Sonntag, 23. Dezember 2007

பிரதேச வாதம் முரண்பாடும் இணைவும்

அன்னிய நலன்களுக்காக
எமது உயிரை விடுவது
எவ்வளவு கேவலமானது?


ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் மக்களே,வணக்கம்.
இன்று நமது சமூக வாழ்வானது உயிர்த்திருப்பதற்கும்,கொலைப்படுவதற்குமான சடுதியான பயங்கரவாதச் சூழலுக்குள் இருந்தபடி தனது இருப்பை நிலைப்படுத்த முயன்று வருகிறது.எந்தவொரு இனத்துக்குள்ளும் இல்லாதபடி எமக்குள்ளே எம்மைக் கொல்லும் ஆயுததாரிகளை பல நூறு குழுக்களாக வளர்த்துள்ளது இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சி.


இந்தியாவின் மிகக் காட்டுமிராண்டித்தனமான இந்த நயவஞ்சக அரசியலைத் தமிழ்நாட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் தயவோடு இந்திய மத்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கையில் முன்னெடுத்து,நமது மக்களின் தலையில் பாரிய ஒடுக்குமுறையென்ற பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுள்ளது.இது பல தரணங்களில் நம்மைப் பூண்டோடு அழித்துவர முனைந்தபடி, காலத்துக்குக் காலம் பற்பல முரண்பாடுகளை நமக்குள் தூண்டி நமது போராளித் தேச பக்த இளைஞர்களைத் திட்டமிட்டு நம்மை அழிப்பதற்கேற்றவாறு தயார்ப்படுத்தித் தத்தமது நலன்களை இலங்கையில் அடைந்து வருகிறது.

நாம் இதிலிருந்து மீண்டு,நமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதபடி நமக்குள் பாரிய அராஜகக் குழுக்களைக் கட்டிவைத்து,நமது மக்களின் நலனுக்காகப் போராடும் முற்போக்காளர்களை நரவேட்டையாடி வருகிறது அந்நியச் சக்திகள்.அதுள் முன்னணியில் நிற்கும் இந்தியாவோ தன்னை இலங்கை மக்களின் நலனில் அக்கறையுள்ள நட்பு நாடாகக் காட்டிக் கொள்வதற்காகத் தமிழ்நாட்டுக் கட்சி அரசியல் வாதகளுடாகவும்,இலங்கைப் பாராளுமன்றப் பண்டிக்கூட்டமான தமிழர் தேசியக்கூட்டு மற்றும் ஆயுதக் குழுக்களுக்கூடாகவும் இந்திய அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வருகிறது.

நாம் எந்தவொரு சூழ்நிலையிலும் விழித்துவிட முடியாதபடி பாசிசப் புலிகளுக்கூடாகக் காரியமாற்றும் உலக அந்நிய நலன்கள் இன்றொரு முக்கியமான கட்டத்தில் நம்மை ஏமாற்றிவர புலிகளுக்கு மாற்றானவொரு சக்திகளை முன்னிறுத்திப் புலிகளின் இருப்பை மேலும் நிலைப்படுத்தித் தமது ஆர்வங்களை,பொருளாதாரப் பிராந்திய நலன்களைக் காத்துவருகிறார்கள்.இத்தகைய நலன்களுக்குத் துணைபோகும் புலிகளும் மற்றும் குழுக்களும் நம்மை இன்னும் ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சிகளோடு புலிகளைக் குறைகூறியபடியே அவர்களின் எஜமானகளுக்கிசைவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.இவர்களே புலிகளின் அழிவை விரும்புவர்களாகவும்,புலிகளால்மட்டுமே தமிழர்கள் ஒடுக்கப்பட்டு அடிமை கொள்ளப்பட்டதாகவும் கூறி, மக்களிடம் புலிகளை இன்னும் வலுப்படுத்தித் தமிழ் பேசும் மக்களின்மீதான புதிய வகையானவொரு ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.போராடியே பழக்கப்பட்ட தமிழினத்துக்குள் இருந்து புரட்சிகரமான அரசியல் எந்தச் சூழ்நிலையிலும் அரும்புவது ஆபத்தென்று புரிந்து கொண்ட இந்தியா, புலிகளின் இருப்பில் இத்தகைய அரும்பு நசுக்கப்படுமெனக் கருதியே அதைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.

பாசிசப் புலிகளும் தமது எஜமானர்களுக்கேற்றபடி போராட்டத்தைச் சிதைத்து,நமது மக்களையும் போராளிகளையும் நரவேட்டையாடி வருகிறது.இன்று போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பதுங்கிகிடக்கிறது இன்னொரு நரவேட்டைக்கு!ஒரு இடைவெளிக்குள் முளைவிடும் முற்போக்காளர்களை வலுவாக இனம் கண்டு வேட்டையாடும் அதன் பாத்திரத்தைச் சரிவரச் செய்வதற்காக இலங்கை ,இந்தியப் பேரத்தில் இப்போது மூழ்கியுள்ளது.இதைக்கடந்தவொரு அரசியல் புலித் தலைமையிடம் இல்லை.இதை மறைப்பதற்காக அது "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்",என்றும் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"என்றும் மாறிமாறி நம் மக்கள் மீது குருதியைக் கக்கும்.இதை நாம் புரிவதே இன்றைய அவசியமாக இருக்கிறது.

இலங்கைப் பாசிசச் சிங்கள அரசு நமது பிரதான எதிரியென்பதாலும் அதுவே எப்பவும் எதிரியாக இருக்கிறது.ஆனால்,இப்போது இலங்கைப் பாசிச அரசைமிஞ்சிய தமிழ் ஆயுதக் குழுக்கள் நம்மை இன்னும் ஒடுக்கி,ஊராருக்கு உதவி வருகிறார்கள்.அந்நிய அரசுகள் இதற்காகக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும்போது அதன் சுவையில் தமிழ் பேசும் மக்களின் குருதி தாகமாக இருக்கிறது!

தென்னிந்தியாவெங்கும் மக்கள் யுத்தக் குழுவை(இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் நக்லைஸ்டுக்கள்) வேட்டையாடும் இந்தியப் பாசிச இராணுவமும்,ஓட்டுக்கட்சிகளும் இந்திய மக்களின் மீது ஒடுக்கு முறையைப் புதியபாணியில் அவிழ்த்துவிட்டு ஒடுக்கும் அதே பாணியலானவொரு போராட்டத்தை இலங்கையில் மிகவும் மாறானவொரு உருவில் செய்து வருகிறார்கள்.இது சாரம்சத்தில் ஒரே இலக்கை உடையது.அதாவது இடதுசாரிகளை,மக்கள் நலனிலிருந்து போராடும் ஜனநாயக வாதிகளை அழிப்பதே இந்திய-இலங்கை உலக அரசுகளின்-ஆளும் வர்க்கத்தின் நோக்கு.

இத்தகைய போக்குகளால்-அன்னிய நலன்களால் நமது போராட்டம் சிதைக்கப்பட்டு,இலங்கையில் வாழும் இனங்களின் ஒற்றுமை அழிக்கப்பட்டு,ஒவ்வொரு இனங்களையும் தனிமைப்படுத்தி நம்மை இலகுவில் ஒடுக்கும் இந்திய-அமெரிக்கச் சதியானது மிகவும் கொடூரமானது.இது இலங்கைத் தீவின் முழுமொத்த மக்களின் வாழ்வையும் சூறையாடும் அரசியலை நமக்குள் விதைத்படி இலங்கைத் தொழிலாள வர்க்கத்தை மிக இலகுவாக பிரித்தெடுத்துச் சுரண்டி வருகிறார்கள்.

அப்பாவி மக்கள் அழியுந்தருவாயில் எதையும் சிந்திச் செயற்பட முடியாது அன்னிய நலன்களக்காகத் தமது உயிரை விடுவது எவ்வளவு கேவலமானது?

தமிழ் பேசும் மக்களாகிய நாமோ தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டு எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நம்மை நாடோடிகளாக்கியுள்ளார்கள்.நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாழ்வானது காத்திரமான சமூக ஆண்மையாக இருக்க முடியாது!நாம் மெலினப்பட்ட இனமாக,பொருளாதாரப் பலமற்ற சிறு குழுவாகச் சிதைக்கப்பட்டு,உலக இனங்களுக்குச் சேவகஞ் செய்யும் நாடோடிகளாக்கப்படும் அரசியலை நாம் எதன் பெயராலும் இனியும் முன்னெடுக்கமுடியாது.

