Dienstag, 30. Januar 2007

எனது பரம்பரையும் நானும்

எனது பரம்பரையும் நானும்


எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கும்
இந்த இருட்டில்
எதுவும் இல்லையென்பது நிச்சியமாகின்றது.

எனக்குப் பின்னால்
எல்லாப் பரம்பரைகளும்
கடந்துகொண்டிருந்த வெளியில்
நானும் விடப்பட்டுள்ளேன்.

சொர்க்கமும் நரகமும்
இல்லாதொழிக்கப்பட்ட பரப்பில்
ஆழம் காணப்படாத சேற்றில்
எனது கால்கள் புதைகின்றன

ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே
தனது ஒவ்வொரு வேளை
உணவையும் உண்ணுகிறான்.

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையுங் கூட
இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்தத் தக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை.

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக்கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளுடன் தோற்றுக்கொண்டிருக்கிறேன்.


(ஈழத்துப் போராட்ட இயக்கச் சர்வதிகாரத்தை எதிர்த்துச் சமூகக் கலகக்த் தற்கொலையைச் செய்து, செத்து மடிந்த கவிஞர் சிவரமணியின் கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது.இன்றுவரை இந்த நிலைமைதான் அனைத்து மக்களுக்கும்.நிலைமை ஒரு துளிகூட மாற்றமுறவில்லை!சிவரமணி சாகாதிருந்திருக்கலாம்.)

Keine Kommentare: