Dienstag, 27. November 2007

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து!

அண்டத்துள்
துயிலுங்கள்
ஆழ்ந்து!


ல்லாம் கலைந்த பொழுதொன்றில்
நடுத்தெருவில் நிற்கும் ஒரு உணர்வு
அந்தத் தெருவோரம் ஏதோவொரு வருகைக்காக எவரெவரோ காத்திருப்பு
கடைசியில் எல்லாஞ் சிதைந்து
சாயம் வெளுத்த துணியாக எனது மனது

நிமிர்ந்து வானத்தைப் பார்க்கிறேன்
மழைமேகமிழந்த வெளியில் சூரியனின் வருகை தாமதமாக இருக்கிறது
கடுங் காற்று வீசுவதென்று நமது பெரியவர் சொல்வதும்
அந்தக் காற்றைத் தாம் அறிவதென்றும்
தம்மிடம் பெருங் காப்புக் கவசம் இருப்பதென்றும் வார்த்தையில் சொன்னார்

வட்டமிடும் கழுகுகள் அவர் குரலைத் தடுத்தன
அவை கக்கிய ஏதோவொரு பொருளால்
பெரு வெடியின் அதிர்வில் பேரண்டம் தோன்றியதாகவும்
அந்தப் பேரண்டம் இனியும் சுருங்கி வருவதாகவும்
விஞ்ஞானிகள் கூறிக் கொள்கிறார்கள்!

பழைய விலாசத்தில் பத்துப் பேர்கள், தலைகள் இருக்கலாம்
பாய் விரித்துப்படுக்க எண்பது மில்லியன் தமிழர்கள் எண்ணப்படலாம்
பாட்டு வாத்தியங்கள் இல்லாமல் பல்லவிகள் பாடப்படலாம்
பாருக்குள் நீதி இருப்பதாகச் சொல்வதில்தான் பரிதாபம் தெரிகிறது


புட்டுக் கொண்ட பேரவாப் புலம்பல்கள்
போருக்குள் மாண்ட இதயத்தின் விளிம்பில் இரக்கத்தைத்தான் கூட்டுகிறது!
எத்தனையோ பொழுதுகளில்
வீரத்திலிருந்து வான்முட்டும் கர்ஜனைகள்
வாய்ப் பந்தல் கதையாய் அந்த வானமும் சுருங்கி
தனக்குள் ஒடுங்கும் காலத்தின் எதிர்வு முகத்தில் ஓங்க
கண்ட இடமெல்லாம் தாண்டித் தயங்காத விஞ்ஞானத்திலும்
ஒரு கையை வைத்துச் சுவைத்தபோது
துரும்பைப் பிடித்தபடி ஆற்றிலிறங்கும் பெரியவர்

சர்வதேசத்துக்குள் இன்னும் நீதியைத் தேடி
நிலை பெற்ற பொழுதொன்றில் பொறிக்கிடங்கைக் கண்டபோது
பொறுப்புகள் பொங்கித் தாண்டவமாடுகிறதாம்
பொல்லாத பொழுதுகளும்
பொய்மைப் பேச்சுகளும்
வட்டத்தில் நிலை குத்தி
கொட்டத்தில் காட்டிய பேரெழிச்சித் தாண்டவமாய்த் தாண்ட
புதுவுலகச் சாம்பிராச்சியத்துள் நீட்டியுறங்குதாம் சமாதானப் புறா!

இருப்பிடமிழந்த தெருவோரத்து நாயாகிய எனது முகத்தில் சலிப்பு
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கத்தில் கனவுதரித்தாவது அந்தச் சுகத்தைத் தராதோவென்றொரு நப்பாசை
நாமிருக்கும் கோலத்தில் கூட்டிக் கழித்து
ஊதிப் பெருக்கி மடக்கி வகுப்பதைத் தவிர வேறென்ன செய்ய?

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து
துன்பத்தில் நாமிருந்து
தூங்கித் தவிக்கும் பொழுதுகளிலாவது உங்கள்
புதிய வரவில்
பூத்துக் குலங்கும் தேசத்து விடியல்
எட்டுவதற்காகவேனும் இப்போது ஓய்ந்தெழுக!

நிர்மாணம்
27.11.2007

2 Kommentare:

Anonym hat gesagt…

உங்கள் கடைசி இரு பாராக்கள் என் மனதினை உருக்கி விட்டன‌.

நண்பரே, உங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி மகிழ்வான வாழ்க்கையைத் தொடரும் நாள் நெருங்குகிறது.

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

//நண்பரே, உங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி மகிழ்வான வாழ்க்கையைத் தொடரும் நாள் நெருங்குகிறது.//

நன்றி,அன்புடையவரே!
தங்கள் எண்ணம்போல் அது சீக்கரம் நடக்கட்டும்.