இங்கே,தோழர் சபா நாவலன் தன் கட்டுரையூடாகத் தன் முழு வலுவை¨யும் தமிழ்பேசும் மக்களுக்காகத் தியாகஞ் செய்யும் மனநிலையோடு உண்மையோடு கருத்தாட முனைகிறார்.இக்கருத்தாடுதலானது மக்களின் நலனிலிருந்து மக்களுக்கான விடுதலை நோக்கிய ஆரம்பப் புரிதலின் கதவைத் திறப்பதாகவே இருக்கிறது.இந்நோக்கே மிகவும் அவசியமானது.நாம் நம் எதிரிகளை மிகக் காட்டமாக அறிந்து,நமக்குள்ளேயே நமது எதிரிகள் நமக்காகக் குரல் கொடுப்பதாகக் கொடுத்து, நமது போராட்டத்தைக் காவு கொண்டு,நம் பல்லாயிரம் மக்களை நர வேட்டையாடி நம்மை இன்று இந்த நிலைக்குள் கொணர்ந்த வரலாற்றை நாம் அறிய இத்தகைய கட்டுரைகள் அவசியமானதாகும்.இத்கைய அறிவுபூர்வமான கருத்தியல் மக்களைப் பற்றிக்கொள்ளும் தரணத்தில் மக்களின் போராட்டச் செல்நெறி இன்னும் வீரியமான முறையில் தகவமைக்கப்பட்டு,சரியான பாதையில் நகரும்போது நம்மை எவர் அடிமை கொள்வார்?

இந்த நோக்கோடு தேசம்நெற் இணையச் சஞ்சிகையிலிருந்து நாவலின் இக்கட்டுரையை நன்றியோடு மீள்பதிவிடுகிறோம்.


என்றும்
மக்கள் நலன் நோக்கிய ஆர்வத்தோடு,

நிர்மாணம்.
23.12.2007



பிரதேச வாதம்: முரண்பாடும் இணைவும் :சபா நவலன்



மனிதகுலமும் அதன் சமூக நிலையும் நிலையானவையல்ல. காடுகளில் காட்டுமிராண்டிகளாக, குழுக்களாக அலைந்து திரிந்த மனிதர்கள் தாம் சார்ந்த குழுக்களின் குழுனிலை எண்ணிக்கை பெருகத் தொடங்க நாடோடி வாழ்க்கை சுமையாகிவிட, ஆற்றங்கரைகளில் குடியேற ஆரம்பித்த போது மனித குலத்தின் இணைவு முதன் முதலில் வெளிப்படையாக ஆரம்பித்தது. பௌதீக சார்பு நிலைகளும், புவியியல் நிலைமைகளுக்கும் ஏற்ப பண்பாட்டு அம்சங்களும் நிர்வாக அமைப்புக்களும் உருவாக ஆரம்பித்தது. பெரும் எண்ணிக்கையில் அமைந்த குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்த மனித சமுதாயம் சாம்ராஜ்யங்களின் ஆதிகத்தின் கீழ் மேலும் ஒருங்கிணைந்து கொண்டது.
ஐரோப்பாவின் பெரும்பாலான பிரதேசங்களில் சாம்ராஜ்யங்களாகப் பிரிந்து கிடந்த பகுதிகள் தேசங்களாக இணைந்து கொண்டன. பல மொழிகள் அழிந்து போயின. பிரதேச எல்லைகள் அழிந்து போய், தேசங்களின் எல்லைகள் உருவாகின. மக்களைப் பிரித்திருந்த நிலப்பிரபுத்துவ எல்லைக் கோடுகள் தேசங்களின் வரைவுக்குள் மறைந்து போக புதிய தேசங்களாக மக்கள் இணைந்து கொண்டனர். இவ்வாறு மனித குலத்தின் வரலாறு முழுவதும் மக்கட் பிரிவுகளின் இணைவிற்கும் ஒருங்கமைபிற்குமான வரலாறேயாகும். மனிதர்கள் கூட்டங்களாகவும் குழுக்களாகவும் சாம்ராஜ்யங்களாகவும் தேசங்களாகவும் இணைந்து வேறுபடுகளையும் குறுகிய எல்லைகளையும் தகர்த்தெறிந்த இந்த வரலாற்றுப் போக்கானது காலனியாதிக்கத்திற்குப் பின்னர் மாற்றமடைய ஆரம்பித்தது.
இயல்பான வரலாறுப் போக்கானது அதிகாரா சக்திகளின் நலன்களுக்காக சிக்கலானதாகத் திரிக்கப்பட்டது. மக்களிடையேயான முரண்பாடுகள் திட்டமிட்டுக் கூர்மைபடுத்தப்பட்டடன. பிரிவுகளுக்கான போரும் மனித சமுதாயத்தின் சிதைவும் நாளாந்த வாழ்வின் இயல்பு நிலையாகிவிட்டது.
முரண்பாடுகளைத் தகர்த்து புதிய சமூகத்தை உருவாக்குதற்கான மனித சமூகத்தின் போராட்டம் என்பது முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதற்கான போராட்டமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் பேசும் தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தூண்டித் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பரந்துகிடக்கும் ஜனநாயக சக்திகளிடம் இருந்து தமிழர்களைத் தனிமைப்படுத்திய புலிகள், வட கிழக்குத் தமிழர்கள் மீது பௌத்த சிங்களப் எதேச்சரிகாரம் பிரயோகிக்கப்படும் போதெல்லம் குரல் கொடுத்த தென்னிந்திய ஜனநாயகச் சக்திகளிடம் இருந்தும் இலங்கைத் தமிழர்களைத் தனிமைப்படுத்தினர்.


