இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!
"புரட்சி,விடுதலை" குறித்த மாயைகள் தகர்க்கப்படவேண்டும்.
முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் "புரட்சி" வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்"புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்", இதுவரை தொடர்ந்த "தமிழீழ"ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.
இது, சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும்கூடவே புலிகளது போராட்டச் செல்நெறிகளையும் சிறு பிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் மீளவும் இந்திய-மேற்குலக மற்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் முன்னகர்வுக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கும் நிலைக்குள் உள்வாங்கப்பட்டுச் சிதைக்கப்படும் "இயக்கவாத மாயைக்கு" ஒரு முன்னிலைச் சோஷலிசக் கட்சியும் இப்போது அறிமுகமாகிறது.அதே போலிகள்,புரட்டுவாதிகள் இத்தகையவொரு சூழலைக் கையகப்படுத்தி அதை, ஆதரிப்பதில் தமது கடந்தகாலச் செயற்ப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைப்பதில்புலத்திலும்-நிலத்திலும் வெற்றியீட்டியுள்ளனர்.
இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை,புரட்சி,விடுதலையெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் "புரட்சி"க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும்,மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்."தமிழீழப்" போராட்டத்தின் அதே சுத்துமாத்து,சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.இந்த மாயைக்குள் தள்ளப்படும் சமூக உணர்வானது நமது கடந்த காலத்தையும்,போராட்டத் தோல்விகளையும் அது குறித்த சரியான மதிப்பீடுகளையும் உருவாக்கும் காலத்தை வெருட்டி,மீளவும் இயக்க வாத மதயைக்குள் திணிப்பதில் வெற்றி கொள்ளப்படும் மனிதவாழ்வு-சமூக அசைவியக்கம் நம் மக்களைத் தொடர்ந்தும் சிதைக்கும்.இது,தமிழ்நாட்டுச் சினிமாவுக்கேற்பத் தயாரிக்கப்பட்ட தமிழகத்து மக்களது மனித மாதிரிகளைக்கொண்டிருக்கும்.இத்தகைய வாழ்வு நிலை மனித மனமானது ,எதைக் குறித்தும் அலட்டிக்காதவொரு மாயைக்குட்பட்ட சமுதாயமாக இருத்திவைக்கப்பட்டுத் தொடர்ந்து சிதைக்கப்படும்.
இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!
இத்தகைய "முன்னிலைச் சோசலிசக்கட்சி,புதிய ஜனநாயகப் புரட்சி" மாயைகொண்டு அடிமைப்படுத்தும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இன்றைய புலம் பெயர் குழுக்களது இயக்க வாத மாயையாகும். இதனால், இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.
எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தை அன்று திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு இனவழிப்பு யுத்தத்தின் மூலம் புலிகளது அழிவைத் துரிதப்படுத்தி மக்களை அடிமைகொண்டது முள்ளி வாய்க்காலில்.
இந்த இராணுவத் தீர்வுக்குப்பின்பான வியூகத்துள் முகிழ்க்கப்பட்ட திடீர் மக்கள் எழுச்சிகள்-மாணவர்கள் கலகமெல்லாம் எமது மக்களுக்குள் ஊதிப் பெருக்கப்பட்டு அதே இயக்கவாத மாயையின்வழியாகப் "புரட்சி", முன்னிலைச் சோசலிசக் கட்சி வழியாகக் கூடிவருமெனக் கருத்தாடி, நம்மைத் நாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவுகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அரசியல் அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாகவின்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.
இந்த ஆபத்தைப் புரட்சிகரக் கட்சியாக வர்ணித்துப் புலத்து புரட்டு வாதிகள் குறிப்பாக இரயாகரன் குழு, நான் ஏலவே சொன்னதுபோல அபாயகரமான சக்தி-இயக்கவாத அராஜகவாதிகள்.இத்தகைய இயக்கவாதக் கயவர்கள்மக்களைத் தொடர்ந்து மொட்டையடிப்பதில் அவர்களது உரிமையைச் சொல்லியே அந்நியருக்காகச் சாகத் தூண்டுவதை நாம் பார்வையாளர்களாகவிருந்து பார்க்கப்போகிறோமோ அல்லது தடுக்கப் போகிறோமா?
இதை நாம் மிக முக்கியமாக உள்வாங்கி,எமது மக்களின் உரிமைகளுக்கான நியாய வாதங்களைக் கருத்தியல் தளத்தில் விரிவாக ஊன்றியாக வேண்டும்!கடந்தகாலப் போராட்டத்தையும்,அதன் தோல்வியையும்,அந்தத் தோல்விக்கான இயக்கவாத மாயயையும் ஆராயவேண்டும்.
அன்றுமின்றும் சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தத்துக்கு நாம் பல வடிவங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இங்கே,புலிகளதும்,ஏனைய இயக்கக் குழுக்களது இந்திய-அந்நிய அடியாட்ப்படைச் சேவக அரசியல்-போராட்டப்பாதை அதை மிகவும் சாத்தியமாக்கியதென்பதை நாம் அறியாதவரை எமக்கு விமோசனமில்லை.இத்தகைய நிலையிற்றாம்,நமது மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்குமொரு சதி அரசியலும்,புரட்டும் தொடர்ந்து அந்நியச் சக்திகளது கைக்கூலி இயக்ககங்களால்-குழுக்களால் "மக்கள் உரிமை,புரட்சி-விடுதலை" யென நமக்குள் அரங்கேற்றப்படுகிறது.இதிலொன்றுதாம் இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சியும், அதன் புரட்டும்!
இது குறித்த ஆரம்பப் புரிதலுக்குத் தன்னும் நம்மைத் தயார்ப்படுத்தாத சூழலைச் சபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே?
ப.வி.ஸ்ரீரங்கன்
26.01.2013
Keine Kommentare:
Kommentar veröffentlichen