Sonntag, 3. März 2013

அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி

அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி
-சில எதிர்க் குறிப்புகள்!

ந்தத் தருணம் வரை,பெரும்பாலும் ஒரு விஷச் சூழலுக்குள் நாம் மூழ்கிச் செல்கிறோம்.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கொப்பத் "தமிழீழ"ப்போராட்டஞ் செய்தபோது அஃது,மக்கள் விரோதமாகவே நகர்ந்தது.

அதைத் தட்டிக்கேட்ட நம்மையெல்லாம் எட்டப்பர்கள் என்றார்கள்.எச்சரித்தார்கள்-நேரடியாக ஜேர்மனியப் பொலிசுக்கு முன்பாகவே கைத் தகராறுக்கும் வந்தார்கள்.எமது படத்தோடு அவதூறு விதைத்தார்கள்.இதுவே,இரயாகரன் மீதான எமது விமர்சனம்(புலிப்பினாமி-அந்நிய ஏஜென்டு)-கற்றன் நசனல் வங்கிப்பணம் குறித்த குற்றச்சாட்டு,மற்றும், அவர்களது முன்னணிக்கான அறிக்கையில் குறித்த சுய நிர்ணயஞ்சார் சரியான கருத்தையொட்டித் (" 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) "  ) தற்போதைய திரிப்பையும் இனங்காட்டி விவாதத்தை-பழியை நாம் கட்டுரைகளாக எழுதியதற்கு அவர்கள் தந்த எதிர்க் கருத்தாடல் "சரவணை ரங்கனின் கொலைக் குடந்தையான கதை" எனும் அவதூறு.பின்பு, அதை அவர்களது இணையத்திலிருந்து(இனியொரு டம்மி) கழற்றி எனக்கு ஆலோசனை இப்போது!.இவர்களது முதல் அவதூறைக் ஸ்க்கிறீன் சொட்டிலும்,அச்சிலிலும் சட்ட நடவடிக்கைக்காக ஏலவே எடுத்துவிட்டேன்.





இனி, இந்த நிகழ்வூக்கத்துள் இனியொரு இணையத்துள் தோழர் அசோக்கிடம் வருகிறேன்.

சோபாசக்தி குறித்து, 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிதர்சனம்.கொம் அவதூறு பரப்பியது. சோபா சக்தியை வரதராஜப் பெருமாளோடிணைத்து அவதூறுதெழுதித்(சோபா சக்தி இந்தியா சென்று, வரதராஜப் பெருமாளைச் சந்தித்தது,என்பதானதன் அர்த்தம்: வரதராஜப் பெருமாள் இந்திய அரசியல்-பொருளியல் நலனை இலங்கையில் நிலைப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரென்பதும்,அவரது தலைமையில் தமிழ்பேசும் மக்களது நலனைக் காயடித்து இந்தியா தனக்கான பொம்மை அரசை நிறுவியதும் வரலாறு.இதன் தொடர்ச்சியாகச் சோபாசக்தியும்,ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தலைவர் வரதாரஜப் பெருமாளும் மீள,இந்திய நலனது அரசியலை இலங்கையிற் தகவமைப்பாதான குற்றச்சாட்டை நிதர்சனம் வைத்தபோது) துரோகியென்றபோதும் நாம் அதை எதிர்த்து அகதிப் பதிவில் மறுத்து (அவதூறை) எழுதிக்கொண்டோம் (18.02.2007).இன்றும்,எமது பதிவு[ http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html  ] இருக்கிறது.பாசிசப் புலிகளது மனித விரோத ஊடகமான நிதர்சனத்தை வரலாற்றிலிருந்து அவர்கள் அழித்துவிட்டனர்.இதை, பாசிஸ்டுக்களது நடைமுறையென்று வரலாற்றில் நாம் கிட்லர்,முசோலினி வழியில் மட்டுமல்ல புலிகள் வழியாகவும் புரிய வேண்டும்!

அரசியல்ரீதியான செயற்பாட்டை,அதுசார்ந்த கருத்துக்களை முகங்கொடுக்க முடியாத புலிகளும்,இயக்கவாத மாயையும் இத்தகைய "அவதூறு அரசியலுக்கு" விதையிட்டது. இதன் முன்னோடிகளாக நாம் எஸ்.பொன்னுதுரையின் "நற்போக்கு இலக்கிய" முகாமுக்குள் இணைப்பையிட முடியும் கருத்தியற்றளத்தில்!

தமிழ்ச் சமுதாயத்துக்கே இருக்கக்கூடிய பிரத்தியேகமான குணாம்சங்கள் சில இத்தகைய வகையாறாவுக்குள் நமது "ஆச்சிகள்" வகை அரசியலாகத் தனிப்பட்ட உறவுகள் வட்டத்துள் பல் நூறு ஆண்டுகளுக்கு முன்பே  உருப்பெற்றுக் கொண்டதைச் சமூகவுளவியலாளர்கள் இலகுவாக இனங்காணமுடியும்.இஃது,ஆண்டான் அடிமை-நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் என்பதை நாம் புரிந்தாகவும் வேண்டும்.

இதன் வளர்ந்த கிளைபரப்பிய விருட்ஷத்தின் நிழலோ சுயமுரண்பாட்டை விலக்கிய அந்நிய முதலாளிய இறக்குமதிக்குட்பட்ட இலங்கைச் சமூக அசைவியக்கத்துள் நமது எதிர்கால அரசியலது வெளியையே மூடி இருட்டாக்கிவிடுமோவென அச்சப்படவேண்டியிருக்கிறது.

இந்தச் சமுதாயத்துள் இலட்சக்கணக்கான உயிர்களை இந்தப்போக்கால் நாமெல்லோரும் கொலைசெய்தோம்.

"துரோகி - எட்டப்பவன்" என்பதையுந்தாண்டிச் சமூகவிரோதி என்று கோழி,வாழைக்குலை,மண்வெட்டி,கடகம்,கோடாலி,விறகு,தேங்காய் திருடியவர்களையெல்லாம் லைட்போஸ்ட்டில் கட்டிவைத்து நெற்றியில் பொட்டுவைத்தோம்.

நாலுபேரைக் காதலித்து ஏமாற்றிய மனி பஸ் கொண்டக்டரைக் கம்பத்தில் கட்டிப் பொட்டிட முனைந்த நாம் சார்ந்தவொரு இயக்கத்தின் நட்பு இயக்கத் தோழர்களுக்கு அது குறித்து வகுப்பெடுத்த எமது அரசியல்(1983 ஆம்வருட இறுதி) கண்முன் வருகிறது.அதை,இப்போது சிந்திக்கிறோம். நாம்,ஆரம்பத்து அவசரத்தைவிட இப்போது மிக மோசமான கட்டத்துள் இருக்கிறோம். அதைவிடப் பல் பத்து வீதம் நாம் பின் தள்ளப்பட்டுவிட்டோம். இஃது,விவேகமான அரசியல் இல்லை!

எதன் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது!

இரயாகரன் பாணியே புலம்பெயர்வுச் சூழலில் மிக மோசமான நடாத்தையாக இதைச் சாதித்துக்கொண்டது.கலைச் செல்வனது மரணத்தின் பின்புகூட அந்தத் தோழன்மீது விதைத்த அவதூறைக் குறித்து நாம் வருந்தியுள்ளோம். இது குறித்து இராயவோடு பேசியிருக்கிறோம். எமது குரலொலிப் பதிவுகள் அவரிடம் இன்னும் இருக்கிறது.

இப்படியாக, நமது கால அரசியற் சாக்கடையுள் நாம் புழுவானோம்.இது,இயக்கவாத மாயையின் பொருட்டு எல்லோருக்கும் தலை சீவியபோது நாம் "பொடியள் ஏதோ செய்கிறாங்கள்" என்று தட்டிக் கொடுத்தோம்.பின்,இதன் நீட்சியுள் உயிர் நீத்தவர்கள் இலட்சக்கணக்கானபோது நமது உரிமைகளையே நாம் இழந்தோம்.இந்த அரசியலானது ஒரு பெரும் அமைப்புக்குள்ளேயே கூட அதற்கெதிரான எதிரிகளை உருவாக்கி வைத்து, இலங்கை அரச இராணுவ வாதத்துக்கு வெற்றியளித்தது.இவர்கள்தாம் இன்று, இந்த அரசியலுக்கான நன்றிக்குட்பட்ட இலங்கைக்குள் இலங்கை இராணுவவாதத்தின் பிதா மக்களால் கவனிக்கப்பட்டு,வீடு,வளவு வழங்கப்பட்டுப்"புலிகளுக்கு மறுவாழ்வு"அளிக்கின்றோமென உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது.இந்த அரசியலது தெரிவு மேற் சொன்ன உளவியலது எதிர் திசையூக்க நகர்வென்பதை எவரும் மறுத்தொதுக்க முடியுமா?

இந்த அரசியலது தெரிவின் மீளுருவாக்கத்தை நாம் தொடருவோமா அசோக்?

இது,இப்படியே தொடருவதற்கான புள்ளிகளே தனிநபர்கள் மீதான தீராத பகையாகவல்லவா தொடர்கிறது?

இதன் புள்ளியை அழித்துவிட்டு, மக்களது நலத்தின்மீதான கரிசனையான அரசியலுள் மக்களுக்கெதிரான சக்திகள்மீது கவனத்தை திருப்பி விவேகமான அரசியலைப் புரியுஞ் சந்தர்ப்பத்தை இல்லாதாக்கலாமா?அந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப் பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த "தூயவாத" அரசியல் வேறானது!சோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ.க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலை சார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லை!.

சோபாசக்தி மீதான இந்த விமாசனம் நியாயமான அரசியலாக எமக்குப்படவில்லை!

நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே "தூயவர்கள்" இல்லை.அத்தகயை தூய்மை வாதமானது மக்களது சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம் கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை!





எனவே,சோபாசக்தி குறித்து எழுதப்பட்ட இந்த குறிப்பின் உச்சமான வெளிப்பாடானதன் அரசியலை நாம் மறுக்கிறோம்.நாம் தோழமை சார்ந்து இயங்கும் புள்ளியையை மெல்ல அழித்துவிட்டு தனித்தவில் அடிக்க முனையும் சூழல்தாம் எதிரிவர்க்கத்துக்கு அவசியமானது.அதைத் திட்டமிட்டு நகர்த்திய இயக்கவாதமானது இறுதில் நமது விலங்கை எவரெவரோ செய்து நமக்குப் பூட்டிவிடும் அரசியலைத் தந்துவிட்டுத் தொடரும் இத்தகைய "அவதூறு அரசியல்" இலக்கில் இன்னுமெத்தனை  தலைகளையுருட்டுவோம்? தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட "கொம்யூனிச"ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமா?அவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்?வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.எனவே,எதிரி வர்க்கத்தோடிணையும் அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.எனவேதாம், டக்ளஸ் கூறும் "விடுதலை-சமத்துவம்" குறித்துக் காறியுமிழ்ந்து அவரது வர்க்க நலனையும் அவரே ஆளும் வர்க்கமாக மாறிப் பல்லாயிரம் கோடி மக்கள் சொத்தைப் பதுக்கிய புதிய ஆளும் வர்கத்தோடிணைந்தைதக் குறித்துப் பேசுகிறோம்.இவரோடிணையும் சுகனைக்கூட இதன் பொருட்டே அம்பலப்படுத்துகிறோம்.ஆனால்,சோபா சக்தியை இத்தகைய போக்குக்குள் இனங்காண முடியுமா?

அரவிந்தன்,அப்பாத்துரையோ,சோபசக்தியோ அல்ல ஸ்ரீரங்கனோ பாலியல் ரீதியான நடாத்தையில் தூய்மை வாதப் பொதுப்புத்திக்கு எதிரான திசையிற்றாம் பிராயாணிக்க முடியும்.அது,எமக்கு மட்டுமனாதல்ல இப்புவிப்பரப்பிலுள்ள அனைத்து மகான்களுக்குமே பொருந்தும்.இதன்வழியாக "அரசியல்"புரிவதைவிட சமகால அணிச்சேர்க்கை-கட்சி கட்டும் அரசியலெனத் தொடரப்படும் மக்கள் விரோத அரசியற் புள்ளிகளை இலக்கு வைத்து அரசியல் புரிவது அவசியம்.இது,தோழர் அசோக்குக்கு நன்றாகவே புரியும்.அவர்,மிகப் பெரும் அமைப்பின் மத்திய குழுவுறுப்பினராகவிருந்தவர்.அவருக்கு நாம் வகுப்பெடுப்பது எமது நோக்கமல்ல!மாறாக, இந்த வகைக் குறிப்பை மறுப்பதே எமது இலக்கு!


இஃது,மக்கள் நல அரசியலறதுக்கு அப்பாற்பட்ட"தூய்மைவாதப் பொதுப் புத்தியின்" தெரிவு. இதை,அமைப்பாண்மையை எதிர்பார்த்தியங்கும் எவரும் ஏற்க முடியாது.

அசோக் இக் குறிப்பை "மனசாட்சியின்படி" நீக்காதுபோயினும்,நமது தார்மீக அரசியல் இலக்கின் அடிப்படையில் நீக்கியாகவேண்டும். இதுவே, தனிநபர் உரிமையின் மிகவுயர்ந்த அறமும் கூட.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.03.2013

Keine Kommentare:

Blog-Archiv