Montag, 11. März 2013

கொடு நிலவு முறித்த இரவு

தா வார்த்தைகளைத் தறித்து
வாய் பிளக்க முனையும் காலம் இஃது
மூட்டைகளாய்க் கொட்டப்பட்ட ஊனத்துள்
ஊழிக் காலமாய் உணர்வுகள் உதிர

மெல்லத் துரத்தும் எல்லை
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில்  உயிர்

முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும்  உளைச்சல்



கோலமிட்ட முற்றம்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
தாயவளின் தலை வீழ்வு

எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி
காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவைக்கும்  மாற்றெடுத்தோம்

எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!

நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென

பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைத்தது

காடுகளின்  மத்தியில்
கருக்கொண்ட சிசுவுக்கு தேசத்தின்
எந்த நிறமும் நிரந்தரமன்று



கொட்டிய இரவைகளின் நாட்டியத்துள்
எத்தனையோ ஆசைகளும்
ஊழிக் காலத்தின் உறவுக் கோலங்களும்
உவர் மண்ணின் புதை சேற்றில் உருவந் தேட

நாடு கடந்தும் காடுகடந்தும்
அரசமைத்து  நகலெடுத்தே
தமிழருக்குத் தேசம் செய்யும்
நடுத் தெருவில் தலை வீழ்த்தும்  சூனியம்!

இதயம் பிடுங்கப்பட்ட
சதைக் குவியலுள் கனவு தறிக்க
வேசம் தொலைத்தறியாத தலைகளும்
"சிரச் சேதம் செய்விக்கும் " விருப்பொன்று
வினைப் பொருத்தம் பார்த்திருக்கும் உலகெங்கும்!

ஶ்ரீரங்கன்
11.03.2013

Keine Kommentare:

Blog-Archiv