தமிழர்களது அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்து வந்த முஸ்லீம் தமிழர்கள் மீது தமது வன்முறையைப் பிரயோகித்த புலிகள் முஸ்லீம்களுடனான முரண்பாட்டைத் தூண்டி தமிழ் பேசும் தமிழர்களைத் தனிமைப்படுத்தினர். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் வாழ்வுக்கான போராட்டத்தை ஆதரித்த ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகளை அன்னியப்படுத்தி தமிழர்களை அன்னியப்படுத்தினர். பிரதேச முரண்பாடுகளைத் தேவைப்படும் போதெல்லாம் தூண்டிவிட்டு அடக்குமுறைக்கு எதிராக மையப்படுத்தப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எழுற்சியைக் கூறுபோட்டனர். மலையகத் தமிழர்களின் அவலங்களை இலங்கை அரசைப் போலவே புறக்கணித்து வந்த புலிகள், தமிழ் பேசும் மக்களின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை, தேசியத்தின் பேரால் முரண்பாடுகளை ஆழப்படுத்தி சீரழித்த வரலாற்றின் இன்னுமொரு தொடர்ச்சிதான் கருணாவின் தோற்றமும் கிழக்கு மக்களின் விரக்தி நிலையுமாகும்.

புலிகளைப் பொறுத்தவரை தேசவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான தேச பக்தர்களும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்களும், இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களும் தான் கொன்று ஒழிக்கப்பட வேண்டியவர்களாகக் கருதப்பட்டார்கள். விடுதலை இயக்கங்கள், அரசியற் கட்சிகளென தமிழ் மக்களின் தேச விடுதலைக்கு ஆதரவான எல்லா சக்திகளுமே புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டன. உயிரோடு எரிக்கப்பட்ட இளம் போராளிகளில் இருந்து வீட்டு முற்றத்தில் வைத்தே கொலை செய்யப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவான புத்திஜீவிகள் வரை நூற்றுக் கணக்கானோரின் பட்டியல் எம்முன்னே நீண்டுகிடக்கின்றது. புலிகளுக்கு உள்ளேயே அதன் முழு நேர உறுப்பினர்களாக இருந்த பல போராளிகள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதாலேயே குழிதோண்டிப் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள். பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான சிந்தனைப் போக்கினைக் கொண்டவர்களும் மக்களை நேசித்தவர்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தேசிய இன முரண்பாட்டை தமது சொந்த நலனுக்காக கையண்ட புலிகள் மக்கள் இடையேயான முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதில் இருந்தே தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகள் அதே மக்களின் விடுதலையைக் கையிலெடுத்துக் கொள்ளும் போது உருவகின்ற எதிர்ப்புகளை அடக்குவதற்காக பாசிச வடிவத்தைக் கொள்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் பல விடுதலைப் போராட்ட அமைப்புக்களினது அரசுகளினதும் பாசிசத் தன்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைவது இதுதான்.

ஒடுக்கப்படுகின்ற மக்கள் இடையேயன முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றைத் தமது நலன்களுக்காக கையாள்வதன் ஊடாகவும் உருவான இன்னொரு அமைப்புத்தான் கருணா குழு. கருணாவின் கோரத்தாண்டவம் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. புலிகளுக்கு எதிரான புதிய சக்திகளைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாற்றி உள்ளது. கிழக்கிலும் தெற்கிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களை மரண பயத்திற்குள் கட்டி வைத்திருந்த இவரது குழு, அரச பயங்கரவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டு மனித விழுமியங்களை மண்ணுள் புதைத்து விட்டதை இந்தத் தலைமுறையில் யாரும் மறந்து விடமாட்டார்கள். மக்களை அழிப்பதற்கான இதன் தொடர்ச்சியாக பிள்ளையன் குழு பேரினவாத அரசின் பிடிக்குள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மனித குலத்தின் வறலாறு முழுமையும் மக்கட் கூட்டத்தின் ஒருங்கிணைப்பகவே திகழ்ந்து வந்தது. இந்த இயல்பான வரலாற்றுப் போக்கானது காலனியாதிக்கக் காலகட்டம் வரை மக்களை ஒருங்கிணைத்தது. இந்தியா, இலங்கை போன்ற மூன்றாவது உலக நாடுகள் குழுநிலை சமூக அமைப்பில் இருந்து நிலப்பிரபுத்துவம் வரை வளர்ச்சி அடைந்திருந்தன. குழுநிலை சமூகத்தில் இருந்த குழுக்களை சாம்ராஜ்யங்கள் ஒன்றிணைத்த போது குழுக்கள் மத்தியில் இருந்த பண்பாட்டு முறைகள் மையப் பேரரசின் தன்மைக்கேற்ப இயைவுபட வேண்டிய தேவை ஏற்பட்ட போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பமும் சீரழிவும் ஏற்பட்டது. இந்த சீரழிவையும் குழப்பத்தையும் சீர்செய்ய பல சித்தாந்தங்கள் உருவாகின. கிறிஸ்த்தவ மதம் மேற்கிலும், இந்து தத்துவம் தெற்கிலும் உருவானது. அந்தந்த சமூகச் சூழ் நிலைகளிற்கு ஏற்ப, இணைந்து இருந்த மக்கட் பிரிவினர், சாதி ரீதியாக வகைப் படுத்தப்பட்டனர். இந்தியாவினதும் தெற்காசியாவினதும் சமூகச் சூழல், வர்ண சாத்திரங்களூடான சாதி அமைப்புமுறையை உருவாக்கிற்று.
உமா சக்கரவர்த்தி போன்ற பல இந்தியச் சமூகவியலாளர்கள் இந்த சாதி அமைப்பின் இறுக்கத்தைப் பற்றியும் அதன் தோற்றம் பற்றியும் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர். இந்தியாவில் மிக நீண்ட காலமாக, சுமார் 20 நூற்றாண்டுகளுக்கு மேலாக மாறாத் தன்மை கொண்டிருந்த நிலையான நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புப் பற்றிக் குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், இதற்கான காரணங்களை ஆராய முற்படுகிறார். நிலப்பிரபுத்துவத் தனித்தன்மைக்கே உரித்தான மக்கள் மத்தியிலான முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்த மக்கள் கூட்டம் தேசங்களாக வடிவெடுக்கும் முன்னமே சீரழிக்கப்பட்டுவிட்டது. நிலப்பிரபுத்துவ முரண்பாடுகள் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்பட்டன. இலங்கையில் பௌத்தம் பற்றி ஆராயும் ஜெய தேவ உயாங்கொட, காலனிகாலத்தில் சமூகம் மறு - நிலப்பிரபுத்துவ மயப்படுத்தப்பட்டதாக நிறுவுகிறார்.
காலனி காலகட்டத்தில் உருவான மூலதன உருவாக்கத்தைக் கண்ட கார்ல் மார்க்ஸ், பிரித்தானியர்கள் அறியாமலேயே இந்தியாவில் புரட்சி நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

உலக மயமாதலின் போதும் இதே எண்ணம் தான் பல சமூக உணர்வாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆனால் இப்போது நடப்பதைப் போலவே ஏகாதிபத்தியம் அன்றும் விழித்துக்கொண்டது. நிலப்பிரபுக்களோடு சமரசம் செய்துகொண்டு தேசிய மூலதனத்தையும், தேசிய சிந்தனையாளர்களையும் நிர்மூலமாக்கியதுடன், உருவான தேசிய சிந்தனையை தனது அடிவருடிகளூடாகக் கைகளில் எடுத்துக்கொண்டு அதனைச் சீரழிக்கத் தொடங்கியது. இதன் வெளிப்பாடே தமிழர் விடுதலைக் கூட்டணியும் புலிகளும் அதன் இன்றைய தொடர்ச்சியுமாகும்.
ஆக மனித சமூகம், இதுவரையில் தேசமும் தேசிய இனங்களும் வரை மக்கள் கூட்டங்களின் இணைவுகளைச் சந்தித்திருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதுவும் அரைகுறையாக நிறுத்தப் பட்டுவிட்டது. பெனடிக்ட் அண்டர்சன், எர்னஸ்ட் கெல்னர், ஹொப்சன், ஸ்டாலின் போன்ற பேசப்படுகின்ற பெரும்பாலான சமூக விஞ்ஞானிகளும், தமது தளங்களில் இருந்து தேசிய இனங்களும் தேசமும் சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின் ஒரு அம்சமாகவே குறிப்பிடுகின்றனர். தேசிய இனங்களும் தேசியம் பற்றிய இதுவரையான பெரும்பாலான கருத்தாக்கங்கள், ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய சீரழிவிற்கு முற்பட்ட காலத்தவையே ஆகும். லெனின், ஸ்டாலின் போன்ற தத்துவ ஆசிரியர்களுக்குப் பின்னதாக எர்னஸ்ட் கெல்னர், ஹொப்சபன் அண்டர்சன் போன்றவர்களும் கூட இந்த ஏகாதிபத்தியத் தாக்கங்களை கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
முரண்பாடுகளுடனான மக்களின் வரலாற்றின் ஒரு கட்டத்திற்கான ஒருங்கிணைதலான தேசிய இணைதல் கூட இலங்கை போன்ற நாடுகளில் முழுமையானதாக அமைந்திருக்கவிலை. இங்கெல்லாம் வளர்ச்சி அடையும் நிலையிலுள்ள தேசிய இனங்களையே நாம் காணுகின்றோம்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த வளர்ச்சியின் தேக்கநிலை திட்டமிட்டுப் பேணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட இந்தத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முரண்பாட்டிற்குச் முற்பட்ட காலப் பகுதியில் தேசிய இனங்களின் ஒன்றிணைவு மிக வேகமாக நடந்தேறியது. இந்தியாவில் இருந்து மிக பெருமளவில் இலங்கை வந்து குடியேறிய கௌரவர் என்ற சாதிப் பிரிவினராகிய தமிழர்கள் கராவ என்ற சிங்கள சாதிப் பிரிவினராக மாறிப் போனதுடன், இன்று சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். தமிழ் பேசிய அனுராதபுரம் 100 இற்கும் குறைவான ஆண்டுகளில் முழுச் சிங்கள நகரமாக மாறிப் போனது.
கணனத் ஒபேசெகரவின் கருத்துப்படி 30 வீதத்திற்கும் அதிகமான சிங்கள பௌத்தர்கள் தமிழ் இந்துக்களாக இருந்தவர்களே. 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்த குறிப்பாக மூலதன உருவாக்கத்தினூடான மற்றங்கள் ஏற்படுத்திய இணைவானது, தெற்கில் இருந்த பெருமளவிலான தமிழர்களை சிங்களவர்களாக மாற்றியது. மூலதன வளர்ச்சி மட்டும் திட்டமிட்டு ஏகாதிபத்தியங்களால் சிதைக்கப்படாமல் இருந்திருக்குமானால், முழு இலங்கையுமே சிங்களம் பேசும் நாடாகவே அமைந்திருக்க வாய்ப்புகளுண்டு.
இந்த இணைவை தனது சொந்த நலனுக்காகத் திட்டமிட்டு வேறுபடுத்திய ஏகாதிபத்தியம், மக்கள் மத்தியில் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தியது. தமிழர்கள் முஸ்லீம்கள் சிங்களவர் மத்தியில் சந்தைப் போட்டி உருவாக, வட கிழக்குத் தமிழர்கள் ஒரு சந்தையை அடிப்படையை நோக்கி இணைந்துகொள்ள, இவர்கள் தேசிய இனமாக உருவாக ஆரம்பித்தனர். வல் டானியல் கூறுவதைப் போல, ஐரோப்பியத் தேசிய இனங்களைப் போலல்லாது தீவிரமான உள்முரண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தத் தேசிய இனமானது, இன்னமும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளது.
இந்தக் கருத்து நிலையில் இருந்தே வட - கிழக்கு இணைவு தொடர்பான பிரச்சனைகளும் நோக்கப்படல் வேண்டும். சிங்கள பௌத்தர்களையும் தமிழ் இந்துக்களையும் ஒன்றாக இணைத்த சந்தைப் பொருளாதாரம் தடுத்து நிறுத்தப்பட்ட போதுதான் பொதுவாக இருந்த மொழி கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் மக்கள் இணைந்து கொண்டார்கள். ஆனால் உறுதியான சந்தையினை அந்நிய மூலதனம் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய நிலையில் தேசிய முதலாளிகள் என்ற அதிகார வர்க்கத்தால் தலமை தாங்கப்படும் தமிழ் தேசியம் உருவாகவில்லை. மக்கள் இடையேயான உறுதியான தொடர்புகள் ஏற்பட்டு இருக்கவில்லை.
இதனால் முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட தேசிய இனங்களாக உருவாகும் நிலையில் இருந்த இந்த தமிழ் தேசிய இனத்தின் உள்முரண்பாடுகள் அதிகார சக்திகளால் கையளப் படுகின்றன. புலிகள், கருணா குழு மற்றும் சில அதிகார வர்க்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றன. தமிழ் தேசிய இனத்துள் இருக்கும் உள்முரண்பாடுகளை மேலும் அதிகப்படுத்துகின்றன. இது பல சந்தர்ப்பங்களில் திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் வட - கிழக்குத் தமிழர்களின் தேசிய இணைவு எதிர்காலத்தில் தடுக்கப்படுவதுடன், கிழக்கு சார்ந்த தமிழர்கள் தனியான தேசியமாக பிரிவடையும் துர்ப்பாக்கிய நிலை கூட ஏற்படலாம்.

