Mittwoch, 6. Oktober 2010

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

மெரிக்க-நேட்டோத் துருப்புகள் அவ்கானில் ஜனநாயகத்தைக் கட்டி வளர்க்கிறார்கள்:

இதோ சாட்சி; இந்த வீடியோ அவர்களது சமூக சேவையைச் சொல்கிறது.

அவ்கானிஸ்த்தானில் நேட்டோ சமாதானத்தையும்,பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகிறது.அது தலிபான் "பயங்கரவாதிகளிடமிருந்து" அவ்கானிஸ்த்தானைக் காத்து வருகிறது.

அந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தையும்,பொருளாதார சுபீட்சத்தையும்,மீள் கட்டுமானத்தையுஞ் செய்வதென்று ஒரே கத்துக்கத்தும் ஜேர்மனி,பிரான்ஸ்சு-அமெரிக்கா இங்கே அம்மணமாகிறது.



1990-2000 ஆண்டுகள்வரை அவ்கானில் 90.000.கெக்டரில் போதைப் பயிர் பயிரடப்பட்டது.

2001 ஆம் ஆண்டு, தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் போதைப் பயிர் வெறும் 7500 கெக்டரில்தாம் பயிரிடப்பட்டது.

அனைத்தையும் அழித்து அவ்வகானைப் போதைப் பயிரிலிருந்து அவர்கள்(தலிபான்கள்) காத்தார்களாம்.

அந்த 7500 கெக்டர் பயிரும் அமெரிக்கா காலூன்றிய இடத்திலேயே பயிரடப்பட்டிருக்கு.

நேட்டோ தலிபான்களை மலையடிவாரத்துக்குத் துரத்தியபின் 2004 ஆம் ஆண்டு அப் போதைப் பயிர் செய்கை 131.000.ஹெக்டரில் செய்பட்டும்-2007 ஆண்டு 193.000. ஹெக்டரில் பயிரிடப்பட்டு பெருமளவு உலக மக்களைக் கொல்ல, அமெரிக்கா தனது இராணுவத்துக் கூடாக இவ் வியாபாரத்தைத் தொடர்ந்தது-இன்றும் அமோகமாகத் தொடர்கிறது!

இன்று, இது பல இலட்சம் ஏக்கரில் அமெரிக்க இராணுவத்தால் பயிரடப்படுகிறதாம்.செய்ப்படும் போதைப் பயிர் உஸ்பிஸ்த்தானுக் கூடாக அமெரிக்க இராணுவத்தால்கடத்தப் பட்டு, இருஷ்சியாவை வேட்டையாடுவது எதனால்?எந்த மக்களைத கருவறுக்க? அமெரிக்காவுக்கு இதுவுமொரு ஆயுதம்!கவனிக்கப்பட வேண்டியது இது...

இந்த வீடியோவைப் பாருங்கள்-கேளுங்கள்.இதன் மொழி புரியாதவர்களுக்காக இதை வேறொரு தினத்தில் முழுமையாக மொழிமாற்றிச் சொல்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2010

Dienstag, 5. Oktober 2010

நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

வினவுவில் நிலா:



>> ஸ்ரீ ரங்க, நீ அங்காலையும் பாடுவாய், இங்காலையும் படுவாய், திங்கிற சோத்தில பங்கும் கேட்பாய்.எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு. இப்போ நாவலன் கை உயர்கிற மாதிரி தெரியுது…. பானையில சோறு இருந்தால்…பூனைகளும் சொந்தம் …பாவம் மக்கள் <<

nila Posted on 05-Oct-10 at 10:29 pm


http://www.vinavu.com/2010/10/02/raya-thesam-inioru/#comment-30768



நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?;



என் வீட்டு முகவரி தெரியுமா?;



அல்லது என்னோடு எப்பவாவது உரையாடியுள்ளீரா?



அங்கேயும்,இங்கேயும் பாடுவதென்பது நியாயம் எங்கே-அங்கே!



சும்மா இரயாவுக்குக் கொம்பு சீவுவது எனது நோக்கமில்லை!



நான்,எவரையும் சந்தேகம் கொள்கிறேன்.



இரயாவைப் புலியின் இன்போமர் என்று, கடந்த இரு ஆண்டுகள் முன் கூறியவன்.

http://srisagajan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF



அதுபோல் இன்று பலரைக் குறித்துச் சந்தேகம் கொள்கிறேன்.



அதிகார வர்க்கத்தோடிணைந்து புரட்சியைக் காட்டுபவர்கள் எல்லோரும் தம்மைப் "புரட்சி "வாதிகளாகவே காட்டுகின்றார்கள்.



இப்படி ஜேர்மனியில் எத்தனையோ புரட்சிக்காரர்களை-அமைப்பை பார்த்தவன் நான்.



சும்மா வீம்பு பேசமால் நியாயமாகச் சிந்திக்கப் பழகினால் அது தோழமைக்கும்-மக்கள்சார் அரசியலுக்கும் நல்லது.இல்லை "இப்படித்தாம் செய்வேன் "என நீங்கள் முனைந்தால் அது உங்கள் வர்க்க நிலையைப் பொருத்தது.



நான் எப்பவும்"சோத்துக்கு"அலைபவன் இல்லை!



அவ்வளவு போக்கிரியாகப் பணத்துக்குப் பந்தாவுக்கு ஓடுபவன் நான் இல்லை!என்னை உரைத்துப் பார்க்கும்"தகுதி"எவருக்கு இருக்கிறது.முடிந்தால் செய்யுங்கள்!



நான் இரயாகரன் இல்லை!



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

05.10.2010

Mittwoch, 29. September 2010

இலங்கை மாநகரில் ப.வி.ஸ்ரீரங்கனின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை....

இலங்கைப் பெரு நகர் கண்டிப் பேராதனைப் பல்கலைக் கழக அனுசாரணையுடன்,

பிரபல புல-நில, வலை-அலை,முக நூல் பதிவாளரும்,சர்வதேச-அண்ட அகிலச்சார்"ஆய்வு-ஓய்வாளரும்,தோலரும்,மேல் புலப் வரண்ட வர்ணனையாரும்,பொருள்-ஆதாரத்துக்கான புனைவுப் பெருமகனும்,கல்லாநிதியுமான Prof.Dr.Dr. ப.வி.ஸ்ரீரங்கனின்

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"

நூல் பற்றியதும்,அவரது வலை-உலை பற்றியதுமானதுமான அறிவார்ந்த-ஆழ்ந்த கலந்து உரைசெய்து ஊரைக்கெடுத்தேய்கும் வானர வர்ணைனைகளைப் பற்றி ஒரு தெருகூத்து நிகழக் காத்திருக்கிறது.

இடம்: அலரி மாளிகை.

காலம்:01.10.2010

நேரம்:அதிசாமம் 12 மணியிலிருந்து இருளகலும்வரை

ஆர்வமுள்ள அனைத்துப் பெருங்குடிகளையும் அன்புடன் அழைக்கிறார் கோத்தபாய அன்ட மகிந்த இராஜ பக்ஷ

பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்:இந்தியப் பிரதமர் மான் மோகன் சிங்
நன்றியுரைக்காக அமெரிக்க அதிபர் துணைவி மிகேலா ஒபா வருவதெனச் சொல்லப்படுகிறது.

ஏற்புரையை கல்லாநிதி ப.வி.ஸ்ரீரங்கனும் ஏற்று வழங்குவர்.

மறவாது கலந்து சி(...)றுப்பிக்கவும்.

Sonntag, 29. August 2010

நித்தியமெனச் சொல்வதால்

மரணம்தோழனென...

மிக அழகானது.ஏற்றுக்கொள்வதும்,அழகைத் தரிசிப்பதுமாக இருக்கும் இந்த நிலையுள் எதையோ தேடவேண்டுமென நான் அலைகிறேன்.ஒரு பொழுதேனும் அழுதுவிடத் தேவையற்ற வாழ்வின் நிச்சியம் நித்தியத்தோடு நெருங்குகிறது.பொழுது இருண்டும்,விடிந்தும் நாட்களை எண்ணிக்கொள்கிறது!

எத்தனையோ முறைகள் வாழ்வின் திசைநோக்கி நித்தியமெனக்கொள்ளும் இந்த நிலைநோக்கிய நினைவுகள் என்னை வருத்தியிருப்பினும், அதன் உளமார்ந்த உண்மையை மறுத்தொதுக்குவது நிந்திக்கத் தக்கது.நிலவு விறைத்துக்கொண்டு முகில் விலத்தும் தெருவோரம் சருகாகச் செல்லும் எனது உணர்வுள் நிலைத்திருப்பது என்ன?

மௌனித்த தியான வெளியுள் நீந்துகிற எந்தச் சலனமும் அதைத் தொந்தரவு செய்துவிடுமானால் தியான நிலையெனக்கொள்ளும் கணம் பொய்த்துப்போனதெனக்கொள்வதும்,மீளவும், அதை அடைந்துவிட வேண்டுமென முனைதலுமாக நாளிகை செல்வதில் நித்தியம் என்னவென்பதைத் தேடிப்போன நாட்கள் எந்தவொரு நிழலையும் தரிசிக்கவில்லை.



பொழுதுகள் உருண்டு செல்கின்றன.நெஞ்சில் கனத்த நினைவாகத் துரத்தும் மரணம் மகிழ்ந்து குலாவும் நினைவெனப்படருமா?

நெருப்போடு நித்தியமாகும் உடல் விலத்தி எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கென எதுவும் கொள்ளாத திசை நோக்கே இதுவரை எனது துன்பத்தை விலத்தி இருப்புறுத்தும் பொருள்சொல்கிறது. எதற்காகவும்,எதையும் தேடுவதில் என்ன பெரும் பயன்கொள்வினையூக்கப் பயன் நிலைகொள்ளும்?

பொருள்வகைக் காரணந்தாம் வாழ்வதின் ஊக்கமெனக் பகல்வதில் எந்தப் புதருள்ளும் நித்தியமெனச் சுவைக்க வைக்கும் எல்லாத் தேவையும் மரணத்தைக் குறித்து மௌனித்த கணங்களில் தேவதூதன் துணைக்கழைக்கப்படுவது இறுதி இலட்சியமெனப் பூண்டவர்கள் மரணதுக்காகக் காத்திருப்பவர்களை ஏமாற்றுகிறார்கள்!

பொய்யுரைத்து,ஒரு நிழலுலகத்தை நித்தியமெனச் சொல்வதால் மரணமறியா இறுதியாத்திரைக்கான கட்டிலில் தவமிருக்க நான் எப்போதோ பழகிவிட்டேன்.காலமெனக் கருக்கொண்ட இந்தவுலகம் எனக்கு முன்னும்,பின்னும் இருந்துவிடப்போகிறது.நானெனத் தோன்றியவுணர்வில் தென்பட்டதும்-புலப்பட்டதுமான இந்த வெளி என்னை-நானெக்கொள்ளத் தூண்டுவதில் தோற்றுக்கொண்டே வருகிறது.



கனவு கலைகிறதெனக் கனாக்கண்டவொரு இரவில் தூக்கங்கலைத்த அதிசாமப் பொழுதே அழகெனக்கொண்ட மரணத்தை ப் புரியவைத்தெனக்கொண்டபோது, அந்த அழகே புறத்தையொதுக்கி அகத்துள் தவிக்கின்ற நித்தியத்தின்இருப்பைத் தேடிச் செல்கிறது.போராடுவதன் அழகில் புதைந்திருந்த இந்த நித்தியம் நினைவை வருத்தவில்லை!

எனக்காகச் சந்திக்கும் மரணத்தைத் துரத்திவிட்டு தூரவிலத்தும் இந்தவுணர்வு இதுவரை தொலைக்கப்பட்ட-விதைக்கப்பட்ட-விரையமாக்கப்பட்ட எல்லா வினைகளிலும் மரணம் மகத்தானதாக இருப்பு நோக்கும் அழகு போராடுவதெனக்கொண்டேன். அப்படி விலத்திப் போனவர்களை விதந்துருகுவதில் ஒளியைவிட வேகமாக நித்தியத்தின் வினையோடு நெருங்குகிறேன்.

நிழலாக நீண்டுவருதும்,தொடர்ந்து துணையாக இருப்பதும் நீ மட்டுந்தானே?; நினைக்கவே நெஞ்சைக் கனக்க வைக்கும் தேவனும்-நித்தியமும் நீயெனக்கொண்டேன்.நெருப்பில் வெந்துவிடும் ஒரு தூசுக்கும் நிகரற்ற "நான்"நொருங்கி வீழ்கிறது.

நல்லதெனக்கொண்டதும்- நஞ்செனப்படர்வதும்-உணர்வதும், மறந்தொதுக்க விரும்பும் நல்ல நிலையுள் மௌனித்துத் தியான வெளியை நெருங்கும்போது நெஞ்சில் போராட்டம் அழகாய்த் துள்ளி விளையாடுகிறது.

ஓடு,ஓடு!




தூரத்தே துரத்திவரும் துணைவனோடு தள்ளியே நிற்காதேயெனக் கட்டளையிட்ட காலத்துள் கண்ணீரை மட்டும் இனங்காணத் தவிக்காதேயெனச் சொல்லும் இந்த நிமிஷத்தில், என் உலகம் இருண்டுவிடாது ஒளி விரித்துப் பகலெனப் பகரும் உணர்வோடு விடை பெறுதல் எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகு நிறைந்தது போராடுவது.

அஃது, மரணத்தைத் துதிப்பதாகச் சொன்ன திசையிலிருந்து உலகை மீளப்படைதாகவும்,அதுள் என்னையும் இருத்துவதாகவும் கனவாக நீளும் நினைவுகள், நெஞ்சுக் கூட்டுக்குள் குஞ்சு பொரிக்கும் நித்தியமும்,தேவனும் போராட்மென்பதாய்... அது,நட்புக்கும்-தோழமைக்கும் உண்மையான தியானத்தைத் தேடித் துரத்தியபடியேதாம் எல்லாவற்றுள்ளும் நெருங்கிப் பார்க்கும் உண்மை நித்தியம், மறுத்தொதுக்கத் தக்கதா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.08.2010

Sonntag, 1. August 2010

தங்கத் தேரோடும் அழகினிலே...

தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே ஒரு ராஜாவுந் தவமிருந்தான்...

னக்குள் ஓடுகின்ற காலவோட்டம் எப்போதும்போல வாழ்ந்த காலத்தைத் தவறவிட்ட-தொலைத்த பொழுதிலிருந்து ஊற்றெடுப்பது!நான் தேடுகின்ற திசையெல்லாம், எனது தொலைந்த பதின்மப்பொழுதிலிருந்து இன்றுவரை என்னை உருவாக்கும் ஒரு "உந்துதலோடு"சம்பந்தப்பட்டது.

அதுவொரு சோழகம் வீசும் வருடம்:1978

என்னமாதிரியான காலம்!இளமை ததும்பி ஆயிரம் கனவுகளை விழிகள் முன் நகர்த்தும் எனது அகத்துள், பெண்ணை-பெண்களைச் சுற்றிக் கற்பனைகளை அவிழ்த்துவிட்ட இந்த வருடத்தில், என்னைத் தொலைத்த அவளது அகத்துள் மெல்லத் தேடிய எனது முகத்தை இந்தப் பாடலோடு பொருத்தியிருந்தேன்.
என்மீது,காதலென்று நானே உணர்ந்திருந்த அவளது முகத்தில் ஆயிரம் வர்ண ஜாலத்தைக் கொட்டிப் புரட்டியெடுத்த இந்தச் சோழகக் காற்றில் எட்டு மூலைப் பட்டங்கட்டி அவளது சிரிப்பைச் சுமந்து பறக்கவிட்ட எனது கனவுகளே பட்டத்தின் நூலாகவிரியும் அன்று.

விண்கட்டி, குஞ்சங்கட்டி ஏற்றிய பட்டத்தோடு அவளைச் சுமந்த காலத்தின் ஏதோவொரு வெளியில், எல்லாமே வெற்றித் தாலாட்டாய் என்னைத் தாலாட்டியது.அப்போது இனித்திருந்த பாடல் இன்றும் இனித்தே இருக்கிறது.

"தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தால் ஆஆஆஆ..."

SPB Mani - Thanga Therodum-Ragupathi Ragava Rajaram - eSnips

என்று பாடுகின்ற பாலசுப்பிரமணியம் அவர்களது குரலில் தொலைத்திருந்த எனது முகத்துள் எப்போதும் கனவுகளே குடியிருந்தது.சோழகத்தின் சுழல் வீச்சில் இருப்பிழந்து பறந்துவரும் அவளது முற்றத்து மணலுக்கு முடிச்சு போடவிளைந்த எனது தவிப்பில், தப்பித்துப் போகும் மணலுக்கு இழை தந்தது இந்தப் பாடல்.


கனவுகளையும் அத்தோடு இணைத்து இதயத்தில் காதல்வெறிகொள்ளும் உணர்வுக்கு வடிகாலமைத்த அந்தக் கோடைகாலத்துச் சோழகத்தில்சுவை அதிகமிருந்தது.எல்லா வீடுகளிலும் காதலும், களியாட்டமும் நிலைத்திருந்தது. பெற்றோருக்கு தெரியாத காதலுறவில் பிறந்த குழந்தையையும் கொன்று குளத்திலும் போட்டிருந்தது இந்ததக் காலம்.

அப்போதும்,கிராமத்தின் முருகன் கோவிலில் அதிகமாக உடுக்கை ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

இதன் ஒலிக்குப் பின்னால் காதலர்களது தோல்வியும்,பெண்ணினிது காதலுக்கான தடைகளும், பேய் துரத்தலுமாக இருந்திருக்கிறது.பொன்னியம்மாள் உடுக்கை அடிக்கு முன்னாள் முருகனுக்கு அபேஷகம் செய்யுந் தருணத்தில் அவரது முகத்தில் ஆயிரம் சூரியப் பிரகாசம் இருந்திருக்கிறது.அதை எவருமே அன்று அறிந்துகொள்ள முனையவில்லை-அல்லது சாதியத் தடிப்பில் அதைக் காணாதிருந்திருப்பார்கள்!எனினும்,நான் அதை உணர்ந்தவன்.

எத்தனையோ காதலர்களது பித்தம் தெளிவித்தவர் அவர்.பேய் பிடித்தவர்களென ஊர் ஒதுக்கியவர்களை,"இல்லை"-இவர்கள் மீளவும் மனிதராவாரெனப் பொன்னி சாத்திரமுரைத்துக் குணமாற்றியவர்.அவரது முருகன் கோவிலுக்குள் நான் பாடல்களோடு உலாவிக் கொள்வேன்.எனது எட்டு மூலைப் பட்டத்தை வானில் ஏற்றி, முருகன் கோவின் மரத்தில் கட்டிவைத்து அந்த வயல் வெளியெல்லாம் ஓடித் திரிவேன்.அப்போதும், இந்தப் பாடல்களது சுவையோடு காதலைப் பகிர்வதற்குப் பெண்களைத் தேடிச் செல்வேன்.அப்படித் தேடியபோது கிடைத்தவளே கவிதாஞ்சலி.

எழுபதுகளின் இறுதிப்பகுதி ,எங்கள் கிராமத்தின் அதியுயர்வான வளர்ச்சியின் காலமென்பது உண்மை!எங்கும் வானொலிப்பெட்டிகளும்,மின்சார விளக்குகளும் ஒலிக்கும்-மினுங்குங் காலம்.மாணவர்கள் அதிகமாகப் பல்கலைக் கழகங்களுக்கு எடுபட்ட காலமும் அதுதாம்.

அந்த வருடத்தில் பல்லாயிரம் ரூபாய்க்கு மிளகாய் காய்த்துக் குலுங்கியது எமது தோட்டத்தில்.எல்லாமும்-எங்கும், மகிழ்வைத் தவிர வேறெந்த மொழியும் எமக்குத் தெரியாது.சோழகக் காற்றில் வானமெங்கும் பட்டங்கள் பறந்திருந்தன.வீண்ணோலம் மயக்கும் பொழுதினில் பாலசுப்பிரமணியம் அவர்களது இந்த மயக்கும் குரல் கிரமத்தின் வாழ்வைக் குதூகலிக்க வைத்தது.
"இது,இளையராசா பாடல்-இது விஸ்வநாதன் பாடல்-இல்லை இது சங்கர் கணேஸ் பாடலென"ப் பையங்களோடு மல்லுக் கட்டுவதிலிருந்து மங்கையரது மௌனப் புன்னகையுள் பொலிந்திருந்த உலகத்தைத் தரிசிக்க முனைந்த காலத்தின் எச்சமாக இருப்பது, இந்தப் பாடலும்,இசையும்-வரியும்.
கிராமத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோவொரு வருகைக்கு இடம் கொடுத்த அத்தியாயமாகவிருந்தது.எங்களது ஊருக்கு கமலகாசனது மீசையையும்,மோட்டார் சையிக்கிள்களை-கார்களை கப்பலில் வேலை செய்த அண்ணன்மார்கள் கொணர்ந்தார்கள். அவர்களே எங்கள் கிராமத்துக்கு முதன் முதலாகத் தொலைக்காட்சிப்பெட்டிகளையும் கொணர்ந்தார்கள்.அவர்கள் கொணர்ந்த பொருட்களோடு நாகரீகத்தையும் கொணர்ந்தார்கள்.காது மூடிய தலைமுடி வளர்ப்பும்,சிகரட்டு ஊதுதலும் அவர்களிடமிருந்துதாம் முதன் முதலாக நிசமாக நாம் உணர்ந்தது.

சினிமாப் பாடல் கேட்கும் உரிமையோடு எமது சினிமா மோகம் அப்போது முடிந்திருந்தது.தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது முடியாத காரியமாகவே கிடக்க, நாம் பாடல்களுடன் பெண்களது பின்னால் நடைபயிலக் கற்றுக்கொண்டோம்.

சோழகம்,இதற்கு வழிவிட்டு எம்மை அள்ளிச் சென்றது வானுக்கு.நாம் வாழ்ந்திருந்த பொழுதுகளில் சோழகத்தின் சுகமே அதிகம்.அந்தச் சுகத்துக்கு மெட்டமைத்தது இந்தப் பாடல்கள்தாம்.

பதின்ம வயதின் பள்ளி ,காதற் பள்ளியெனக்கொண்டது ஒரு காலம்.அது,மீளத் திரும்பாததில் மேனி வலிக்கும் நோவு அதிகமாகிறது.
நான் இப்பாடலோடு கடந்தகாலத்தை விட்டுத் துரத்துகிறேன்.துரத்திக்கொண்டே இருப்பேன்,எனது காலம் முடியும்வரை.


" தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே
ஒரு ராஜாவும் தவமிருந்தான்-அவன்
சின்னராசாவாக மலர்ந்திருக்க..."

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2010

Freitag, 30. Juli 2010

கல்லறையுள் காணமாற்போன ...

இளையராஜாவின் மெட்டுக்களை முன் வைத்து...


ரு காலத்தில்-பருவ வயதில் எத்தனை விதமான கலர்க் கனவுகள் நெஞ்சில் கூத்தாடும்.அந்தக் கூத்து ஏதோவொரு வகையில் மனதை வளர்த்திருக்கிறது!மனதின் வளர்ச்சிக்கு இந்தக் கலர்க்கனாக்கள் வழி செய்வதை இலகுவில் மறுத்துவிடத்தான் முடியுமா?வாழ்வு.அது ஒரு தேடுதலோடும் அந்தத் தேடுதல் தன்னைச் சுற்றிய பெருவிருப்போடு அசைந்தபடியேதான் அள்ளிவரும் அநுபவங்களை.அந்த அநுபவங்கள் என்றுமே அறிவுத் தேடுதலைக் குன்றப் பண்ணியதாக இருந்ததுமில்லை.அப்படித் தேடுகிற ஒரு உணர்வு எதிர்ப்பால் வினையாகும்.


இந்தப் பாலுணர்வுதான் தன்னைப் பராமரிக்க வைக்கிறது.தான் என்பதன் பொருளுணரப்படும் இந்த உணர்வு தனக்காக ஒருத்தியை-ஒருவனைத் தேடிக் கண்டுகொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் தன் கனவுகளைச் தனக்குள்ளே சொரிய வைக்கும் பால் வினையை நம் பெற்றோர்கள் தமது அநுபவத்துள் உள்வாங்கியும் அதைப் பெரிதாக மதித்ததே கிடையாது!அங்ஙனம் மதித்திருந்தால் மனக் கல்லறைகளுக்குச் சாத்தியமே இல்லை!


இந்தக் கல்லறையுள் காணமாற்போன அந்தப் பெருவிருப்பு நம்மை உருவாக்கியதும் அழித்ததும் உண்டு.




ஒரு வயது-அது பருவ வயதே அற்புதமான அறிவின் வேட்கை மிகு வயதாகும்.


இந்த வயதைத் தாண்டுகிறபோது வாழ்வை அதன் இயல்போடு-இயற்கை தகவமைத்த எல்லாச் சுகத்தோடும் நுகர வேண்டும்!அந்த நுகர்வு அழிக்கப்படும்போது சமூகம் ஆரோக்கியமாக உருவாகுவதாக எந்தத் தகவலும் இல்லை.நோயுற்ற சமூகமாக எனது தமிழ்ச் சமூதாயம் இருக்கிறது.அதன் இருப்புப் பலவீனமான-அறிவுக்குப் புறம்பான கற்ப்பிதங்களால் நிரம்ப்பிப் போயுள்ளது.இது மனிதவுறகளை எவ்வளவு கேவலப் படுத்துமோ அவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.இதன் இருப்பு வெறும் தகவல்களாலும் அது சார்ந்த பொய்மைப் பண்புகளாலும் நிறைத்து தலைமுறைக்கே ஆபத்தான முறையுள் வைக்கப்பட்டுள்ளது.


காதல்.

வாழ்வின் உயிர்த்துடிப்பான எதிர்ப்பாலுணர்வு!


இந்த உணர்வே சமுதாயத்தின் அதிபெரும் கண்டுபிடிப்புகளுக்கும் தியாகத்துக்கும் காணமாக இருந்திருப்பதை நாம் கண்டுணரமுடியும்.இந்த உணர்வின் பெரு வெளியில் சஞ்சரிக்காத எவரும் உயிர்த்திருக்க முடியாது.அம்மாவைக் காதலிப்பதிலருந்தும் அப்பனை நேசிப்பதிலிருந்தும் பின் எனது மொழியை-தேசத்தைக் காதலிப்பதிருந்தும் எனக்குக் காதல் சொல்லத் தெரிந்திருக்கிறது.என் பாலுணர்வை நான் உணர வைத்தவள் கவிதாஞ்சலி.அவள் ஒரு மகுடம்.அவளைக் காணாத பொழுதுகள் எனக்கு நரகத்துக் கற்ப்பிதமாக இருந்திருக்கிறது.அவளைப் பாடசாலையில் சேட்டை விட்டே பைத்தியக்காரியாக்கி இருக்கிறேன்.ஒரு நிலையில் எடுத்த எடுப்பிலேயே நீ என்ன யங்கி போட்டிருக்கிறாய் என்ற சேட்டையில், அவள் கவிணைக் கிளப்பிய அந்தச் சேட்டையில் அவள் அழுது வீடுவரையும் போய் அப்பனிடம் அள்ளி வைத்தபோது, அந்த அவளின் அப்பன் என்னைக் காணும் போதெல்லாம் நகைக்கும் அந்தச் சந்தர்ப்பங்கள் என் காதலின் கோணங்கித் தனத்தை நெஞ்சில் உரசும்.அந்த உரசலில் உருவான நமது உறவுக்கு நெருப்பள்ளி வைப்பதே பெற்றோர்களேதான் என்றால் அந்தப் பெற்றோரே தமது வாரீசுகளுக்கு கல்லறை அடுக்கக் கற்களை மிக அழகாக வெட்டுகிறார்கள்.


அது ஒரு அழகான பங்குனி மாதம்.



எங்கள் ஊரில் இந்த மாதம் மிக எழிலாக இருக்கும்.


தோட்டத்துப் பயிர்களெல்லாம் தங்கள் கொலுவான வளர்ச்சியால் நம் மனங்களை அசைத்துக்கொண்டிருக்கும் காலம் அது!அந்தப் பயிர்களில் எனக்குப் பிடித்த பயிர் புகையிலை!புகையிலை வளர்ந்து கொழுந்து முறித்து இலை இழுக்கும் காலத்தில் அதைவிட எந்தப் பயிரும் அவ்வளவு அழகாக இருக்காது.அந்தப் பயிருக்கு தண்ணி கட்டும்போதுதான் எனக்கு இந்தப்பாடல் அறிமுகமாகிறது.இது என் நெஞ்சில் குடிகொண்டிரந்த காதல் உணர்வின் எல்லையை விரித்து மிகவும் விரிவாக்கியிருக்கிறது.நான் தவமிருந்த அந்தப் பருவ காலத்தில் பயிர்களோடும் பறைவைகளோடும் பாடிப்பாடியே தவமிருந்திருக்கிறேன்!இந்த காலங்களில்தான் திரையிசையை அடியோடு மாற்றிய அற்புதமான இளைஞன் தன்னைத் திரையுலகில் வீறோடு நிறுவிக் கொண்டவன்.அவன் முன்வைத்த இசை நம்மை என்னவோ செய்திருக்கிறது.பறவைகளோடும் பட்ஷிகளோடும் நம்மைச் சேர்ந்து பாட வைத்தவன் அவன்.அவனது வருகையின் பின்னான ஒவ்வொரு பாடலும் மிகவும் நமது மனசைக் கவ்விக்கொண்டு நமது மகிழ்வின் அனைத்துச் சந்து பொந்துகளிலும் அது நுழைந்து விழையாடிக் கொண்டிருந்தது.


ஒரு கருவி.அது புள்ளாங் குழலாக இருந்தாலென்ன இல்லை மிருதங்கமாக இருந்தாலென்ன அதிலிருந்து மேலெழும் ஒலி நம் செவிகளில் அருவியைக் கொட்டியிருக்கிறது.நமது காதலுணர்வை மென் மேலும் ஒழுங்கு படுத்தியிருக்கிறது.காதலென்பதின் நுட்பத்தை இரசிக்கச் செய்திருக்கிறது.இந்தச் செயலே பின்னாளில் மனதின் ஒவ்வொரு மகிழ்விலும் மனிதனாக இருக்கிறாய் என்று என்னைச் செப்பியுமுள்ளது.நான் யார் என்பதன் முகிழ்ப்பில் விசும்புக்கு அதுவே காரணமானதாக இருக்கிறது.

இளையராஜா!


அற்புதமான இசைக் கோர்ப்பாளன்.நமது காலங்களைக் கடந்தும் இன்றும் பெரு விருட்சமாக இசையோடு இணைந்தவன்.எந்தத் திசையில் சிந்தித்தாலும் அவனது தாலாட்டுக்கள் நமது சிந்தனையைச் சீர் செய்திருக்கிறது.அனைத்துச் சுமைகளையும் அப்படியே சிதைத்தெறிந்து மனதை இளக வைத்து என்றும் பதினாறு வயதாக உணர வைத்தவனின் இசை இன்ப வெள்ளமாக இதுவரை என்னோடு சங்கமாககிறது.


அந்த இசையின் அனைத்து இயக்கமும் காதலில் சுரங்களைச் சொல்லியிருக்கிறது.நான் காதலிக்கத் தெரிந்த காலத்தில் கனவுகளைத் தொடரவும் அதைச் சொல்லத் தெரியவும் பின்னாளில் அதன் ஏதோவொரு ஓரத்தில் குந்தியிருந்து இரசிக்கவும் பின் அதையே வாழ்வின் அத்திவாரமாக்கவும் இந்த இசைக் காவியங்கள் வழி செய்தவை.


தோட்டத்துள் நின்றாடும் கவிதாஞ்சலிக்கு "தந்தனத் தந்தன தாளம் வரும்" நான் தலை குனிந்தபடி புகையிலைக்குத் தண்ணி கட்டுவேன்.அவள் மேலும் குரலெடுத்து,


"மச்சானைப் பார்த்தீங்களா
புகையிலைத் தோட்டுத்துள்ளே
தண்ணி கட்டுமவர்
என் மனசுக்குள் புகுந்து
குடும்பத்தை அமைப்பாரே
புள்ளை குட்டி தருவாரே"



என்று வார்த்தைகளை அடுக்குவாள்.அற்புதமானது என்னவென்று நினைக்கிறீர்கள்?


வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இந்த அற்புதங்கள் மாறுபடலாம்.ஆனால் ஒவ்வொரு மனிதரும் வாழ்வை-தன்னை உணரும் சந்தர்ப்பம் காதலிக்கத் தெரிந்துகொள்ளும் தரணங்கள்தான் என்பேன்.இதைக்கடந்த எல்லா முன்னேற்றங்களும், இறக்கங்களுக்கும் இந்த உணர்வே மிகவும் காரணமாக இருக்கிறது.வயிறுக்குள் விமானம் பறக்க வைக்கும் எதிர்பால் வினை மிக உயர்ந்த மனிதத் தரணங்களைச் சொல்பவை.


மனித ஊக்கம் என்பது தன்னைப் பராமரிக்கத் தெரிந்து கொள்ளும் எதிர்பால் வினையோடு மிகவும் விருத்தியுறுகிறது.இந்தச் சந்தர்ப்பங்களை எமது பெற்றோர்கள் ஒருபோதும் உணர்வதேயில்லை!


"எத்தனைகோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா!" என்று பாடத்தெரிந்த நமது பெற்றோர்கள் இறைவனுக்குள் இன்பத்தைத் தேடியபோது நாம் எமது மனத்துக்குள் தோகை விரிக்கும் காதலணுர்வுக்குள் இன்பத்தைத் தேடியவர்கள்.எதிர்பால்வினையின்றி எந்த இன்பமும் தோன்றியிருக்க முடியாது.இதைச் சொல்வதும்,என் தலைமுறைக்கு அதை அழகு படுத்துவதும் மிக முக்கியமாகும்.


காதலை அழகாகச் சொல்வதில் வைரமுத்துவுக்கு நிகராக எவரும் தமிழ் மொழிக்குள் இல்லை.


தன் கவிதைகளை அழகு தமிழில் கம்பீரமாகச் சொல்வதில் வைரமுத்துவுக்கு வீரியம் சேர்த்தவள் கண்மணி என்பதை நான் அறிவேன்.


எமது தலை முறைகள் இப்போது கூவிக் கொள்ளும் வயதுக்கு நெருங்கிவிட்டார்கள்.நெறிப்படுத்தும் தரணங்கள் எம் முன் வந்திருக்கிறது.மிக அவதானமாக அணுகுதலுக்கு என் அநுபவம் வழி சமைக்கும்.


இன்றைய தருணத்தில் எத்தனையோ தவறுக்கும் இழப்புக்கும் மத்தியில் சின்னஞ் சிறுசுகள் போராடுகிறார்கள். அவர்களால் போருலா என்றும் இலக்கியம் படைக்க முடிகிறது.தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தான் தற்செயலாகத் திறந்த குண்டு கொல்லப் போகுதென்று தெரிந்து அந்தக் குண்டைத் தன்னோடு அணைத்து மற்றச் சக போராளிகளைக் காக்கவும் தெரிந்திருக்கிறது!


எவ்வளவு மகத்தான வினை பாருங்கள்.


இவர்களுக்குக் காதலிக்கத் தெரிந்திருக்கிறது.சக மனிதர்களின் மனித அழகைத் தரிசிக்கத் தெரிந்திருக்கிறது.என்றபோதும் தவறான நடத்தைகளின் பயிற்றுவிப்போடு சக மனிதனைக் கொல்லவும் தெரிவு செய்யப்பட்ட தரணங்கள் அவர்களை வற்புறுத்துகிறது.அற்பத்தனமாகக் கிடந்துழலும் இன்றைய நமது வாழ்வுக்குள் இவ்வளவையும் செய்வது இந்தக் காதற் தரிசனமே!


தானும் தன்னைச் சுற்றிய நலமுமே வாழ்வாகச் சுய நலக் காரர்களாக இருந்த நம் பெற்றோர்களைப் புழுதிதோய்ந்த கல்லொழுங்கைகளுடாக இழுத்துச் சென்று எத்தனையோ கடலேரிகளுடாகக் கடக்க வைத்து, வாழ்வின் ஒவ்வொரு தரணங்களையும் அநுபவிக்க வைத்த இந்தப் போராட்டச் சூழலிலும் எனது யாழ்ப்பாணத்தவர்கள் இன்று வாழும் மிக மோசமான சமுதாயச் சீர்கேட்டில் எங்கோ தவறிருக்கிறது.சுயநலமும்,படாடோபமும்,காழ்ப்புணர்வும் கொண்ட அரை குறை மனிதர்களாக அவர்கள் மீளவும் தமது வாழ்வைத் தரிசிக்கும்போது அடிப்படையில் எங்கோ தவறிருக்கிறது.



எத்தனை வகையான அழிவுகளைப் பார்த்திருக்கிறோம்.ஒரு தலை முறையே தன்னைப் பலி கொடுத்து வருகிறது.


மழலை மொழி மறப்பதற்குள் இந்த மௌனப் போராட்டத்தில் தன் உடலையே வேள்வியாக்கும் அற்புதமான சின்னஞ் சிறார்களை எந்த மதிப்பீடுகளால் நான் வரையறை செய்ய முடியும்?


ஆகக் காதெலென்பது ஒரு உணர்வு என்பதைத் தாண்டி இயற்ககைத் தகவமைப்பு என்பதின் மிக விரிந்த வளர்ந்த படைப்பின் சூட்சுமம் என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது!

இளவயதின் இந்தச் செல் நெறி சமுதாயத்தை அதன் உள்ளிருப்போடு இணைக்கும் மிக நேர்த்தியான மனிதவுறவுகளைச் செய்வதின் தொடக்கப் புள்ளியென்பது எதிர்ப்பால் வினையாகும்.அந்த உணர்வு வாழ்வின் மதிப்பீடுகளை உருவாக்கும் கால அவகாசத்தை மனித மூளைக்குள் பல் கலர்களாக் விரித்து வைத்து இந்த உலகத்தை இயக்குவதில் மிக விரித்தியான உணர்வு நிலையாகவும் அதுவே ஒரு கட்டத்தில் அனைத்துமாகச் சிறப்பெய்கிறது.



இளையராசாவின் குரலில் பாடப் பெறும் ஒவ்வொரு பாடலும் ஏதோவொரு விதத்தில் காதலின் சுவையைச் சொல்பவை.அது பருவ காலத்து மொழியையோ அல்லது அன்னையைச் சுட்டி"அம்மாவென்றழைக்காத..."என்றோ அல்லது எனக்கொரு காதலி இருக்கின்றாள்,அவள் பெயர் மூகாம்பாள்"என்ற இறைத் தாலாட்டிலோ இசையின் தொடர்ச்சி காதலைத் தாலாட்டுவதில் மனிதப் பொதுகணத்தைச் செம்மையாக்கும் இசைக் கோலங்களாகவே மிளிர்கிறது.


என் சிறுசுகளுக்குப் பருவ வயதாகிறது.நான் எனது பெற்றோர்களைப் பின்பற்றுவேனா அல்லது என் அநுபவத்தைப் பின்பற்றுவேனா என்பது அந்தச் சூழ்நிலையில்தான் தெரிந்துவிடப் போகிறது.அதுவரையும் எனது பெற்றோர்களைத் திட்டி எனது முதற்காதலைப் பெருமைப் படுத்துவதில் எனக்கு நானே நிகரானவன்.



இந்நோக்கோடு இப்பாடலைக் கேட்போமா? இப்பாடல் முன் எந்தச் "சக்கரை நிலவும்" தேய் பிறைதான்!


ப.வி.ஸ்ரீரங்கன்

Samstag, 24. Juli 2010

சாதலிலும் உயிர்த்திருத்தல்

சாதலிலும் உயிர்த்திருத்தல்

து,பாடசாலை விடுமுறைக் காலம்.எல்லோரும் எங்கோ ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள்.எனக்கான காலமென்பதும் இதுவே!ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கிறேன், பறக்கின்ற விமானங்கள் அதிகரித்திருக்கு.அவை எங்கெங்கோ கடற்கரைகளை நோக்கிப் பறக்கின்றன.நான் ஒவ்வொரு திசையிலும் கடற்கரையைக்கண்டே பிறந்து வளர்ந்தவன்.எனக்குக் கடலும்.கரையும் அதீதமான கவர்ச்சிக்குரிய இயற்கைக்கொடையென...


இந்தக் காலத்தின் ஏதோவொரு திசையில் எனது கடலும், கரையும் அநாதையாகக் கிடக்கின்றன.அவைகளின் வனப்பில் இலயித்திருந்த ஒரு தலைமுறை அழிந்தே போய்விட்டது.புதிய முகங்களால் நிறைந்துள்ள அந்தத் தீவில் எனக்கெப்போதாவது உறவு துளிர்க்குமா?





காலத்துள் கோலமிட்ட பதின்மம், எல்லாத் தலைமுறையையும் ஏதோ செய்திருக்கும்.என்னைப்போல அதிக காதல் வயப்பட்டவர்கள் இருக்கமுடியுமா?
எனது தேவைக்கு அதிகமாக நான் காதலால் சுவாசித்து இருக்கிறேன்.எத்தனையோ இரவுகளில் கட்டிவைத்த கனவு மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்திருக்கிறேன்.அவை, வர்ணயாலமாகக் கோலமிடும், வானத்தின் வனப்பையும் மீறி என்னைத் தாலாட்டியவை. அந்தத் தாலாட்டுக்குள் வராத எந்தச் சினிமாப்பாட்டும் எனது இரசனைக்குள் வகைகப்படவில்லை.

இன்றும் நான் இரசிக்கும் பாடல்களுக்குள் "அவள்"ஜீவித்து வருவாதாகப் புலம்புகின்ற எனது அகத்தின் தவிப்பில், எல்லாமே இருண்டுவிட்ட வெளிகளாகக் கிடக்கின்றது.


இந்தவாழ்வு இருள்வெளி.





இந்தக் கோடைக்கால விடுமுறையை மீள நான் எகிப்த்தில் களிக்கலாம்.அந்த மண்ணானது நெய்தல் நிலத்தை அப்படியே உரித்து வைத்திருக்கும்போது எத்தனை முறையானாலுஞ் சென்று களிக்கலாம், குதிக்கலாம்.

காலில் பட்டு விலகும் கடல் நீரும், அந்த அரேபிய மணலும் எனது நிலமற்ற நினைவையும் இரட்டிப்பாக்கலாம். ஆனாலும்,அவளது காதல் மொழிக்கு எந்தத் தடையமுமே இல்லாத "இந்த" இன்றைய குடும்ப வாழ்வில், இத்தகைய சினிமாப் பாடல்களே தடயத்தை உருவாக்கும்-முகிழ்க்கும் ஊடகங்களாக...

ஒரு பனை வளவு.



பனங்காய்கள் பழுத்துக் கொட்டும் காலத்தில் கூடித் திரிந்த சின்னமடுக் கோவில்தாண்டும் எனது சுதந்திரத்துள் அத்தானின் கொடுமுடித் தார்ப்பாரில் ஒடுங்கிய எனது கனவுகள், அவளால் உயிர்த்திருந்தது.

உண்மையும்,உயிரும் காதலினால் நிலைத்திருப்பது. காவியங்களெல்லாம் காவியமாவதற்கு இந்தவுறவே காரணமானாலும், காலத்தில் செய்யாத எந்தவினைக்கும் இறுதியில் தோல்வியே நிச்சியமானதாக இருக்கிறது. அது,அனைத்துக்கும் பொருந்தும்போது அழுவதா சிரிப்பதா?





ஸ்ரீரங்கன்
24.07.2010

Dienstag, 29. Juni 2010

உண்மைகள் உரைக்கும் ஜனாதிபதி...

ஜேர்மனிய ஜனாதிபதி கோர்ஸ்ற் ஹோலர் தனது உரையாடலுக்காகப் பதவி துறந்தார்.அவருக்குப் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை. ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும்தொடர்ந்து போராடியபடி இருக்கிறார்கள். ரொறொன்டேவில் இடம் பெற்ற ஜீ-20 நாடுகளது பொருளாதார உச்சி மாநாட்டில் உதைப்பட்டவர்கள் பலர்.

இத்தகைய தேசங்கள் எதற்காக அந்நியத் தேசங்களில் தத்தமது இராணுவத்தை அனுப்பி,அவ்கானிஸ்த்தான்-ஈராக் போன்ற நாடுகளை வேட்டையிடுகின்றனவென்பதை ஜேர்மன் ஜனாதிபதி உரைக்கிறார்.இந்தவுண்மை பகிர்தலோடு அவர் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார்.விளைவு பதவியைத் துறுந்தார்.என்றபோதும்,இந் நூற்றாண்டின் உண்மை பேசிய ஜனாதிபதி இவராகத்தாம் இருக்கிறார்.

தேசங்கடந்த நிதிமூலதனமானது அரசுகளுக்கே அதிகாரத்தைச் செய்யும் வடிவமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும்,பூ ர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் உலகத்தைத் தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இந்தச் சர்வதிகாரத்துக்குள் முழுக்முழுக்க வர்த்தக நலன்கள் விரிந்துகிடக்கிறது.அதை ஜேர்மனிய ஜனாதிபதி தெளிவாகப் பகிரங்கப்படுத்தினார்.

இது வரவேற்கத்தக்கது.

அவ்கானை வேட்டையிடும் நேட்டோ கூட்டு இராணுவம் தினமும் அவ்கானை வேட்டையிடுவது எதன் காரணமெனப் புரிய இவரது பேட்டியை கேளுங்கள்...



இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால்,
ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியேபூ ர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள். இதுதாம் இன்றைய யதார்த்தம். இதன் விளைவில்தாம் ஒரு தேசத்தின் "முதற் குடிமகன்" பதவி விலகும் சூழல் உருவாகிறது.


ஜேர்மனிய ஜனாதிபதி இப்போது பதவியைத் துறந்துகொண்டாலும் அவரது நியாயவாதமானது யுத்தவெறிபிடித்த பெரு நிறுவனங்களுக்கானவொரு எதிர்ப்பு அரசியலை மக்களிடம் வலுவாகவே ஊன்றுகிறது.இது,வரவேற்கத்தக்க செயலே!


பெயரளவுக்குப் பேசப்படும் மேற்குலகத்தின்ஜனநாயகம் உண்மையில்அவர்களது பொருளாதார ஆதிக்கத்துள் நிலவுவதில்லை என்பதை உண்மையாகவுரைத்த ஜேர்மன் ஜனாதிபதிமீதான ஜேர்மன் ஊடகங்களது விமர்சனத்திலிருந்து காணக்கூடியதாக இருக்கிறது.

உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பெரும் நிதி நிறுவனங்களேதாம் ஒரு தேசத்தையே கட்டுப்படுத்தும் அளவுக்குத் தன் ஆதிக்கத்தை நிறுவியுள்ளதென்பதை நாம் அறிவதற்கு ஜனாதிபதி கோலரது கருத்துக்கள் துணையாக இருக்கும்.

An economic system that only by bringing wealth and get themselves can, by wars and thus always the murder of hundreds and thousands of innocent calls can not be a just, humane and rational, meaningful system.
Capitalism is not acceptable. It is against human rights and permits, or calls for the assassination of other nations for the benefit of owners and allies. The humanism repugnant in the highest degree ...


ப.வி.ஸ்ரீரங்கன்

29.06.2010

Mittwoch, 9. Juni 2010

11 வயதுச் சிறுமி...

11 வயதுச் சிறுமி.

பிரியான்சி சோமனி.

இந்தியாவினது ஒவ்வொரு உயர்விலும் ஏனோ மகிழ்தல் தொடர்கிறது.நான்,என்னை-எனது பூர்வீகத்தை உணரும்போது இஃது,நிகழ்கிறது.
பேராசிரியர் கிசோர் முபபானி போன்ற மேதமைகளிடம் இந்தியாவினதும்-ஆசியாவினதும் எதிர்காலத்தைக் காணும்போது, இந்தச் சிறுமி ஜேர்மனிவரை வந்து இவ்வாண்டுக்கான கணிதச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளாள்.
object width="480" height="385">

வகுத்தல்,
கூட்டல்,கழித்தல்,பிரித்தல்,பெருக்கலென அவள் ஒரு கணினிக்கொப்பாகவும்,கல்குலேற்றருக்கு நிகராகவும் மனக்கணிப்பில் வெற்றியீட்டியுள்ளால்.அவளோடு, 50 வயதுப் பாட்டியுங்கூடப் போட்டியிட்டுத் தோற்றுப் போயிருக்கிறாள்.

இந்தியா!

அடுத்த இருபதாண்டுகளில்...
சீனாவும்,இந்தியாவும் மேற்குலகத்தில் காலனித்துவத்தை ஏற்படுத்துமெனப் பேராசிரியர் கிசோர் அடிக்கடி உரைக்கிறார்.அவரது கூற்று மெய்பிக்க வேண்டாம்.ஆனால்,இந்தியா-சீனா பொருளாதார ரீதியாக மேற்கைப் பின் தள்ளுமென நம்பலாம்.அதை இத்தகைய மாணவர்கள் இப்போது கட்டியங் கூறுகின்றனர்.


இந்திய-சீன மூளைகள் அடுத்த 50 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் பல புதுமைகளைச் செய்யப் போகின்றது.உற்பத்தியில் வீரியமடையும் இத் தேசங்களது இன்றைய துருப்புச் சீட்டே மூளைதாம்.இதை இத் தேசங்கள் இழக்குமாயின் குறிப்பிட்ட தேசங்கள் மீள அடிமையாகும்.அதைத் தடுப்பது இத்தகைய இளைஞர்களது கைகளிலேயேதாம் இருக்கிறது.
இந்தவுண்மையை பிரியான்சி சோமனி நிரூபிக்கின்றாள்!

அழகு.
இந்தியக் கண்டம் பொருள் வளர்ச்சி காண்பது அழகு.அந்தத் தேசத்து மக்கள் மேன்மையுறுதல் அதனிலும் அழகு!

ப.வி.ஸ்ரீரங்கன்
09.06.10

Samstag, 20. März 2010

பள்ளிப் பருவத்தின் ஓரக் கண்கொண்டு...

Oh Meine "Lady" Parvathi...!
Ich liebe Dich ueber alles-mehr weiss ich nicht:


Aus meinem Taenen spriessen
Viel bluehende Blumen hervor,
Und meine Seufzer werden
Ein Nachtigallenchor.


Und wenn du mich lieb hast,Kindchen,
Schenk ich dir die Blumen all,
Und vor deinem Fenster soll klingen
Das Lied der Nachtigall.


Es stehen unbeweglich
Die Sterne in der Hoeh,
Viel tausend Jahr,und schauen
Sich an mit Liebesweh,
Sie sprechen eine Sprache,
Die ist so reich,so schoen;
Doch keiner der Philologen
Kann diese Sprache verstehen.
Ich aber hab sie gelernet,
Und ich vergesse sie nicht;
Mir diente als Grammatik
Der Herzallerliebsten Gesicht.
".............."

-Heinrich HEINE.



அழியுந் தாறுவாயில்...


பார்த்திருந்தேன்,பார்வதியை
பள்ளிப் பருவத்தின் ஓரக் கண்கொண்டு
பாழும் கிழட்டுடலின் கீறிய விழித்திரையில்
வினைகொள் நெஞ்சாய் நெடிய பொழுது
நெருஞ்சியாய் குத்த...

மகளே,
நீ,
திசை மறுத்துக் காய்கின்ற உள்ளத்தில்
உன்னதமான சங்கீதமாய் உனது முகம் வரைய
நான் தொலைந்தேன்!

தேடிய திசையில்
மரித்துக் கிடக்கும் என் ஆணவம்
தெரிந்தே இழக்கப்பட்ட கனவோடு
சேர்ந்தே நடக்கும் எனது மனமுமாக...

என்ன கோலம்?

இசைத்திருக்கும்
உனது கன்னம்,
ஆயிரம் வெள்ளிகளோடு
மின்னும் உனது பற்களின் நடுவே முறிபடும் ஒலி
அநாதியாய் எனது செவியின் ஓரத்தில் அலைய

மெல்லவும் முடியாத
துப்பவும் முடியாத பித்த மோனத்தோடு
சலனத்தின் சுவரில்
கீறிப் பார்க்கும் எனது கோலத்தில்
நீ,வானத்துத் தேவதை...

ஒரு விடியலில்
உனை மறந்திடலாம்
உன் குரலது கணீரொலியை மறப்பேனா
இல்லை என்னை இழப்பேனா?

வட்டமிடும் வானத்து அதிசயமே!
வண்ணத்துப் பூச்சிக்கு நீ என்ன தோழியா?

வசந்தருதுவும் வண்ணமலரும்
கோலமிட்ட எனது மனதில் வாடிக் கிடக்க
வருவாயோ எனது இருண்ட அறையுள் கீதமிசைத்து?

வானம் பொழியும் விரிந்த வெளியுள்
உளிகொண்டு உலகொன்றைச் செதுக்கி
அதனில்
உனைப் பொறித்து
ஊர்கோலஞ் செல்ல எனக்கெனப் பாடு.

ப.வி.ஸ்ரீரங்கன்
20.03.2010

Donnerstag, 21. Januar 2010

சின்னக் கண்ணன் அழைக்கிறான்...

சின்னக் கண்ணன் அழைக்கிறான்...

ன்பு நண்பர்களே,என்னத்தைச் சொல்ல!உங்களோடு பேசிவிடத்தக்கதான மனமுடக்கம்-மகிழ்வு,அழுகை,சிரிப்பு,சிணுங்கலென எனது உலகத்தில் ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி...இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்துபோனாள்.

வயது 77.

"தானுடண்டது பேய் உண்டது,பிறருண்டது சிவனுண்டது"என்று சொல்லிச்சொல்லி எமக்கூட்டியவள்-"தானுண்டவள் பிள்ளை வளவாள், தவிடுண்டவள் கோழி வளவாள்"என்று முதுமொழியுரைத்து, எமக்கு ஊட்டியவள் வீழ்ந்துபோனாள்.எப்போது இவள் மரிப்பாளென நாட்பாத்திருக்கும் நிலையாய் அவளது வாழ்வு படுக்கையில்...

அன்னை!

அற்புதங்களைச் செய்பவள்.அடுப்புக்குள் எரிந்து மீள்பவள்!அணைத்தெடுத்து அமுதூட்டியவள்.அவளை எண்ணியபோதெல்லாம், அவளாள் உறவுகளாய்ப் பிணைந்த குருதிக்கூட்டம் அகம் நிறைக்க.அக்கா-தம்பி,தங்கை-அண்ணாவென அது நீண்டுபோகும்.எப்போதெல்லாம் மனமுடக்கமோ, அப்போதெல்லாம் நான் மகிழ்ந்திருக்கும் பொழுதுகளுக்குள் என்னைப் புதைப்பது வழக்கம்.கிஞ்சித்தும் துக்கித்து இரேன்.

துக்கம்-சோகம் எனக்குரிய உணர்வு இல்லை!

என் வாழ்வில் சோகந்தரும் பாடல் எனக்கு நெருக்கமானதில்லை.அழுகையிலும் சிரித்திருக்கும் எனது மனத்துக்கு, இந்தப் பாடல் என்றுமே பிடித்தது.




கேட்டுப் பார்க்கிறேன்.சோகம் துரத்தும் ஒரு அற்புதம் இதன்வழி...

கடந்தகாலத்தில், எனது பால்யப் பருவந்தாண்டிய பொழுதில் இப்பாடலைப் பாடியிசைத்த பொழுதுகளில் காதல் மலர்ந்திருந்தது.காதலில் சுவைக்கு அதிகமாக இனிப்பிட்டவள்,இப்போ எங்கோ ஒரு மூலையில் எவன் கரம்பிடித்து...

அன்னையைப்"பேய்க் காட்டி"அவளுக்காக இசைத்த பாடல் இது.டாக்டர் பால முரளிகிருஷ்ணா எனக்காகவே பாடிய பாடலாக...இது, என்றுமே என்னால்-என்னவளால் விரும்பப்படுவது.

எனது பதின்ம வயதில், இனித்திருந்த இலங்கை வர்த்தக சேவையில் என்றுமே மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உண்டு.அவர்கள் இருவருமே எமக்கு இருவிழிகளாக...

ஒருவிழி கே.எஸ். ராஜா,

மறுவிழி பி.எச்.அப்துல் ஹமீத்.

இந்தப் பாடலில் அவர் தொகுக்கச் சிறுமி ஒருத்தி எனக்கான பாடலைப் பாடுகிறாள்.

அம்மா.

அற்புதங்கள் செய்பவள்.அடித்தாலும்,அரவணைத்தாலும் அவளாலேதாம் அனைத்தும் ஆகுவது.அவளின்றி, எனக்கு எதுவுமே ஆவதில்லை.

எனது பால்யப் பருவத்திலேயே அவளுக்காய் என்னைத் தொலைத்தவன்.அன்பு, அம்மா என்பதாக...

காதலும், கனவும் தவித்திருந்த பொழுதில் அம்மாவுக்கு மறைத்து, அகமகிழ்ந்திருந்த அர்த்தமிக்க பொழுதில் அம்மாவை ஏமாற்றிச் சிறகடித்த பொழுதின் அம்மா ஞாபகத்தில்...

அந்த அம்மா படுக்கையில் வீழ்ந்து உயிர்விடத்துடித்துக்கிடக்க...


ப.விஜயரெட்னம் ஸ்ரீரங்கன்
21.01.2010

Montag, 18. Januar 2010

பெரியாரது பாதையில் பாட்டுக்கட்டிப்பாடுகிறான் மயூரன்.

"அம்மா பகவான்,சாயிபாபா,கல்கி-கடவுள்,சாமி",அவதாரங்கள்(...) அனைத்தும் செத்துமடியும் நலிந்த சமுதாயத்தின் வடிகாலாகப்பட,பரந்தபட்ட மனிதர்கள் இவர்தம் கால்களில் செருப்புகளாகக் கிடக்கின்றனர்.மக்களது வலியைத் தமது இருப்பின் படிக்கற்களாக்கிக் கோபுரத்தில் கலசமாகத் தம்மைக் குவிக்கும் இவர்களது கலை?...

பேசப்பட வேண்டியது!கூடவே,தடுத்தும் நிறுத்தப்படவேண்டியது.சந்தியில்வைத்துச் செருப்பால் அடித்து வெருட்டப்படவேண்டிய கயவர்தாம் இவர்கள்!

"அவதாரங்கள்"


//எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்

பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?//


நாடிபிடித்து இவர்தம் நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்துவது மிக அவசியமானது.மயூரன், அற்புதமாக எழுந்து,இவர்களைக் குறிவைத்துக் காறி உமிழ்கிறான்.கவிதைகொண்டு இக் கயமைமிகு மனிதர்களைக் கேள்விக்குட்படுத்துகிறான்.இது,மானுடர்தம் விடுதலைக்கு அடிப்படையான எதிர்க் கலை முயற்சி.

"கலை".

கலை என்பது என்ன?

இக் கேள்வியின் தொடர்ச்சியுள் பற்பல தத்துவங்கள் மனிதவுணர்வுக்குள் அநுபவப்பட்டுள்ளன.கலையினது உயிரே கலைக்காகவென்றும் அது,மனிதவாழ்வுக்குச் சேவிக்க முடியாதென்றும் பற்பல வாதப்பிரதிவாதங்கள் நடந்தேறிவிட்டன.டறாக்கோனியிச(Draconian constitution)தீர்ப்புகள்,மக்கள் மடியிலிருந்து கலையைத் தட்டிப்பறித்துக்கொண்டது.இந்தக் கலைவடிவமானது மனிதப் படைப்பாற்றல் அனைத்தையுமே உள்ளடக்கிய நிகழ்த்துகை என்பது எனது புரிதல்.

இசை,நடனம்,நாடகம்,இலக்கியம்,சிற்பம் என்பதையெல்லாம் உள்ளடக்கிய நுண்கலையானது, இன்று பன்முகத் தன்மையில்வைத்து மனித ஆற்றலுடன் பேசப்படவேண்டியிருக்கிறது.கலை, மக்களுக்கானது.மக்களிடமிருந்து உருவாகுவது.ஆன்மீகங்கூட ஒரு வகையில் மனிதப்படைப்புத்தாம்.அங்கே,படைப்பாற்றலே ஆத்மீகவுறவைத்தீர்மானித்தது.இறையென்பது மனித ஆற்றலின் அற்புதமான வெளிப்பாடு.படைப்பினது உச்சத்தில் மனிதர்கள் தம்மை இறை நிலைக்கு உயர்த்துவதே இறையுட் கோட்பாடாகி இருக்கவேண்டும்!என்றபோதும்,கடவுளைவைத்துக் காசுகாணும் இழிமைத்தனத்துள் மனித உறவுகள் கீழ்மைப்பட படைப்பாற்றலைத் திருடியது ஆதிக்கம்-அதிகாரம்.அன்றைய,கிரேகத்தில் டறாக்கோனியினது அமைப்பில் நீதீயாகவும் இவை நிலைபெற்றன.

இன்று,மக்களினங்கள் தமது படைப்பாற்றலால் பிளவுப்படவில்லை.அதைச் சந்தைப்படுத்துவதில்,நுகர்வுக்குட்படுத்துவதில் பிரிவுகள்-பிளவுகள் ஏற்படுகிறது.அங்கே,ஆதிக்கம்,அதிகாரம் கலையின்மீது பண்பாட்டு மேலாதிக்கத்தை வர்த்தகக்கண்ணோட்டத்துள்ளும்,இனஞ்சார் மேன்மையிலும் உருவாக்கிக்கொண்டதன் பின்பு, இறைநிலை கடவுளாக மாற்றப்பட்டு இன்றுவரையும் இந்த அமைப்பின் விளிம்பில் இருப்பவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.அதன் துணைகொண்டு, உளவியல்ரீதியாகவும்,பௌதிகரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள்.இது,முற்றுமுழுதாக மனித ஆற்றலை அக ரீதியாகவும்,புற ரீதியாகவும் சுரண்டியபடி மேட்டிமைக் குழுவிடம் ஒரு ஆயுதமாக அவர்களுக்குச் சேவை செய்கிறது!

சமூகத்தின் மீது கணிசமான தாக்கத்தைச் செய்யும் இறைசார் வாழ்வுநிலை,மக்களின் பெரும்பகுதியை மிக மோசமாக ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டத்தின் திமிர்த்தனமான ஒடுக்குமுறையாகவும்,அதிகார நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.இது,மனித நடாத்தையின் அனைத்துப் பரிணாமத்தையும்,கருத்தியல் தளத்தில் காவுகொண்டபடி மனித அமைதிக்கு எதிராகச் செயற்படுகிறது.

"இது மதம்!"

மதம் மக்களுக்குப் போதை.தூக்கத்திலாழ்த்திக் கட்டிய துணியையும் உருவிவிட்டு மனிதத்தை அம்மணமாக்குவது.


Ammaa Bhagavan Song Tamil from mauran on Vimeo.




அற்புதங்களையும்,அவதாரங்களையும் கட்டித்தகவமைக்கும் ஒரு நிலையாகப் படைப்பாற்றலிதனால் சீரழிந்துபோகிறது.மனிதர்கள் தம்மை ஒடுக்கும் அதிகார நிறுவனத்திடம் தமது படைப்பாற்றலைப் பறிகொடுத்து, அதனால் சுரண்டப்பட அனுமதித்துள்ளார்கள்.இது,மேலும் மனிதர்களைக் குறுக்கி அகரீதியாக ஒடுக்குவதில் இந்தக் கடவுள் நிலை மிகவீரியமான கருத்தியல் ஒடுக்குமுறை ஜந்திரமாக மதங்களைப் படைத்துக்கொண்டது.இங்கே,மகத்தான மனிதத் தேடல், அதே மனிதக் குழாத்தை வேட்டையாடுவதில் மிகப்பெரிய ஆதிக்கச் சக்தியாக-அதிகார பீடமாக நம்முன் நிலைபெற்றதன்தொடரில் அது,பொருளாதார அடிக்கட்டமானத்தின் மேல்மட்டப் பாதுகாப்புக் கவசமாக-அமைப்பாகிச் சீரழிந்து மக்களது ஆத்மீகத் தேவைக்குக் குறுக்கே நிற்கிறது.இது,பெரிதும் நோவுடைய வலி.

இந்தவலியைச் சொல்வதில்,அதே கலைத்துவப் படைப்பாற்றலுடன் மயூரன் சமூகத்தின் விளிம்பில் நிற்பவர்களோடு தன்னைப் பிணைத்து, கயமைமிகு ஆதிக்கச் சக்திகளிடம்-கடவுள் அவதாரக் கள்வரிடம் பலியாகும் தன்வர்க்க மனிதருக்காகக் குரல் கொடுப்பதில் கலகக்காரனாகிறான்.


* Is this what "God-Kalki-Samy" purposed for me and for the rest of mankind?,

* Where can I find help to cope with my problems?,

* Is there any hope that we will ever see pease on the earth?.


இத்தகைய கேள்விகள் இவ்புவிப்பரப்பெங்கும் வாழும் மனிதர்களுக்குப் பொதுவாகப் பொருந்தியுள்ளது.

இதற்குப் பதில் பைபிளில்,பகவத் கீதையில்,குரானில் இருப்பதாகவும் இத்தகைய"அவதாரங்கள்"சொல்லக் கேட்டோம்.இஃது, பல்லாயிரம் வருடங்களாகத் தொடரும் கதை.இதை எதிர்த்த புத்தனும் கடவுளானான் இவர்களால்!என்ன கொடுமை இது!

பெரியார் வந்தார்.பேரடி கொடுத்தார்.என்றபோதும்,மதம்மீதான மடமை மீளவும் தொடர்கதையாக...

ஏன்?

சீர்திருத்தம் சமூகத்தை அடியோடு மாற்றுவதில்லை.விடை எளிமையானது.இந்தச் சமுதாய அமைப்பு முழுமையாக மாறாதிருக்கும்வரை இது தொடர்கதை.மக்கள் இவர்களிடம் பலியாவதும் தொடர்கதையே!

என்ன செய்யலாம்?

யுத்தம்,பசி,பட்டுணி,வறுமையின் கொடூரம் மனிதவாழ்வை அர்த்தமில்லாதாக்கிவிட்டுள்ளது.அனைத்தினது பெயராலும் மனித அழிவுகள் பல வடிவங்களில் பரந்துபட்ட மக்களை அண்மிக்கும்போது, அவர்கள் சோர்ந்துபோய் ஆன்மா ஒடுங்கிய நிலையில் இறுதியாகச் செல்லும் இடம் கடவுள் என்ற கருத்தியல் எல்லையாக இருக்கும்.அந்த எல்லையில், பதுங்கிக் கிடக்கும் கொடிய மனிதர்கள்,கல்கியாகச் சாயிபாபாக்களாக,ஏசுவுக்கு-கர்த்தருக்கு,அல்லாவுக்கு தூதுர்களாக,அவதாரங்களாகத் தம்மைக் காட்டியடி மக்களது வாழ்வையும் அவர்தம் உடலையும்-உள்ளத்தையும் சுரண்டிக் கொழுக்கின்றனர்.இத்தகைய திருடர்களை இந்தச் சமூகத்தின் பொருளாதார அமைப்புகள்முதல் அதிகார-ஆளும் வர்க்கம்வரை நிதியளித்துக் கட்டிக் காக்கின்றது.

