Samstag, 12. Dezember 2009

இலங்கையில் தேசியவிடுதலைப்போராட்டம்...

புலிக்கு உளவு பார்த்தவர்கள்,
வியூகமென வடிவமெடுக்க...
 
 
வியூகம் என்பதை இவர்கள் ஒவ்வொரு காலத்திலும் அதிகாரங்களுக்கிசைவாகவே நகர்த்தியுள்ளனர்.அன்றைய உயிர்ப்பு,பின்னாளைய தமிழீம் சஞ்சிகையென... இவர்களது பல்சதி அரசியல் கடந்தகாலமாக இருக்கிறது.இதன் தொடரில், இப்போது வியூகம்.
 
 
கடந்த காலத்தை தாம் எந்த வகையில் அணுகியிருந்தனர் என்பதும்,அதன்வழி இப்போதைய காலத்தை எதன்பொருட்டு அணுகுகின்றனர் என்றும் அவர்களது இலக்கின்வழி தெரிவிப்பதல்ல இன்றைய நிலை.இப்போது,இவர்களது கடந்தகால அரசியலை சுயவிமர்சனமூடாக முன்வைக்க வேண்டியவர்கள் இவர்கள்.
 
குறிப்பாக, இதுள் தலைகாட்டும் ஜான் மாஸ்டர் தனது கடந்த கால அரசியலையும், தனது தார்மீக அரசியற் கடமைகளின் நிமித்தம் உண்மையோடு பேசியாக வேண்டும்.இவருக்கும் தீப்பொறிக் குழுவுக்குமான முரண்பாடுகள், இறுதியில் எங்ஙனம் இவரைப் புலி உளவாளியாக்கி மேற்குலகத்திலுள்ள ஊடகங்களை வேவு பார்த்ததென, இவர் சொல்லியாக வேண்டும்!
 
 
ஒவ்வொரு காலக்கட்டத்திலும்"புரட்சி,நேர்மை-மக்கள் நலன்-தேசியச் சக்திகள்"எனச் சொல்லியபடி, அதிகாரத்துக்கு உடந்தையாக இருப்பது தமிழ் வியூகம் அல்ல.இது,கபடம்!இதன்வழி, இன்றைய முள்ளி வாய்க்கல்வரை இவர்கள் வெட்டிய சவக்குழி நமக்கு நல்ல பாடம்.
 
 
எனினும்,மே 18 உம் இவர்கள்வழி மீள சில அடையாளங்களைக் காவி வரலாம்.
 
 
ஆனால், விடுதலையை அல்ல.
 
 
 


 
 
இது, குறித்து நாம் மிக நேர்த்தியாக உண்மைகளைக் கண்டடைய வேண்டும்.
 
 
இந்தவுண்மைக்காகவே இவர்களை மக்கள் முன் நிறுத்தியாக வேண்டும்!
 
 
மூடிய அரசியல்-காட்டில் பதுங்கிப் போராடி விடுதலை பெறுவதென்பது-புரட்சி செய்வதென்பது, இன்றைய நவீன தகவல் தொழில் நுட்பக் காலத்தில் நடவாத காரியம்.இங்கே பரந்துபட்ட மக்களது வலிமையோடு நேருக்கு நேரான அரசியலே அனைத்தையும் முடித்து வைக்கும்.இதைக்கடந்த காலத்தில்,குறிப்பாக 70களில் இத்தாலியில் களம்பல கண்ட இத்தாலிய நவ மார்க்சிஸ்ட் அந்தோனியோ நேக்றி(Antonio Negri) உரைத்து முடிக்கிறார்.
 
 
இந்த நிலைதாம் இன்றைய உலகம்.இதுள்,வியூகமென வடிவமெடுக்கும் கடந்தகால புலி உளவாளிகள் இப்போது எதை எம் முன் முன் வைக்கின்றனர்?
 
 
மீளவும்,அதே பாணி குறுந்தேசிய-தேசிய அரசியல்.
 
 
இது, முறிந்துபோன ஒரு இயக்கத்தின்வழி மக்கள் விரோத அரசியலோடு முடித்து வைக்கப்பட்டபின்பும் உலகை இலங்கைக்குள் முடக்கிவிட்டு, வியூகம் அமைப்பது மீளவும் கொலைகளின்வழி சிலர் தலைவர்கள் ஆகலாம்-செல்வந்தர்கள் ஆகலாம்.ஆனால்,மக்கள் விடுதலைபெற வேறுவகைகளில் நாம் முயன்றாக வேண்டும்!
 
 
அதுள்,இவர்கள் தமது கடந்தகால அரசியல் நடாத்தையை சுய விமர்சனத்துக்கூடாக முன்வைத்து, மக்களிடம் உண்மை பேசவேண்டும்.அதுவரையும், இவர்கள் மக்கள் விரோதிகள்-பரந்துமட்ட மக்கள் நலத்துக்குக்குக் குறுக்கே நிற்பவர்கள்!இந்த முத்திரை முன் தீர்ப்பல்ல-கடந்த கால இவர்களது அரசியல் பாத்திரத்தின்வழி நாம் கண்ட உண்மை-முடிவு!
 
 



 
 
 
இந்த வியூகம் அமைப்பவர்களின்வழி மீளக் கருக்கொள்ளும் மூடிய அரசியலுக்கு மேலும் முக்காடுபோட எவர் அனுமதிக்கிறார்களோ அவர்களே நாளைய கொலைகளுக்கு உடந்தையானர்வர்கள்.இதை இப்போதே கூறி வைக்கின்றேன்!
 
 
இன்றைக்கு புரட்சி-விடுதலை,சுயநிர்ணய விடுதலை என்பதெல்லாம் ஏதோ நான்கு பேர் சேர்ந்து, இயக்கம் அமைத்து,ஆள் திரட்டி,போரிடுவதென்பது முடிந்த கதை.
 
 
இலங்கையில் தேசியவிடுதலைப்போராட்டம் என்பது முடிந்த கதை.
 
 
இலங்கைக்குள் போராட்டம் என்பதும் அப்படியே.
 
 
இதுவரை, மக்களை முட்டாளாக்கிய தேசியம்-குறுந்தேசிய வாதிகளுடாகப் பலியெடுத்து வந்ததற்கு இவர்களும் உடந்தையானவர்கள்.இவர்கள் தமது சதி அரசியலை எதைக்கொண்டும் மூடிவிட முடியாது.இது பகிரங்கமாகப் பலாரால் உணரப்பட்டது.
 
 
வியூகம் அமைப்பது இவர்களது-குறிப்பாக ஜான்(காந்தன்) மாஸ்டர்-தெரிவில் விடுதலைக்கானதல்ல.மாறாகச் சதி செய்து அதிகாரத்துக்கு முட்டுக்கொடுத்துத் தமது இலாபங்களை அறுவடை செய்வதற்கு.இதற்கு,புதியதோர் உலகம் நாவல் ஆசிரியர் கோவிந்தனுக்குப் பின்பான தீப்பொறி நல்ல எடுத்துக்காட்டு.
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
12.12.2009

Keine Kommentare: