஸ்பெக்டர் ஞானப் பிரகாசம்.அன்று, அவனது திட்டம் சன் பேதுருவார் கோயில் கூடு தூக்கும் அடுத்த ஆண்டு துப்பாக்கிச் சூடாக எமது தோழர்களைப் பதம்பார்த்தபோது, நாங்கள் இன்னுமொரு பொழுதை ஞானப்பிரகாசத்துக்காக ஒதுக்கினோம்.அது,எல்லாம் குழம்பிய குட்டையில் மீன்பிடித்த கதையாகப் புலிகளுக்கு வாய்த்துக்கொண்டது.நாரந்தனை வேளாளக் குடிகள் புலிகளாகித் திரிந்த பொழுதில் சன்னதிக்குச் சமாதிகட்டுவதை நான் அறிந்தே இருந்தேன்…








“பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!”
 


இதற்குப் பின்னாய் காலத்தை அலையவிடுவதில் சின்னமடுமாதாவைத் தரிசிக்க முடியவில்லை.
நினைத்துப் பார்க்கிறேன்.



“கடுமழையில் விழுதுடையும் வேம்புபோல்
கொடும் இயக்கக் கொலைகளில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து இயக்க முரண் அரசியல் விட்டு வைக்காது”


 
எங்களுக்குப் புளியம் பழம் தந்த சின்னமடுமாதப் புளியமரத்தடியில் சின்னதாகவும்,பெரியதாகவும் நாம் கூடியிருக்கிறோம்.நடுநிசிப் பொழுதுகளில் சாதியத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் பாடங்கள் எடுத்திருக்கிறோம்.அன்றைய சில பொழுதுகளிலேயே சேரிகளை புளியங்கூடலார் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர்.இராமனும்,கீத மங்கலமும்,எம்மிடம் ஆலோசித்தபோது,இழவு வீட்டுக்கு மேளம் அடிப்பதை நிறுத்தும்படி ஆலோசனை பகிர்ந்தவர்களுள் கனகசபையும்,நானும் முதன்மையாய் இருந்தோம்.சன்னதி,சேரி மக்களின் உணவுக்கு ஆதாரமான தொழிலை நிறுத்துவதில் முரண்பட்டிருந்தார்.மேளம் அடித்தவர்கள் பின்னாளில் உணவுக்குச் செத்தபோது,வெளிநாடுகளில் வேலை பார்த்த”சேரிப் பொடியன்கள்”தயவு அதிகமாகவிருந்தது.



இயங்கங்கள் சாதி ரீதியாகச் செயற்பட முனைந்தபோது,அராஜகமான அழிப்புகளும் சாதிரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டது.







பெரியவர்களின் எத்தனையோ சாதிச் சண்டைகளையும்,சின்னக் குழந்தைகளின் துள்ளித் திரிந்த பாதங்களையும் சின்னமடுமாதா வளவு தரிசித்திருக்கிறது.காதலர்கள் கோவிலுக்குள் குடியிருந்ததையும்,அதைக் கண்ட விடலைகளின் விஷம அடிகளை எதிர்கொண்ட அப்பாவிக் காதல் ஜோடிகள் கண்ணீர் சிந்தியதையும் மாதா தரிசித்தே இருக்கிறாள்.அப்போதெல்லாம் நான்கா பக்கமும் திறந்து கிடந்த மாதா கோவில் அரைச் சுவர்கள், இப்போது மூடிக்கட்டி,புகுமுக வழியும் இரும்புக் கேற்றுப்போட்டு,மாதவையும் சிறைப்படுத்திவிட்டார்கள் நாரந்தனை வேளாளப் பெருமக்கள்.கொலனித்துவ வாதிகளிடமிருந்த மனதுகூட நமது சாதியப் பெருங்குடிகளிடமில்லை என்பதை சின்னமடுமாதாவைச் சிறை வைத்ததில் நான் உணருகிறேன்.



ஏதோ ஒருபொழுதில், எனது இருப்பை இழக்கும் கணமானது சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்,நான் பெருந்தவப் பேற்றாளன் என்பது என்வரையில் உண்மையானதே.


இளமையின் வலி?


சுருங்கக் கூறிவிடலாம்,சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்.சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும் சிலகாலம் உயிர்த்திருக்கிறது!



ஒரு தரப்பின் இழப்பில் மறுமுனையின் இருப்பு வலுக்கும்பொழுது இஃது.மறுபடியும்,ஒருநாள் விடுதலையின் பெயரால் “ஏலங்கள் விடப்படும்”குத்தகையை வேண்டுவதற்காக,அது இன்னொரு கொலைக்களத்தை அந்நியருக்காக செய்விப்பதில் எமது வாரீசுகளே வழியெடுத்துக்கொடுத்தார் -அது முள்ளி வாய்க்காலுக்குப்பின்பும் தொடர் கதைதாம்!