மீளவும், அதே கேள்வி:"என்ன" செய்யலாம்?

இக் கேள்விக்கு,அவர்களை அம்பலப்படுத்தியாகவேண்டும் என்பதே விடை!

ஏன்?,

இச் சமுதாய அமைப்பு புரட்சிகரமாக மாற்றப்பட வேண்டும்.
இதைவிட வேறு வழி இல்லை!
அப்படி புரட்சி நீங்கிய "மாற்றுவழி" இருக்கவும் முடியாதாகிறது.

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அந்தக் கொடிய கடவுள் வியாபாரிகள்,மக்களது அடிமைத்தனத்தை முழுமையாக்கித் தமது எஜமானர்களுக்கு ஏற்ற கையாலாகாத மக்கள் குழாத்தை இப்புவியில் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.இதற்காகவே, அவர்களுக்குக் கோடிக்கணக்கான செல்வத்தையும்,"மேன்மைப்பட்ட" இனங்களது உறுப்பினர்களையும் வழங்கி,இத்தகைய கயமைவாதிகளை மக்களிடம் முன்தள்ளி,மக்களுக்கு நம்பிக்கைய இவர்கள்பால் வருவதற்கான ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இந்த ஒளிவட்டத்தை தனியார்மயப்பட்ட ஊடகங்கள்-குறிப்பாகத் தொலைக்காட்சிகள்-செய்து முடிக்கும்போது,அவர்களது தொலைக்காட்சிக்கான வரும்படியும் இரடிப்பாகிறது.இந்தச் சூத்திரம் மக்கள் நலமென எமக்குச் சொல்லப்படுகிறது.பொதுத்தளத்தில் அதுவே,பதிலாகவும் உரையாடலாகிறது.

பிறகென்ன?

ஆகா!அற்புதமான சாமி!"அம்மா-அப்பா" சாமிகள் அகிலம் முதற்கொண்டு வணங்கப்படுவர்.

"அதோ,வெள்ளைக்காரன்-வெள்ளைக்காரி கூடச் சாமியை வணங்குகிறார்களே!,அப்போ சாமி உண்மையானவர்தான்.பொய்யர்களை வெள்ளைக்காரர் நம்ப மாட்டார்கள்."

அம்மாடியோ,சரியாப் போச்சு.

இதுதானே இவர்கட்கு அவசியமானது?

அதைச் செய்யவே, "நிதி,வெள்ளையர்கள்,வேந்தர்கள்,நட்ஷத்திரங்கள்" என்பது-என்பவர்கள் இத்தகைய கயவர்களிடம்(அம்மா பகவான் வகையறா) வருவிக்கப்படுபவர்கள்-தருவிக்கப்படுபவை.

"அப்பாவிகளே,அரவணைப்பற்றவர்களே,சமூகத்தின் விளிம்பில் உயிர்துறப்பவர்களே,இதோ!உங்கள் விழிகள் முன் கயவர்களது அணிவகுப்பு.அவர்களைக்கொண்டு,உங்களது மிச்சசொச்ச கோவணத்தையும் உருவப்போகிறார்கள்,கவனம்!!!" இப்படிச் சொல்வது, நம்மால் முடியும்.ஆனால்,கலையுணர்வு,அதன் சூட்சுமம் புரிந்தவர்கள் தம்பி மயூரன்பாணியில் பாடியுய்வினை செய்வர்.

அழகான குரல்,அற்புதமான வரிகள்,செவியைக் குழையும் மெட்டு.மக்களை ஒடுக்கும் அதிகார மையத்தை இசையெனுஞ் சாட்டைகொண்டு சொடுக்குவது அற்புதமான போராட்டவடிவம்.அதுள்,காட்சியுகத்தின் உச்சம் மனிதத் தொடுநிலையைக் காவுகொடுக்கப்பட்ட உயிர்கொண்டு சொல்லுதல் இன்னுஞ் சிறப்பு!மயூரனின் சமூக உணர்வு இங்கே உச்சமான சமுதாய ஆவேசமாக இருக்கிறது.இது, ஒரு மனிதத்தொடு நிலை.தன்வர்க்கச் சுயவுணர்வு.கலைவடிவத்தின் யதார்த்தவாதம் இதுவே.குறிப்பட்ட சூழலை,குறிப்பட்ட வடிவத்தில்,குறிப்பட்ட தெரிவில் சொல்வது சோஷலிச யதார்த்த வாதம் என்பர்.இது,மயூரனிடம் சிறப்பாக வெளிப்படுகிறது.கண்டதையும்,கேட்டதையும் வாந்தியெடுக்கும் இயற்கைவாதம் அடியோடு மயூரனிடம் இல்லாது போகிறது.இதுவே,மயூரனின் பாடலின் சிறப்பு.

நாற்பது பக்கத்தில் கட்டுரை எழுதும் நமது செயற்பாட்டை, நாலே வரிகளில் அழிகாகச் சொல்லிக் கயவர்களைத் தோலுரிக்கும் மயூரன் விளிம்பு மக்களோடு நின்று, தனது கடமை எதுவெனவுரைக்கின்றான்.வாழ்வென்பது சதா போரிடுதலாக மாறியுள்ளபோது,நானோ இல்லை நீயோ தூங்கிக்கிடந்தால் எமது தலைகளைக் கொய்துவிடுவர்.நாம் காணும் ஒவ்வொரு திசையும் இந்தக் கொடிய அமைப்பு மனிதப்பாடைபாற்றலை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியபடி, அப்படைப்பாளியையே வேட்டையாடும்போது,பாத்திருப்போர் பாவிகளே-இவர்கள் வாளாதிருக்கும்போது,இவர்கட்குச் செவி எதிர்க்கு-விழி எதிர்க்கு?

கலை.

அற்புதமான மனித வெளிப்பாடு.உழைப்பின் மறு விளைவு.ஓய்வின் சுவை சொல்லும் சுக இராகம் இது!களைப்பின் வலிதொலைக்கும் ஒளடதம் இது!-இல்லை?

ஆற்றலுடைய மனிதமுயற்சி!பற்பல பரிணாமத்துள் பதிவாகிய இந்த மனித அநுபவம்,மகத்தான தேவையின்பால் மனிதர்கள் தமக்காகவே தமது உழைப்பால் உருவாக்கியது.இது,இப்புவிப்பரப்புள் அனைத்துமாகி அமரத்துவமாக மனிதர்களற்ற இப் புவிப்பரப்பில் நாளையும் இருக்கும்.ஆனால்,மனிதர்களால் கண்டடையப்பட்ட ஆன்மீக ஆயுதமான அதே மனித அகம் இப்போதும் நோவைத் தாங்கமுடியாது இன்னொரு சிறையைத் தனது படைப்பின்வழி உருவாக்கிக்கொண்டுள்ளது.அந்தச் சிறையைக் காவல் காப்பவர் பட்டுடனும்,பணத்துடனும் தமது கால்களில் இயற்கையின் அழகான கொடையாகிய மலர்களையே போட்டுக் கசக்கி எடுக்கும்போது,இது திமிர்த்தனத்தின் அதீத வெளிப்பாடாகவே நான் காண்கிறேன். பனுவலில் சொல்லமுடியாத சோகத்தை காட்சிகொண்டு,இந்தப் பாடலுள் புகுத்திய மயூரனின் நோக்கு சிறப்பானதே.

நாம் அம்மா பகவான்களை-சாயி பாபாகளை,ஏசு தூதர்களை அநுமதிக்கலாமா?

இவர்களை அம்பலப்படுத்தவேண்டாமா?

மயூரன் சொல்கிறார்-பாடுகிறார்,மெட்டமைத்துப் போரைத் தொடர்கிறார்!


கேட்பவர்கள் சிந்திக்கத்தக்க காட்சியை வழிமுன் நிறுத்தும் அவரது பாடற்றொகுப்பு உண்மையிலேயே மிகப்பெரும் போராட்டக்கலை ஆயுதமாகவும் நம் முன் இயங்குகிறது.

நம்பிக்கை!

வாழ்வின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தோண்டித் துருவி அறிதலே நம்பிக்கை.இந்த நம்பிக்கை, தொடரும்போது அதிகாரமும்,ஆதிக்கமும் என்னென்ன திசையில் நம்மை நெருங்குகின்றதென்று புரிந்துவிடும்.

எம்மைக் காப்பதற்கான ஆயுதம், நமது எதிர்ப்பு நடவடிக்கை-நம்மைப் பாதுகாக்கும் உணர்வுதாம்.இதுவே,சமூக மாற்றத்தின் உந்து சக்தி.

இதோ,இந்த வழியில் "அம்மா பகவான்"என்ற தடைக் கற்பாறை கிடக்கின்றது.மயூரன் சொல்கிறான்:

//குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்

அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?//

அற்புதமான வரிகள்கொண்டு,நம்மை ஏமாற்றுபவர்களை,நமது மக்களது குரல்வளையில் தமது வலுக்கரத்தின் நகம் பதிப்பவர்களை துளைத்தெறியும் மயூரன்வழி நாம் நடக்கின்ற ஒரு பொழுதில், நாமெல்லோருமே ஒரு பெரியார் இராமசாமிதாம்.

இங்கே,எந்த டாறாக்கோனிசத்துக்கும் இனி இடமில்லை.
இருப்பவர்களது காலடியில் இலையான்களாக வீழ்வதற்கு நாம் எவருக்கும் குடி அல்ல-அல்லவே!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.01.2010

Blog-Archiv