யோசித்துப் பார்க்கிறேன்.1988 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு அன்று,தட்டச்சு செய்த வெறும் காகிதங்கள்தாம் அழைப்பிதழ். கையெழுத்துப் பத்திரிகைகள்,தட்டச்சில் எழுதிப் போட்டோப் பிரதி செய்த பத்திரிகைகளைத் தவிர நாம் ஒன்று கூடுவதற்கான அறிவிப்பை எதிலுஞ் செய்யவில்லை! எனினும்,கணிசமானவர்கள் பங்குபற்றியதும்,கருத்துப் பரிமாறியதும்,அடிபட்டதும்-குத்துப்பட்டதும் கருத்துக்களறாற்றாம்.அத்தகைய சந்திப்பு ஒரு கட்டத்தில் பிழைப்பு வாதிகளது கைகளில் ஏதோவொரு காரணத்துக்காகச் சென்றபோது அதைத் தட்டிக் கேட்டவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பாய் பொண் [Bonn-Germany] சோமசுந்தரம் அத்தகைய பிழைப்புவாதிகளில் ஒருவர்.இது குறித்துச் சிந்தனை ஆசிரியரோடு உரையாடினேன்.அவர்,வழமையான புன்னகையோடு மௌனித்தார்.இதே சோமசுந்தரம் நமக்கு இந்தியாவிலிருந்து ஒரு தமிழ்த் தட்டச்சைக் கொணர்ந்து தந்துவிட்டு (1989 ஆம் ஆண்டு), 1200 டொச்சு மார்க்கைப் பணமாக வேண்டினார்.துடிக்கத்துடிக்கப் பணத்துக்காய் அனைத்தையும் தப்பாகவே செய்பவர்கள் இலக்கியச் சந்திப்பை ஒரு கருவியாகப் பயன் படுத்தியது உண்டு.
இன்று,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்புக் குறித்து பௌசர் தீபம் தொலைக் காட்சியில் நிகழ்வு குறித்து நேரடியாக உரையாடி விளம்பரஞ் செய்யுமளவுக்கு நமக்குள் வசதிகள் பெருகிவிட்டன.இத்தகைய வசதிகளின்வழி, இந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட இனவழிப்புக்குறித்து ஒருமித்து முடிவொன்றை இலங்கைப் பாசிச அரசுக்கெதிராகத் தீர்மானமாக இச் சந்திபுக்குழு வெளியிட்டு , இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மை இனங்கள்மீது இனித் தொடரப்போகும் அராஜக அரசியலைக் குறித்து எச்சரித்து, அவர்களை அநாதவர்கள் எனும் தரப்பிலிருந்து அரசியல் உரிமை கோரும் விவேகமான மக்கள் கூட்டமாக மாற்றும் முன் நிபந்தனைகளாக இந்தத் தீர்மானம் அமையவேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.இதுதாம் ஒரு கூட்டு முயற்சிக்கான அரசியலை நமக்குள் தொடர முடியும்.இதுள் உடன்பாடுகாண முடியாதுபோயின் இச்சந்திப்பு ஒடுக்குமுறையாளர்களது நிகழ்ச்சிக்கேற்பவே பயணிக்க முடியும்.இதுதாம் இன்றைய அரசியலாகவும் நமக்குள் நிகழ்த்தப்படுகிறது.இதைக் கடக்கவே இலக்கியச் சந்திப்பு அன்று தோன்றியதும் அதை முன்வைத்த தெரிவுகளோடு பயணித்துக்கொண்டதும்"மாற்றுக் கருத்து-அரசியலை"தொடரவே!
சிங்கள இனவாத அரச யுத்த வன்முறையாலும்-பாசிசப் புலிகளது அராஜகப் போராட்டத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பல வடிவினில் பல தளத்தில் இன்றும் இலங்கை அரசால் தண்டிக்கப்படுவது நாம் அறிந்தது!
தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தமானது வரலாற்றில் மன்னிக்க முடியாதது.இன்றைய இலங்கைக்குள் இராணுவவாத அரசியல் வியூகத்தின்வழி தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களது ஐதீகத் தேசமானது சிங்கள இராணுவச் சுற்றி வளைப்பு-மற்றும், அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்துள் கட்டுப்படுத்தப்பட்டு மெல்லத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரங்களும் மனித வளமும் சுரண்டப்படுகிறது.இதுவொரு புதிய குட்டி முதலாளியப் போக்காக, இராணுவப் பொருளாதார அசைவியக்கமாகத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் அரசியலானது மிகப் பயங்கரமானவொரு அரசியல் வாழ்வைத் தமிழ்பேசும் மக்கள்மீது இனவாதஞ்சார்ந்து சட்டபூர்வமாக ஏவியுள்ளது.
இந்த நிலையுள்,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்பானது கணிசமாகப் புலம் பெயர் அரசியல்-இலக்கியச் செயற்பாட்டாளர்களை இணைத்துச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இவர்களது, இந்தச் சந்திப்பு-இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகால நோக்கை இன்னும் கடைப்பிடிப்பதாகவிருந்தால்- இலங்கையின் இராணுவ ஆட்சி குறித்தும், தமிழ்பேசும் மக்கள்மீது சட்டவாத அரசின் விழுமியங்களைத் தட்டிக் கழித்தும்-வன்முறையைப் பல தளத்தில் குறிப்பாக பௌதிக இருத்தலில் ஏவியுள்ளதென்பதையும், ஒரு குழுவினது சர்வதிகாரமாக இராணுவத் தலைமையைக்கொண்டு தமிழ்பேசும் மக்களையும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் கண்காணித்து, வன்முறை ஜந்திரத்தின்வழி ஒடுக்கும் இன்றைய அரசியலை இல்லாதாக்கும் ஆரம்பப் புள்ளிகள் குறித்து இச் சந்திப்பு தீர்மானகரமான உரையாடலையும், அது குறித்த பகிரங்கமான தீர்மானத்தை (இனவழிப்பு நிகழ்த்திய இலங்கை அரசைக் கண்டித்தும்) உலகுக்குக்குச் செய்யவேண்டும்.
இத்தகைய அரசியல் நோக்கில்-விடுதலையின் தெரிவில் அதைப் பிரகடனப்படுத்தியும் தீர்மானம் வெளியிடப்பட்டு,எதிர்கால இலக்குகளும்,இலங்கைத் தேசத்தில் ஜனநாயக ரீதியாக அனைத்து மக்களையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு சட்ட பூர்வ அரசை மீள மலர வைக்கும் முயற்சிக்கு இந்த இலக்கியச் சந்திப்பு பணியாற்ற வேண்டும்.
இதைச் செய்யாது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கைக்கு நகர்த்துபவர்கள் இலங்கை அரச நிகழ்சிக்குடந்தையாகவே பயணிப்பர்.இதுதாம்,இன்றைய இலங்கை அரசியலின் தலைவிதி.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
31.03.2013
Keine Kommentare:
Kommentar veröffentlichen