ஒழிந்தான் ஈழ அரக்கன்!
மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:
உணர்வுத் துடிப்பு அடங்குகிறது,
ஈழவரக்கனின் ஒவ்வொரு நரம்பிலும்
குருதியுறைந்து இதயம் தாக்கத்துள்
எத்தனை வகை வைத்தியங்களும் பலனில்லை,
மரித்துவிட்டான்!
இனியென்ன?
என் ஜனங்களே,
பாடையொன்றைக் கட்டுவதற்குமுன்
பறையெடுத்துவாங்கள் முழுவுலகமுமறிய
தம்மெடுத்துக் கொட்டுவதற்கு!
நாற்ற மெடுப்பதற்குள் பிணம் அகற்றப்பட்டாக வேண்டும்
அங்கே,இங்கேயென்று அலையாதீர்கள்!
சத்தியத்தை நீங்கள் இன்னும் தொலைக்கவில்லை
சதிகளை நம்பாதீர்கள்!!
மக்களின் உயிருள்ள வாழ்வுக்கு
நாசம் செய்த ஈழவரக்கன் ஒழிந்தானேயென
உருப்படியாய் எண்ணிக்கொள்வோம்.
உயிரை நீங்களோ,
உங்களுறவோ இனியிழப்பதற்கில்லை.
நம்பிக்கையைத் தொலைத்து,
மக்களின் உயிரையுறிஞ்சிக்கொண்டிருந்த
ஈழவரக்கன் தனிமையில் உயிரைவிட்டான்.
மக்களே!
மிருங்கங்கள் உங்கள் சுதந்திரத்தில் வந்து,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.
உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின.
நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,
துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன!!!
இனியும் நம்ப வேண்டாம்!
ஈழ அரக்கன் மரணித்துவிட்டான்.
அந்த அரக்கனின் வளர்ப்பு மிருகங்களே
அங்குமிங்குமாக அலைகின்றன,
அவை பைத்தியம் பிடித்த பொழுதொன்றில்
உங்களைக் குதறுவதற்குள் அவைகளை அழித்து விடவும்.
உங்கள் அயலாருக்கு நியாயத்தையும்,
உங்கள் சுற்றத்தாருக்கு பிரியமாகவும்
சாந்தமுடைய சமூகமாகவும் இருக்கக்கடவீர்.
இப்போது உங்கள் இடது கரங்கள்
ஈழ அரக்கனின் புணத்துக்கான பாடையொன்றைக் கட்டட்டும்,
வலது கரங்கள் மண்மேடாய்ப்போன
இல்லங்களைச் சீர் செய்யட்டும்.
இவற்றையிப்போதே செய்து விட்டீர்களானால்
விடியலில் வேதனைகள் குறைந்து
எல்லாம் வல்ல உங்கள் சக்தியை
ஒருங்கு படுத்திப் புதியவொரு ஆன்மாவை
உங்களுக்கு விசுவாசமாக்குவீர்கள்.
என் ஜனங்களே கேளுங்கள்!
உங்களுக்குச் சாட்சியிட்டுச் சொல்வேன்,
நீங்கள் அன்னியரை நம்பவேண்டாம்!
உங்கள் சக்தியையும்,ஆன்மாவின் பலத்தையும் நம்புங்கள்.
நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி,
நீங்கள் அவர்களுக்குப் பயந்த காலத்தை விட்டொழியுங்கள்.
அங்ஙனம் அவற்றை மறக்கும்பட்சத்தில்
இருளில் உங்களது அதிசயங்களும்,
யுத்த ப+மியில் உங்களது நீதியும் நிச்சியம் அறியப்படும்.
2006 டிசெம்பர் 27.
1 Kommentar:
NO COMMENTS
Kommentar veröffentlichen