இந்தத் திட்டமிட்ட, உள் நோக்கம் கொண்ட அரசியற் செயற்பாட்டிற்குப் பின்னால் நிலப்பிரபுத்துவ சிந்தனை கொண்ட அன்னிய மூலதன சக்திகளூம் மறுபுறத்தில் இவர்களுக்குத் துணைபோகும் பிரதேச வாதிகளும் செயற்படுகின்றனர். யாழ் மேலாதிக்கவாதம் எவ்வளவு ஆபத்தானதோ அதேயளவு பிரதேசவாதமும் ஆபத்தானதே! 19ம் நூற்றாண்டில் நடந்ததைப் போலவே இன்னுமோரு முரண்பாட்டை உருவாக்குவதற்கான அத்திவாரம் இடப்பட்டுக் கொண்டிருப்பதை இடது சாரிகளும் ஜனநாயக சக்திகளும் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய மூலதன உருவாக்கத்திற்கும் சார்பான இலங்கை அரச தரகுகளும், அதன் ஆதரவுப் படைகளான, புலிகளும் யாழ் மேலாதிக்க வாதத்தினூடான இந்த முரண்பாட்டை கையாள்வதனூடாக இந்த முரண்பாட்டை கூர்மைப்படுத்துகின்றன. யாழ்ப்பாண மேலாதிக்க வாதமும், நிலப்பிரபுத்துவ மனோனிலை சார்ந்த தலைமைகளும் வட - கிழக்கு முரண்பாட்டைத் தமது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக கால காலமாகப் பயன்படுத்தி வந்துள்ளன.

நாகாலாந்தில் வௌ;வேறு மொழிகளைப் பேசுகின்ற இனங்கள் கூட தேசிய இன அடக்குமுறைக் கெதிராக இணைந்து போராட விளைந்த நிலையில், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான போராட்டத்தை புலிகள், கருணா போன்ற சமூக விரோதிகளிடமும் அவர்களை நியாயப்படுத்தும் அறிவுஜீவிகளிடமும் அரச பயங்கர வாதத்தின் அடிவருடிகளிடமும் பறிகொடுத்துவிட்டு இலங்கை மக்கள் பரிதாபகரமாக மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டு உள்ளனர்.

கிழக்கு மகாண மக்களின் ஒன்றிணைந்த வாழ்வையும் சகிப்புத் தன்மையையும் சீர்குலைப்பதற்காக, தேசிய இன அட்க்குமுறைக்கு எதிரான போராட்டதைக் கையிலெடுத்துக் கொண்ட ஏகாதிபத்திய சார்பாளர்களும், நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களும் சீர்குலைப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலகட்டத்தில் இருந்து நிறையவே பங்களித்து உள்ளார்கள். முரண்பாடுகளை இவர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய இடங்களிலும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து உள்ளார்கள். இவர்களுக்கு உரமூட்டுவதற்கு பிரதேசவாதிகள் மறுபுறத்தில் எப்போதுமே தயாராக இருந்து உள்ளார்கள். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திருகோணமலை பேரினவாதத்தால் சீர்குலைந்து போன வரலாற்றை யாரும் மறந்துவிட மாட்டார்கள். பெருந் தேசியவாதத்தின் நேரடி ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்த கிழக்கு மாகாண மக்களின் தியாகங்கள் வரலாற்றால் மறைக்க முடியாதவை.


தேசம் என்பதற்கான அடையாளம் முலதனச் சந்தையை நிர்வகிப்பதற்கான ஒரு அதிகார அடையாளமே தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமல்ல. அடிப்படையிலேயே இந்த அடையாளம் முதலாளித்துவ ஒடுக்குமுறையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. தவிர, வளர்ச்சி நிலையிலுள்ள தேசியஇனத்தின் உள் முரண்பாடென்பது, பிரதேச அடையாளங்களையும் அதனூடான முரண்பாடுகளையும் தன்னகத்தே அதிகமாகக் கொண்டதாகும். தேசத்தின் உருவாக்கத்தை கம்யூனிஸ உருவாக்கமாக குழப்பிக் கொள்பவர்கள் தம்மை அறியாமலே மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைத் தீவிரப் படுத்துகிறார்கள். இடதுசாரிகள் தேசத்தின் உருவாக்கத்தில் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பாசிஸ்ட்டுக்களின் கைகளிலிருந்து ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதனூடாகவும் மட்டுமே தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை மொத்த மக்களின் விடுதலைக்குமான போராட்டமாக மாற்றி அமைக்க முடியும்.
நமது நாடுகளில் தேசிய இன முரண்பாட்டை தூண்டியவர்கள் நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களும், ஏகாதிபத்தியத்தின் தரகர்களும் அதன் பங்காளர்களுமேயாகும். இன்று இந்த முரண்பாடு விரும்பியோ விரும்பாமலோ கூர்மை அடைந்துள்ளதை யாரும் மறுப்பதில்லை. இந்த முரண்பாட்டை தேச விடுதலைக்கு எதிரான பாசிஸ்டுக்களும், சமூக விரோதிகளும் தமது கையில் எடுத்துக் கொண்டு மனிதக் கசாப்புகடைகளில் வியாபரம் நடத்துகிறார்கள். உலகின் ஆதிக்க சக்திகளுக்குத் துணைபோகும் இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது பிரதேச முரண்பாடுகள் போன்ற உற்பத்தி சாரா முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதாலல்ல, முற்போக்கு சக்திகளின் அதிகார வர்க்கத்திற்கு எதிரான இணைவினால் மட்டுமே சாத்தியமாகும்.

3 Kommentare:

Anonym hat gesagt…

முரண்பாடுகள் வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் என மாவோ கூறியுள்ளார். கட்டுரையானது முதல் தடவையாக நம் மத்தியிலுள்ள முரண்களைப் பேசுகின்ற போதும், முரண்கள் தோற்றுவிக்கும் வளர்ச்சி பற்றி பேச மறுப்பதானது, புலியெதிர்ப்பு சந்த்தர்ப்பவாதத்தை வளர்த்துவிடுவத்காவே முடிபுறும்.

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

//முரண்பாடுகள் வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் என மாவோ கூறியுள்ளார். கட்டுரையானது முதல் தடவையாக நம் மத்தியிலுள்ள முரண்களைப் பேசுகின்ற போதும், முரண்கள் தோற்றுவிக்கும் வளர்ச்சி பற்றி பேச மறுப்பதானது, புலியெதிர்ப்பு சந்த்தர்ப்பவாதத்தை வளர்த்துவிடுவத்காவே முடிபுறும்.//



இலங்கையின் முரண்பாடானது எந்த வகை வளர்ச்சியைத் தோற்றிவித்துள்ளது?


தினமும் நடைபெறும் கொலைகளின் வீதாசாரத்தைக் குறித்துச் சொல்கிறீர்களா?


இலங்கையின் பிராதான முரண்பாடென்னது?

வர்க்கமாகப் பிளவுபட்டுக் கிடக்கும் இனங்களுக்கிடையிலான பிராதான முரண்பாடு எங்ஙனம் மழுங்கடிக்கப்பட்டு,அதன் வாயிலாக இனவாதம் வளர்தெடுக்கப்பட்டுள்ளதென்பதைக் காணும் அறிவு நிலையே அடுத்தபடியைக் காணும்.இங்கே, நாவலனின் கட்டுரை இதை நோக்கிய தேடலைக் குவிக்கிறது.


இதிலிருந்து நாவலன் பேசமறுப்பதாக நீங்கள் உணரும் முரண்பாடுகள் தோற்றுவிக்கும் வளர்ச்சியை இலங்கைத் தளத்தின் சமூக வளர்ச்சியில் வைத்துச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

Anonym hat gesagt…

nallathu

paraadukkal