Dienstag, 12. März 2013

ஈரத்தை மறைத்த நெஞ்சு

ஈனப் பாம்பு

குருதி நினைந்த இலையான்களின் கால்களில்
வலிய யுகத்தின் தடமொன்று சிக்கியது
உயிர் கொண்டு அலையும்  பிணங்களையும்
அவை விட்ட பாடில்லை!

எச்சங்கள்
அழிந்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை
நிச்சயிக்கச் சில முனைப்புகள் 
கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு
எவருரிமை கொள்வார்?

வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகின்றன
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள் என்பதையும் மறுத்து!

ஊழி முதல்வனும்
உயிர் தந்த ஆழியும் எனக்குள் உறங்க
உச்சியின் மத்தியில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த  நெஞ்சு
இதயத்தைக் கீறிக் கிடப்பிலிட





நம்பிக்கை நலிந்த  என் விழிகள்
என் கால்களுக்குப்  பாதைகளைக் காட்டுகின்றன
நினைவையொடுக்கும் மண்டையோடு
மரணத்துக்கு முன்னைய காலத்தை விரும்பினும்

குருதியுள் முளைத்த ஈக்களோ
வாழ்ந்து பார்த்து
நித்தியம் குறித்துத் தும்மிக்கொண்டன!

மெல்லிய காற்றுள்
உந்தப்படும் தூசியின் இருப்பைச்
சுட்டெரித்த காலம் கொடியதே என்று நீ புலம்புகிறாய் இன்று!!

எதிர் காலமோ
அன்றி நிகழ் காலமோ
கடந்த காலமோ இதுவரை எனக்குள்ளோ
வெளியுள்ளோ  உணரத்தக்கதாக அறியேன்

மீண்டுவிட்ட வினாவுக்குள்
கருத்தரித்த நித்தியம்
ஒடுங்கி விரியும் உயிரின் இருப்போ
காலத்தைக் கிழித்துக் கடாசியது எனக்குள்

மெல்ல உதிரக் காத்துக் கிடக்கும்
நரை அரித்த விதையோ
முளைப்பதற்குள் மரணித்தாக வேண்டும்
ஆசையின் இருட்டில்
ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்!

பிரித்தெறி
தூரத்துக்குத் துரத்திவிடு !

எட்டப் போவதற்குள்
எதற்குள்ளோ
பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு
மண்டையோடுகளுக்குள்
சிறைப்படுவதற்கு விருப்பற்றது.

-ஶ்ரீரங்கன்
12.03.2013

Keine Kommentare:

Blog-Archiv