 
இதற்கு-ஈழ மண்ணும் விதிவிலக்கல்ல,
சின்னமடுமாதாவும் விலக்கல்ல.



 
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.”-குறள்


 
ப.வி.ஸ்ரீரங்கன்

Dienstag, 5. Januar 2016

தமிழ்த் தேசியம் :கட்சிகளது அரசியல்


ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் நம்பிக்கை வைப்போம் ;
இலங்கையின் தேசியவின முரண்பாட்டுக்ககான தீர்வுத் திறவுகோல் இந்தியாவிடமேதாம் - நம்புவோம்!
எமது மக்களும் ,மண்ணும் அந்நிய இனங்களிடம் அடிமையாக்கப்பட்டு எதிர்கால அரசியவாழ்வு இருண்டுகிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் பல்வேறு அகமுரண்படுகள் (பிரதேசவாதம்,சாதி; பெண்ணடிமை ;குறுந்தேசியவாத ஒடுக்குமுறை (இஸ்லாமிய மக்களைப் பூண்டோடு கிள்ளியெறிந்த...) வர்க்க ஒடுக்குமுறை போன்ற பல்வேறு தளைகளே காரணமாகவிருக்கின்றன.இந்த அகமுரண்பாட்டை முழுமையாகக் கையகப்படுத்தி நம்மை ஒடுக்குபவர்கள் தேசிய அரசுகளாக நம்மைச் சுற்றி தம்மை நிறுவியுள்ளனர்.நமது அக முரண்பாட்டை நமக்குள் இருக்கும் அதிருப்பதியாளர்களைப் பயன்படுத்தியே நம்மை வடக்கும்,கிழக்குமாகப் பிளந்த சக்திகள்(இந்திய -இலங்கைக் கூட்டும் மற்றும்,அமெரிக்க ஏகாதிபத்தியம்) நமது மக்களை முழுமையாகத் தமது அடிமைகளாக்கி வைத்துள்ளனர்.நாம் இந் நூற்றாண்டிற்றாம் மிகவும் மோசமானவொரு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்.இதற்கான முழுப்பொறும் புலிவழியான போராட்டச் செல்நெறிக்கே!
இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில்முள்ளிவாய்க்காலுக்குப்பின்பான ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது.இந்த நகர்வானது நமது மக்களை அரசியல் மயப்படுத்தி ,ஐக்கியமாக்கியமாக்கியவொரு வலுவான வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ள மறுத்து எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான எதிர்ப்பு அரசியல் நகர்வை பிழைப்புவாத வியாபார யுக்திகளைக்கொண்டு நசுக்கி வருகிறது.இத்தகைய குழிபறிப்புக் கட்சிவாத ,வர்த்தக நோக்கு நிறைந்த அரசியலானது நம்மை அரசியற்றலமைதாங்க - வழிநடத்தத்தகுதியற்ற கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்க வைத்திருக்க முனைகிறது.இதன் மூலம் தமது கட்சிசார்ந்த வர்த்தக நலன்களை அந்நிய சக்திகளது சலுகைகளின்வழி அடையமுனைவதில் ஈழத்து மக்களது தேசியவிடுதலையை -உரிமைகளை தமது வர்த்தகப்பண்டமாக அந்நியர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அது மூலதனச் சுழற்சியில் ஒருவிதக் கச்சாப்பொருளாக -பண்டமாகப்பட்டு பரிவர்த்தனையில் பல தமிழ்ப் பிழைப்புவாதிகளைச் செல்வந்தர்களாக்கி உள்ளதென்றவுண்மை பல தமிழ் அரசியல் வாதிகளால்-ஊடககங்களால் மறைக்கப்பட்டு நாம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளோம்.இன்றைய தமிழர் பேரவை மற்றும் மரபார்ந்த தமிழ்த் தேசியக்கட்சிகள், கூட்டமைப்புகள் மற்றும் இயக்கவாதத் தலைமைகள் இதற்கு வெளியில் இயங்கவே இல்லை!

புரையோடிப்போன எதிரிகள்:

எதிரிகள் பல இரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிந்தது.அதைக் கூடத் தமது வர்க்க நலனின் பொருட்டுத் தமிழ் ஆளும் வர்க்கத் தரகு மூலதனம் சிங்கள மூலதனத்தோடு பேரமிட்டுத் தமது வர்த்தக மூலதனமாக்கிய அரசியலானது சிங்களப் பெருந் தேசியவாதத்துக்கும் -பௌத்த மதவாதத்துக்கும், அதன் இருப்புக்கும் பின் கதவு வழியாகப் பச்சைக்கொடி காட்டியதென்பது வரலாறாக நீள்கிறது.
நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், தமிழர் மகாசபை -தமிழ்க் காங்கிரஸ்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சிகளால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு, அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்த்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.பின்ளைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின்முள்ளி வாய்க்காலில் பிரபாகரனோடு பல்லாயிரம் தேச பக்த இளைஞர்கள் பலியெடுக்கப்பட்டு இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது.இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் பல இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் தமிழர் அரசியலது இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!
இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது கட்சிவாத நலன்களை முதன்மைப்படுத்தியும்,கட்சிகளது இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு முன்னாள்ஆயுதக் குழுக்கள்மற்றும் புதுப்புதுக் கூட்டணிகள் யாவும் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலுகுகள்,கோரிக்கைகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். 

எமது தேசிய அபிலாசைகள்:

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது பிரதேசப் பிளவுவாத நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது. தமிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.இங்கு பிள்ளையான் குழுவின்வீழ்ச்சி இதுசார்ந்தவொரு சிறு இடைவெளியை நமக்கு இட்டிருக்கிறது.அந்த இடைவெளியில் முதலில் வடக்கும் ,கிழக்கும் அரசியல் ரீதியாக மீளவிணையும் அரசியல் ஐக்கியம் கட்டப்படவேண்டும்.
நம்மை,நமது வாழ்வைக் கேவலமான கும்பல்களாக்க முனையுமிந்த பிரதேசவாதப் பிளவுவாத அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடித்தனர். இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம்இப்போதும் கட்டுகிறார்கள். இப்டித்தாம் வரதராஜப்பெருமாள் - பிள்ளையான்போன்ற கொடிய ஆயுதாரிகள்அரசியலில் இந்திய -சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு அடியாளாக மேலெழுந்தனர்.

திரு.சம்ப(ம)ந்தனோ அன்றிச், சங்கரியோ அல்ல டக்ளஸ் தேவாநந்தாவோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்ற மீளவும் தொடங்கிவிட்டார்கள். இவர்கள், எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,இடைக்கால நிர்வாக மாகாணசபை,13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.

பல்முனை ஒடுக்குமுறையும்,
அவைகளின் அமுக்கம்:

இன்றோ பல்வேறு அரச - பொருளாதார ஜந்திரத்துக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும்.அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப்பரிணாமிக்கத்தக்க புரட்சிகரமானவொரு அரசியற்பாதை காலத்தின் தேவை.நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம்.தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது.இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை. 

மாற்றுத் தலைமையின்
அவசியம் உணரப்பட்டதா? :

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலிபள் மறுபுறமாகவும்எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!

ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது. 

இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இந்த இழி அiசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?

மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் நம்மால் செய்து முடிப்பதற்கு மாற்றுச் சக்திகளுக்கும்,மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட நிலையில் இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா?

இன்றைய இந்தத் தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்மாற்றுச் சக்திகளால் நிகழவில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு மாற்றுத் தலைமை மக்கள் சார்ந்து மக்களால் கட்டப்படவேண்டிய நிலையென்றுமில்லாவாறு அவசியமானது.

எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.மகிந்தாவைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்த அதிகாரவர்க்கமானது அதனிடத்தில் இருத்தப்பட்ட மரபார்ந்த அந்நிய ஏவற் கட்சிதாம் யு.என்.பி. இப்போது மைத்திரி தலைமையில் தமிழ்க் கட்சிகளை ஏமாற்றிய பின்பும் அவர்களை மக்கள் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியவர்கள் இந்தச் மாற்றுச் சக்திகளுக்குள் இருந்த அந்நிய எடுபிடிகள் இல்லையா?

எனவே, ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.மாற்றுச் சக்திகள் தமது கட்டமைப்பை மக்களோடு மக்களாக்க நிற்கும் காலத் தேவையோடு பாரிய எதிப்பு அரசியலைச் செய்தே ஆகவேண்டும். இல்லையேல், தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டு மீளவும் மக்களை ஏமாற்றியழித்து ,நமது போராட்டவுணர்வையும்,ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அரசியலையும் பூரணமாகக் கருத்தியல் ரீதியாக அழித்து அநாதவராக்கப் போகிறது.
அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு, தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத் தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது. இதன் மறுவிளைவாகத் தமிழ்ப் பிழைப்வாதக் கட்சிவாதத் தலைவர்களும் ,கட்சிகளும்,போலிக் குழுக்களும் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் மெல்ல வலுவாக்கப்பட்டு நிரந்தரமாகப்படுகிறது.

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள்,ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே.இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை.அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொன்ற வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தருணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்!
இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது.இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?
"மக்களே!
அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.

உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின

நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,
துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே!!!"

ப.வி.ஸ்ரீரங்கன்