Dienstag, 30. Januar 2007

துப்பாக்கிகளைப் பற்றி

துப்பாக்கிகளைப் பற்றி.


துப்பாக்கிகளைப் பார்த்திருப்பீர்கள்!

துப்பாக்கியை மட்டும்
ஒருவனிடம் கொடுத்துவிட்டு
மனிதனாக இருப்பான் என
நம்பியிருக்க முடியாது.

துப்பாக்கிகளை வைத்திருக்கும் போது
முட்டாளும் அறிஞனாகிறான்.
பிரபஞ்சமே காலடியில்.
மக்கள் எல்லாம்(எல்லோரும்?) புற்களை
அங்கொன்றும் இங்கொன்றும் கடித்து
கூட்டமாய் நின்று
தலையசைப்பதைப்போல்
பிரமை.

மொழியைக் கற்பதற்கு
சில மாதம்,ஆண்டென
எப்படியும் ஒரு அவகாசம்
வேண்டியிருக்கும்.

துப்பாக்கியுடன்
தெருவில் இறங்கினால் போதும்
ஒரு மணிநேரமே அதிகமென்பேன்
துப்பாக்கி மொழியைக் கற்றுவிடலாம்.

துப்பாக்கிகளுக்கு
சுட்டுக்கொண்டே இருக்கவேண்டும்,
சாத்தியமாயின் ஒரு மனிதனை
மிருகத்தை
குருவியையாவது.
அதுவும் போனால்
ஒரு குரும்பட்டியையேனும்
சுட்டே ஆகவேண்டும்.மொழியைக் கற்பதற்கு
சிலமாதம் ஆண்டென
எப்படியும் ஒரு அவகாசம்
வேண்டியிருக்கும்.

துப்பாக்கி நண்பனே!
இவைபற்றியெல்லாம் உனக்குச் சிந்திப்பதற்கு
நேரமதிகமாய் இல்லை!!


உனது சிந்தனையெல்லாம்
காவலில் இருக்கும் மனிதனை
எப்படிக் கொல்வதென்பதாக இருக்கும்.

உனது அறிவிற்கெட்டியவரையில்
தலையில்,
வசதியாக இல்லாது போயின்
காது அல்லது நெற்றிப் பொட்டில்
குண்டுகளைச் செலுத்தி
அவ(ளை)னைக் கொல்வதைப் பற்றி
சிந்தித்துக் கொண்டிருப்பாய்.

அதிகமாக இந்த மனிதன்(மனிதர்கள்)
என்ன செய்திருக்க முடியும்?

ஜனநாயகத்தைப் பற்றி
அதிகம் பேசியவர்களாய் இருக்கலாம்.
அதிர்ஷ்டம் கெட்டவ(ள்)ன்
ஏதாவது
கொலை கொள்ளைகளைப் பார்த்துத்
தொலைத்திருக்கலாம்.
அல்லதுபோனால்
எதற்காகவேனும் நியாயம் கேட்டிருப்பா(ள்)ன்.

பதிலாக நீ
துப்பாக்கிக் குண்டுகளால்
கொன்றிருப்பாய்!

காலை விடியும்போது தெரிந்தவரையில்
சமூக விரோதியாகவோ
தேசத் துரோகியாகவோ
இறந்து போயிருப்பா(ள்)ன்.

நண்ப!
இறுதியாக
துப்பாக்கிக் குண்டுகளால்
நீ என்னையும் கொல்வதற்கு முன்பாக,
துப்பாக்கிகளை நம்பாதே.

துப்பாக்கிகளில் இருந்து
நீ தீர்க்கின்ற இரவைகள்
புழுதியாய்க் கிடக்கும் நிலங்களில்
விதைகளாய் விளைகிறது.

மறுபடியும் உனக்கு!
துப்பாக்கிகளை
எப்போது வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம்
(தருவதற்கென்றே பலர் உள்ளனர்).

முன்பாக
கற்பதற்கும்
மக்களை நேசிக்கவும்
அதிகமாயே உள்ளது.

நீ,
துப்பாக்கிகளை மட்டுமல்ல
துப்பாக்கிகளைத் தந்த
எஜமானர்களையும் நம்பாதே!

-செழியன்.

(அதிகாலையைத் தேடித் தொகுப்பிலிருந்து...1990-1993)

1 Kommentar:

Anonym hat gesagt…

செழியனோட கவிதயும் சூப்பர், அதுக்காக நீங்க சூஸ் பண்ணுன போட்டோவும் சூப்பர். போட்டோ பல சேதி சொல்லுது.