Dienstag, 30. Januar 2007

கல்வெட்டு.


கல்வெட்டு.


தோழியொருத்தியின் பிரவாற்றல் தாங்காது பாடித் தொலைக்கும் புலம்பலொன்று எப்போதோ..."மாசறு காலவோட்டம் மாற்றம் மிகு-தை முதல் எல்லா நாளும்
விளங்கும் ஒரு சதித் திதியில்-துரோகிப் பட்டத்
தவமுடையாள் "....................."சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால்"

கட்டியம்:

தமிழருக்கென்ற தனியொழுக்கத்தில் நிலைத்து,வாழ்வைச் சிறப்பாக்கும் நோக்குடன் கல்வியைக் கற்று,தம் குடும்பம், தமது டாக்டர் பட்டம் என்றும்,பட்டும் படாமலும் ஊர் நடப்பு,இறப்புக்கள்-கொலைகள் பேசும்,பட்டியல் போட்டு ஐந்தொகை தயாரிக்கும்"....................."அ.ஆ.இ.ஈ.உ.ஊ போன்ற அதிபுத்தியுடைய நல்ல மனிதருக்குள்,தான் பெற்ற கல்வியைத் தனது இனம் சிறப்படைய வேண்டுமென்ற கனவோடு, ஈழஞ் சென்று மக்களோடு மக்களாகச் சேவை செய்த துரோகிகளின் வாழ்வுக்கு உதாரணமான ஒரு பெரும் தோழிக்குக் கல்வெட்டுப் பாடும் கொடும் பொழுதொன்றில்- ஈழவிடுதலை இயக்கங்களுக்கு என்றும் இரத்தம் தேவையென்ற அவசியக் குறிப்பைத் தருவதற்கும் ஏதோவொரு நறுக்குத் தேவையானதாக இருக்கலாம்-இது,அது!

ணவன் புலம்பல்.

..........வாழ்வின் தனிமையிலே என்னை
அரவணைத்து வாழ்வளித்த அன்பே!
ஆசையோடு பாசமுதளித்து எனக்கு
மழலைச் செல்வமிட்டாயோ?

இல்லை?

வெண்ணை திரண்டு வர சாடியுடைந்த கதையாய்
(தேசிய)காலன் உனைக் கவர்ந்தானே-என்
காதல் கிளியுனை இழந்து நான்
சோக நெஞ்சாய் உன் கட்டிலில்...

துயர்படிந்த முகமாய் எம் மழலைகள்
துணைவி நீயின்றி ஊரும் நோயொடு
நாமும் சருகானோம் உன்னைப் போன்றே!
துன்பமெனும் கருமேகம் ஈழமென்று-எமைச்
சூழ்ந்து குடியெல்லாம் கோதாரி
கொலைக் களமாய் குடும்பங்கள்!

வேறு:

மறந்திடுவாயோ மனமே-எம்
தேசத்து நங்கையை மறந்திடுவாயோ ?
அறந்தரும் அன்புடையாள்
அறிவு தந்த மருத்துவச்சி
மறைந்தாள் கண்ணிலென

நினைத்திடும் பொழுதே-என்
நெஞ்சு வலிக்கிறது நீ
மறைந்தாய் என்றுணர
நாமின்னும் எத்தனை தடவைகள்
உனையிழக்க?

மறந்திடுவாயோ மக்கள் மனமே
ஈழத்துப் பெண்ணை மறந்திடுவாயோ?
அறந்தரும் அன்புடையானவள்
மறைந்தாள் ஈழப்போர் கொலையென.

மக்கள் புலம்பல்:

அம்மா எங்கே?
எங்கள் டாக்குத்தர் அம்மா எங்கே?
எங்கள் அம்மா துரோகியானாளோ?
நாறிய வாய்கு நல்ல மருந்திட்டாள்
நாய்க் கடிக்கு ஊசி போட்டாள்
பேய்க் குணத்துக்கு பேதியுந் தந்தாள்
போனாளோ துரோகியென!


பாட்டுப் பாடிக் கதைகள் சொல்லி
பக்கம் பக்கமாய் படிப்புச் சொல்லி
இந்த நோய்க்கு இந்தக் காரணமென்றும்
இதற்கு இந்த வகையில் இதயம் துடிக்குமென்றும்
எல்லாம் சொல்லி
ஈழத்து நோய்கு மருந்தும் கண்ட
எங்கள் அம்மா தூரம் போனாளே!


பல்லுப் போன குழந்தைகள் நாங்கள்
நோய்குத் துவண்ட பொழுதுகள் கண்டு
மெல்லிய கரத்தை எமக்குள் புதைத்து
மெல்லத் தூங்க வைத்த எங்கள் அம்மா,
தூங்கிப் போனாள் துரோகியென!

துயில் கலைத்து
வருவாள் ஒரு பொழுதில்
பத்துத் தலைகள் கொண்டு,
ஆரிடம்தான் நாங்கள் சொல்ல?
அறிவடித்த அற்பங்கள் உலகில்
அடுக்கும் பொய்கள்
ஆருக்கோ பொன் விளைய
அறிவாயோ அம்மா இந்த அற்புத நிகழ்வை?


எங்கள் துயரச் சுமையை
காவித் திரிந்த உனக்குத் தூக்கம் வந்ததோ?
தூங்கு நீ,தூங்கு!
கண் விழிக்கும்போது நீ
கடமையைச் செய்யத் துடிப்பாய்
அதற்கேனும் தூங்கு தாயே,தூங்கு!பெற்றோர் புலம்பல்:


பாசமுள்ள மகளே-நீ
படித்த பொழுதுகளிலெமைப் பிரிந்தாய் சீமைக்கென்று
அன்றொரு நிலையில்.
இன்றோ,
சுற்றங்கள் தொலைய
நாயாய் அலையும் உன் பெற்றோர்கள்
பேயாய் வந்த புயலில் சுரண்டு போனோம்
உன்னை இழந்து.
வேறு:
ஈழமாய் அரசியல் வந்து
மோசமாய் ஆயுதம் புகுந்து
வேசமாய்ப் போனதடி தேச நலன்.

வேறுக்கும் வேறாய் விறகு வைக்க:

காற்றாய்ப் பறந்ததடி உன் முகமும்
கடுங்கோலனால் போனதடி உன்னுயிரும்
கடுகு வெடிக்குதடி பெற்ற வயிற்றில்

மற்வர் பிள்ளைகள்
ஒற்றர்கள் கண்களில்
ஒரு கோசம் சொல்லும் ஏதோவொன்றுக்கு
துரோகியாகி துலைக்கும் பொழுதில்
துயரம் என்ன-துணிவு என்ன?

தமிழின் பெயரால்
தமிழர் சாக
தங்குவார் எவரோ தமிழீழமென்று!


தங்கச்சி நீயும்
தாங்கிய குண்டு
தமிழ் குண்டென்றால்
தமிழுக்குச் சூடு
தாய்க்குச் சூடு.

வாய்விட்டழுவதே
வழக்கமாய்ப் போச்சு
வன்னிக்கென்ன வடக்குக்கென்ன
வாகரைக்கென்ன!

பட்ட மரங்கள்
பாடையில் போவார்
பாடையை உனக்குத்
துரோகி சொல்லித் தந்தது தொல்லை.

தமிழாய் இருந்தாய்
தாயைக் காத்தாய்
தந்தாய் அறிவைத்
தமிழராய் அறிய,
தரணியில் இன்று
தவிப்பது நாமே!Keine Kommentare: