Mittwoch, 6. März 2013

கொடுங் காலத்தின் கொள்ளை இது?

கொடுங் காலத்தின் கொள்ளை இது?

நெஞ்சில் கீறும் உனது சாவு,
உன் தோழமை நினைவு மக்கள் வெள்ளமாய்
அஞ்சலிக்கும்  தேசம்-உலகம்!

உன்னிழப்பையிட்டு
மௌனித்திருக்கவும் முடியவில்லை;
மனதும் கேட்கிறதாயில்லை -எமக்கு,
எத்தனை கனவுகளை உன் மேல் செலுத்தி
உயிர்ப் பேத்திய சமவாழ்வு இத்துடன் முடிவுரையா?



சி.ஐ.ஏ.கண்ட கனவுக்கு-முயற்சிக்கு
வழி திறந்த புற்றே ,உனக்கொரு நாள் சாவு மணி ஒலிக்காதா?;
எங்கள் தோழன்  சாவேசின் உயிருக்கு,
புரட்சிக்கு முற்று வைத்த வினையே
வெனிசூலா மக்கட்கு விடிவைத் தள்ளி வைத்தாயா?

மீளவும் ,சோற்றைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
தோழமை உறவுக்கான இரை மீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
வேளைகள் நெருங்குகிறது!மக்களது நலன் அறுக்கும்
கொடுங் காலத்தின் கொள்ளை இது?

உலகெல்லாம்,
 உயிர்க் கொள்ளையிடுபவர்கள்
உயிரோடிருக்க,
 எங்கள் கனவுச் செடிக்குத் தேர் தந்த
வெனிசூலாத் தேச மகனைக் கொன்றாயே கொடிய காலம்!

தென் அமெரிக்கத் தெரிந்த சில
"முந்தைய பொழுதின் " சோசலிசக் கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ  தோழா?





நொந்துலர்ந்த இதயங்களோடு
 துயர்படும் என் கேள்வியெல்லாம்
"கொடிய சாவுக்குள் குலைந்துவிடுமோ நீ,
கட்டிய கோட்டையெல்லாம்?;வெனிசூலாவைக் குதறுமோ
அமெரிக்கக் கழுகு?"

நாடற்றும் ,வீடற்றும்
இழப்பதற்கு எதுவும் அற்ற எம் வாழ்வில்
ஒரு பிடிமானம் நீயாய் இருந்தாய்
இதயம் நோக ,எம் விழிபனிக்க வைத்தாயே தோழா!

தென் அமெரிக்கத் தேசமெல்லாம் கட்டிய
சோஷசலிசக் கோட்டை மெல்ல எழும்போது
"எண்ணை மிதந்துவரச் சாடி கவிழ்ந்த கதையாய் " ஆகுமா தோழா?

என்னதான் எவருரைப்பினும் நீ,
சொன்னதைச் செய்தாய்-செய்ததைச் சிறப்பித்தாய்!
திரண்டெழுந்த மக்கள் மனங்களெல்லாம் உன் வெற்றியின்
கட்டியத்தைச் சொல்லி வைத்தனரே!சோகந்தாம் நீ,
சொல்லாமற் போன செய்தி சோகந்தாம்!

செல்லக் கரந் தந்து,
செவ் வணக்கமிட்டு உன்னைச் சிறப்பிக்க
மனதுக்கு எந்தத் தடுப்புமில்லை -தூரமுமில்லை!;
சென்று வா தோழனே-உனக்கு என் செவ் வணக்கம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
06.03.2013

Keine Kommentare:

Blog-Archiv